வானத்தில் நண்டு வடிவில் காட்சி தரும் நட்சத்திரக் கூட்டத்தை, கடக ராசி என்பார்கள். இந்த நட்சத்திர மண்டலம், சந்திர கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இதன் கதிர்வீச்சு, மார்பு மற்றும் நெஞ்சுப்பகுதியில் உள்ள உள் உறுப்புகளைச் சீரமைக்கிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றான நீருடன் தொடர்பு கொண்டது இது!
கடக ராசியில் பிறந்தவர்கள் பெற்றோரிடம் அன்பாக இருப்பார்கள்; இவர்களின் குணங்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்! கடக ராசி - புனர்பூசம், பூசம் மற்றும் ஆயில்ய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், ஜூன் 21 முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை பிறந்தவர்கள் மற்றும் திங்கட்கிழமை அன்று பிறந்தவர்கள் ஆகியோருக்குப் பயன் தரும் மரம் - முருக்கன் எனப்படும் பலாச மரம்! இந்த மரத்தை, தினமும் அரை மணி நேரம் கட்டிப் பிடித்தாலோ, அல்லது, மர நிழலில் அமர்ந்திருந்தாலோ சந்திர கிரக தோஷம் நீங்கும் என்பர்.
பௌத்தத் துறவிகள், முருக்கன் மரப்பூக்களில் இருந்து காவிநிற ஆடை தயாரித்து, அணிவார்களாம். வட இந்திய மக்கள், ஹோலி முதலான பண்டிகைகளில், இதில் இருந்து பெறப்படும் காவிநிறப் பொடியை ஒருவர்மீது ஒருவர் வீசியும் அப்பியும் குதூகலிப்பார்கள்!
கடக ராசிக்கான விருட்சம் - முருக்கன் எனப்படும் பலாச மரம். இதனைத் தல விருட்சமாகக் கொண்ட தலம், திருநாங்கூரில் உள்ள ஸ்ரீவண்புருஷோத்தமன் ஆலயம். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்; 108 திவ்விய தேசங்களுள் இதுவும் ஒன்று.
இந்தத் தலத்து ஸ்வாமியின் திருநாமம் - அயோத்தி ராமர்; வண்புருஷோத்தமராகக் காட்சி தருகிறார். வேறெந்த வைணவத் தலத்திலும், ஸ்ரீவண்புருஷோத்தமன், தனிச்சந்நிதி கொண்டிருக்கவில்லை.
திருநாங்கூரில் இரண்டு வருடங்கள் தங்கி, இறைப்பணி செய்துள்ளார் ஸ்ரீமணவாள மாமுனிகள். கோயிலுக்கு வடக்கே திருப்பாற்கடல் எனும் தீர்த்தம் உள்ளது. ஸ்ரீவண்புருஷோத்தமனுக்குப் பிடித்த மலர் செண்பகப் பூ!
சீர்காழி - நாகப்பட்டினம் சாலையில், சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாங்கூர். இங்கே, நின்ற கோலத்தில், கிழக்குப் பார்த்தபடி, ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்கிறார் ஸ்ரீவண்புருஷோத்தமர். தேவியின் திருநாமம்- ஸ்ரீபுருஷோத்தம நாயகி; தென்மேற்கு மூலையில், அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். ஸ்ரீஆண்டாள், ஸ்ரீசீதை, ஸ்ரீலட்சுமணருடன் ஸ்ரீராமர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீராமானுஜர், சேனைமுதலியார் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
திவ்ய கவியான பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், 108 திருப்பதி அந்தாதியின் பாசுரம் ஒன்றில், 'தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய அழகிய புருஷோத்தமனின் (திருமாலின்) திருப்பதிகளாவன எம்பெருமான் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கம், குளிர்ந்த திருவேங்கடமலை, திருக்குடந்தை, திருமாலிருஞ்சோலை, அழகிய துவாரகை மற்றும் திருவண் புருடோத்தமம்' எனக் குறிப்பிடுகிறார்.
