தனித்துவ குணம், இறை பக்தி, எடுத்த வேலையை முடிக்கும் உறுதி, எதிராளிகளை அன்பால் வெல்லும் சாதுர்யம், முன்கோபம் ஆகியவை 'மூலம்’ நட்சத்திரக்காரர்களின் இயல்புகள். தனுசு ராசி மற்றும் வியாழக் கிரகத்துடன் தொடர்பு கொண்டது, இந்த நட்சத்திரம். வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்கள், மூலம் நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். இதன் கெட்ட கதிர் வீச்சுக்கள் நோய்களையும், நல்ல கதிர் வீச்சுக்கள் நன்மைகளையும் தருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறைக்கு சுமார் 3 கி.மீ. தொலைவிலும், திருவிடைமருதூருக்கு சுமார் 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருமங் கலக்குடி. இங்குள்ள ஸ்ரீமங்களநாயகி சமேத ஸ்ரீபிராணநாதேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம்- இலவம். இந்தக் கோயில், திருவாவடு துறை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
அம்பாளின் திருநாமம் ஸ்ரீமங்களாம்பிகை. அத்துடன் ஸ்ரீமங்கல விநாயகர், மங்கல தீர்த்தம், மங்கல விமானம், தலம்- மங்கலக்குடி என உள்ளதால், இதனைப் பஞ்ச மங்கல க்ஷேத்திரம் என்பர். அப்பர், ஞானசம்பந்தர், ராமலிங்க அடிகளார் ஆகியோர் பாடிப்பரவிய தலமிது.
தனக்கு வரவிருந்த தொழுநோய் பற்றி ஞான திருஷ்டியால் அறிந்த காலவமுனிவர், இமயமலையில் நவக்கிரகங்களை வேண்டி தவமிருந்தாராம். அவருக்கு காட்சி தந்த நவக் கிரகங்களோ, ''பூர்வஜென்ம வினையை தடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை'' என்றனராம். இதனால் கோபம் கொண்ட முனிவர், தனக்கு வரவிருக்கும் நோய் நவக்கிரகங்களையும் பீடிக்கக் கடவது என்று சபித்தார். அதன்படி நோயால் அவதிப்பட்ட நவக்கிரகங்கள், ஈசனைப் பிரார்த் தித்தனர். அப்போது, ''காவிரியின் வடகரையில், வெள்ளெருக்கு வனத்தில், ஸ்ரீபிராணநாத ஸ்வாமியை வணங்கி தவமிருங்கள். தொடர்ந்து 11 ஞாயிறுகளில் வெள்ளெருக்கு இலையில் தயிரன்னத்தை ஸ்வாமிக்குப் படைத்து, நீங்கள் சாப்பிட்டு வந்தால், விமோசனம் உண்டு!'' என்றொரு அசரீரி ஒலித்தது. அதன்படியே வழிபட்டு, சிவனருளால் நவக்கிரகங்கள் விமோசனம் அடைந்தனராம்.
முதலாம் குலோத்துங்கச் சோழனின் அமைச்சர் அலைவாணர் என்பவர், வரிப்பணத்தை செலவழித்து இங்கே சிவனாருக்கும் நவக்கிரகங் களுக்குமாக ஆலயம் எழுப்பினாராம். இதனால் கோபம் கொண்ட மன்னன், அமைச்சருக்கு மரண தண்டனை அளித்தான் அப்போது, ''நான் இறந்ததும் எனது உடலை திருமங்கலக்குடியில் புதையுங்கள்'' என்று வேண்டிக் கொண்டாராம் அமைச்சர். தண்டனை நிறைவேற்றப்பட்டதும், அவரது உடல் இந்தத் தலத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவரின் மனைவி அம்பாள் சந்நிதியில் நின்று, 'உனக்குக் கோயில் கட்டிய என் கணவனைத் திருப்பிக்கொடு’ என அழுது மன்றாடினாள். அவளுக்கு மனமிரங்கி அமைச்சரை உயிர்ப்பித்தார் சிவனார். இதனால் அவருக்கு ஸ்ரீபிராணநாதேஸ்வரர் என்று பெயர்! அன்று முதல், தன்னை நாடி வரும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தந்தருள்கிறாள், ஸ்ரீமங்களாம்பிகை.
இங்கே, நவக்கிரக சந்நிதி இல்லை; சூரியனும் சந்திரனும் தனித்தனியே அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீசிவ துர்கை, ஸ்ரீவிஷ்ணு துர்கை இருவரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருட்சம்- இலவம்.இதன் இலையை அரைத்துப் பசும்பாலில் கலந்து சாப்பிட, சிறுநீர் எரிச்சல் நீங்கும்; இதன் பூவைத் தண்ணீரில் கலந்து சாப்பிட, மலச்சிக்கல் சீராகும். இலவத்தில் இருந்து கிடைக்கிற கோந்து, வெள்ளைப்படுதல் மற்றும் சீதபேதியைக் கட்டுப்படுத்த வல்லது.
இலவம், இலவு என்றெல்லாம் குறிப்பிடப்படும் இந்த மரத்தின் செந்நிறப் பூக்கள் குறித்து, குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. யானைகள் தங்களது தினவைப் போக்கிக்கொள்வதற்கு, முள் அமைந்த அடிமரத்தில் உராய்ந்து தேய்த்துக் கொள்கின்றன என்றும், அந்த மரம் பாலை நிலத்தில் வளரும் என்றும் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருக்கோடி, திருக்கைச்சினம் ஆகிய கோயில்களிலும் இலவ மரமே தலவிருட்சம்.
- விருட்சம் வளரும்...
'பூர்வ ஷென்ம தோஜம் விலகும்!’
'’ஸ்ரீபிராணநாதருக்கு, 11 ஞாயிற்றுக்கிழமைகள் எருக்கன் இலையில் தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து, சந்நிதிக்கு எதிரே சாப்பிட்டால், ரோகப் பிணிகள் யாவும் நீங்கும்; ஆயுள் கூடும். அதே நாளில் அர்ச்சித்து, தயிர்சாத நைவேத்தியத்தை அன்னதானம் செய்து பிரார்த்தித்தால், பூர்வஜென்ம தோஷங்கள், பித்ரு தோஷம், கிரக தோஷம் என சகல தோஷங்களும் விலகும்!'' என்கிறார் கோயில் அர்ச்சகர், சுவாமிநாத சிவம் குருக்கள்.
''ஸ்ரீமங்களாம்பிகைக்கு வெள்ளிக்கிழமையன்று, அர்ச்சனை செய்து வேண்டினால், திருமணத் தடை மற்றும் தோஷங்கள் நீங்கும். திருமணமாகி, மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள், சந்நிதிக்கு வந்து, 'மறு மாங்கல்யதாரணம்’ செய்துகொண்டால், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள்''
|
No comments:
Post a Comment