Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 37

வெள்ளிக்கிழமைகளிலும், செப்டம்பர் 23 முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரையிலான நாட்களிலும், விருச்சிகம் மற்றும் துலாம் ராசியிலும் பிறந்தவர்கள் விசாக நட்சத்திரத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தின் நண்பனாகத் திகழ்கிறது, விளா மரம்!
குழந்தை பாக்கியமின்மை, பிறக்கின்ற குழந்தை ஊனமாகப் பிறத்தல், வாயுத் தொல்லைகள், நோய்த் தொற்று, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி, சர்க்கரை நோய், மனப் பதற்றம், ஈறு மற்றும் கர்ப்பப்பைக் கோளாறுகள் ஆகியவை விசாக நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால் உண்டாகின்றன. இதனை விசாக நட்சத்திர தோஷம் என்பர். விசாகத்தின் விருப்பம் மிகுந்த விளா மரம், அதன் நல்ல கதிர்வீச்சுகளைத் தனக்குள் சேமித்து வைத்துக்கொள்கிறது. விளா மர நிழலில் இளைப்பாறினால், விசாக நட்சத்திர தோஷத்தில் இருந்து விடுபடலாம்!
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருநின்றியூர். இங்குள்ள ஸ்ரீஉலகநாயகி சமேத ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம் விளா மரம். திருமகள் வழிபட்டதால், இந்தத் தலம் திருநின்றியூர் எனப்படுகிறது (பூசலார் நாயனார் மனக்கோயில் கட்டி வழிபட்ட தலம், திருநின்றவூர்; திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது). தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில் இது.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடப் பெற்ற தலம்; இந்திரன், அகத்தியர் மற்றும் ஐராவதத்துக்கு சிவனார் பேரருள் புரிந்த தலம் எனப் புராணப் பெருமைகள் கொண்ட ஆலயம். பிரம்மஹத்தி தோஷத்தால் அவதியுற்ற கோச்செங்கட் சோழன், தினமும் சிதம்பரம் தலத்துக்கு வந்து, அர்த்தஜாம பூஜையைத் தரிசித்துச் சென்றான். அப்போது, திருநின்றியூர் பகுதி வனமாகத் திகழ்ந்ததாம். இரவு வேளையில் தீப்பந்த வெளிச்சத்தில் மன்னனும் படையினரும் பயணிக்க... இந்த வனத்தில் ஓரிடத்தில் தீப்பந்தங்கள் அனைத்தும் அணைந்துவிடுமாம்! அந்த இடத்தைக் கடந்ததும், மீண்டும் தீப்பந்தத்தை ஏற்றிச் செல் வார்கள். ஒருநாள்... வானில் இருந்து காமதேனு இறங்கி வந்து, ஓரிடத்தில் பால் சொரிந்துவிட்டுப் பறக்க... அதைக் கண்ட மன்னன் அதிசயித்துப் போனான்.
காமதேனு பால் சொரிந்த இடத்தில் தனது ஈட்டியால் குத்த... அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க, லிங்க மூர்த்தமாகத் தோன்றினார் சிவனார்! அதில் சிலிர்த்த மன்னன், அந்த இடத்தில் அழகிய கோயிலைக் கட்டி, வழிபட்டான். அவனது தோஷங்கள் யாவும் விலகின. பின்னாளில் நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப்படும் சமூகத்தினர், இந்தக் கோயில் திருப் பணிகளில் அதிக அளவில் ஈடுபட்டனர்.
மூன்று நிலை ராஜகோபுரம்; உள்ளே நுழைந்ததும், பலி பீடம், நந்தி மண்டபம், முன் மண்டபம் மற்றும் சந்நிதிகள். வலது புறத்தில் அம்பாள் ஸ்ரீஉலகநாயகி; தென்முக வாயிலுக்கு நேர் சந்நிதியில் ஸ்ரீலட்சுமி புரீஸ்வரர் தரிசனம். இங்கு ஆடி வெள்ளிக்கிழமை களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சகல ஐஸ்வரியங்களுடன் திகழ, ஸ்ரீலட்சுமி ஹோமம் நடைபெறுகிறது. தாமரை இதழில் தேனூற்றி யாகம் செய்வது இங்கு விசேஷம். ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரரை வழிபட, பிள்ளை பாக்கியம் கிடைக்கும்; சொத்து வழக்குகளும் சிக்கல்களும் தீரும் என்பர்.
இந்தத் தலத்தின் விருட்சமான விளா மரம் ஒவ்வாமை, ரத்தப் போக்கு ஆகியவற்றைக் கட்டுப் படுத்தும். கல்லீரல், மண்ணீரல், நரம்பு, இதயம் மற்றும் எலும்புகளுக்குக் கூடுதல் பலம் தரவல்லது; மார்பகம் மற்றும் கர்ப்பப்பையில் கேன்சர் வராமல் தடுக்கும் வல்லமையும் விளா மரத்துக்கு உண்டு.
இதன் பழம், வயிறு மற்றும் குடலுக்குத் தெம்பைத் தருகிறது; தாகம் தணிக்கிறது; வலி நிவாரணியாகத் திகழ்கிறது. பித்தத்தைப் போக்கி, வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்துகிறது. தொண்டைப் புண் மற்றும் கொப்புளங்கள் இருந்தால், விளாம்பழக் கஷாயத்தால் வாய் கொப்பளிப்பது, மிகுந்த பயனைத் தரும்!
இதன் பட்டை வெண் குஷ்டம், படை ஆகிய வற்றைக் குணமாக்கும். வேர்ப் பட்டையைச் சாறாக்கி, மிளகு, பசு நெய் கலந்து குடித்தால், பிரசவித்த பெண்களுக்கு பலம் அதிகரிக்கும். இதன் துளிர் இலைக் கொழுந்துகளை ரசமாக்கி, பால் அல்லது தயிர் மற்றும் கற்கண்டுப் பொடி கலந்து சாப்பிட்டால், அழற்சி நோய் காணாமல் போகும்.
பெரும்பாணாற்றுப்படை, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களில் விளா மரம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
'பார்வையாத்த பறை தாள் விளவின் நீழல் முன்றில் நிலவுரல் பெய்து’ என பெரும் பாணாற்றுப்படையில் வரும் வரிகளுக்கு, நச்சினார்க்கினியர் 'பார்வை மான் கட்டி நின்று தேய்ந்த தாளினையுடைய விளவினது நிழலையுடைய முற்றத் திட்டத்துத் தோன்றிய நில உரலிலே அப்புல்லரிசியைச் சொரிந்து’ என்று உரை எழுதியுள்ளார்.
மேலும் 'விளாம்பழம் கமழும் கமஞ்சூழ குழீஇ’ என நற்றிணையில் கூறப்பட்டுள்ள வரிக்கு 'தயிர்த் தொழிலில் நறுமணம் கமழ்வதற்கு, அதனுள் விளாம்பழத்தை வைத்து மணம் ஏற்றுவர்’ என்று பொருள் கூறப்படுகிறது. 'செண்பகம் கருவிளம் செங்கூதாளம்’ என்று இளங்கோவடிகள்  குறிப்பிடுகிறார்.
கும்பகோணம் அருகில் உள்ள கபிஸ்தலம், நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே அத்தானநல்லூர், புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் அருகில் உள்ள தீயத்தூர் ஆகிய தலங்களிலும் விளா மரமே ஸ்தல விருட்சம்!
- விருட்சம் வளரும்     

No comments:

Post a Comment