நைமிசாரண்யத்தில் சூத பௌராணிகர், சனகாதி முனிவர்களுக்கு ஸ்ரீபத்ம புராணத்தை எடுத்துரைத்தார். அதில், தீர்த்தம், க்ஷேத்திரம் ஆகியவற்றைக் கூறும்போது, 'பலாச' வன மகாத்மியம் என இந்தத் தலத்தைப் போற்றுகிறார். அதன் ஆறாவது அத்தியாயத்தில், திருநாங்கூர் ஸ்ரீவண்புருஷோத்தம திவ்விய தேச வைபவத்தில், 'புருஷர்களில் உத்தமன் ஸ்ரீராமன். அதிலும் வேண்டியவர்களுக்கு வேண்டியன கொடுப்பவன் ஸ்ரீவண்புருஷோத்தமன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில், இந்தப் பகுதி, பலாச வனமாக இருந்ததாம். அப்போது, வியாக்ரபாத முனிவர், இங்கே பர்ணசாலை அமைத்துத் தங்கி, தவம் இருந்தார். அவருடைய மகன் உபமன்யு. இவனுக்கு மூன்று வயது இருக்கும் வேளையில், புருஷோத்தமபுரத்துக்கு வந்து, பெருமாள் சந்நிதியில் குழந்தையை விட்டுவிட்டு, அர்ச்சனை செய்வதற்குப் பூக்கள் பறிக்கச் சென்றார் வியாக்ரபாதர். அப்போது, குழந்தை திடீரெனப் பசியால் அழ... ஸ்ரீவண்புருஷோத்தமப் பெருமாள் வந்து, குழந்தையை வருடிக் கொடுத்து, சமாதானப்படுத்தி, பிராட்டியாரின் தூண்டுதலால் திருப்பாற்கடலையும் விரஜா நதியையும் வரவழைத்தார். பாற்கடலில் இருந்து பாலை எடுத்து வந்து, விரஜா நீரில் கலந்து, குழந்தைக்குப் புகட்டினாளாம் பிராட்டி; பசி நீங்கியது மட்டுமின்றி, பெருமாளின் அருளையும் பெற்றது, குழந்தை!
'கார்த்திகை சுக்லபட்சம், துவாதசி அருணோதய காலத்தில், திருப்பாற்கடல் வரவழைக்கப்பட்டது. எனவே, அந்த வேளையில், எல்லா புண்ணிய தீர்த்தங்களும் அங்கே கூடுகின்றன. அப்போது திருப்பாற்கடலில் நீராடி, ஸ்ரீவண்புருஷோத்தமனைச் சேவித்தால், தீவினைகள் அகன்று, நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழ்ந்து, முக்தி கிடைக்கவேண்டும்' என திருமாலிடம் உபமன்யு வேண்டினான்; அப்படியே ஆகட்டும் என வரம் தந்தருளினார் திருமால்!
திருநாங்கூர் ஸ்ரீவண்புருஷோத்தமர் கோயிலின் ஸ்தல விருட்சமான முருக்கன் எனும் பலாச மரம், மருத்துவ மகிமைகள் கொண்டது. முருக்கன் மரத்தின் பட்டையை 5 முதல் 12 கிராம் வரை, தினமும் ஒருவேளை பயன் படுத்தினால், பேதி, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை சுருங்கி சிறுத்துப் போதல், மாதவிலக்கு முதலான கோளாறுகள் நீங்கும். முருக்கன் மரத்தின் பிசினை, 250 மி.கி. முதல் ஒரு கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தினால், வாயுத் தொல்லை நீங்கும்; ஜுரத்தைக் கட்டுப்படுத்தும்; புண்களைச் சுத்தப்படுத்திக் குணமாக்கும்; பாம்புக்கடியின் விஷத்தை முறிக்கும்! வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு, இந்த மருந்தை ஒரேயரு சொட்டு தருவார்கள்.
தென்னிந்தியாவில் பல ஓட்டல்கள் மற்றும் விருந்து களில் பலாச இலையில் தயாரிக்கப்படும் தட்டுகளைப் பயன்படுத்துவதைக் காணலாம்.
முருக்கன் இலைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட, வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகள் வெளியேறிவிடும். மேலும் வயிற்றுவலி, மலட்டுத்தன்மை, கர்ப்பப்பை வளர்ச்சியின்மை, ஆண்களுக்குப் போதிய உயிரணுக்கள் இல்லாத நிலை, சிறுநீர் கழிக்கும்போது உண்டாகிற எரிச்சல் ஆகியன குணமாகும்! இந்த இலைகளை இடித்து வெந்நீரில் கலந்து, எலும்பு மூட்டுப் பகுதியில் பற்றுப்போட்டால், வலியும் வீக்கமும் குறையும். இலை களைத் தேங்காய் எண்ணெயில் வறுத்துச் சாப்பிட, பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாகச் சுரக்குமாம்!
சங்க இலக்கியத்தில் கபிலர், 'பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி' எனப் பாடியுள்ளார். பிற்கால இலக்கியங்களும், புரசு, முருக்கு, புன முருக்கு, புழகு, புன முருங்கை, மலை முருங்கு என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளன. தவ யோகியரின் கைகளில் உள்ள 'தண்டம்' புரச மரத்தில் செய்யப்படுவது வழக்கம்!.
திருத்தலைச்சன்காடு, திருக்கஞ்சனூர், திருப்பார்த்தன்பள்ளி, திருப்பேர்நகர், திருவெள்ளக்குளம் ஆகிய ஆலயங்களிலும், பலாச மரமே தல விருட்சமாக அமைந்துள்ளது!
|
Wednesday, 4 October 2017
ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 13
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment