'தீதும் நன்றும் பிறர் தர வாரா!’ என்பது சத்தியமான வார்த்தை. வாழ்வில் நல்லதோ கெட்டதோ, சந்தோஷமோ துக்கமோ எதுவாக இருந்தாலும், அந்த விளைவுக்கு நாமே காரணம். நம்முடைய செயல்களைப் பொறுத்தே விளைவுகள் உருவாகின்றன. நமது செயல் நன்மையாக விளைவதற்கும், தீமையில் போய் முடிவதற்கும் எது காரணம் தெரியுமா? நம்முடைய எண்ணங்கள்தான்!
எண்ணங்கள், அதாவது நமது சிந்தனை சீராக இருந்தால், செயலும் சீராக இருக்கும். செயல் சீராக இருப்பின், அதனால் விளையக்கூடிய நிகழ்வுகளும் சரியாக இருக்கும்; சிக்கலின்றி இருக்கும். 'எண்ணம் போல் வாழ்வு’ என்று சும்மாவா சொன்னார்கள்!
இந்த உலகில், மிகப் பெரிய தீங்கை விளைவிக்கக்கூடியது, கர்வம்தான்! கர்வம் என்பது 'நான்’ என்கிற சிந்தனையின், மமதையின் உச்சம். 'நான்’ என்கிற கர்வக் கொப்பளிப்பு ஒருவருக்கு இருந்தால், அவருக்கு ஆண்டவனின் பேரருள் எள்ளளவும் கிடைக்காது. அக்கம்பக்கத்தாரின் அன்பு கிஞ்சித்தும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால்தான் முனிவர்களும் யோகிகளும், ஞானிகளும் சித்தர்களும் 'நான்’ என்பதைத் துறக்க, 'நான்’ என்கிற கர்வத்தை அழிக்க, கடும் தவம் மேற்கொண்டனர்.
அதற்காக வீட்டைத் துறந்தனர்; செல்வங்களைத் தூக்கியெறிந்தனர்; வனங்களில் பர்ணசாலைகள் அமைத்துத் தங்கினர். இடுப்பிலும் தோளிலும் உடுத்திக்கொண்டிருக்கிற ஆடைகளைத் தவிர, வேறு ஆடைகள் அவர்களிடம் இல்லை. கழுத்தில் அணிந்திருக்கிற ருத்திராட்சம் முதலான மாலைகளைத் தவிர, வேறு எந்த விலை உயர்ந்த ஆபரணங்களும் அவர்களிடம் கிடையாது. 'நீயே கதி’ என்று இறைவனை நினைத்துக் கடும் தவத்தில் மூழ்கி, தன்னுள் இருக்கிற 'தான்’ என்கிற மமதையை விட்டொழித்தனர்; வீடுபேறு அடைந்தனர்.
எங்கே கர்வம் இல்லையோ, அங்கே கனிவு இருக்கும். யாரிடம் கனிவு உள்ளதோ, அவரிடம் கருணை ததும்பிக் கிடக்கும். கருணை உள்ளவர்கள் ஒருக்காலும் தன்னை முன்னிலைப்படுத்தியும், அடுத்தவரை ஏளனப்படுத்தியும் சிந்திக்க மாட்டார்கள்; பிறரை மட்டம் தட்டிக் கர்வத்துடன் செயல்பட மாட்டார்கள். தன்னைப் போல் பிறரையும் நேசிக்கிற பக்குவம் அவர்களுக்குள் நிறைந்திருக்கும். 'நான்’ என்கிற கர்வத்தைத் தொலைத்துவிட்டவரால்தான், 'நீயே கதி’ என்று கடவுளிடம் தன்னை ஒப்படைக்க முடியும். அதற்குப் பெயர் சரணாகதி! கர்வம் இல்லாத உள்ளத்தில் கடவுள் குடியிருப்பார் என்பது உறுதி. ஆகவே, சிந்தனையிலும் செயலிலும் கர்வம் என்பது துளிக்கூட தலைகாட்டாமல் இருப்பது மிக மிக அவசியம். கர்வத்தைத் தொலைத்தால், கடவுளைத் தேடுதல் எளிதாகும்; மிக விரைவிலேயே கடவுளையும் அவரின் பேரருளையும் அடைந்துவிடமுடியும்.
சரி... மனிதன், கர்வத்தைத் தொலைத்தால் கடவுளை அடையலாம்; அந்தக் கடவுளே கர்வத்துடன் இருந்தால்?!
'தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை’ என்பார்கள். தந்தை எவ்வழியோ, மகனும் அவ்வழி என்று சொல்வாரும் உண்டு. அதேபோல், படைத்தவன் எப்படியோ, அப்படித்தானே நாமும் இருப்போம்! ஆம்... நம்மைப் படைத்த பிரம்மாவே ஒரு நேரத்தில் கர்வக் கொப்பளிப்புடனும், இறுமாப்புடனும், மமதையுடனும் இருந்தார்.
'என்னதான் இருந்தாலும், மனிதன் சாதாரணன்; பிரம்மா கடவுளாயிற்றே! உயிர்கள் அனைத்தையும் படைத் தவன் அல்லவா?! உலக உயிர்கள் மொத்தத்தையும் படைத்த, படைத்துக் கொண்டிருக்கிற பிரம்மா கர்வத்துடன் இருந்தால்தான் என்ன! சக உயிர்களுக் குச் சின்னதாக ஓர் உதவி செய்துவிட்டு, அதற்காகக் காலமெல்லாம் கர்வம் பொங்க வாழ்கிறவர்கள் இருக்கிற உலகம் இது. அப்படியிருக்க, அனைத்தையும் படைத்த ஸ்ரீபிரம்மா கர்வம் கொள்வதில் தவறேதும் இல்லையே!’ - இப்படியெல்லாம் நாம் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால், கர்வம் என்பது விஷ வித்து. கர்வம் ஒருவருக்குச் சிறிதளவே உள்ளது என்றாலும்கூட, அந்தச் சிறிதளவு கர்வமே மொத்தச் சிந்தனையிலும் பரவி, சிதைத்துப் போடும்; நம் செயல்கள் யாவற்றை யும் கலைத்துப் போடும். கர்வத்துடன் இருப்பவர் கடவுளே ஆனாலும், அவருக்கும் தண்டனை உண்டு, வேதனைகள் உண்டு என்பதை வலியுறுத்துகின்றன புராணங்கள்.
பிரம்மதேவனும் ஒருமுறை அப்படியரு கர்வத்தில் இருந்தார். அந்தக் கர்வம், அவரைப் படாதபாடு படுத்தியது. கர்வம் கொண்டது எவ்வளவு பெரிய தவறு என்பதைப் பின்பு உணர்ந்தார். கர்வத்தால் சாபம் பெற்று, அதற்கு விமோசனம் தேடி, தலங்கள்தோறும் அலைந்தார்.
'நீ பெரியவனா, நான் பெரியவனா’ என்பது கர்வத்தின் உச்சபட்ச சிந்தனை. அப்படியரு சிந்தனை பிரம்மதேவனுக்கு எழுந்தது. 'உனக்கு நிகரானவன் நான். சொல்லப்போனால் இந்த உலகின் உயிர்களைப் படைத்துக் கொண்டிருப்பவன் நான். எனவே, உன்னைவிடப் பெரியவன் நான்தான்’ என்று பரம்பொருள் சிவனாரிடமே இறுமாப்புடன் பேசினார். 'உனக்கு நிகரானவன் நான். ஏனெனில், உனக்கும் ஐந்து தலைகள்; எனக்கும் ஐந்து தலைகள்’ என்று சொல்லி எகத்தாளமாகச் சிரித்தார் பிரம்மா.
அங்கே... கர்வம் எனப்படுகிற ஆணவத்தால் அழிவே மிஞ்சும் என்பதை உலக உயிர்களுக்கு உணர்த்தத் திருவுளம் கொண்டார், சிவப் பரம்பொருள். சட்டென்று பிரம்மதேவனின் தலைகளில் ஒன்றைக் கொய்தார். அங்கே... பிரம்மாவின் தலைக்கனம் தட்டிவைக்கப்பட்டது.
துடித்துப் போனார் பிரம்மா. கதறினார்; கண்ணீர் விட்டார். 'மொத்த தலைகளும் போய்விட்டதா’ என்று சிரங்களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.
பிரம்மாவின் சிரசை சிவனார் கொய்தது, திருக்கண்டியூர் திருத்தலத்தில். தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது இந்தத் திருத்தலம். இங்கே சிவனாரின் திருநாமம், ஸ்ரீபிரம்ம சிர கண்டீஸ்வரர்.
சரி... திருப்பட்டூர் திருத்தலத்துக்கும் திருக்கண்டியூர் தலத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?
தன்னுடைய தலைக்கனத்தால் பிரம்மாவின் சிரசு பறிபோனது திருக் கண்டியூர் தலத்தில் என்றால், அந்த பிரம்மாவுக்கு சிவப் பரம்பொருள் பேரருள் புரிந்தது, திருப்பட்டூர் திருத்தலத்தில்தான்!
No comments:
Post a Comment