Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! -16

                                                             மகிழ மரம்

வானில் உள்ள ராசி மண்டலங்களில், துலாம் ராசி மண்டலம், சக்தி வாய்ந்தது. இந்த ராசி, சுக்கிர கிரகத்துடன் தொடர்பு கொண்டது. வெள்ளிக்கிழமை அன்று பிறந்தவர்கள், செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரை பிறந்தவர்கள் மற்றும் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய மண்டலமும் இதுவே!
இந்த மண்டலத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால் இவர் களுக்கு அலர்ஜி, சளி, மூக்கடைப்பு, ஜுரம், தலைவலி, மூக்கு, தொண்டை மற்றும் பற்களில் பிரச்னை என அடிக்கடி வந்து இம்சை செய்யும். இவர்களது உடல் மற்றும் மனரீதியான நோய்களுக்கும் பிரச்னைகளுக்கும் பலன் தருவதாக விளங்குவது, மகிழ மரம்! கிரக, ராசி, நட்சத்திரத்தின் நன்மை தரும் கதிர்வீச்சுகளை ஈர்த்து, தன்னுள் நிரப்பிக்கொள்கிறது இந்த மரம்.
மேற்கண்ட ராசி, நட்சத்திரம் மற்றும் தேதிகளில் பிறந்த அன்பர்கள், வீட்டுத்தோட்டத்தில் மகிழ மரத்தை வளர்க்கலாம். தினமும் அரை மணி நேரம் இந்த மரத்தைக் கட்டிப்பிடித்தாலோ அல்லது மர நிழலில் அமர்ந்தாலோ, கிரக தோஷம் விலகும்; தேகத்தில் எதிர்ப்பு சக்தி வளரும்; உடலில் வலிமையும் மனதுள் நிம்மதியும் பெருகும். மகிழ்ச்சியைப் பெருக்கும் இந்த மரத்துக்கு, இதனால்தான் மகிழ மரம் என்று பெயர் அமைந்ததாகவும் சொல்வர்!
பஞ்ச பூதங்களில் துலாம் ராசி, காற்றுடன் தொடர்புகொண்டது. கோவை- கோட்டமேடு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம்- மகிழ மரம்.
முதலாம் பராந்தகச் சோழன் (கி.பி. 907 - 948), இந்தக் கோயிலைக் கட்டியிருக்கலாம் என்கின் றனர் வரலாற்று ஆய்வாளர்கள். கி.பி.1300 முதல் 1365-ஆம் வருடம் வரையிலான கால கட்டங்களில், கோயில்கள் பலவும் சிதைக் கப்பட்டனவாம்! இதையடுத்து இந்த ஆலயமும் சிதிலம் அடைந்த நிலையில், வழிபாடுகளும் இன்றிக் காணப்பட்டதாம். பிறகு, விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில், சங்குபுஷ்பக் காடுகளாக இருந்த பகுதியை அழித்து, கோட்டை கட்டத் திட்டமிட்டனர். அப்போது, புதருக்குள் மறைந்திருந்த கோயில் தென்படவே... திருப் பணிகள் செய்யப்பட்டு, பொலிவுபடுத்தப் பட்டது இந்த ஆலயம் என்கின்றனர். இதன்பிறகு 17-ஆம் நூற்றாண்டில், மீண்டும் இன்னொரு தாக்குதலுக்கு உள்ளானது கோயில். திரும்பவும் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகச் சொல்கிறது, ஸ்தல வரலாறு.
சோழ மன்னனால் பிரதிஷ்டை செய்யப் பட்டு ஆலயம் அமைக்கப்பட்டதால், இறைவனுக்கு ஸ்ரீசோழீஸ்வரமுடையார் எனும் திருநாமமும் உண்டு. விஜயநகரப் பேரரசுக்குச் சங்க வம்சம் என்றும் பெயர் உண்டு. எனவே, அவர்கள் திருப்பணி செய்த ஆலயம் என்பதை நினைவுபடுத்தும் வகையில், ஸ்வாமிக்கு ஸ்ரீசங்கமீஸ்வரர் எனும் திருநாமமும் அமைந்ததாம்! இதுவே பின்னாளில் ஸ்ரீசங்கமேஸ்வரர் என மருவியதாகச் சொல்வர்.
இத்தனைப் புராதனப் பெருமைகள் கொண்ட ஆலயத்தின் ஸ்தல விருட்சம்- மகிழ மரம். நறுமணம் மிகுந்ததும் அதிக தேனை உள்ளுக் குள் வைத்திருப்பதுமான மகிழம் பூக்களை நுகர்ந்தாலே உற்சாகம் பிறக்கும்; மண்டைச் சளி வெளியேறும்; தலைவலி நீங்கும் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்!
மகிழம்பூவிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், காயம் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. காய்ச்சலுக்கு டானிக் போல பயன்படுத்தலாம். இதனைக் கொண்டு வாய் கொப்புளிக்க, பற்களும் ஈறுப் பகுதியும் உறுதிப்படும். மகிழ மரத்தின் வேரை, விழுது போல அரைத்து, வினிகரில் கலந்து, முகத்தில் ஏற்பட்ட வீக்கத்துக்குத் தடவினால், விரைவில் குணம் கிட்டும்.
கண் நோய்க்கான சொட்டுமருந்து தயாரிக்க, மகிழ விதை பயன் படுகிறது. விதையிலிருந்து தயாரிக்கப் படும் மருந்து, வயிறு சம்பந்தமான பிரச்னைகளைக் குணப்படுத்துகிறது. விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைப் போக்குகிறது. விதை களைப் பவுடராக்கி, அதில் தேன் அல்லது நெய் கலந்து சாப்பிட... உடலுக்கு வலு கிடைக்கும்; ஆண்மைச் சக்தி அபிவிருத்தியாகும்! மகிழம்பூவில் இருந்து எண் ணெய் எடுத்து, அதனைச் சந்தனமர எண் ணெயுடன் கலந்து வாசனைத் திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
இந்துக்களுக்கு மட்டுமின்றி, பௌத்த மற்றும் சமணத்தவர்களுக்கும் புனிதமான மரமாகத் திகழ்கிறது மகிழ மரம்! திருவண்ணாமலை கோயில் ஸ்தல புராணத்தில், மகிழம் என்றால் மங்கலம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. அண்ணா
மலையாரை வழிபட்டு, ஆலயத்தில் உள்ள மகிழ மரத்தடியில் சற்று நேரம் அமர்ந்தால், பாவங்கள் விலகும்; நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை! மகிழ மரத்தைச் சுற்றி வந்து, மரக்கிளையில் தொட்டில் கட்டி வழிபட்டால், ஆண் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மகிழத்துக்கு 'வகுளம்' என்றும் பெயருண்டு; ஈசனுக்கு வகுளவனநாதர் எனும் திருநாமம் உண்டு. கபிலர், தனது பாடல்களில் மகிழ மரத்தை, வகுளம் என்று குறிப்பிட்டிருப்பதாக நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். மகிழத்தை இலஞ்சி, மகிழ் என்றெல்லாம் பிற்கால இலக்கியங்கள் தெரிவிக் கின்றன. ஸ்ரீராமனின் கொப்பூழ்க்கு (தொப்புள்) இந்தப் பூவை உதாரணப்படுத்தியுள்ளார் கம்பர்!
தேர்க்காலின் வடிவமைப்புக்கு இணையாக மகிழ மரத்தை ஒப்பிட்டுப் பாடியுள்ளார் திருத்தக்க தேவர். மகிழம்பூவானது, மரத்திலிருந்து விழுவது அழகு; இதனை சிலந்திப் பூச்சி கீழே விழுவது போல் உள்ளது என விவரிக்கிறார் அவர்!
                                                                                                      - விருட்சம் வளரும்

No comments:

Post a Comment