பலா மரம் |
முக்கனிகளுள் ஒன்றான பலா, மிதுன ராசிக்காரர்களுக்குப் பலனும் பலமும் தரும் முக்கியமான விருட்சம்! மிதுன ராசி, புதன் கிரகத்துடன் தொடர்புகொண்டது. எனவே, மிதுன ராசிக்காரர்கள், புதன்கிழமை பிறந்தவர்கள் மற்றும் மே 21 முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்களுக்கு அதிக அளவு பலன் தரக்கூடியது பலா மரம். இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் பலா மரத்தை நட்டு வளர்க்கலாம்.
'காழிச் சீராம விண்ணகரம்' எனப் போற்றப்படும் ஸ்ரீபூமி நீளா லோகநாயகி சமேத ஸ்ரீதிரிவிக்கிரம நாராயணப் பெருமாள் தாடாளன் கோயிலின் ஸ்தல விருட்சமாகப் போற்றப்படுகிறது பலா. நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ளது இந்தத் திருக்கோயில்.
திருமாலின் வாமன அவதாரமும் திரிவிக்கிரம அவதாரமும் வேதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. மகாபலிச் சக்கரவர்த்தியின் கொடுமையைத் தாங்கமுடியாத தேவர்கள், தங்களைக் காப்பாற்றும்படி பெருமாளைச் சரணடைந்தனர். அசுர குரு சுக்ராச்சார்யரின் ஆலோசனைப்படி பல்வேறு யாகங்களும் தவமும் செய்து பலம்பெற்றிருந்த மகாபலியை ஆயுதங்களால் அழிக்கமுடியாது என்பதை அறிந்த திருமால், வாமன அவதாரம் எடுத்தார்.
கேரளா- கொச்சியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திரிக்காக்கரா ஆலயம். இங்கே, வாமன மூர்த்தியாக அருள்கிறார் மகா விஷ்ணு. மகாபலிச் சக்கரவர்த்தியின் தலைநகரமான இங்குதான் வாமன அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்கிறது புராணம். மகாபலியை பாதாளத்தில் அழுத்துவதற்கு முன், அவன் கேட்டுக்கொண்டபடி, வருடத்துக்கு ஒருமுறை அவன் பூவுலகம் வந்து தன்னுடைய நாட்டு மக்களைச் சந்திக்கலாம் என்று வரம் தந்தார் திருமால். அதன்படி, பூலோகத்துக்கு வரும் மகாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்க, ஓணம் திருவிழாவை பத்து நாள் விழாவாகக் கொண்டாடுகின்றனர் கேரள மக்கள்.
மிகக் குள்ளமான வாமன வடிவில் வந்த பெருமாள், மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். ''ப்பூ... இத்துனூண்டு உருவம் கொண்ட உனக்கு மூன்றடி மண்தானே வேண்டும். எடுத்துக்கொள்!'' என்று அனுமதித்தான் மகாபலி. சட்டென்று விண்ணளாவ ஓங்கி வளர்ந்த பெருமாள், முதல் அடியாக... இடக்காலைத் தூக்கி விண்ணை அளந்தார். இந்த அழகு ததும்பும் அழகுக் கோலத்தை தாடாளன் கோயிலிலும், 2-வது அடி அளந்த திருக்கோலத்தை காஞ்சிபுரம் (திருஊரகம்) ஸ்ரீஉலகளந்தபெருமாள் கோயிலிலும், மூன்றாவது திருவடிக்கு இடம் எங்கே என்று கேட்கும் திருக்கோலத்தைத் திருக்கோவிலூரிலும் தரிசிக்கலாம்!
சீர்காழி தலத்தில், கைகளில் சங்கு- சக்கரம், மார்பில் பிராட்டி, வனமாலை, சாளக்ராம மாலை, சகஸ்ரநாம மாலை ஆகியவற்றுடன் காட்சி தருகிறார் பெருமாள். அவரது சந்நிதிக்குத் தென்புறம், தனிச் சந்நிதியில், ஸ்ரீலோகநாயகி தாயார் அருள்பாலிக்கிறார். இங்கே, ஸ்ரீஆண்டாளுக்கும் ஸ்ரீகோதண்டபாணியான ஸ்ரீராமருக்கும் தனிச்சந்நிதிகள் அமைந்துள்ளன. இடது கையில் வில்லேந்தி, ஓரடி எடுத்து வைப்பது போன்ற கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீராமர். அவருடன் ஸ்ரீசீதை, ஸ்ரீலட்சுணர் மற்றும் ஸ்ரீஆஞ்சநேயரும் திருக்காட்சி தருகின்றனர்.
- எனும் குறளில், 'மூவுலகு' என்று குறிப்பிடாமல், 'அடியளந்தான் தாஅயது எல்லாம்' எனப் போற்றுகிறார் திருவள்ளுவர். அதேபோல் பரிமேலழகர், 'தன் அடி அளவினால் எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுமையும்' என்கிறார்.
பலாவின் தாயகம் இந்திய தேசம்தான். கிறிஸ்து பிறப்புக்குச் சுமார் 300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கிரேக்க வரலாற்று அறிஞர் தியோபிராஸ்டிஸ் என்பவர், 'இந்தியாவில் உள்ள ரிஷிகள், பலாப்பழத்தை உணவாகச் சாப்பிட்டு வந்தனர்' என்று தனது பயணக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இத்தனை பழைமை வாய்ந்த பலா, மருத்து வக் குணங்களும் கொண்டது!
பலா இலையைப் பக்குவப் படுத்திச் சாப்பிட்டால் பெரும் வயிறு, படை முதலானவை நீங்கும். இலைக் கொழுந்தை அரைத்துச் சிரங்குகளில் பூசிக்கொள்ள, உடனே குணம் பெறலாம்.
இதன் இலைகளை எரித்து, அந்தச் சாம்பலை ஒரு சிட்டிகை எடுத்து தினமும் காலையில் சாப்பிட்டு வர, அல்சர் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமாகும். நெரிக்கட்டிகள், கழலைக் கட்டிகள்மீது பலாவின் பால், பிசினுடன் சிறிது காடி (வினிகர்) கலந்து பூசினால், தானாகவே பழுத்து உடையும். பலா வேர் மற்றும் இலையைச் சேர்த்து அரைத்து இரண்டு கிராம் தேனில் கலந்து, பெண்கள் சாப்பிட்டுவர, தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
மாலைக்கண் நோய், காயங்கள், சொறி, சிரங்கு, தேமல், கல்லீரல் வீக்கம், அஜீரணம், வாயுத் தொல்லை, விஷப்பூச்சிக் கடி, பல் வலி போன்ற பல நோய்களை நீக்கிக் குணமாக்கும் வல்லமை பலாவுக்கு உண்டு.
பலவு என்றும், வேர்ப் பலா, ஆலடிப்பலா, கோட்டுப் பலா என்றும் சங்க இலக்கியங்களில் பலாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன.
சீர்காழி தாடாளன் கோயிலில் மட்டுமின்றி, கொல்லிமலை ஸ்ரீஆறுமுகப்பெருமான் ஆலயம், திருச்சி திருமங்கலம் ஸ்ரீசமயா தீஸ்வரர் ஆலயம், குற்றாலம் ஸ்ரீகுரும்பலா ஈசர் கோயில் ஆகிய தலங்களிலும் பலா மரம் தல விருட்சமாகப் போற்றப்படுகிறது.
|
No comments:
Post a Comment