Thursday 26 October 2017

கொள்ளம் பூதூர் சிவன் கோயில்

KOLLAMPUDUR_1

சிவபெருமானின் பஞ்சாரண்யத் தலங்கள் ஐந்து. ‘ஆரண்யம்’ என்றால் ‘காடு’ என்று பொருள். பஞ்சாரண்யத் தலங்கள் ஐந்தும் தஞ்சாவூர் அருகிலேயே அமைந்துள்ளது. முல்லை வனத்தில் அருளும் திருக்கருகாவூர், பாதிரி வனத்தில் இருக்கும் திருஅவளிவநல்லூர், வன்னி வனத்தில் அருளும் திரு அரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்), பூளை வனத்தில் அருளும் திருஇரும்பூளை (ஆலங்குடி), வில்வ வனத்தில் இருக்கும் திருக்கொள்ளம்பூதூர் (திருக் களம்பூர்) ஆகிய தலங்களே இவை.
ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் தரிசித்தால் திருக்கயிலையை தரிசித்த பெரும் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவற்றில் முதலாவதாக தரிசிக்க வேண்டிய திருத்தலம் திருக்கருகாவூர் ஆலயம். இங்கு உஷத் காலமாகிய காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வழிபாடு செய்ய வேண்டும்.
இரண்டாவது வழிபட வேண்டிய தலம் அவளிவநல்லூர். இங்கு காலசந்தி எனப்படும் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் தரிசனம் செய்ய வேண்டும். மூன்றாவது அரித்துவார மங்கலம். இங்கு உச்சி காலத்தில் பகல் 11 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள் வழிபட வேண்டும். நான்காவதாக ஆலங்குடி. இந்த ஆலயத்தில் சாயரட்சை வேளையில் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் இறைவனை தரிசிக்க வேண்டும். இறுதியாக திருக்களம்பூர். இந்த ஆலயத்தில் அர்த்த ஜாமத்தில் இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த ஐந்து ஆலயங்களில் திருக்களம்பூர் ஆலயத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது.
இறைவன்-வில்வவன நாதர்  இறைவி-அழகு நாச்சியார்
இந்த ஆலயத்தில் திருஞானசம்பந்தருக்காக, ஐப்பசி மாத அமாவாசையான தீபாவளி அன்று நடைபெற வேண்டிய அர்த்தஜாம பூஜை, சிவபெருமான் தீபாவளிக்கு மறுநாள் அதிகாலை உஷத் காலத்தில் ஏற்று அருள்புரிந்தார். 
வெட்டாறு எனப்படும் அகத்திய காவேரி அருகில் ஓடுகிறது, இந்த ஆற்றின் எதிர் கரையில் சம்பந்தர் தங்கிய ஓரிடத்தில் ஒரு கோயில் உள்ளது அது நம்பர்கோயில் என அழைக்கப்படுகிறது.
பாண்டிய நாட்டில் இருந்து சம்பந்தர் இத்தலம் வந்தபோது இந்த வேடாற்றில் வெள்ளம் போய்கொண்டு இருந்தது, ஓடம் செலுத்த இயலாது என ஒடக்காரர்கள் சென்றுவிட சம்பந்த பெருமான் ஒரு ஓடத்தில் சேரி பாடலையே துடுப்பாக கொண்டு என பொருள் தரும் "கொட்டமே கமழும்" எனும் பதிகத்தினை பாட ஓடம் மறுகரையை அடைந்தது இந்த அற்புதம் ஒடதிருவிழாவாக இன்றும் நடைபெறுகிறது.
 
கூவிளம் என்றால் வில்வம் என பொருள் கூவிளம் புதூர் என்பதே கொள்ளம்பூதூர் ஆனது. விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேஷன், இடைக்காடர், வரகுணபாண்டியன், கொச்செக்கட் சோழன் பிருகு முனி, காசிபர், கண்வர், அகத்தியர், வசிட்டர், வாமதேவர், அருச்சுனன் வழிபட்ட தலம் இது.
சுவாமி விபுலானந்தர் எழுதிய யாழ் நூல் இத்தலத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நகரத்தார் திருப்பணி ஏற்ற தலம், நச்சாந்துப்பட்டி பே.ரா. ராமன் செட்டியார் குடும்பத்தினர் இக்கோயில் திருப்பணி செய்த பெருமக்கள் ஆவர்.
பிரமன் தான் இழந்த படைப்பு தொழிலை மீட்டுப்பெற இந்த தலத்தில் வில்வமரத்தடியில் லிங்கம் வைத்து பூசை செய்து படைப்பு தொழிலை மீண்டும் பெற்றான். அகத்தியர் அகத்திய தீர்த்தம் உண்டுபண்ணி பல மந்திர உபதேசங்களை பெற்ற தலம்.
முகப்பு சுதை வளைவுடன் கோயில் வளாகம் துவங்குகிறது, அடுத்து மூன்று நிலை முதன்மை கோபுரம், இடது புறம் சிறிய விநாயகர் சிற்றாலயமும், வலது புறம் முருகன் சிற்றாலயமும் உள்ளது.
கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன், அழல்முகன், நான்முகன், விஷ்ணு துர்க்கை உள்ளனர். மேற்கில் உள்ள திருமாளிகைபத்தியில் சிறிய விநாயகர், ஒரு லிங்கம் எதிரில் ஒரு சிறிய நந்தி, வரிசையாக ஐந்து லிங்கங்கள் உள்ளன, அடுத்து நால்வர் சிலைகளும், விநாயகரும் உள்ளனர்.
வரிசையாக விநாயகர் இரண்டு தட்சணாமூர்த்திகள் அம்பிகை சிலைகள் லிங்கம் ஒன்றும், விஷ்ணு, சோழன் சிலை, சுரிதா, சபரஸ் மற்றும் முருகன் வள்ளி தெய்வானையுடன் மகாலட்சுமி உள்ள சன்னதிகளும் உள்ளன. வடகிழக்கில் பைரவர், சனி, சூரியன், உள்ளனர். பிரதான கோபுரத்தின் வலப்புறம் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் சௌந்தர்ய மகாலட்சுமி பெரிய சிலையாக உள்ளார்.
நன்றி :- கடம்பூர் விஜயன்
தொகுப்பு : சீதா பாரதிராஜா 

No comments:

Post a Comment