Monday, 4 September 2017

விசாகத்தில் தரிசித்தால் விசேஷ பலன் !


மாமன் மாயோனைப் போன்று, மருகன் சேயோனும் வராஹமாக வந்த திருக்கதை உங்களுக்குத் தெரியுமா? 
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வராஹ நதிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயிலின் தலபுராணம், அந்தக் கதையை விரிவாக எடுத்துரைக்கிறது.
இந்தப் பகுதி, சோழ சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்டிருந்த காலம். அப்போது இந்த இடத்துக்கு விஜயம் செய்த முதலாம் ராஜேந்திரன், இங்குள்ள அகமலை வனப்பகுதிக்குச் சென்றார். ஓரிடத்தில், குட்டிகளுக்குப் பாலூட்டிக்கொண்டிருந்த தாய்ப் பன்றி ஒன்று, தவறிப்போய் அருகில் இருந்த ஆழமான பள்ளத்தில் விழுந்து இறந்துபோனது. குட்டிகளின் கதறலைப் பொறுக்காத முருகக் கடவுள் தாய்ப்பன்றியாக வந்து குட்டிகளுக்குப் பாலூட்டி அருள்செய்தார். இந்த அற்புதத்தை நேரில் தரிசித்த சோழ மன்னர், முருகனுக்கும் சிவனாருக்கும் இந்த இடத்தில் ஆலயம் அமைத்தார் என்கிறது தல வரலாறு.
தேனியிலிருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ளது பெரியகுளம். அங்கிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள கோயிலுக்குச் செல்ல மினி பஸ்கள் மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.
முதலாம் ராஜேந்திரன் ஆலயம் எழுப்பி வழிபட்ட தலம் என்பதால், இங்குள்ள மூலவருக்கு ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் என்று திருநாமம்; அம்பாளின் திருப்பெயர்  ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி. எனினும், ஸ்ரீ பாலசுப்ரமணிய ஸ்வாமி கோயில் என்றால்தான், சட்டென்று வழிகாட்டுகிறார்கள் உள்ளூர்வாசிகள்.
மேற்குத்தொடர்ச்சி மலைகள் சூழ்ந்திருக்க, வராஹ நதிக்கரையில் எழிலுற அமைந்திருக்கிறது ஆலயம். ஆண் மருத மரமும், பெண் மருத மரமும் நதியின் எதிரெதிர் கரைகளில் அமைந்திருப்பது  சிறப்பு என்கிறார்கள். இப்படியான அமைப்பு, காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டுமே உள்ளதாம். எனவே, வராஹ நதியை கங்கைக்கு நிகரானதாகவும், இந்தத் தலத்தை காசிக்கு ஒப்பானதாகவும் போற்றுகின்றனர். மேலும், தேனி மாவட்டத்திலேயே பழைமை மாறாத பெரிய கோயிலாகத் திகழ்வதால், 'பெரிய கோயில்’ என்றும் பக்தர்கள் போற்றுகின்றனர்.
பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட அந்தணர் ஒருவர், வழிப்போக்குச் சித்தர் என்பவரிடம் சென்று, தோஷ பரிகாரம் குறித்துக் கேட்டார். ''நதிக்கரையில் மூன்று கொடிமரங்களுடன் அமைந்த கோயில் எங்கு உள்ளதோ, அங்கு சென்று மூன்று முறை நதியில் நீராடி எழுந்து, கோயிலுக்குள் சென்று பிரார்த்தனை செய். உன் தோஷம் விலகும்'' என்றார் சித்தர்.
அவர் சொன்னது போன்ற அமைப்பிலான கோயிலைத் தேடி அலைந்த அந்தணர், இந்தத் தலத்துக்கும் வந்தார். இங்கே வராஹ நதிக்கரையில் மூன்று கொடிமரங்களுடன் திகழும் கோயிலைக் கண்டதும் அகமகிழ்ந்தார். ஆர்வத்துடன் வராஹ நதியில் இறங்கியவர், இரண்டு முறை மூழ்கி எழுந்ததுமே, கரையில் இருந்த கோயில் மறைந்துபோக, வயல்வெளி மட்டுமே காட்சியளித்தது. அந்தணர் அதிர்ந்து போனார். அங்கிருந்த ஜெயதேவ மகரிஷியிடம் ஓடோடிச் சென்று, விவரத்தைக் கூறிப் புலம்பினார்.
அவரை சமாதானப்படுத்திய மகரிஷி, ''கவலை வேண்டாம். இது முருகனின் திருவிளையாடல். மூன்றாவது முறையும் மூழ்கி எழு. கோயிலை உன் கண்ணுக்குக் காட்டுவான் கந்தன்'' என்றார்.
அதன்படியே அந்தணர் மூன்றாவது முறையாக நதியில் மூழ்கி எழ, கோயில் தென்பட்டது. மிக மகிழ்ச்சியுடன் கோயிலுக்குள் சென்று முருகனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார் அவர்.
இப்போதும் தன்னை நாடி வருவோரின் துயரங்களை, தேடிச் சென்று களையும் தயாளனாக இங்கு அருள்பாலிக்கிறார் முருகக் கடவுள்.
சித்திரை முதல் நாள், பங்குனி உத்திரத் தேரோட்டம், கார்த்திகை மாதத்தில் சிறப்பு ஆராதனைகள் என விழா வைபவங்களால் கொண்டாடப்படும் இந்தத் தலத்தின் முருகனுக்கு, வைகாசி விசாகம் இன்னும் விசேஷம்!
திருமணத் தடைகளால் கலங்கித் தவிக்கும் அன்பர்கள், இந்தப் புண்ணிய திருநாளில் இங்கு வந்து முருகனைக் கண்ணார
தரிசித்து, மனதார வழிபட்டு, அவருக்குச் சூட்டி பிரசாதமாகத் தரப்படும் மாலையை வாங்கிச் சென்றால், விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம். அதேபோல், வராஹ நதிக்கரை யில் உள்ள ஆண்பெண் மருதமரங்களைத் தரிசித்துச் செல்லும் தம்பதிகளுக்கு, நீண்ட நெடுங்காலம் மனவேற்றுமை இன்றி, பிணைப்புடன் ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழும் பாக்கியம் கிட்டும். மனக் கஷ்டத்தில் தவிக்கும் பக்தர்கள், செவ்வாய்க்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து, முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால், அவர்களின் துன்பங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்கிறார்கள் பக்தர்கள்.
நாமும் ஒருமுறை இத்தலத்துக்குச் சென்று, பாலசுப்ரமணியரை வழிபட்டு, வரம்பெற்று வருவோம்.

No comments:

Post a Comment