Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 44

புத்திசாலித்தனமும் அடக்கமும் கொண்ட குணம், இசையில் ஈடுபாடு, வாக்கில் சுத்தம், நினைத்ததை அடைவதில் முனைப்பு, நற்காரியங்களில் ஆர்வம், பழி பொறுக்காத தன்மை, எதிரிகளை வீழ்த்தும் திறன்... ஆகிய இந்தக் குணங்கள் பெரும்பாலான அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு உரியவை.
சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 21 முதல் பிப்ரவரி 18-ஆம் தேதி வரை பிறந்தவர்கள், அவிட்ட நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். மகரம், கும்பம் ஆகிய ராசிகள், சனிக் கிரகம் ஆகியவை அவிட்ட நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டவை. இதன் கதிர்கள், மேற் குறிப்பிட்ட நாட்களில் அதிக அளவில் பூமியில் விழும். அதன் நல்ல கதிர்வீச்சுகள் நன்மையையும், கெட்ட கதிர்வீச்சுகள் தீமை மற்றும் நோய்களையும் விளைவிக்கும். வாத நோய், பித்தம் தொடர்பான நோய்கள், இருமல், சொறி, சிரங்கு, மார்புச் சளி, விஷக்கடி ஆகியவை அவிட்ட நட்சத்திர தோஷத்தால் ஏற்படும். இதிலிருந்து விடுபட, வன்னி மர நிழலில் சிறிது இளைப்பாறுவது நல்லது. வன்னி மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளையும் உட்கொள்ளலாம்.
வேதாரண்யம் ஆலயத்தின் தல விருட்சமாக விளங்குகிறது வன்னி மரம். நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில், வேதவனம் எனும் வேதாரண்யம் தலம் அமைந்துள் ளது. திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி என்பார்கள். அதுபோல், வேதாரண்யத்தில் நீராடினால் முக்தி என்பது ஐதீகம்.
 
வேதங்கள் நான்கும் பூஜித்த தலம்; ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீவேதாரண்யேஸ்வரர். சிவலிங்கத் திருமேனிக்குப் பின்னே, உமைய வளுடன் சிவனார் திருமணக் கோலத்தில் காட்சி தரும் அற்புதத் தலம். அம்பிகையின் திருநாமம்- ஸ்ரீவேதநாயகி. இந்தத் தலத்து ஸ்ரீசரஸ்வதி தேவி, தனது திருக்கரத்தில் வீணையின்றிக் காட்சி தருகிறாள். ஸ்ரீசரஸ்வதி தேவி வீணை வாசிக்க, அதைக் கேட்ட அம்பிகை, 'சபாஷ்’ என்று பாராட்டினாள். அவளின் குரல், வீணை இசையைவிட சிறந்திருக்க, அதற்கு இணையாக ஸ்ரீசரஸ்வதி தேவியால் வீணையை இனிமையாக மீட்ட முடியாமல் போனதாம். எனவே, அவளின் கர்வம் அழிந்தது; கற்றது கையளவு என அறிந்து உணர்ந்தாள் என்கிறது ஸ்தல புராணம். அதுமட்டுமா... இலங்கை செல்லும் முன் ஸ்ரீராமர், இங்கே சிவலிங்க பூஜை செய்து, சாந்தரூபினியாகத் திகழும் ஸ்ரீதுர்கையை வழிபட்டுச் சென்றார் என்கிறது ஸ்தல புராணம்.
வழக்கமான அமைப்பில் இல்லாமல், நேர்ப்பக்கமாக இருக்கிற நவக்கிரகங்களும் நடுக்கம் தீர்த்த விநாயகரும் இங்கு சிறப்பு! மேலும் ஸ்ரீவீரகத்தி விநாயகர், மோட்சத்துவாரேஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீசனீஸ்வரர் ஆகியோரும் இங்கே தனிச்சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர்.  
நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் பதிகம் பாட...
பூட்டப்பட்டிருந்த ஆலயக் கதவுகள் தாமே திறந்து- மூடிய அற்புதம் நிகழ்ந்த தலமும் இதுவே. மாசி மக நன்னாளில், கதவு திறக்கும் ஐதீக விழா சிறப்புற நடைபெறுகிறது.
வன்னி மரத்தடியில் அமர்ந்து கடும் தவம் செய்து, ஸ்ரீபிரம்மனின் தரிசனமும் கிடைக்கப் பெற்று, ஸ்ரீவசிஷ்டரின் வாயால் பிரம்மரிஷி என்கிற பட்டத்தை ராஜரிஷி விஸ்வாமித்திரர் பெற்றது, இந்தத் தலத்தில்தான்!
ராவணனுடன் போரிடுவதற்கு முன்னதாக, ஸ்ரீராமர் வன்னி மரத்தைத் தொட்டு வணங்கி விட்டுப் போர் செய்யக் கிளம்பியதாக ராமாயணம் தெரிவிக்கிறது. பாண்டவர்கள், தங்களது போர் ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்ததாக மகாபாரதக் குறிப்பு தெரிவிக்கிறது!
வன்னிக் காய்களைப் பவுடராக்கி,  காலையும் மாலையும் சாப்பிட்டு வர,  மாதவிலக்கு மற்றும் ரத்தப் போக்குக் கோளாறுகள், கர்ப்பப்பை புண் மற்றும் வீக்கம் ஆகியன குணமடையும். வன்னிக் காயைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால், பற்களும் ஈறுகளும் பலமாகும். வன்னிக்காய் பவுடரை தேங்காய் எண்ணெய் அல்லது தேன்மெழுகில் கலந்து களிம்பாக்கி, மூலக் கட்டிகள் கரைவதற்குப் பயன்படுத்தலாம்.
விருத்தாசலம், திருவான்மியூர், மேலைத் திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி போன்ற பல தலங்களின் விருட்சமாகவும் திகழ்கிறது வன்னி மரம்.  
                                                                                                       - விருட்சம் வளரும்..

No comments:

Post a Comment