Thursday, 26 October 2017

திருச்சேறை சிவன்கோயில்

THIRUCHERAI_1
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் குடவாசலுக்கு சற்று முன்னதாக உள்ளது திருச்சேறை சிவன் கோயில்.
இரண்டு ஏக்கர் பரப்பில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை முதன்மை கோபுரத்துடன் உள்ளது இந்த கோபுரத்தின் முன்னர் மற்றொரு ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கட்டப்பட்டு வருகின்றது.

மனிதனுக்கு செம்மை தரும் நெறியை – முக்தி நெறியை அளித்தருளும் இறைவன் வெளிப்படும் தலமிது. திருச்சேறை பெருமானுக்கு “செந்நெறியப்பர்” என்ற பெயர் வழங்கப்படுவதும் சிறப்பானதாகும்.
இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் ஸ்தாபித்து, வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.

இத்தலத்தில் மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இத்துர்க்கையை வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் வழிபாடு செய்வது சாலச்சிறந்ததாகும்.
நவக்கிரகத்தை தரிசித்து, நடராஜபெருமான் சன்னதிக்கு அருகில் சென்றால் பைரவர் அருள்காட்சியளிக்கிறார். அப்பரால் பாடல் பெற்ற ஸ்தலம். மேலும், இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ள பைரவர் வேறு எங்கும் இல்லாதது தனி சிறப்பாகும்.

“விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை
தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம்
உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே“

சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறும் தேவாரப் பாடலாகும். பைரவருக்கு அஷ்டமியன்று வடைமாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் காரியானுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரக தோஷங்கள் நீங்குதல் ஆகியன கிட்டுகிறது என்கின்றனர்.
தக்கன் யாகத்தில், தான் செய்த தவறுக்கு கழுவாய் தேடி, சூரியன் பல இடங்களிலும், இறைவனை வழிபட்டான். அவ்வாறு சூரியன் பூஜித்த ஸ்தலங்களுள் சாரபரமேஸ்வரர் ஸ்தலமும் ஒன்றாகும் என்பது இத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும்.

ஆண்டுதோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன. இந்த மூன்று நாட்களிலும் மாலை வேளைகளில் கண்டியூரில் சூரிய பூஜை நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது. மாசி மாதம் முழுவதும் காலையில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

வெளிப்பிரகாரத்தில் மூலவர் சாரபரமேஸ்வரருக்கு இடப்பால் இறைவி ஞானவல்லி அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் ஞானவல்லி அம்பாள்.

உள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தெட்சிணாமூர்த்தி, காலபைரவர், துர்க்கை, சூரியன், சனிபகவான் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேற்கு பிரகாரத்தில் தல விநாயகரும், அவரையடுத்து மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுக்கவல்ல ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் சன்னதி ஆகும்.
இவருக்கு அடுத்து பாலசுப்பிரமணியர் சன்னதியும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் சோழ மகாராஜாவால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும்.

இங்கு தலவிருட்சமான மாவிலங்கை வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.(தற்போது பட்டு போய்விட்டது)
நன்றி : கடம்பூர் விஜயன்
தொகுப்பு : சீதா பாரதிராஜா 

No comments:

Post a Comment