Wednesday, 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 10


சிவப்புச் சந்தனமரம்
செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டிருப்பதோடு, நட்சத்திர மண்டலத்தின் கதிர் வீச்சுகளைத் தன்னுள் சேமித்துக் கொண்டு, பலவகையிலும் நன்மை அளிக்கும் அற்புத ராசி மேஷம்.
இந்த ராசிக்காரர்களுக்கும், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரையிலான நாட்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் பிறந்தவர்களுக்கும் உகந்த விருட்சம் சிவப்புச் சந்தனமரம். இந்த அன்பர்கள் சிவப்புச் சந்தன மரத்தை (அரசு அனுமதியுடன்) வீட்டிலேயே வளர்த்துப் பயனடையலாம்.
மேஷ ராசிக்காரர்கள், சிவப்புச் சந்தன மரத்தின் அருகில் தினமும் 30 நிமிடங்கள் செலவிட்டால் போதும் (குறிப்பாக, மரத்தைக் கட்டிப்பிடித்தபடி), மரத்தின் மருத்துவக் குணங்கள் அவர்களின் உடலுக்குப் பரிமாற்றம் ஆகும்; இதனால் நோய் எதிர்ப்புச் சக்திகள் அதிகரித்து, நோய்கள் பலவும் குணமாகும். இதையே, 'ரெய்கி' சிகிச்சை முறை என்கின்றனர் மருத்துவர்கள்.
நாகை மாவட்டம் தேரழுந்தூரில் உள்ள ஸ்ரீசௌந்தர நாயகி சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தல விருட்சமும் சிவப்புச் சந்தனமரம்தான்.
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது தேரழுந்தூர்.
இந்தத் தலத்தின் இன்னொரு சுவாரஸ்யம்... சிவாலயத்தின் எதிரிலேயே பெருமாளும் கோயில் கொண்டிருக்கிறார்!
உபரிசிரவஸ் என்ற மன்னனிடம், பறக்கும் வல்லமை கொண்ட தேர் ஒன்று இருந்தது. இந்தத் தேர் வானில் பறக்கும்போது, அதன் நிழல் பட்டு உயிரினங்கள் கடும் துன்பத்துக்கு உள்ளாயின. உயிர்களின் துன்பம் தீர்க்கவும், கர்வத்துடன் திரியும் மன்னனுக்குப் புத்தி புகட்டவும் திருவுளம் கொண்டார் கண்ணபிரான்.
ஒருநாள், பறக்கும் தேரில் மன்னன் பயணித்துக்கொண்டு இருந்தபோது, தமது திருவடி விரலால் அதை அழுத்தி, பூமியில் புதையச் செய்தார் கண்ணபிரான். தேர் அழுந்திய தலம் என்பதால், இது தேரழுந்தூர் எனப் பெயர் பெற்றதாம்.
ஒருமுறை, உமையவளை நடுவராகக் கொண்டு சிவனாரும் பெருமாளும் சொக்கட்டான் ஆடினார்கள். பகடைக்காய் உருண்டு விழுந்த எண்ணிக்கையில் இருவருக்கும் சந்தேகம் எழ... சிவனாருக்கு எதிராக தீர்ப்பு சொன்னாள் பார்வதிதேவி. இதனால் கோபம் கொண்ட சிவனார், 'பசுவாகக்கடவது' என்று தன் தேவியைச் சபித்தார். 'தன்னால்தானே சகோதரி சாபம் பெற்றாள்' என வருந்திய பெருமாள், மாடு மேய்ப்பவராக அவதரித்து, அந்தப் பசுவைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றார். ஆகவே, இந்தத் தலத்துப் பெருமாளுக்கு ஆமருவியப்பன் (நிரை மேய்ப்பவர், பாதுகாப்பாளர்) என்று திருநாமம். தாயார்- ஸ்ரீசெங்கமலத் தாயார்.
சாபம் பெற்ற பார்வதிதேவி, தலங்கள் பலவற்றுக்கும் சென்று ஈசனை வழிபட்டாள். இறுதியாக இந்தத் தலத்துக்கு வந்து, இறைவனின் திருவருளால் சாபவிமோசனம் பெற்று, முன்பு போலவே அழகிய உருவை அடைந்தாளாம். எனவே, இங்கு உறையும் அம்பிகைக்கு ஸ்ரீசௌந்தரநாயகி என்று பெயர்.
மனைவிக்கு சாபம் கொடுத்தாலும், அவளது பிரிவால் தவித்து மருகிய சிவனார், சந்தனாரண்யத்துக்கு வந்து, வேதியர்களுக்கு வேதம் பயிற்றுவித்தாராம். இதனால் அவருக்கு ஸ்ரீவேதபுரீஸ்வரர் என்று திருப்பெயர்.
சிவபெருமானும் பெருமாளும் விளையாடிய சொக்கட்டான் பலகை, வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப விதானத் தில், 20-க்கு 20 அடி எனும் சதுர அளவில் இன்றைக்கும் காட்சி தருகிறது. காவிரி மற்றும் அகத்தியருக்கு இங்கே சாப விமோசனம் கிடைத்ததால், இருவருக்கும் இங்கு தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.
கற்கசன் எனும் திருடனை, மன்னருக்கு எதிரே நிறுத்துவதற்காகச் சேவகர்கள் இழுத்துச் சென்றனர். அன்று சோமவாரம் (திங்கட்கிழமை) என்பதால், ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயம் சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்துகொண்டிருந்தது. பக்தர் கூட்டம், 'ஹர ஹர' எனும் கோஷத்தை எழுப்பியது. அதில் லயித்த கற்கசன், அப்படியே சமாதி நிலையை அடைந்தான். ஆனால் காவலர்களோ, அவன் நடிப்பதாகக் கருதி, அவனை மிகவும் துன்புறுத்தினர்.
அப்போது, அவனது உயிரைக் கவர்ந்துசெல்ல எம தூதர்களும் வந்துசேர்ந்தனர். ஆனால், அவர்களைத் தடுத்த சிவகணங்கள், ''கற்கசன் சற்று நேரத்துக்கு முன்பு வேதபுரீஸ்வரரைத் தியானித்துப் புண்ணியம் பெற்றான். எனவே, அவனை நாங்கள் கயிலாயம் அழைத்துச் செல்ல உள்ளோம்'' என்று கூறி, கற்கசனை அழைத்துச் சென்றனர். ஆகவே, திங்கட்கிழமை அன்று வேதபுரீஸ்வரரை வணங்கினால், பாவங்கள் நீங்கிப் புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்!
தேரழுந்தூர் ஸ்ரீஆமருவியப்பன், மாசி மாத புனர்வசு நட்சத்திர நாளில் ஸ்ரீராமபிரானாக எழுந்தருள, ஸ்ரீவேதபுரீஸ்வரர் அப்போது காட்சி தரும் மாசி புனர்வசு விழா சிறப்புறக் கொண்டாடப் படுகிறது. சைவ- வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் அற்புதமான விழா இது.
இவ்வளவு மகத்துவங்கள் கொண்ட தேரழுந்தூர் தலத்தின் விருட்சமாக சிவப்புச் சந்தன மரம் திகழ்வது சிறப்பிலும் சிறப்பு!
சிவப்புச் சந்தன மரத்தின் கட்டையை அரைத்துப் பவுடராக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், உடல் உஷ்ணம் தணியும்; சந்தனத்தை நெற்றியில் இட்டுக்கொள்ள சூடு தணியும்; வீக்கங்கள், தலைவலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்; மார்பு வலி, இதய படபடப்பு மற்றும் இதய பலவீனம் ஆகியவற்றையும் குணமாக்கும்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வல்லமை சந்தனத்துக்கு உண்டு. எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக இதனைப் பயன்படுத்துகின்றனர். சந்தனம், முகப்பருவைப் போக்குகிறது; ரத்தப் போக்கைத் தடுக்கிறது; வெட்டை மற்றும் மேக நோயில் இருந்தும் நிவாரணம் தருகிறது. சிறுநீரைப் பெருமளவில் வெளியேற்றும் சக்தி, சந்தனத்துக்கு உண்டு!
சிவப்புச் சந்தனக் கட்டையை எலுமிச்சைப் பழச் சாற்றில் அரைத்துப் பூசினால், சொறி, சிரங்கு, புண், தோல் வெடிப்பு, மருக்கள், பருத்தொல்லை ஆகியவை நீங்கும். அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வாழலாம். சந்தன மர இலைகளை அரைத்து, அதனை நெல்லிக்காய் சாற்றில் கலந்து சாப்பிட, சர்க்கரை நோய் மட்டுப்படுமாம்.
சங்க இலக்கியங்களில், 'ஆரம் காழ்வை கடியிரும் புன்னை' (குறிஞ்சி) எனக் கபிலர், ஆரம் எனப்படும் சந்தன மலரையும் பிற மலர்களுடன் வைத்துக் குறிப் பிடுகிறார். ஆனாலும், ஆரத்தின் மலரில் வாசனை இல்லை; மரத்திலேயே சந்தனத்தின் நறுமணம் கமழ்கிறது.
பட்டினப்பாலை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு, சிறு பாணாற்றுப்படை, மலைபடு கடாம் ஆகிய நூல்களில் சந்தன மரம் சிறப்புறக் கூறப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை, ஸ்ரீவாஞ்சியம் ஆகிய தலங்களிலும் சந்தன மரம் தல விருட்சமாக போற்றப்படுகிறது.

No comments:

Post a Comment