குகனுக்குக் கிடைத்த தரிசனம் !
திருக்கயிலையின் ஒரு பகுதி. முருகப் பெருமானும் அவன் தேவியராம் வள்ளியும் தேவசேனாவும் முக்கியமானதொரு விவாதத்தில் ஈடுபட்டுள்ளதுபோல் தெரிகிறதே! வாருங்கள், என்னவென்று அருகில் சென்று பார்க்கலாம்.
வள்ளியம்மைதான் பூலோகத்தைச் சுட்டிக்காட்டி, முருகப் பெருமானிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவளது பேச்சில் ராமன், குகன் என்ற பெயர்கள் வேறு அடிபடுகிறதே? இன்னும் அருகில் சென்று செவிமடுப்போமா?
''சுவாமி! அங்கே பூலோகத்தில் கங்கைக் கரையை உற்று நோக்குங்கள். கங்கை தீரத்திலுள்ள சிருங்கிபேரபுரம் தெரிகிறதா? அங்கே, வேடன் ஒருவன் புலம்பலும் முனகலுமாக உடல் நலிந்து உயிர்வாடிக் கிடக்கிறான், பாருங்கள். அவன் பெயர் குகன். நீங்கள்தான் கருணைகூர்ந்து அவனைக் காப்பாற்ற வேண்டும்.''
கந்தனும் கூர்ந்துநோக்கினார், கங்கைக் கரையை.
கம்பர் பெருமானால் 'கங்கை இருகரையோன்’ என்றும், 'கணக்கிறந்த நாவாயோன்’ என்றும் வர்ணிக்கப்படும் வேட்டுவர் தலைவன் குகன், மனம் குமுறியவாறு, ''ராமா... ராமா... உன்னை இனி நான் காண்பேனோ, மாட்டேனோ!'' என்று அரற்றிக்கொண்டிருந்தான். என்ன நேர்ந்துவிட்டது அவனுக்கு?
இறைவனேகூட மனித உருவில் வந்துவிட்டால், அவனையும் விதி விட்டுவைக்காதாம். எப்படி..?
'குழைக்கின்ற கவரியின்றி கொற்ற வெண் குடையுமின்றி
இழைக்கின்ற விதிமுன்னே செல்ல தர்மம் பின் இரங்கியேக’
என்று கம்பன் வர்ணிக்கின்றான். ஆரணங்குகள் வீசக்கூடிய கவரியும், வெண் கொற்றக் குடையும் இல்லாமல்... பெரும்பாலும் துன்பத்தையே தரக்கூடிய விதியானது, ஓர் எஜமானனைப் போன்று முன்செல்ல, ஒரு பணியாளனைப் போன்று ராமன், விதியின் பின்னே வந்தானாம்.
அப்போதுதான் அவரைச் சந்தித்தான் குகன். அவனது அன்பையும் உபசாரத்தையும் கண்டு நெகிழ்ந்த ராமன், ''உன்னுடன் சேர்ந்து சகோதரர்களாகிய நாம் ஐந்து பேர் ஆனோம்! என் தம்பி, உன் தம்பி. நான் உன் தோழன். இந்த நங்கை சீதை, உன் கொழுந்தி' என்று சொல்லி, குகனின் அன்பை அங்கீகரித்து, தனக்குத் தம்பியாக ஏற்றுக்கொள்கிறார்.
இந்த அன்பை, இப்படிப்பட்ட வாஞ்சையை நாம் இந்த தர்மத்தில் அன்றி வேறு எந்த தர்மத்தில் காண முடியும்? இறைவன் மனிதனை தனது நண்பனாக, சகோதரனாக, மகனாக,
ஏன்... காரைக்கால் அம்மையாரை சிவபெருமான் தன் தாயாகவே ஏற்றுக்கொண்டதைப்போல, வேறு எங்கும் காண முடியாது.
ராமனுக்கு மறுமொழி பகர்ந்த குகன், ''தமையனுக்கு வந்த துன்பம் தம்பிக்கும்தான். எனவே, வனவாசத் துக்கு நானும் வருகிறேன் தங்களுடன்' என்று பிடிவாதம் செய்யத் தொடங்கி விட்டான். அவனைச் சமாதானப்படுத்துவதற்குள் ராமனுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது!
இறுதியாக ராமன் குகனைக் கையமர்த்தி, சற்று கடுமையான குரலில், ''தம்பி! நீ உன் மக்களின் நலனைக் கவனித்துக்கொண்டு இங்கேயே இருக்க வேண்டியது உன் கடமை. கடமையில் இருந்து தவறாதே! நான் வனவாசம் முடிந்து நாடு திரும்பும்போது, உன்னோடு சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு, பிறகு உன்னையும் அழைத்துக்கொண்டு அயோத்திக்குச் செல்வேன்'' என்றான்.
எனினும், ராமனைப் பிரிய மனம் இல்லாமல், மன வாட்டத்துடன் அவருக்குப் பிரியாவிடை கொடுத்தனுப்பினான் குகன்.
