Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 29


வானத்தில் அம்பு வடிவில் காணப்படுவது பூச நட்சத்திரம். ஸ்ரீராமனின் இளவல் பரதன், பூச நட்சத்திரத்தில் பிறந்தவனே! வீடுகட்டத் துவங்குவது, கல்வி, செடி- கொடி நடுவது, மருந்து தயாரித்தல் ஆகியவற்றை இந்த நட்சத்திரத் தினத்தில் செய்வது விசேஷம் என்பார்கள்.
வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், அரசியல் வாதிகள், வியாபாரிகள், புரோக்கர்கள் ஆகியோரில் பலர், பூச நட்சத்திரத் துக்காரராக இருப்பார்கள். சாமர்த்தியப் பேச்சால் காரியம் சாதிக்கும் இந்த நட்சத்திரக்காரர்கள், பிறருக்கு உதவுபவர்கள்; தெய்வ பக்தி நிறைந் தவர்கள். இந்த நட்சத்திரத்துக்கு அரச மரம், எலுமிச்சை மரம் ஆகியவற்றுடன் தொடர்பு உண்டு.
பூச நட்சத்திரம்- கடக ராசி, சந்திரன் கிரகத்தில் அல்லது திங்கட்கிழமைகளிலும், ஜூன் 21 முதல் ஜூலை 22 வரையிலான நாட்களிலும் பிறந்தவர்களுக்கு உகந்த விருட்சம் எலுமிச்சை மரம். பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினமும் அரை மணி நேரம் எலுமிச்சை மரத்தின் அருகில் இருந்தாலோ, எலுமிச்சையினால் செய்யப்பட்ட மருந்துகளை உட்கொண்டாலோ நற்பலனைப் பெறலாம்!
பொன்னூர் எனப்படும் திருஅன்னியூர் ஸ்ரீபிரஹன்நாயகி சமேத ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தின் ஸ்தல விருட்சம் எலுமிச்சை  மரம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருஅன்னியூர். ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடிப்பரவிய திருத்தலம் இது. காவிரியின் வடகரை திருத்தலங்களுள் 22-வது தலம்! இந்தத் திருக்கோயிலின் மூலவர் மற்றும் உற்ஸவ மூர்த்திகள் உருவில் சிறியதாயினும் கீர்த்தி மிக்கவை. கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆதிலிங்கேஸ்வரர் சிற்பம் மிகப் பழைமையானதாம்.
ஸ்ரீஆபத்சகாயேஸ்வரருக்கு பல்வேறு திருநாமங்கள் உண்டு. எலுமிச் சையே ஸ்தல விருட்சம் என்பதால்- ஸ்ரீலிகுசாரண்யேஸ்வரர்; அக்னிக்கு அருளியதால்- ஸ்ரீஅக்னீஸ்வரர்; பாண்டவருக்குக் காட்சி கொடுத்ததால்- ஸ்ரீபாண்டவேஸ்வரர்; ரதிதேவிக்கு அருளியதால்- ஸ்ரீரதீஸ்வரர். அம்பிகைக்கு ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீபிரஹன்நாயகி என்று திருநாமங்கள். இங்கே அருளும் ஸ்ரீசூரியமூர்த்தியும் மகிமை வாய்ந்தவர். ஸ்ரீவிநாயகர், வள்ளி- தெய்வானையுடன் ஸ்ரீமுருகன், சந்திரசேகரர், ஸ்ரீநடராஜர்- ஸ்ரீசிவகாமியம்மை, ஆடிப்பூர அம்மன், ஸ்ரீதுர்கை, அஸ்திரதேவர் ஆகியோரின் உற்ஸவ மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
வடமொழியில் பவிஷ்யோத்ர புராணம்- லிகுசாரண்ய மகாத்மியத் தில், எட்டு அத்தியாயங்களில் திருஅன்னியூரின் பெருமைகள் விவரிக் கப்பட்டுள்ளன. பிரம்மதேவன் பல யாகங்கள் செய்தார். இந்திரனும் யாகங்கள் செய்தான். யாக குண்டங்களில் சொரிந்த நெய்யை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால், அக்னியை நோய் பற்றியது; உடல் மெலிந்தான். இதனால் வருந்திய அவனுடைய மனைவி ஸ்வாகாதேவி, கணவனின் நோய் தீர வழிகாட்டும்படி, தேவகுருவிடம் முறையிட்டாள். அவர் தந்த ஆலோசனையின்படி, திருஅன்னியூருக்கு கணவனுடன் வந்து, அங்கே தடாகம் ஒன்றை ஏற்படுத்தி நீராடி, அதன் கரையிலேயே தவத்தில் ஆழ்ந்தனர். இதனால் மகிழ்ந்த இறைவனார், ஓர் எலுமிச்சை மரத்தின் அடியில் தோன்றி, அக்னிக்கு அருளினார்; அவனும் நோய் நீங்கப்பெற்றான். அதுமுதல், அந்தத் தடாகம் அக்னி தீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது.
அரிச்சந்திர மகாராஜா, தன் குலகுருவான வசிஷ் டரிடம்... கௌசிக முனிவரால் தனக்கு ஏற்பட்ட இடையூறுகள் நீங்கியது எப்படி என்று கேட்டான். அதற்கு அவர், ''நீ தண்டகவனம் முதலான இடங்களுக்குச் சென்றபோது, தற்செயலாக லிகுசாரண்யத்துக்கும் (அன்னியூர்) சென்று தீர்த்தமாடி, பரமேஸ்வரனை வணங்கியதால், எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டாய்'' என்றாராம். இதனால் திருஅன்னியூர் இறைவனுக்கு ஸ்ரீஆபத்சகாயர் என்று திருப்பெயர்.
இந்த ஆலயத்தின் ஸ்தல விருட்சம் எலுமிச்சை மரம். எலுமிச்சம்பழம் வைட்டமின் 'சி’ நிறைந்த பழம் ஆகும். கொசுக்களிடம் இருந்து எலுமிச்சைச் செடி பாதுகாப்பு அளிக்கிறது. எலுமிச்சையில் மொத்தம் 60 வகை உள்ளன. இவற்றில் நாம், நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை ஆகிய இரண்டை மட்டுமே உபயோகிக்கிறோம்.
எலுமிச்சை இலையை அரைத்துப் பற்றுப் போட்டால் மூட்டு வலி, கெண்டைக்கால் வலி, தலைவலி ஆகியன குணம் பெறும். எலுமிச்சம் பூவை மை போல் அரைத்து, சிறிதளவு எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து, காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு வர, ஈறு சார்ந்த நோய்கள் குணமாகும். விதை முற்றாத எலுமிச்சை பிஞ்சு- மலச்சிக்கல், பித்தம் ஆகியவற்றை நீக்கும்; ரத்த மூலத்தைக் கட்டுப்படுத்தும். எலுமிச்சை ஊறுகாயை உணவோடு சேர்த்துச் சாப்பிட, பித்தம் நீங்கும்; அஜீரணம் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் அகலும்.
காலரா நோய் பாதிப்புள்ள இடங்களுக்குச் செல்ல நேரும்போது, இரண்டு எலுமிச்சை பழங்களைச் சாறு பிழிந்துவிட்டுச் சிறிது மென்று தின்றால், காலரா நோய் நம்மை தாக்காது. ஒருவேளை, காலரா நோயின் தாக்கம் தெரிந்தால், சிறிய வெங்காயம் ஒன்றின் சாறுடன் எலுமிச்சைச் சாற்றையும் சம அளவு கலந்து குடித்தால், வாந்தி- பேதி நின்று உடல் குணமடையும். எலுமிச்சை பழச்சாறு, குடல் புழுக்கள், மலச்சிக்கல், வாய்ப் புண், சீதபேதி, பித்த வாந்தி, குமட்டல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், மூலக் கடுப்பு, சாப்பிட்டதும் ஏற்படும் வயிற்று வலி, பல் ஆடுதல், வாய் துர்நாற்றம் ஆகிய குறைபாடுகளைப் போக்கும்.
ஆல மரத்தின் விழுதை அறுத்தெடுத்து, அம்மியில் நன்றாக அரைத்து மாவாக்கி, அதனுடன் எலுமிச்சம்பழச் சாற்றைக் கலந்து தலையில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்துக் குளித்தால், தலைமுடி நன்கு வளரும். அரைத்த வெள்ளைப் பூண்டு விழுதை, எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால், பேன் தொல்லை நீங்கும். எலுமிச்சை பழத் துண்டை இரண்டாக வெட்டி, தேள் கொட்டிய இடத்தில் அழுத்தித் தேய்த்தால், விஷம் நீங்கும். அஜீரண வாந்தி, கருவுற்ற தாய்மார்களின் வாந்தியை எலுமிச்சை தடுக்கும். கர்ப்பிணிகள் காலையும் மாலையும் எலுமிச்சைப் பழ ரசத்தை, ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், சுகப்பிரசவம் நிச்சயம்.
உத்திரமேரூர் ஓரிக்கை சாலையில் உள்ள திருமாகறல் ஸ்ரீஅடைக் கலங்காத்த நாதர் - ஸ்ரீதிரிபுவன நாயகி ஆலயத்திலும் எலுமிச்சை மரமே ஸ்தல விருட்சம்!
- விருட்சம் வளரும்
முக்தி தரும் முக்கண்ணன்!
''பங்குனி மாதக் கடைசியில் 25 முதல் 29-ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சூரியக் கதிர்கள், மூலவர் லிங்கத்தின்மீது விழுந்து வழிபடுவது கண்கொள்ளாக் காட்சி. இந்தத் தலத்தின் பொய்கையில் நீராடி, ஸ்ரீஆபத்சகாயரை வழிபட்டால், சகல பாவங்களும் நீங்கும்; அனைத்து நலன்களும் கைகூடும். அரிச்சந்திரன், பாண்டவர், பானு என்ற அந்தணர் ஆகியோர் இங்கு நீராடி, வழிபட்டுப் பலன்பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. இங்குள்ள இறைவனை வழிபட்ட திருஞானசம்பந்தர், 'இவரின் திருநாமத்தை ஓதுங்கள். அப்படிச் செய்தால், பந்த- பாசம் நீங்கும்; தீவினைகள் ஒழியும்; பேரின்பம் பெறலாம்; முக்தி எய்தலாம்’ என்று அருளியிருக்கிறார். திருநாவுக்கரசரோ, 'இந்த இறைவன் தனது திருவடிகளை நாளும் பரவிப் பணிந்தவர்களு டைய துன்பத்தைத் துடைப்பார்’ என்று பாடியுள்ளார்'' 

No comments:

Post a Comment