Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 23

                                  நெல்லி மரம்


ரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஒருவரையருவர் புரிந்து வாழ்கிற ஒப்பற்ற தம்பதியாகத் திகழ்வார்கள். பகைவர்களைத் தங்களது சாந்த குணத்தால் எளிதில் சமாளிப்பார்கள். தூக்கமும் ஓய்வும் இவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்!
மேஷ ராசி மற்றும் செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டது, பரணி நட்சத்திரம். சொத்து- சுகத்துக்கு ஆசைப்படுவார்கள்; மாந்திரீக ஆர்வம் உண்டு; அழகிய தேக அமைப்புடன் திகழ்வார்கள்; நடையில் கம்பீரம் மிளிரும். இவர்களுக்கு உகந்த நாள்-  செவ்வாய்க்கிழமை. தவிர, வருடத்தில் மார்ச் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலான நாட்கள், இவர்களுக்கு உகந்த அருமையான நாட்கள்!  
இந்தக் காலகட்டத்தில், பரணி நட்சத்திரம் பூமிக்கு அனுப்புகிற மின்காந்தக் கதிர்வீச்சுகள், இவர்களுக்கு நலம் தருவதாக அமையும். நெல்லி மரமானது, பரணி நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகளை ஈர்த்து, தனக்குள் சேகரித்து வைக்கும். நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி லேகியம் மற்றும் வற்றல் என பயன்படுத்துவது உத்தமம். மனத் தளர்வு, உடல் சோர்வு, முரட்டுக் குணம், ஆர்வமற்ற நிலை ஆகியவை இருப்பின் அவற்றை பரணி தோஷம் என்பர். இந்தத் தோஷத்தில் இருந்து விடுபட, தினமும் அரை மணி நேரம் நெல்லி மர நிழலில் இளைப்பாறுவது, மனதுக்கு இதம் தரும்; தோஷமும் நீங்கும்!
திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திரு நெல்லிக்காவல். இங்கே, ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீநெல்லிவனநாதர் குடிகொண்டிருக்கும் கோயிலின், விருட்சம்... நெல்லிமரம்!  
ஐந்து நிலைக் கோபுரம்; உட்பிராகாரத்தின் மேற்கில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீசனீஸ்வரர் ஆகியோருக்கான சந்நிதிகள்; வடப்புறத்தில், நெல்லிமரத்தடியில் ஸ்ரீநெல்லிவனநாதர். கிழக்குச் சுற்றில், யாகசாலை; ஸ்ரீபைரவர், சூரிய பகவான் சந்நிதிகள். தெற்கில், பன்னிரண்டுகால் மண்டபமும், எதிரில் பிரம்ம தீர்த்தக்குளமும் அமைந்துள்ளன. உள்மண்டபத்தில், மூலவர் ஸ்ரீநெல்லி வனநாதர் மேற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். அம்பாள், தெற்குமுகமாக அருள்கிறாள்.
ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசூரிய- சந்திரர்கள், ஸ்ரீசனி பகவான் ஆகியோர் இங்கே ஈசனை வழிபட்டு, சாப விமோசனம் பெற்றனர் என்கிறது ஸ்தல புராணம். தவிர, கலிங்க தேசத்து சுசன்மாவுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றதும், திவ்ய ரூபன் எனும் கந்தர்வன் இங்கேயுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு, குஷ்ட நோய் நீங்கப்பெற்றதும், பிரதோஷ காலத்தில் வணங்கி, அம்பிகையையே குழந்தையாகப் பெற்றார் உத்தமசோழன் எனவும் சிறப்புகள் பல கொண்ட தலம் இது!  இங்கு பிரம்ம தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சக்கர தீர்த்தம், ரோஹ நிவாரண தீர்த்தம் என தீர்த்தங்கள் உள்ளன.
