பாதிரிமரம் |
சூரியனுடன் தொடர்புகொண்டது சிம்ம ராசி. ஞாயிற்றுக் கிழமை மற்றும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள், மகம், பூரம், உத்திரம் ஆகிய நட்சத்திரக் காரர்கள் இயல்பிலேயே நிலையான குணம் கொண்டவர்களாகவும், பிள்ளைகளின் மீது அதீத பாசம் உள்ளவர்களாகவும் திகழ்வர்.
பஞ்சபூதங்களில், நெருப்புடன் தொடர்புகொண்டது சிம்ம ராசி! இந்த ராசி மண்டல நட்சத்திரக் கூட்டத்தின் கெட்ட கதிர் வீச்சுகளால் பலவகையான நோய்களும் கிரக தோஷங்களும் உண்டாகும் என்பர். அவற்றையெல்லாம் தீர்ப்பதற்கு உதவுகிறது பாதிரி மரம்! முனிவர்களும் தீர்த்தங்கரர்களும் (சமணர்கள்), இந்த மரத்தடியில் தவம் இருந்து, ஞானம் பெற்றுள்ளனர். இந்த மரத்தின் ஒரு பகுதிக்கும் மின்காந்த சக்திக்கும் தொடர்பு உள்ளதாம்!
கொங்கு தேசத்தில் அவிநாசி, திருமுருகன்பூண்டி, பவானிகூடல், கொடுமுடி, திருச்செங்கோடு, கரூர், திருவெஞ்சமாக்கூடல் ஆகியன பாடல்பெற்ற தலங்கள். இவற்றில், அவிநாசி தலத்தின் விருட்சம்- பாதிரி மரம்! கோவையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள அவிநாசியில், அருளும் பொருளும் அள்ளித் தந்து, ஆட்சி செய்து வருகிறார் ஸ்ரீஅவிநாசிலிங்கேஸ்வரர்.
ஸ்வாமி சந்நிதிக்கு வலப்பக்கத்தில் அம்பாள் ஸ்ரீகருணாம்பிகையின் தரிசனம். அம்பாள் சந்நிதிக்கு நேராக பொள்ளாச்சி நா. மகாலிங்கம் திருப்பணி செய்த அழகிய ராஜகோபுரம் அசத்துகிறது.
ஒருமுறை, திருப்புக்கொளியூருக்கு வந்த சுந்தரர், இங்கு அந்தணர் வாழும் வீதி வழியே சென்றார். அப்போது எதிரெதிரே இருந்த இரண்டு வீடுகளில், ஒரு வீட்டில் இருந்து மங்கல ஒலியும், மற்றொரு வீட்டில் இருந்து அழுகைச் சத்தமும் கேட்டது. தெருவில் உள்ளோர் சுந்தரரை வணங்கி, ''மூன்று வருடங்களுக்கு முன், இந்த இரண்டு வீட்டுப் பிள்ளைகளும் அருகில் உள்ள தாமரைக் குளத்தில் குளித்தனர். அப்போது, அவர்களில் ஒருவனை முதலை ஒன்று பிடித்து விழுங்கிவிட்டது. மற்றொருவன் தப்பித்துவிட்டான். அவனுக்கு, இன்று
உபநயனம். எனவே, அவனது வீட்டிலிருந்து மங்கல ஒலி கேட்கிறது. பிள்ளையை இழந்தவர்கள், 'நம் பிள்ளை உயிரோடு இருந் திருந்தால், அவனுக்கும் இப்படி உபநயனம் செய்திருப்போமே..!' என எண்ணிக் கதறு கின்றனர்'' என்று தெரிவித்தனர்.
பிறகு, அவனையும் பெற்றோரையும் ஆலயத்துக்கு அழைத்துச் சென்ற சுந்தரர், ஸ்ரீஅவிநாசியப்பரையும் ஸ்ரீகருணாம்பிகையையும் வழிபட்டார்; மேளங்கள் முழங்க, அவனுக்கு உபநயனம் செய்துவைத்து, அங்கிருந்து கிளம்பினார்.
கோயிலில் உள்ள தீர்த்தக் கிணற்றில், காசியின் கங்கை உறைந்திருப்பதாக ஐதீகம். அருகிலேயே, ஸ்ரீகாலபைரவரையும் தரிசிக்க லாம்!
இந்தத் தலத்துக்கு வந்த பதஞ்சலி முனிவர், இங்குள்ள கிணற்று நீரை, காசியின் கங்கை என நிரூபிப்பதற்காக, தனது கைத் தண்டத்தை, கிணற்றில் போட்டாராம். பிறகு, சக முனிவர்களுடன் அவர் காசிக்குச் சென்ற போது, கங்கையில் நீராடும் வேளையில், நீரில் மிதந்து வந்து அவரை அடைந்ததாம் அந்தக் கைத்தண்டம்! உடன் வந்திருந்த முனிவர்கள், காசிக்கு நிகரான தலம் அவிநாசி எனச் சிலிர்த்துப் பூரித்தனர். இந்தத் தலத்து இறைவனை மனதாரப் பிரார்த்தித்தால், இழந்த பொன்- பொருள், சந்தோஷம் அனைத்தையும் திரும்பப் பெறலாம் என்பது ஐதீகம்!
அவிநாசி தலத்தின் விருட்சமான பாதிரியும் மகிமைகள் நிறைந்ததுதான்.
தவிர, தொண்டை நோய், பேதி மற்றும் ரத்தப் போக்கு ஆகியவற்றைத் தடுக்கும் சக்தி இதன் பூக்களுக்கு உண்டு. மேலும், பாதிரி மரத்தின் வேரினைக் காயவைத்து, பொடி யாக்கிச் சாப்பிட்டால், மூல நோய், கை-கால் எரிச்சல், சொறி- சிரங்கு ஆகிய பிரச்னைகள் நீங்கும்.
'போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி' எனப் புகழ்கிறார் கபிலர். தேனின் நறுமணம் கமழும் பாதிரி என நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். பாதிரி மலரை புதிய மண்பானையில் போட்டுவைத்து, பிறகு அதை அகற்றிவிட்டுத் தண்ணீரை நிரப்பி வைத்தால், பூவின் மணம் தண்ணீரிலும் நிறைந்திருக்கும் என்கிறது நாலடியார். 'பாதிரிப் பூ வாடிவிடும்; புதிதான பானையும் ஓர் நாள் உடையும். ஆனால், பாதிரிப்பூவின் நறுமணம் மட்டும் அழியவே அழியாது' என நீலகேசி, குண்டலகேசி யிடம் வாதிட்டதாக விவரிக்கிறது இலக்கியம்.
அவிநாசி மட்டுமின்றி திருப்பாதிரிப்புலியூர், திருவலிதா யம், திருஆதனூர், திருநாகை ஆகிய தலங்களிலும் விருட்சமாகத் திகழ்கிறது பாதிரிமரம்.
- விருட்சம் வளரும்
|
No comments:
Post a Comment