'தென்னூர் கைம்மைத் திருச்சுழி யற்றிருக் கானப்பேர்
பன்னூர் புக்குறையும் பர மற்கிடம் பாய்நலம்
என்னூர் எங்கள் பிரான் உறையுந்திருத் தேவனூர்
பொன்னூர் நாட்டுப் பொன்னூர்புரிசை நாட்டுப் புரிசையே.’
சுந்தரமூர்த்தி நாயனார் இப்படி வைப்புத் தலமாகப் பாடியிருக்கும் புரிசைத் திருத்தலம், திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையே அமைந்துள்ளது.
அகத்தியரால் வழிபடப்பெற்ற சிறப்புடைய இந்தத் தலத்தில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மையுடன் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு அகத்தீஸ்வரர்.
ஊருக்கு மத்தியில் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன், மேற்கு நோக்கி கோயில் அமைந் திருப்பது தனிச்சிறப்பு. ஈசனும் கருவறையில் மேற்குநோக்கியே அருள்பாலிக்கிறார். அவரது சந்நிதிக்கு எதிரில், அவரைத் தரிசிப்பது போன்று அகத்தியர் காட்சியளிக்கிறார்.
பிராகாரத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி கிழக்கு நோக்கி அருள்கிறாள். மேலும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப் பெருமான் ஆகியோருக்கும் விமானத்துடன் கூடிய தனிச் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.
கோஷ்டத்தில் துர்கை, பிரம்மா, திருமால், தட்சிணாமூர்த்தி, நிருத்த கணபதி ஆகியோரைத் தரிசிக்க முடிகிறது. நால்வர் சந்நிதியில் திருநீலகண்ட நாயனாரும் இடம் பெற்றுள்ளார். கோயிலின் தென்புறத்தில் திருக்குளம் உள்ளது.
இந்தக் கோயிலில் அருள்புரியும் ஈஸ்வரனைப் போற்றும் வகையில்,ஸ்ரீ அகத்தீசர் பதிகம், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி பதிகம் ஆகிய நூல்களை திருவோத்தூர் ஸ்ரீ மத் பானுகவி சுவாமிகளும், ஸ்ரீ அகத்தீசர் பஞ்சரத்னம் என்ற ஸ்தோத்திர நூலை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அருணகிரி வாத்தியார் என்று அழைக்கப்பெற்ற அருணாசல பாரதியாரும் இயற்றி உள்ளதாகவும், காலப்போக்கில் அவை கிடைக்காமல் போய்விட்டதாகவும் சொல்கிறார்,
மேலும், இந்தத் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் இருந்து சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் என்பது தெரிய வருவதாகவும், காலப்போக்கில் சிதிலம் அடைந்துவிட்ட இந்தக் கோயில், சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னதாகப் புதுப்பித்துக் கட்டப்பட்டதாகவும் ஒரு செவிவழிச் செய்தி நிலவுகிறது. அதற்கு சாட்சியாக கோயிலைச் சுற்றிலும் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சேக்கிழார் பெருமானும் அவருடைய இளவல் பாலறாவாயரும் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டுச் சென்றதாக உமாபதி சிவனாரின் சேக்கிழார் சுவாமிகள் புராணத்தின் வாயிலாக நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
ஆலயத்தில் நிலவும் தூய்மையும் அமைதியும் நம்முடைய மனதைப் பெரிதும் பரவசப்படுத்துகின்றன.
நாள்தோறும் இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வரும் இந்தக் கோயிலில் பிரதோஷம், கிருத்திகை, கந்தசஷ்டி, நவராத்திரி, ஆருத்ரா, மார்கழியில் வைகறை வழிபாடு, சிவராத்திரி போன்ற விசேஷங்கள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.
அனைத்துக்கும் மகுடம் வைத்ததுபோல், ஐயனின் கருவறைச் சுவர்களின் உட்புறத் திலும் வெளிப்புறத்திலும் திருத்தொண்டர் புராணத்தைச் சிறப்பிக்கும் வகையில், நாயன்மார்களின் வாழ்க்கைச் சரிதத்தை விளக்கும் அழகுச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயன் மேற்கு நோக்கியும் அம்பிகை கிழக்கு நோக்கியும் அருள்புரியும் இந்தத் திருக்கோயிலுக்கு, ஆறு சோமவாரங்கள் வந்து அம்மையப்பரை வழிபட்டுச் சென்றால், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேருவார்கள் என்பது காலம்காலமாக பக்தர்களிடையே நிலவி வரும் நம்பிக்கை.
No comments:
Post a Comment