Wednesday, 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 25

வர் சொல்லுக்கும் கட்டுப்படாதவர்கள், ரோகிணி நட்சத்திரக்காரர்கள். குடும்பப் பிரச்னையை பெரியவர்கள் தீர்த்து வைக்க முற்பட்டால்கூட, ஏற்கமாட்டார்கள். அதே நேரம், 'நல்ல அறிவாளி; பொய் பேச மாட்டார்; கருணையுள்ளம் கொண்டவர்’ என நற்குணங்கள் பல உண்டு.
ரோகிணி நட்சத்திரக்காரர்கள், புதிய நோய்களுக்கும் மனச் சங்கடங்களுக்கும் ஆளாகும்போது, அதனை கிரக தோஷம் என்பர். இந்த நட்சத்திரத்திலிருந்து வெளியேறும் கெட்ட கதிர்வீச்சுகள்தான் அவர்களது கிரக தோஷத்துக்குக் காரணம் என்கிறது வானவியல் - மூலிகை சாஸ்திரம்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வெள்ளிக்கிழமை மற்றும் ஏப்ரல் 21 முதல் மே 20-ஆம் தேதி வரையிலான நாட்கள், அதிக பலன்களைத் தருபவை. இந்த நட்சத்திரம், ரிஷப ராசி மற்றும் சுக்கிரன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது.  
ரோகிணியுடன் நெருக்கமாக இருப்பது, இலந்தை மரம் (நாவல், களாக்காய், புளி ஆகியவையும் இலந்தை வகை மரங்களே!). இது, ரோகிணி நட்சத்திரத்தின் நல்ல கதிர் வீச்சுகளை தன்னுள் ஈர்த்துக்கொள்ளும். தினமும் அரை மணிநேரம் இந்த மரத்தடியில் அமர்வதும், இந்த மரத்தை தொடுவதும், அதன் காற்றை சுவாசிப்பதும் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு மிகுந்த பலன்களைத் தரும்; உடல் மற்றும் மனப் பிரச்னைகள் தீரும்; கிரக தோஷம் நீங்கும்.
திருஓமாம்புலியூர் திருக்கோயிலின் ஸ்தல விருட்சம் - இலந்தை மரம். ஒருகாலத்தில், இலந்தை வனமாக திகழ்ந்த இந்தத் தலம், சிதம்பரத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும், காட்டுமன்னார்குடியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இங்கு ஸ்ரீபூங்கொடியம்மை சமேத ஸ்ரீதுயர் தீர்த்தநாதர் கோயிலில், கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடை பெற்றது. சதுரவடிவ ஆவுடையாருடன் சுயம்பு மூர்த்தியாகத் திகழும் ஸ்வாமியை வடமொழியில் ஸ்ரீபிரணவ வியாக்ர புரீஸ்வரர் எனவும், அம்பிகையை ஸ்ரீபுஷ்ப லதாம்பிகை என்றும் அழைப்பர்.
பஞ்சபுலியூர் தலங்களில் ஒன்றான திருஓமாம்புலியூர், தேவாரப் பாடல் பெற்ற  தலமாகும். இங்கே கோஷ்டத்தில் மட்டுமின்றி, ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிக்கு நடுவே, ஸ்ரீதட்சிணாமூர்த்தி சந்நிதிகொண்டிருப்பது விசேஷம்! அம்பாளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை அருளியவர் இவர் என்கிறது ஸ்தல புராணம்.  
இவர் அம்பாளுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசிக்கும்போது முருகப்பெருமான் அங்கு வந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தார் நந்தி. உடனே வண்டாக உருவெடுத்த முருகன், அபிஷேக நீர் வெளியே வரும் பாதை வழியே உள்ளே சென்று, உமையவளின் கூந்தலில் உள்ள மலரில் அமர்ந்து, உபதேசத்தைக் கேட்டார்! பிறகு, கோபத்துடன் சுவாமிமலைக்குச் சென்று, தங்கினார். இதையறிந்த சிவனார், அங்கே சென்று அவரை அழைக்க... தந்தைக்கு 'ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்து அருளினார், கந்தக் கடவுள். 'இது உனக்கு எப்படித் தெரியும்?’ என சிவனார் வியப்புடன் கேட்க, நடந்தவற்றை விளக்கினார் கந்தக் கடவுள் என்கிறது சுவாமிமலை தலத்தின் புராணம்.
அம்பாளுக்கு, ஓம் எனும் பிரணவ மந்திரம் உபதேசிக்கப்பட்ட தலம், 'ஓமாம்’ என்று பெயர் பெற்றதாகச் சொல்வர். அதேபோல், வேடனைத் துரத்திய புலிக்கும் முக்தி கொடுத்த ஊர் என்பதால், ஓமாம்புலியூர் என அழைக்கப்படுகிறது.
