சுக்கிர கிரகத்துடன் தொடர்புகொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கும், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஏப்ரல் 21 முதல் மே 21-ஆம் தேதி வரையிலான நாட்களில் பிறந்தவர்களுக்கும் அதிக அளவு பயன் தரும் மரம் ஏழிலைப்பாலை. ஒரு காம்பில் ஏழு இலைகளுடன் அழகுறக் காட்சி தரும் இந்த மரம், அரிய மருத்துவ குணங்கள் கொண்டது.
சுக்கிர கிரகம் மற்றும் ரிஷப ராசி நட்சத்திரக் கூட்டம் ஆகியவற்றின் நல்ல கதிர்வீச்சுகளைத் தனக்குள் சேமித்து வைத்திருக்கிறது ஏழிலைப்பாலை. இந்த மரத்தை வீடுகளில் வளர்த்தால், நோய்கள் பலவற்றிலும் இருந்து நிவாரணம் பெறலாம்; சுக்கிர தோஷம் நீங்கும் என்கின்றனர் சாஸ்திர வல்லுநர்கள்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களில், வெப்பத்தால் தகிக்கும் நிலப்பகுதி பாலை. இந்தப் பகுதியில் கள்ளியும் பாலை மரமும் மட்டுமே நன்கு வளரும். பாலை மரத்திலும் பல வகைகள் உண்டு. அவற்றில், தெய்வீக மரமாகத் திகழ்வது ஏழிலைப் பாலை. கேரளப் பகுதிகளில், இந்த மரத்தின் கிளையை வெட்டிக்கொண்டு வந்து நட்ட பிறகே, விழாக்களைத் துவங்குவார்களாம்.
திருப்பாலைப்பந்தல், திருக்கழிப்பாலை, திருப்பாலை வனம் முதலான தலங்கள், பாலையின் பெயரால் அமைந்த தலங்களாகும்!
இவற்றுள், ஏழிலைப்பாலையை விருட்சமாகக் கொண்ட திருப்பாலைத்துறை, காவிரியின் தென்கரைத் தலங்களில் ஒன்று. இந்த ஊர், தஞ்சாவூரை அடுத்துள்ள பாபநாசத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கே கோயில்கொண்டிருக்கும் சிவனாரின் திருநாமம்- ஸ்ரீபாலைவனநாதர்; அம்பாளின் திருநாமம் - ஸ்ரீதவள வெண்ணகையாள்.
பாண்டிய மன்னனான மலையத்துவசன் என்பவன், புனித நதியாம் தாமிரபரணியில் நீராடிவிட்டு, கரையில் இருந்த காலவ முனிவரின் குடிலுக்குச் சென்றான். அவனுக்கு நல்லுபதேசங்களை அருளினார் முனிவர்.
ஆனால், அவரது அறிவுரைகளை மன்னன் ஏற்கவில்லை. மாறாக, 'முனிவர்களைவிட அரசர் களே பெரியவர்கள்' என்று வாதிட்டான். கோபம் கொண்ட முனிவர், கரடியாகும்படி மன்னனைச் சபித்தார். அதையறிந்த மன்னனின் மனைவி பத்மாவதி பதறினாள். ஓடோடி வந்து முனிவரின் கால்களில் விழுந்து, தன் கணவனை மன்னிக்கும்படி வேண்டினாள். மனமிரங்கிய முனிவர், அகத்திய முனிவரை வழிபடும்படி அறிவுறுத்தினார்.
கரடி உருவம் கொண்ட மன்னனும் அதன்படியே அகத்திய முனிவரை தரிசித்து வணங்கினான். அவர், ''திருப்பாலைத்துறை வனத்துக்குச் செல்க'' என்று அறிவுறுத்தினார். அதையடுத்து, பாலைத்துறை வனத்துக்கு வந்த கரடி (மன்னன்), பாலைவனநாதரை அனு தினமும் பூஜித்தது. ஒருநாள், அந்தப் பகுதிக்கு வந்த வேடன் ஒருவன், கரடியின் மீது அம்பு தொடுத்தான். தப்பித்து ஓடிய கரடி, காவிரி ஆற்றில் குதிக்க... சாப விமோசனம் கிடைத்தது; மலையத்துவசன் சுய உருவம் பெற்றான் என்கிறது தலபுராணம்.