ஆம்லகேசன், ஆனந்தமோகன், சதுர்வேதபுரீசன், சோமப்பிரகாசி, சமஷ்டிலிங்கன் என ஸ்ரீநெல்லிவனநாதர் பல திருநாமங்களுடன் அருளாட்சி புரிகிறார். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியின் முதல் ஏழு நாட்களும், மாசி மாதம் 18 முதல் 24-ஆம் தேதி வரையிலான ஏழு நாட்களும், அஸ்தமனத்துக்கு முன்னதாக சூரியக் கதிர்கள் மூலவரின் லிங்கத் திருமேனியில் விழும் அற்புதத் தலம் இது!
புராண- புராதனப் பெருமைகள்கொண்ட ஆலயத்தில், வீர ராஜேந்திரன் மற்றும் 2-ஆம் ராஜராஜன் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. நிலம், மற்றும் ரொக்கம் ஆகியவற்றைத் தானமாக அளித்த விவரங்கள், அவற்றில் உள்ளன.
மழை, பனி, வெயில் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தவத்தில் ஈடுபட்ட முனிவர்களும் துறவிகளும், நூறு வருடங்கள் கடந்தும் வாழ்ந்ததற்கு அவர்கள் சாப்பிட்ட நெல்லிக்கனிகளே காரணம் என்கிறது மருத்துவக் களஞ்சியங்கள். நெல்லிக்காய் லேகியம் சாப்பிட, இளமையுடன் திகழ்வார்கள் என்கின்றன மருத்துவ நூல்கள். தற்கால மருத்துவர்கள் குறிப்பிடுகிற வைட்டமின் 'சி’, நெல்லிக்கனியில் அதிகம் உள்ளது. உலர்த்தினாலும் உப்பிலிட்டாலும் கெடாமல் இருக்கும் திறன் கொண்டது, நெல்லி. பிப்ரவரி மற்றும் ஜூலை என இரண்டு முறை பூக்கும்; நவம்பர், டிசம்பரில் கனிகள் தரும், இந்த மரம்!
நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை அரைத்து, மோரில் கலந்து சாப்பிட, சீதபேதி நிற்கும். நெல்லிப் பூவானது, மிகச் சிறந்த மலமிளக்கி. நெல்லியின் வேர், பத்தியக் கேட்டினால் விளையும் துன்பங்களை நீக்கும். குளிர்ச்சித் தன்மை கொண்ட நெல்லிக்கனியைத் துவையல் செய்து சாப்பிட்டால், வாந்தி நிற்கும்; உணவின் சுவையை அறியும் தன்மை அதிகரிக்கும். நெல்லிக்கனியானது உமிழ்நீரைப் பெருக்கி, தாகம் தணிக்கும். அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண்களும் தேகமும் குளிர்ந்துபோகும்; உஷ்ணம் தணி யும். நெல்லிக்கனியை வெயிலில் உலர்த்தி, கொட்டையை நீக்கிக் காய வைத்தால் கிடைப்பதே 'நெல்லி முள்ளி’! இதனைத் சொம்பு தண்ணீரில் ஊறவைத்து, தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உள்சூடு, எலும்புருக்கி நோய், வாந்தி மற்றும் வெள்ளைப்படுதல் ஆகியவை நீங்கும்.
சிதம்பரம் தாலுகாவில் உள்ள திருநெல்வாயில், கும்பகோணம்- பட்டீஸ்வரத்துக்குக் கிழக்கில், வடதளிக்குத் தெற்கில் உள்ள திருப்பழையாறை ஆகிய தலங்களின் விருட்சமும் நெல்லி மரம்தான்.
ஒளவைக் கிழவிக்கு மிக அரிதான நெல்லிக்கனியைப் பரிசளித்தான், மன்னன் அதியமான். 'நஞ்சுண்டும் நிலைபெற்றுள்ள நீலமணி மிடற்று ஒருவன்போல நீ என்றும் நீடினிது வாழ்க!’ என ஒளவைப் பிராட்டி வாழ்த்தியதைச் சங்க இலக்கியத்தில் காணலாம்! சிறுபாணாற்றுப்படை, அகநானூறு ஆகியவையும் நெல்லியைச் சிறப்பித்துள்ளன.
- விருட்சம் வளரும்
கல்யாண வரம் தருவார் ஸ்ரீநெல்லிவன நாதர்!
''தினமும் ஆறு கால பூஜை; சித்திரையில் 15 நாட்கள் பிரம்மோத்ஸவம்- தெப்போத்ஸவம்; ஆவணியின் முதல் வெள்ளிக்கிழமையன்று திருக்கல்யாண உத்ஸவம் என சிறப்பு வாய்ந்த தலம் இது'' .
''சைவ சமயக் குரவர்கள் நால்வர்; அவர்களில் மூன்று பேரால் பாடப் பெற்ற தலம் இது. 40 ஏக்கர் நஞ்சையும், 20 ஏக்கர் புஞ்சையும் கொண்ட கோயில் இது. கோயில் நிலங்களை வேறு எவருக்கும் பட்டா எழுத முடியாதபடி கோயிலுக்கு எழுதி வைத்திருக்கிறான் மன்னன்.
இந்தத் தலத்து ஸ்ரீமங்களநாயகியையும் ஸ்ரீநெல்லிவன நாதரையும் வணங்கி வழிபட்டால், திருமணம் மற்றும் புத்திர பாக்கியமும் கைகூடும்!'' .

No comments:

Post a Comment