இரண்டு தட்சிணாமூர்த்திகள் அருளும் தலம் என்பதால் சூரியன், சனீஸ்வரர் தவிர நவக்கிரக சந்நிதிகள் இல்லை. 3-ஆம் குலோத்துங்கச் சோழன் மற்றும் பல்லவ மன்னன் சகல புவன சக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்க தேவர் ஆகியோர் கோயிலுக்குத் திருப்பணி செய்துள்ளதைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் உள்ளன.
அம்பிகை, இலந்தை மரத்தடியில்  அமர்ந்து தவமிருந்தாளாம். ஆகவே, வெளிப் பிராகாரத்தில் இலந்தை மரமும், மரத்தடியில் தவ நிலையில் அம்பிகையின் திருவிக்கிரகமும் அமைந்துள்ளது. தவக் கோலத்தில் உமையவள் இருப்பதால், இங்கே பத்து நாள் உத்ஸவம், கொடிமரம், பள்ளியறை ஆகியவை இல்லை. மாசி மகம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில், பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா, அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி என அமர்க்களப்படும்.  
இலந்தை மரத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் கால்ஷியம், காப்பர், இரும்பு முதலான சத்துக்களும், மாங்கனீசு, ஈயம், மக்னீஷியம், ஸிங்க் ஆகிய உலோகச் சத்துக்களும் உள்ளன என்கிறது ஓர் ஆய்வு! இலந்தைப் பழம் நச்சுக் கிருமிகளைக் கொல்லும் தன்மை வாய்ந்தது. தோல் நோய், மேக நோய் மற்றும் நுரையீரலைப் பாதிக்கச் செய்யும் கிருமிகள் ஆகிய வற்றையும் வேரோடு சாய்க்கும் வல்லமை இலந்தைக்கு உண்டு என்கின்றனர் விஞ்ஞானிகள்!
பத்து முதல் முப்பது இலந்தைப் பழங்களைச் சாப்பிட்டால், மிகச் சிறந்த ஊட்டச்சத்தாக அமையும்; ரத்த ஓட்டம் சீராகும்; உஷ்ணம் தணியும். கல்லீரல், மண்ணீரல் வலியைக் குணமாக்கும். மேலும், கண்ணில் உஷ்ணத்தால் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் பெறவும் இதனைப் பயன்படுத்தலாம். இலந்தைக் கொட்டையை இடித்துப் பௌடராக்கிச் சாப்பிட்டால், வறட்டு இருமல், பேதி ஆகியவை குணமாகும். நாட்டு இலந்தைப் பழம், குடல் மற்றும் வயிற்றுப் பூச்சிகளைச் சாகடிக்கும் குணம் கொண்டது; சீதபேதியைச் சரியாக்கும். இதன் விதைகளைக் கட்டிகளில் அரைத்துப் பூசினால், கட்டிகள் உடையும்; குணமாகும். இந்த இலைகளைக் கஷாயமாக்கிக் குடித்தால், வலி குறையும்.
கீழ்வேளூர் ஸ்ரீகேடிலியப்பர், பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர், திருவெண்பாக்கம் மற்றும் காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் உள்ள திருக்குரங்கனில் முட்டம் ஆலயங் களிலும், இலந்தை மரமே ஸ்தல விருட்சம்.
- விருட்சம் வளரும்
ரோகிணி, ரேவதி நட்சத்திரமா நீங்கள்?!
''பாப்பாக்குடிங்கற ஊரை, சதானந்தன் எனும் மன்னன் ஆட்சி செய்தான். தொழுநோயால அவதிப்பட்டவன், இங்கே வந்து சிவனாரை மனமுருகிப் பிரார்த்தனை பண்ணினான். அப்ப, 'வரம் தரும் குட்டையில் குளிச்சா, நோய் குணமாகும்’னு அசரீரி கேட்டுச்சு. அதன்படி மன்னன் அந்தக் குட்டையில குளிக்க, நோய் நீங்கி குணமானான். ஸ்வாமிக்கு ஸ்ரீதுயரம்தீர்த்தநாதர்னு திருநாமம் உண்டாச்சு. அந்தக் குட்டை இன்னிக்கும் இருக்கு'' .
''இங்கே, ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கினா, குரு தோஷம் நிவர்த்தியாகும். அம்பிகை, தவக் கோலத்துல காட்சி தர்ற தலங்கள்ல இதுவும் ஒண்ணு. அதனால, இங்கே மனமுருகிப் பிரார்த்தனை பண்ணினா, திருமண தோஷம் விலகும்; குழந்தை வரம் கிடைக்குங்கறது நம்பிக்கை. ரோகிணி நட்சத்திரத்துக்கு உகந்த இலந்தை மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட இந்தக் கோயில்ல இன்னொரு விசேஷம்... ரேவதி நட்சத்திர நாள்லதான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி உமையவளுக்கு மந்திரோபதேசம் செஞ்சார். அதனால, ரேவதி நட்சத்திரக்காரங்க இங்கே வந்து பிரார்த்தனை செஞ்சுக்கிட்டா உடனே அதை நிறைவேத்திக் கொடுத்துடுவா, அம்பிகை!'' 

No comments:

Post a Comment