Thursday 26 October 2017

திருவிடைவாய் சிவன்கோயில்

THIRU_VIDAI_VAI_1
தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற தலங்கள் 274 என இதுவரை கணக்கிடப் பெற்றிருந்தது. கி.பி. 1917-ம் ஆண்டு கல்வெட்டு ஆராய்ச்சியில் திருஞானசம்பந்தர் திருப்பதிகம் மற்றொரு தலம் உள்ளதெனக் கண்டு பிடிக்கப்பட்டது. அத்தலம் தான் திருவிடைவாய்.
இறைவன் -  புண்ணியகோடிநாதர்
இறைவி - அபிராமியம்மை
இத்தலம் திருக்களர் மு.சுவாமிநாத உபாத்தியாயர் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 
இது இடவை என மருவியும் வழங்குகிறது. அப்பர் தேவாரத்தில் இடம்பெற்ற வைப்புத்தலமாகக் கருதப்பெற்று வந்த திருவிடைவாய், திருப்பதிகம் பெற்ற தலமாகவும் விளங்கத் தொடங்கியது.
தஞ்சை மாவட்டம் கொரடாச்சேரி வெண்ணாற்றங்கரையில் உள்ளது திருவிடைவாய் திருத்தலம். கொரடாச்சேரியிலிருந்து கூத்தாநல்லூர் செல்லும் வழியில் வெண்ணை வாயில் என வழங்கும் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் திருவிடைவாய் செல்லும் வழி என்னும் கைகாட்டி வழியே கிழக்கில் 1.5 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
கிழக்கு நோக்கிய அழகிய சிறிய திருக்கோயில். புதிய திருப்பணி. ஒரே பிரகாரம் மட்டும் உள்ளது. மூன்றடுக்கு கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கன்னி மூலையில் விநாயகர். வாயு மூலையில் முருகன், கஜலக்ஷ்மி சந்நிதிகள், கிழக்கே ஐயனார், நவக்கிரகங்கள், பைரவர், சந்திரசூரியர் உள்ளனர்.
தெற்கு பிராகாரத்தில் மண்டபச் சுவரில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட இத்தலத் திருப்பதிகக் கல்வெட்டைக் காணலாம். அடுத்து நர்த்தன விநாயகர், தட்சணாமூர்த்தி விளங்குகின்றனர். இலிங்கோத்பவர், பிர்மா துர்க்கை தனிக்கோயில், சண்டேசுரர் உள்ளனர். மகாமண்டபம் அம்பாள் கோயிலை இணைத்துள்ளது. நால்வர் சந்நிதியில் தலத் திருப்பதிகக் கல்வெட்டு உள்ளது. 
அம்பாள் தெற்கு நோக்கி உள்ளார். இறைவன் திருப்பெயர் அருள்மிகு புண்ணியகோடிநாதர். இடைவாய்நாதர் எனத் தமிழில் வழங்கப் பெறுகிறார். அம்பாள் திருப்பெயர் அருள்மிகு அபிராமியம்மை. தீர்த்தம் புண்ணியகோடி தீர்த்தம். தலமரம் வில்வம். ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிய க்ஷேத்திரக் கோவை வெண்பா ஒன்றும் இத்தலத்தில் உள்ளது சிறப்பு.
நன்றி :- கடம்பூர் விஜயன்
தொகுப்பு : சீதா பாரதிராஜா 

No comments:

Post a Comment