Sunday, 22 October 2017

முதல் வணக்கம் முதல்வனுக்கே! - 7

நினைத்தாலே முக்தி தரும் க்ஷேத்திரம்... பஞ்சபூதத் தலங்களில், 'தேயு’ என்னும் நெருப்புத் தலம் இது. சம்பந்தர், அப்பர், மணிவாசகர் ஆகியோரால் பாடல் பெற்றதும், பிரம்மனும் திருமாலும் அடிமுடி காண முடியா வண்ணம், சோதிவடிவாய் சிவபெருமான் விளங்கும் ஒப்பற்ற பெருமை யும் கொண்டது. இறைவனின் திருவுருவாக வணங்கப்பெறும் இந்தத் தலத்தின் அண்ணாமலையை, 'நெருப்பினில் வந்த குன்று’ (igneous rock) என விவரிக்கின்றன, நிலம் தொடர்பான (geology) நூல்கள்!
இங்கு எத்தனையோ ஞானத் தபோதனர்கள் வாழ்ந்தனர்- வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர். கந்தப் பெருமானைப் போற்றி சந்தத் திருப்புகழ் பாடிய அருணகிரியாரை (14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்), கோபுரத்து இளையனார் (முருகன்) ஆட்கொண்டு அருளியதும் இந்தத் தலமே. திருப்புகழ் பாட அருணகிரியாருக்கு முருகப்பெருமான் முதலடி எடுத்துக் கொடுத்ததும் இங்குதான். கந்தரநுபூதி, கந்தரலங்காரம், கந்தரந்நாதி, திருவகுப்பு ஆகிய அருட்பனுவல்களாலும் முருகப் பெருமானுக்கு மாலை சூட்டியவர் அருணகிரியார்.
மகாபாரதம் பாடிய வில்லிபுத்தூராருக்கும் அருணகிரிநாதருக்கும் இடையே நிகழ்ந்த ஒரு கவித்துவப் போட்டியின்போது பாடப்பட்ட இலக்கியம் 'கந்தரந்தாதி’ என்பர். நூறு பாடல்கள் கொண்ட இந்த நூல் யமக அந்தாதியாக 'சி, சீ, செ, சே, த, தீ, தெ, தே’ எனும் எட்டு எழுத்துகளைக் கொண்டே துவங்குவது, குறிப்பிடத்தக்கது. இந்த நூலின் காப்புச் செய்யுள் அற்புதமானது.
வாரணத்தானை அயனை விண்ணோரை மலர்க்கரத்து
வாரணத்தானை மகத்துவென்றோன் மைந்தனைத் துவச
வாரணத்தானைத் துணை நயந்தானை வயலருணை
வாரணத்தானைத் திறை கொண்ட யானையை வாழ்த்துவனே.
ஐராவதத்தைக் கொண்ட இந்திரனை, பிரம்மனை, தேவர்களை, சங்குடைய திருமாலை... வீரபத்ர மூர்த்தம் கொண்டு தட்ச யாகம் வென்ற சிவபெருமானின் மைந்தனும் சேவற்கொடியோனுமாகிய முருகனைச் சகோதரராகக் கொண்டவரும், கஜமுகாசுரனை வெற்றி கொண்டவரும், வயல்கள் சூழ்ந்த அருணையில் கப்பம் பெற்ற யானை முகத்தவனும் ஆகிய விநாயகரை வணங்குகிறேன் என்கிறது இந்தச் செய்யுள்.
'ஆனை திறை கொண்ட யானை’ என்றால், கப்பம் பெற்ற யானை என்று பொருள். அது என்ன கப்பம் பெற்ற கதை?
ஒரு காலத்தில் முகிலன் எனும் அரசன், பொது மக்களுக்கும் அடியவர்களுக்கும் மிகுந்த கொடுமைகளைச் செய்துவந்தான். இதனால் துன்பப்பட்ட மக்கள், திருவண்ணாமலையில் வாழ்ந்த குகை நமசிவாயர் எனும் அருளாளரிடம் முறையிட்டனர். மல்லிகார்ச்சுனம் எனும் ஸ்ரீசைலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு எழுந்தருளி, அங்குள்ள குகையன்றில் தவம் புரிந்தவர் குகை நமசிவாயர். அவர் அருளிய நூல், 'அருணகிரி அந்தாதி’.
குகை நமசிவாயர், அடியவர்களின் துன்பம் தீர அருள்புரியுமாறு அருணாசலேஸ்வரரை வேண்டினார்; 'உமது கையில் சூலம் இருக்க, பிரகாசிக்கும் முழு- வாள் இருக்க, ஆலகால விஷம் உண்ட (அனுக்ரக) அருள் இருக்க, இப்போது சோணேசர் இந்தக் கொடுமையை சகித்து (பொறுத்து)க் கொண்டிருக்க காரணம் என்ன?’ எனும் பொருள் அமைந்த பாடலைப் பாடினார்.
இறைவன், தன்னுடைய மூத்த புதல்வனாகிய யானை முகத்தானுக்கு ஆணையிட்டார். அன்றிரவே, யானை வடிவாகச் சென்று முகிலனைப் பய முறுத்தினார் விநாயகர். தன் பிழையை பொறுத்தருளுமாறு வேண்டினான் முகிலன். கணேசமூர்த்தியும் கருணை கொண்டார். அவருக்கு திறையாக (கப்பமாக) சில யானைகளையும் அளித்தான். இதனால், திருவண்ணா மலை கோயிலில் அருளும் ஸ்ரீவிநாய கருக்கு, யானைத் திறை கொண்டவர் எனும் திருப்பெயர் வந்தது.
ஸ்ரீஉண்ணாமுலை அம்பிகையுடன் ஸ்ரீஅண்ணாமலையார் அருளும் கோயில், சுமார் 25 ஏக்கர் பரப்பளவில், பிரமாண்டமாக அமைந்துள்ளது. கோயிலின் கிளிக்கோபுர வாயிலின், வலப்புறம் அழகுற அமைந்துள்ளது, ஸ்ரீயானைதிறை கொண்ட விநாயகர் சந்நிதி. அருள்மழை பொழியும் கற்பக விருட்சமாய் அருள்பாலிக்கிறார் இந்த கணபதி. இந்த நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினை வழிபட, வேண்டிய வரம் சடுதியில் கிடைக்குமாம்.
சிவபிரகாச சுவாமிகள், சோண சைல மாலை என்ற பிரபந்தத்தில், 'குதிரை திறை கொண்டவன் என்றேத்தும் குரை கழற்கால் யானை திறை கொண்டவனை என்னுள்ளத்தே கொண்டு...'' என்று போற்றி உள்ளார் இந்த விநாயகரை.
அண்ணாமலையானைத் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், இந்த ஆனைமுகத்தானையும் மனதார வழிபட்டு வாருங்கள்... உங்கள் வாழ்க்கை வளமாகும்!
- பிள்ளையார் வருவார்...

No comments:

Post a Comment