முன்கோபம், நன்றி மறத்தல், உறவுப் பகை ஆகிய குணங்கள் இருப்பினும் கவர்ச்சியான தேகம், அழகிய கண்கள், நீண்ட புருவங்கள் எனத் திகழ்வார்கள், திருவாதிரை நட்சத்திரக்காரர்கள். அதுமட்டுமா?! நினைத்த காரியத்தை எப்பாடு பட்டேனும் முடித்தே தீருவது எனும் நெஞ்சுறுதி படைத்தவர்கள், இவர்கள்!
மிதுன ராசி மற்றும் புதன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது திருவாதிரை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, புதன்கிழமை மற்றும் மே 21 முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை நல்ல நாட்கள் என்கிறது வானசாஸ்திரம். இந்த நாட்களில், நல்ல கதிர்வீச்சுகள், பூமியின் மீது அதிக அளவில் வெளிப்படுகின்றன. இதனால் மக்கள் பலருக்கு நன்மைகள் விளைகின்றன.
மயிலாடுதுறையில் இருந்து நீடூர் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது திருஇந்தளூர். பஞ்ச அரங்க க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று (ஸ்ரீரங்கப்பட்டினம்- யோக சயனம்; திருப்பேர் நகர்- கோவிலடி- புஜங்க சயனம்; ஸ்ரீரங்கம்- போக சயனம்; கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோயில்- உத்தான சயனம்). இங்கே, வீர சயனத்தில் அருள்கிறார் ஸ்ரீபரிமள ரங்கநாதர். இந்தத் தலத்தின் விருட்சம்- பன்னீர் மரம்!
108 வைணவத் தலங்களுள் ஒன்று; திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம்; திருமால், வேதங்களை உபதேசித்ததால், வேதா மோத விமானத்துடன் காட்சி தரும் தலம் எனப் பெருமைகள் பல உண்டு, இந்தத் தலத்துக்கு. வலது கரத்தைத் தலைக்கு வைத்துக்கொண்டு, இடது கரத்தை நீட்டியபடி, மற்ற கரங்களில் சங்கு- சக்கரம் ஏந்தியபடி, சயனக் கோலத்தில் அற்புதக் காட்சி தருகிறார், பெருமாள். இவரின் சிரசுக்கு அருகில் காவிரித்தாய்; திருவடிக்குக் கீழே கங்காதேவி மற்றும் சந்திரன், சூரியன்; நாபியில் பிரம்மனும், திருவடிகளில் எமனும், அம்பரீஷனும் வழிபடுகின்றனர். இந்தளம் என்றால் தூபக்கால் என்று அர்த்தம். உலகுக்கே வேதங்களின் நறுமணத்தை வெளிப்படுத்துகிற தூபக்காலாகத் திகழ்கிறது இந்தத் தலம். 'பச்சை மாமலைபோல் மேனி’ என தொண்டரடிப் பொடியாழ்வார் பாடியதுபோல், இங்கே பெருமாள், மரகதக் கல்லில் (பச்சை நிறம்) அருள் பாலிக்கும் அழகே அழகு!
ஒருமுறை த்வஜபதி, தட்சன் ஆகியோர் விடுத்த சாபத்தால், தொழுநோய்க்கு ஆளானான் சந்திரன். பிறகு இந்தத் தலத்தின் புஷ்கரணியில் நீராடி தவம் புரிந்து, திருமாலின் அருளால் நோய் தீரப்பெற் றான். இதனால் இந்தத் தலம், இந்துபுரி எனப் படுகிறது (இந்து = சந்திரன்) .
இதனால், திருமாலுக் குப் பரிமள ரங்கநாதர், சுகந்த வனநாதர் எனத் திருநாமங்கள் உண்டா னது என்கிறது ஸ்தல புராணம். தாயாருக்கு, ஸ்ரீபரிமள ரங்கநாயகி, சுகந்தவனநாயகி, ஸ்ரீபுண்டரீகவல்லி எனப் பலத் திருநாமங்கள் உண்டு.
தல விருட்சமான பன்னீர் மரம், அகலமான, கொத்துக் கொத்தான இலைகளையும், வெள்ளை நிற, வாசனை மலர் களையும் கொண்டது. இந்தப் பூக்கள் மூலம் பித்தத்தைக் குறைக்கிற மருந்துகள் தயாரிக் கலாம். பன்னீர் மரப்பூவினால் வாந்தி, ருசியற்ற தன்மையைப் போக்குதல், தாகம், அதிகப் பித்தம் ஆகியவை குணமாகும் என்கின்றன மருத்துவ நூல்கள். பித்த ஜுரத்துக்கும், இந்தப் பூக்களை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
திருச்சோற்றுத்துறை ஸ்ரீதொலையாச் செல்வேஸ்வரர், கீழைத் திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீஆரண்ய சுந்தரேஸ் வரர் ஆகிய ஆலயங்களின் தலவிருட்சமாகவும் திகழ்கிறது, பன்னீர் மரம்.
No comments:
Post a Comment