Thursday 26 October 2017

பிரமிப்பூட்டும் பல அதிசயங்களைக் கொண்ட சுக்ரீஸ்வரர் ஆலயம்

sukreeswarar_temple

திருப்பூர் மாவட்டம், சர்க்கார் பெரியபாளையத்தில் பிரமிப்பூட்டும் பல அதிசயங்களை கொண்டுள்ளது சுக்ரீஸ்வரர் திருக்கோயில்.
இந்த ஆலயம் சுமார் 2,500 ஆண்டுகளுக்கும் பழமையானது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் சுக்ரீஸ்வரர் என்றும், இறைவி ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.  சுற்றுப்பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் தனி சந்நதியில் விளங்குகின்றனர்.
எந்த சிவன் கோயில்களிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் உள்ளார். பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்களும் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோயிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்குப் பிடித்த வில்வ மரத்தின் கீழ் ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளதாகக் கோயில் வரலாறு கூறுகின்றது.
ஒரு சமயம் வியாபாரி ஒருவர் பொதிச்சுமையாக மாடுகள் மீது மிளகு மூட்டை ஏற்றிச் சென்றுள்ளார். மாறுவேடத்தில் வந்த சிவன், மூட்டைகளில் என்ன என்று கேட்ட, விவசாயி உடனே பயிறு எனக் கூறியுள்ளார். சந்தைக்குச் சென்று பார்த்தபோது, மிளகு மூட்டைகள் அனைத்தும் பயிறு மூட்டைகளாக மாறியிருந்தன. அதிர்ச்சி அடைந்த விவசாயி, இறைவனிடம் கதறினான். செய்த தவற்றை வருந்திய வியாபாரி தன்னை மன்னித்து அருளும் படி இறைவனிடம் பணிந்தார். சுக்ரீஸ்வரரை வணங்கியதால் மீண்டும் மிளகு மூட்டைகளாக மாறின. இப்பகுதியில் உள்ள மக்கள் இறைவனை மிளகீஸ்வரர் என்றே அழைக்கின்றனர். தட்சிணாயனம் - உத்திராயணம் இணையும் போது சூரியனின் கதிர்கள் ஸ்வாமி மீது விழுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும்.
தொல்லியல் துறை 1952-ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கோயிலை ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. கற்களைப் பிரித்து பார்த்தபோது, தொல்லியல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும் இதே கட்டுமானத்தில் மற்றொரு கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், அக்கோயில் பூமிக்கு அடியில் இறங்காமல் கல் கோயில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்குக் கொம்பு, காது இருக்காது. கோயில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்குச் சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, காதையும், கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோயிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார்.
பின், தவறுக்கு பிராயச்சித்தமாக மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது ஸ்தல வரலாறு கூறுகின்றது.
 நன்றி :- அ.கு பார்வதி
தொகுப்பு : சீதா பாரதிராஜா 

No comments:

Post a Comment