சிவ தரிசனம்...
தொண்டைநாட்டின் கிழக்குக் கடற்கரையோரம் அமைந்த ஊர் அது. எயிர்பட்டணம் என்பது பெயர். இவ்வூரில் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த மாப்பிள்ளை ஒருவர், சிவ தரிசனம் செய்யாமல் உணவு உண்ண வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாராம். அப்போது அந்த ஊரிலோ, ஊருக்கு அருகிலேயோ சிவாலயங்கள் எதுவும் கிடையாது.
மாமியார் என்ன செய்தார் தெரியுமா? பக்கத்து வீட்டில் இருந்து நெல் அளக்கும் மரக்காலை வாங்கி வந்து வீட்டுக் கொல்லைப் புறத்தில் ஓரிடத்தில் தலைகீழாக கவிழ்த்துவைத்து, விபூதி் பூசி, பூ சாற்றி, அதைச் சிவலிங்கமாகவே மாற்றிவிட்டார். மாப்பிள்ளையும் மகிழ்ச்சியுடன் சிவபூஜை செய்துவிட்டு, சாப்பிட்டு முடித்தார். அவர் சென்றதும், மரக்காலை எடுக்க முயன்றனர். ஆனால் அது சிறிதும் நகர்ந்துகொடுக்கவில்லை. கடப்பாரை கொண்டு பெயர்த்தெடுக்க முயற்சி செய்னர். அப்போது, அதன் மீது கடப்பாரை பட்டு குருதி கொப்பளித்தது. இதை தெய்வச் செயலாகவே கருதி உள்ளம் சிலிர்த்த அந்த வீட்டாரும், ஊர்க்காரர்களும் மரக்காலை சிவலிங்கமாகவே கருதி வழிபடத் துவங்கினார்களாம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மரக்கால் மறைந்து, பூமியில் இருந்து சுயம்புலிங்கம் வெளிப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.
இந்த நிகழ்வைத் தொடர்புபடுத்தி அன்றிலிருந்து அந்த ஊருக்கு 'மரக்கா காணம்’ என்று பெயர் வந்தது. அதுவே தற்போது மரக்காணம் என்று மருவியதாம். பூமியில் இருந்து வெளிப்பட்டதால் ஸ்வாமிக்கு அருள்மிகு பூமீஸ்வரர் என்று திருப்பெயர். அம்பாள் அருள்மிகு கிரிஜாம்பாள்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்திருக்கிறது பூமீஸ்வரர் ஆலயம். கடந்த வருடம் தொல்லியல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த ஆலயம் தஞ்சை பெரியகோயிலுக்கும் முற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
ஸ்வாமியின் பெயருக்கு ஏற்ப பூமி, நிலம் மனை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு தரும் திருத்தலம் இது என்கிறார்கள் பக்தர்கள். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் இங்கு வரும் பக்தர்கள் தங்களின் நிலம் அல்லது மனையில் இருந்து மண் எடுத்துவந்து, பூமீஸ்வரர் முன்வைத்து பூஜித்து எடுத்துச் செல்கின்றனர். இதனால் அந்த நிலம் அல்லது மனை தொடர்பான பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை.
சிற்பக் கலையிலும் சிறந்து விளங்குகிறது ஆலயம். அழகான மண்டபங்கள், அதன் விதானங்களைத் தாங்கி நிற்கும் தூண்கள், தூண் சிற்பங்கள் ஒவ்வொன்றும் சிற்பக் கலையின் சிகரம்! வாஸ்து புருஷன் சிற்பம், நடன மாதர் சிற்பம், அறுபத்துநான்கு ஆய கலைகளை விளக்கும் சிற்பங்கள், சிறுத்தொண்ட நாயனாரின் சரிதம் கூறும் சிற்பம் ஆகியன குறிப்பிடத்தக்கவை.
கோயில் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்கை, பிரம்மதேவன், பிட்சாடனர் ஆகிய தெய்வங் களையும் தரிசிக்கலாம். இவர்களில் துவாரபாலகியருடன் துர்கை சந்நிதி கொண்டிருப்பதும், கோஷ்டத்தில் விநாய கருக்கு பதிலாக பிட்சாடனர் அருள்வதும் சிறப்பம்சம் என்கிறார்கள் பக்தர்கள். துர்காதேவிக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட, திருமணத் தடைகள் நீங்கும் என்கின்றனர்.
விநாயகர், முருகப்பெருமான் ஆகியோர் தனிச் சந்நிதி களில் அருள்கின்றனர். மேலும், சப்தமாதர்களையும் இக்கோயிலில் தரிசிக்கமுடிகிறது. அன்னை கிரிஜாம்பாள் சந்நிதிக்கு எதிரில் பைரவ மூர்த்தி அருள்கிறார். தேய்பிறை அஷ்டமி அன்று இந்த பைரவருக்கு விளக்கேற்றிவைத்து வழிபட்டால், பில்லிசூன்யம் போன்ற தீவினைகள் நீங்கும் என்கிறார்கள்.
சென்னைக்கும், மகாபலிபுரத்துக்கும் சுற்றுலா செல்லும் அன்பர்கள், மறவாமல் மரக்காணத்துக்கும் சென்று, அருள்மிகு பூமீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்; வீடுமனை யோகம் கைகூட உங்களுக்கு அருள்புரிவார், அந்தக் கயிலைக்கடவுள்.
No comments:
Post a Comment