சூரிய நமஸ்காரம்
சூரியன் சிவபூசை செய்த வடஇந்தியத் தலங்களில் முதன்மையானது காசி நகரமாகும். இங்கு அவர் பன்னிரண்டு இடங்களில் பன்னிரண்டு பெயர்களில் எழுந்தருளியுள்ளார்.
காசிக்கண்டம் எனும் நூலில் காசியில் உள்ள பன்னிரண்டு ஆதித்யர்களின் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன.
அவை:
1. லோலார்க்கர்
2. உத்ரார்க்கர்
3. சாம்பாதித்யர்
4. திரௌபதி ஆதித்யர்
5. மயூகாதித்யர்
6. கஷோல்காதித்யர்
7. அருணாதித்யர்
8. விருத்தாதித்யர்
9. கேசவாதித்யர்
10. விமலாதித்யர்
11. கங்காதித்தியர்
12. யம ஆதித்யர்
இவை சூரியனின் பல்வேறு பெயர்கள் இல்லை. சூரியனைப் பன்னிரண்டு பேர்கள் சிறப்புடன் இங்கு வழிபட்டுப் பேறு பெற்றதால், அவர்கள் பெயரால் சூரியன் அழைக்கப்படுகிறார்.
இவர்களை ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று வணங்க வேண்டியது முறையாகும். ஞாயிற்றுக்கிழமையோடு சப்தமியும் கூடி வந்தால் அதனை பானுசப்தமி என்று கூறுவர். பானுசப்தமியை பத்மயோகம் என்பர். இது ஆயிரம் சூரியகிரணங்களுக்கு ஒப்பானதாகும்.
இனி இவற்றின் விளக்கத்தைக் காணலாம்.
* லோலார்க்கர் எனும் சூரியன் நமது மனசஞ்சலங்களை தமது ஞானத்தால் தீர்ப்பதால் இப்பெயர் பெற்றார் என்பர். இவருடைய கோயில் அசிசங்கமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 'லோலார்க்க’ குண்டத்தின் அருகில் உள்ளது. இந்த இடத்தில் பெரிய குளம் உள்ளது. அதன் மையத்தில் சிறு குளம் உள்ளது. இதில் நீராடி சூரியனை வழிபடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமையும் சஷ்டி திதியும் கூடிவரும் பானுசஷ்டி நாளில் இவரை வழிபடுவது புண்ணியம்.
* காசிக்கு வடக்கில் அமைந்த சூரிய தீர்த்தமே உத்திரஅர்க்க குண்டமாகும். இது இந்நாளில் அலேப்புராவில் உள்ள வக்ரியா குண்டத்துக்கு அருகில் உள்ளது. இங்குள்ள சூரியன் உத்திர அர்க்கர் எனப்படுகின்றார். இங்கு ஒரு பெண்ணும் ஆடும் தவம் செய்து பேறு பெற்றனக்ஷீ. எனவே, இது ஆட்டுக்குண்டம் என்று பொருள்பட (வக்ரி ஆடு) வக்கிரிக்குண்டம் எனப் பெயர் பெற்றது.
* கிருஷ்ணனின் மகனாகிய சாம்பன் ஒருமுறை தனது தந்தையால் குஷ்டரோகம் எனும் நோய் அடையுமாறு சபிக்கப் பெற்று, பின்பு அவருடைய அறிவுரையின் பேரில் காசி சென்று சூரியனை வணங்கிப் பொன்னுடல் பெற்றான். அவனால் வணங்கப் பெற்றதால், சூரியன் சாம்பாதித்தியர் எனும் பெயரில் விளங்குகின்றார். இவருடைய ஆலயம் சூரியகுண்டம் எனப் பெயர் பெற்று, விஸ்வநாதர் கோயிலுக்கு மேற்கில் உள்ளது.
* பாண்டவர்களின் மனைவியான திரௌபதி காசியில் சூரியனை வழிபட்டு அட்சயப்பாத்திரத்தைப் பெற்றாள். அதனால் இவர் திரௌபதி ஆதித்யர் எனப்படுகின்றார். இவருடைய கோயில் விசுவநாதர் கோயிலுக்கு அருகில் அட்சய வடத்தின் கீழ் அமைந்துள்ளது.