ஆண்டுகள் பல கடந்தன. வழி மீது விழிவைத்து, ராமனின் வரவுக்காகக் காத்திருந்தான் குகன். ராமனைத் தேடிய குகனின் விழிகள் பல ஆண்டுகளாகியும் அவனைக் காணாததால் உறங்க மறுத்து, இன்று நிரந்தரமாக உறங்கிவிடும் நிலைக்கே வந்துவிட்டன. விழிகள் மட்டுமா..? அவனது உள்ளம், உடல், ரத்தம், நாடி நரம்புகள் எல்லாமும், 'நம் தலைவன் சொன்னபடி வரவில்லை. இனி இந்த உயிர் எதற்கு?’ என்ற நிலைக்கே வந்துவிட்டன. அவன் ஆன்மா ராமனில் லயிக்க, உடல் மெள்ள மெள்ள செயல் இழக்கத் துவங்கியது.
இந்தக் காட்சியைத்தான் வள்ளியம்மை முருகப்பெருமானுக்கு சுட்டிக்காட்டினாள்.
''சொல் வள்ளி... குகனுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?''
எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் கேட்டது சண்முகப் பரம்பொருள்.
வள்ளியம்மை இரக்கம் தோய்ந்த குரலில் சொன்னாள்... ''சுவாமி! வேட்டுவர் குலத்துக்கு நாம்தான் குலதெய்வம். அதன் காரணமாகவேதான் இந்த வேட்டுவர் தலைவனுக்குத் தங்களின் திருநாமத்தையே பெயராகச் சூட்டி உள்ளனர். அவன் இறக்கும் தறுவாயில் இருக்கிறான்! அவனைக் காக்கவேண்டியது நம் கடமை அல்லவா?''
வள்ளியைத் தொடர்ந்து, ''ஆம் ஸ்வாமி!
சடட்சரத்தின் (ஆறெழுத்துக்களின்) தலைவர் தாங்கள். தங்கள் தந்தையான சிவபெருமான் கையாண்ட சடட்சரம் 'நமகுமராய’.
சமரச சன்மார்க்கிகள் கையாளும் சடட்சரம் 'முருகாயநம’. வான் மகளாகிய நானும், மான் மகளாகிய சகோதரி வள்ளியும் அனுஷ்டிக்கும் சடட்சரம் 'சரவணபவ’. தாயார்களாகிய நாங்கள் அனுஷ்டிக்கும் சடட்சரமே முக்திக்கும் நல்வாழ்வுக்கும் மேலான வழி என்றும், அதைக் கடைப்பிடிப்பதே பக்திக்கான நெறி என்றும் வாழும் வேட்டுவர் குலத்துக்கு தலைவன் குகன். நமது மைந்தனாகிய அவனைக் காப்பது நம் கடமை அல்லவா?'' என்று தன் தாயுள்ளத்தை தேவசேனாவும் வெளிப்படுத்தினாள்.
அவள் குறிப்பிடும் விஷயங்களையேதான் திருவலங்கற்றிரட்டும் கூறுகிறது. அதையும் காண்போம்...
ஏமருள் சவ்வும் ஏவ்வும் வவ்வும் எங் கோமான்
மாமலி ணவ்வும் பவ்வும் வவ்வும் எங்கோமான்
ஓமொடு ரீயும் ஐயும் க்லீயும் எங் கோமான்
ஆமயம் வெல்லும் ஔவும் சௌவும் எங்கோமான்
தொடர்ந்து வள்ளியம்மை பேசத் தொடங்கினாள்:
''ஸ்வாமி! தங்களது ஆறெழுத்து மந்திரத்தை நாங்கள் கூறக் காரணம் உண்டு. தாங்கள் எப்படி எந்த குணத்துடன் உதயமானீர்கள் என்பதை அம்மந்திரம் வலியுறுத்துகிறது.
'ச’ என்றால், மங்களம்; 'ர’ என்றால், ஒளி ஈகை; 'வ’ என்றால், அமைதி; 'ண’ என்றால், போர்; 'பவ’ என்றால், இவற்றுடன் உதயமானவர் என்று பொருள். போர் புரிவதற்காகத் தாங்கள் உதயமானவர் என்றாலும்கூட, அமைதியான குணமுள்ளவர், மங்களத்தைக் கொடுக்கும் ஒளியும் ஈகை குணமும் உடையவர் என்பதையே இந்த ஆறெழுத்து மந்திரம் சுட்டிக்காட்டுகிறது.''
வள்ளியம்மை பேசியதைக் கேட்டு முருகப்பெருமான் புன்னகைத்தபடி, ''மிக அற்புதமாகப் பொருள் உரைக்கிறீர்களே?'' என்றார்.
''பிரணவத்துக்கே பொருள் உரைத்த உங்களின் தேவியர் அல்லவா நாங்கள்...'' என்ற தேவசேனா, தொடர்ந்து...
''தங்களின் ஆறெழுத்து மந்திரம் மூன்று கண்டங்களை உடையது. 'சர’ எனும் முதல் இரண்டு எழுத்துக்கள், சக்தி கண்டம்; 'பவ’ என்பது, சிவ கண்டம்; இரண்டுக்கும் நடுவில் உள்ள 'வண’ எனும் எழுத்துக்கள் குமர கண்டமாக, சிவசக்தியை இணைக்கும் கண்டமாக உள்ளது. இப்படி சிவசக்திகுமர கண்டங்கள் இணைந்த மந்திரத்தை உச்சரிக்கும் வேட்டுவர் குலம் வீணாகலாமா? எப்படியேனும் நம் புதல்வனைக் காப்பாற்றுங்கள்'' என்றாள்.
''எனக்கு மட்டும் நம் புதல்வனைக் காப்பாற்றும் ஆவல் இருக்காதா? ஆனால், அவன் எதிர்பார்த்திருப்பது ராமனின் வருகையை அல்லவா? அவரது சொல்லைத் தவிர, வேறெதுவும் காப்பாற்றும் நிலையில் அவன் இல்லையே?'' என்றார் முருகப் பெருமான்.
''ஸ்வாமி! பூமியில் தர்மத்தை நிலைநிறுத்த ராமனாக அவதரித்திருக்கிறார் எங்களின் தந்தை விஷ்ணு. அன்னை லட்சுமியோ சீதாதேவியாக அவதரித் துள்ளார். தங்களின் தந்தையோ அனுமானாக அவதரித்திருக்கிறார். இப்படி, பூமியில் தர்மம் செழிக்க, தேவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ராம காதையில் ஒரு பாத்திரம் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.
அவதாரத்தின் உச்சகட்டம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் தங்களின் கடமையை விடுத்து, இறைத் தன்மையை வெளிப்படுத்தி, குகனை சடுதியில் காக்க கங்கை தீரத்துக்கு வர இயலாது. இந்த நிலையில் நம்மை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள், குகனைக் காப்பாற்ற? மேலும், இந்த ராமாவதார நாடகத்தில் நாமும் பங்கு பெற வேண்டாமா?'' என்றாள் வள்ளி.
முருகன் மீண்டும் புன்னகைத்தார். ''சரி, உங்கள் விருப்பமே என் விருப்பம்! ஆனால், நாம் இப்படியே சென்றால், குகன் அதை ஏற்பானோ, மாட்டானோ? அவனைக் காப்பாற்ற, அவன் விருப்பப்படியே நாமும்
நாடகமாட வேண்டும். வாருங்கள், போகலாம்' என்று கூறி, தேவியருடன் புறப்பட்டார்.
கங்கைக் கரையில் அணையப்போகும் சுடராய்த் திகழ்ந்த குகனின் முன் மூவரும் தோன்றினர்.
எப்படி?
முருகப்பெருமான் வில்லேந்திய கோலத்தில் ஸ்ரீ ராமனாகவும், வள்ளியும் தேவசேனாவும் முறையே சீதா, லட்சுமணனாக உருவம் தாங்கியும் குகனின் முன்பாகக் காட்சி அளித்தனர்.
இக்காட்சியைக் கண்டதும் மின்னல் வேகத்தில் உயிரும், உணர்வும், ஆற்றலும் குகனின் உடலில் வந்து ஒட்டிக்கொண்டன.
''ஐயனே! அம்மையே! வந்து விட்டீர்களா? ஆஹா! என்னைப் பெற்றவர்கள் வந்துவிட்டார்கள்... வந்து விட்டார்கள்'' என்று ஆரவாரித்தான். பலவாறு கூச்சலிட்டு ஆனந்தத்தை வெளிப்படுத்தினான். அவன் கண்களின் நீர் கங்கையைவிடவும் வேகமாகப் பெருக்கெடுத்தது. ஓடோடி வந்து, ராமனின் உருவில் நிற்கும் முருகப்பெருமானின் பாதாரவிந்தங்களில் வீழ்ந்து வணங்கினான்
அவனை ஆற்றுப்படுத்திய முருகப்பெருமான், ராமனின் குரலிலேயே பேசினார்... ''தம்பி, எழுந்திரு! உன் துயர் துடைக்கவே இங்கு வந்தோம். நாங்கள் அயோத்திக்குத் திரும்பும் காலம் இன்னும் வரவில்லை. எனினும், நீ வெகுகாலம் காத்திருக்கத் தேவையில்லை. இன்னும் சிறிது காலத்தில் நாங்கள் திரும்பி வருவோம். உன்னையும் அழைத்துக்கொண்டு அயோத்திக்குச் செல்வோம்'' என்று கூறி மறைந்தனர். குகனும் உற்சாகத்தில் உள்ளம் களித்தான்.
மாலனாக மாறிய முருகனின் இந்தத் திருக்கதையை நான் புனைந்து கூறவில்லை. திருச்செந்தூர் புராணம் கூறுகிறது. அதன் வரிகள் இதோ...
சுந்தரச் சிலை யிராமன் தோற்றமும் காட்டிஞான
முந்திய பிரம்மானந்த சித்தியும் கொடுத்து வேத
மந்திரக் குகச் சுவாமி என்னவும் வாய்த்தது பேர்
குகனைக் காத்ததால் குகசுவாமி என்று பேர் வாய்த்ததோ.
ஓம் சரவணபவ!
முருகன் திருவடிகளே சரணம்!
No comments:
Post a Comment