பாண்டவர்களின் வனவாசத் தின்போது, அர்ஜுனன் பாதாள லோகத்துக்குச் செல்ல வேண்டி யிருந்தது. அவன், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீபாலைவனநாதரை வழி பட்டான். அவனுக்குக் காட்சி தந்த பாலைவனநாதர், பாதாள லோகத்துக்குச் செல்ல வழி காட்டினார். மேலும், வழியில் ஏற்படும் இடர்களைச் சமாளிக்க, அர்ஜுனனுக்கு வில் வித்தை நுணுக்கங்களையும் அருளினாராம். அர்ஜுனனும் இந்தத் தலத்து இறைவனின் திருவருளால் பாதாள லோகம் சென்று, உலூபி எனும் அரசிளங் குமரியை மணந்து வந்ததாக விவரிக்கின்றன புராணங்கள்.
இந்தத் திருத்தலத்தில், ஸ்வாமி சந்நிதிக்கு வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி. இத்தகைய அமைப்புடன் திகழும் கோயில்களை, திருமணக்கோலத் திருக்கோ யில்கள் எனப் போற்றுவர். இங்கு வந்து வழிபட, திருமணத் தடை நீங்கி, விரைவில் மணப்பேறு கிடைக்கும்.
இத்தனைச் சிறப்புகள் கொண்ட திருப்பாலைத்துறை தலத்தின் விருட்சமான ஏழிலைப்பாலையை, 'சப்த சாதா' எனக் குறிப்பிடுகிறார் வால்மீகி. வட இந்தியாவில், இதனை 'சப்த பர்னா' என்கின்றனர்.
பெரும்பாலும், நான்கு அல்லது ஐந்து இலைகள் கொண்ட ஏழிலைப்பாலையையே காணமுடியும். புராதனமான ஆலயங்களில், ஏழு இலைகள் கொண்ட ஏழிலைப்பாலையைக் காணலாம். இந்த மரத்திலிருந்து, மாணவர்கள் பயன்படுத்தும் சிலேட்டுகளின் பார்டர் பலகை தயாரிக்கப்படுகிறது.
இதன் இலையை வறுத்துப் பொடித்து, சீழ் வடியும் புண்களின் மேல் வைத்துக் கட்டிவிட்டால், விரைவில் புண்கள் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம்.
இஞ்சிச் சாறுடன் ஏழிலைப்பாலை இலையின் சாற்றையும் கலந்து, குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களுக்குத் தருவார்கள். நீண்ட நாள் வயிற்றுப்போக்கினை, இந்த மரப் பட்டை கட்டுப்படுத்தும்; ரத்த பேதியும் நிற்கும்.
சூலை, குன்மம் முதலானவற்றைக் குணப்படுத்தும் வல்லமை, ஏழிலைப்பாலையின் வேருக்கு உண்டு. இந்த வேரை உலர்த்திப் பொடியாக்கி ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், விரைவாத நோய் குணமாகும். புண்கள் மீதும், மூட்டு வீக்கத்தின்மேலும் ஏழிலைப்பாலை மரத்தின் பாலைப் பூசுவதால் குணம் பெறலாம். இதன் பால், புண்களைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது; கீல் வாதம், காது வலி ஆகியவற்றுக்கு எண்ணெய்யுடன் சேர்த்து உபயோகிக்கலாம்.
அஜீரணம், வயிற்று உப்புசம், வயிற்று வலி போன்றவற்றில் இருந்து குணம்பெற, இந்த மரம் பயன்படுகிறது. தோல் நோய்க்காரர்கள், இதன் இலைகளைக் கஷாயமாக்கிச் சாப்பிடலாம். குளிர் ஜுரம், யானைக்கால் வியாதி போன்றவற்றை குணமாக்கும் சக்தியும் இந்த மரத்துக்கு உண்டு. இந்த மரத்தின் குச்சிகள், மூட்டு வலிக்கு நிவாரணமாகப் பயன்படுகின்றன. இளஞ்செடி பருவத்தில் உள்ள ஏழிலைப் பாலையை எரித்து, அதன் சாம்பலைப் பிளவைக்கட்டிகள் மீது பூசினால், கட்டி விரைவில் பழுத்து, உடையுமாம்!
|
Wednesday, 4 October 2017
ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 11
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment