Wednesday, 4 October 2017

திருப்பட்டூர் அற்புதங்கள்! - 4

 
'அடடா... அபாரம், அற்புதம்..!’ என வைத்த கண்ணை எடுக்காமல் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் ஸ்ரீமந் நாராயணன். அனந்த சயனத்தில் மகிழ்ச்சியாக இருந்த திருமாலைக் கண்டு ஒருகணம் திகைத்துத்தான் போனார் ஆதிசேஷன். அதுமட்டுமா?! 'நாராயணப் பெருமாள், முன் எப்போதும் இல்லாத வகையில், இன்றைக்கு இந்தக் கனம் கனக்கிறாரே..!’ என்று நினைத்தபடியே, சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் நன்றாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டார்.

'படுத்துக்கொண்டே இருக்கும் திருமால், திடீரென்று கனம் கூடிப் போயிருக்கிறாரே... இதெப்படி சாத்தியம்? தடாலென்று உடல் எப்படிப் பருமனாகும்? அதிகம் சாப்பிட்டால், உடலின் எடை கூடிப் போகும். ஆனால், உணவும் பசியும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்தானே ? உலகையே படைத்துக் காக்கிற இறைவனுக்குப் பசி ஏது ? உணவு எதற்கு ?
சரி... வழக்கத்தைவிட அதிகமாகப் பேரன்பும் வாஞ்சையும் காட்டி, ஸ்ரீமகாலக்ஷ்மித் தாயார் அசத்திவிட்டாரோ ? சதாசர்வ காலமும் உலகையும் மக்களையும் நினைத்து, அவர்களின் வாழ்வுக்கு வரம் அளிக்கிற பரம்பொருளுக்கு, அந்த உலகத்து மக்கள் நன்றியுடன் காட்டுகிற அன்பை விடவா, மிகப்பெரிய வாஞ்சை கிடைத்துவிடப் போகிறது ? தவிர,  தாயாருக்கு தனது மார்பிலேயே இடம் கொடுத்திருக்கும் ஸ்ரீமந் நாராயணனுக்கு அன்பையும் பெருங்காதலையும் தாயார் அள்ளி அள்ளி வழங்குவது ஒன்றும் புதிதில்லையே ? பிறகு, எப்படி திடீரென்று கனம் கூடிப் போனார் திருமால் ?!’
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடியே, திருமாலுக்கு எந்த இடையூறும் ஏற்படாதபடி, மெள்ள அசைந்து, சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, பரம்பொருளிடமே தனது சந்தேகத்தைக் கேட்டார் ஆதிசேஷன்.
''ஸ்வாமி, வழக்கத்தை விட, இன்றைக்கு நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே கனக்கிறீர்கள். இப்படித் திடீரென கனம் கூடியதற்கு என்ன காரணம் ஸ்வாமி ?'' என்று ஆதிசேஷன் கேட்டுவிட்டு, மூச்சு வாங்கினார். இந்த முறை, பெருமாளுக்குத் தெரியும்படியாகவே ஆழமாக மூச்சு வாங்கிவிட்டார்.
மெள்ளத் தலை திருப்பி ஆதிசேஷனைப் பார்த்து  புன்னகைத்த ஸ்ரீமந் நாராயணர், ''மனம் கொள்ளாத பூரிப்பில் இருக்கிறேன், அனந்தா!'' என்றார். இதைக் கேட்டதும், அந்தப் பூரிப்பும் சந்தோஷமும் ஆதிசேஷனுக்கும் தொற்றிக்கொண்டது. முதலாளியின் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று ஒரு விசுவாசமான தொழிலாளி குதூகலமாவது, அந்த முதலாளியின் நற்குணங்களைக் காட்டக்கூடிய ஒன்றல்லவா!
''எதனால் இந்தப் பூரிப்பு என நான் அறிந்து கொள்ளலாமா ஸ்வாமி?'' என்று பவ்யமாகக் கேட்டார் ஆதிசேஷன்.
''தாராளமாக! அடடா... சிவ பெருமானின் திருநடனத்தை இதோ... பார்த்துக் கொண்டே இருக்கிறேன். என்னவொரு நளினம்; எப்படிப்பட்ட நடனம்; கால்களில் துள்ளலின் வேகம் என்ன... கைகள் காட்டுகிற முத்திரைகளின் அழகு என்ன... கண்களில் தெறிக்கிற உக்கிரம் என்ன... அவருடைய உதட்டில் பரவியிருக்கிற குறுநகை என்ன... ஆஹா... நடனக் கலைக்கு சிவனாரை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?!'' என்று வியந்தார் திருமால்.
ஆதிசேஷன் ஒருகணம் கண்களை மூடினார். உள்ளுக்குள் சிவனாரின் திருநடனம் எப்படியிருக்கும் எனக் கற்பனை செய்து பார்த்தார். ம்ஹூம்... முடியவில்லை. கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட நடனம் அல்லவா, சிவனாருடையது!
கண்களைத் திறந்தார் ஆதிசேஷன். அதில் ஏக்கம் படர்ந்திருந்தது. 'ஹூம்...’ என்று பெருமூச்சு விட்டார். அதில் அவரின் இயலாமை வெளிப்பட்டது. ஏக்கமும் இயலாமையும் கலந்த குரலில், ஸ்ரீமந் நாராயணரிடம், ''ஸ்வாமி... அடியேனின் சின்ன விண்ணப்பம்; ஆனால், மிகப்பெரிய ஆசை. சிவனாரின் திருநடனத்தைக் காணும் பாக்கியத்தை நானும் பெறவேண்டும். இதற்குத் தாங்களே அருளவேண்டும்'' என்று கெஞ்சுகிற பாவனையில் வேண்டுகோள் விடுத்தார் ஆதிசேஷன்.
''அவ்வளவு தானே... இப்போதே பூவுலகில் பிறப்பாய். சிவனாரின் திருநடனத்தைக் காலம் வரும்போது கண்டு களிப்பாய்'' என ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார் திருமால்.
பூவுலகம். அங்கே...அனைத்துச் செல்வங்களும் ஒருங்கே பெற்ற... ஆனால் பிள்ளைச் செல்வம் இல்லையே எனக் கலங்கித் தவித்த தம்பதி, இறைவனை நோக்கி கையேந்தியபடி, 'பிள்ளை வரம் தந்து, எங்களின் இந்த ஜென்மத்துக்குச் சந்தோஷத்தைத் தரக்கூடாதா ?’ என்று கண்ணீருடன் மனமுருகிப் பிரார்த்தனை செய்தது.
தனது உண்மை பக்தர்களின் கண்ணீரைத் துடைக்க ஓடோடி வருவதுதானே, இறைவனின் பணி!
அங்கேயும் அந்த அற்புதம் நிகழ்ந்தது. கண்கள் மூடிய நிலையில், கையேந்தியபடி பிள்ளைப் பிச்சை கேட்ட தம்பதியின் கையில், ஏதோ ஒன்று விழ... சட்டென்று கண் திறந்த கணவன், கையைப் பார்த்தான். உள்ளங்கை அளவிலான சின்னஞ்சிறிய நாகம். 'ஐயய்யோ... பாம்பு!’ என கைகள் உதறி, கால்கள் எகிற அலறினான். உதறிய கையில் இருந்து விழுந்த பாம்பு, பூமியில் விழுந்ததும் அழகிய குழந்தையாக உருவெடுத்தது. அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒருசேரத் தாக்கியதில், திக்குமுக்காடிப் போன தம்பதி, ஒருவரையருவர் பார்த்துக் கொண்டனர்; முகம் மலரச் சிரித்துக் கொண்டனர். குழந்தையை அப்படியே அள்ளி எடுத்து நெஞ்சோடு வைத்து அணைத்துக் கொண்டனர்; இறைவனின் திருவடியில் குழந்தையை வைத்து, சாஷ்டாங்கமாக விழுந்து, பிள்ளை வரம் தந்த பரம்பொருளை, பெருமாளை வணங்கி நமஸ்கரித்தனர். 'இது நீ வழங்கிய கொடை; இத்தனை வருடங்கள் செய்த பிரார்த்தனையின் கனிவில், எங்களுக்குக் கிடைத்த பொக்கிஷம்! இது கடவுளின் குழந்தை. உன்னுடைய பிள்ளை. வளர்ப்பதும் வாழவைப்பதும் எங்களின் கடமை; இந்தக் குழந்தையை, இந்தப் பூமிக்கு நீ எதற்காக அனுப்பி வைத்தாயோ... அது நிறைவேறுவதற்காக நாங்களும் உறுதுணையாக இருப்போம்; எங்களுக்கு இது பெருமையும் கூட!’ என உணர்ச்சிவசப்பட்டனர்.
அந்தக் குழந்தையை அள்ளி எடுத்தனர். உச்சி முகர்ந்தனர்; கன்னம் கிள்ளினர்; காது வருடினர். குழந்தையின் உள்ளங்கைக்குள் தங்களின் விரலை வைத்துக்கொண்டு, அந்த மென்மையில் திளைத்தனர். உள்ளங்கையில் வந்து அவதரித்த குழந்தைக்கு 'பதஞ்சலி’ எனப் பெயரிட்டனர். 'பதஞ்சலி பதஞ்சலி பதஞ்சலி...’ என குழந்தையின் காதில் விழும்படி, மூன்று முறை உச்சரித்தனர்.
''இதோ... என் பிறப்பின் நோக்கம் நிறைவேறும் நாள், நெருங்கிக் கொண்டே இருக்கிறது. நாராயணா!  மண்ணுலகுக்கு என்னை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தீர்கள். சிவனருளைப் பெறும் நாள் சீக்கிரமே கிடைக்கப் போகிறது. உங்களை வந்தடையும் தருணம் நெருங்கி விட்டதாகவே உணர்கிறேன். இதோ... திருப்பிடவூர் எனும் புண்ணிய பூமியைக் கண்டுகொண்டேன். காசியம்பதிக்கு நிகரான புனித பூமியில் அடியெடுத்து வைக்கப் போகிறேன். இது காசிக்கு நிகரான தலம் மட்டுமா... திருக்கயிலாயத்துக்கு நிகரான தலமும் ஆயிற்றே! நாராயணா... நாராயணா..!''- பாம்பாக உருவெடுத்து, ஸ்ரீமந் நாராயணரை வணங்கித் தொழுத ஆதிசேஷன், அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.
'இதோ... இதுதான் திருப்பிடவூர் தலமா?’ என்று வியந்தபடி, கண்களில் கண்ணீர் திரையிட... வேகவேகமாக நடந்தார் பதஞ்சலி முனிவர்.
கிட்டத்தட்ட... திருப்பிடவூர் தலத்தை நோக்கி ஓடினார் என்றுதான் சொல்லவேண்டும்!
- பரவசம் தொடரும் 

No comments:

Post a Comment