* ஒருமுறை சூரியன் காசியில் கபஸ்தீசுவரர் என்ற பெயரில் சிவபெருமானையும், மங்கள கௌரி எனும் பெயரில் அம்பிகையையும் அமைத்து பூசித்து ஒரு லட்சம் ஆண்டுகள் கடுந்தவம் இயற்றினார். அவருக்குக் காட்சியளித்த சிவபெருமான் ஒளிமண்டலமாக விளங்கும் அவருக்கு 'மயூகன்’ என்று பெயரிட்டு அருள் புரிந்தார். அன்று முதல் இவர் மயூகாதித்யர் என்ற பெயரில் பஞ்சகங்காகாட் அருகில் உள்ள மங்கள கௌரி கோயிலில் எழுந்தருளியுள்ளார்.
* கஷோல்காதித்யர் எனும் ஆதவன், புகழ்பெற்ற திரிலோசனர் காமேசுவரர் ஆலயத்தின் பிராகாரத்தில் எழுந்தருளியுள்ளார். அவர் கருடனாலும் அவன் தாயான வினதையாலும் ஆராதிக்கப் பெற்றவர்.
* ஒருமுறை, காஸ்யபர்அதிதி தம்பதியின் மகன் அருணன் காசிக்குச் சென்று சூரியனை வழிபட்டான். அவனுடைய வழிபாட்டை ஏற்றுக்கொண்ட சூரியன் அவனைத் தமது தேரோட்டியாக ஏற்றுக் கொண்டார். அவனால் வணங்கப்பட்ட சூரியன் அருணாதித்யர் என்று அழைக்கப்படுகின்றார். இவருடைய சந்நிதி திரிலோசனர் ஆலயத்தில் உள்ளது.
* சகல வேதங்களிலும் வல்லவனான விருத்தன் என்பவன் சூரியனை நோக்கி தவம் செய்து மாறாத இளமையைப் பெற்றான். அவனுக்கு அருள் செய்த சூரியன், விருத்தாதித்யர் எனும் பெயரில் பீர்காட் எனுமிடத்தில் அனுமார் கோயிலுக்கு அருகில் ஒரு வீட்டில் இருக்கின்றார்.
* கேசவனாகிய திருமால் அருளால் சூரியன் ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டு தானும் கேசவாதித்யர் எனும் பெயரில் எழுந்தருளினார். இவர் வருணா சங்கமத்தில் கேசவர் கோயிலுக்குள் அமைந்துள்ளார்.
* விமலர் என்பவன் குஷ்ட நோயால் துன்பம் எய்த, உடனே காசிநகரை அடைந்து சிவலிங்கம் அமைத்து சூரியனையும், சிவபெருமானையும் வழிபட்டான். அவனுக்கு அருள் புரிந்த சூரியன் அவனுக்கு மட்டுமின்றி அவனுடைய பரம்பரைக்கே அந்நோய் வராது என்று அருள் செய்தார்.
அதனால் அவருக்கு விமலாதித்யர்என்பது பெயராயிற்று. இவர், கதோலியாவுக்கு அருகில் உள்ள ஜங்கம்பாடியில் எழுந்தருளியுள்ளார்.
* பகீரதன் தன் மூதாதையருக்கு சுவர்க்கம் அளிக்க வேண்டி வானுலக கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தான். கங்கையோடு விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து காசியில் கங்கைக் கரையில் தங்கிய ஆதித்யன் கங்காதித்யர் எனப்படுகின்றார். இவருடைய ஆலயம் 'லலிதா காட்’ எனும் இடத்தில் உள்ளது.
* சூரியனின் புதல்வனாகிய யமதருமன் காசியில் சூரியனுக்குக் கோயில் அமைத்து கடும்தவம் செய்து அரிய வரங்களைப் பெற்றான். யமனுக்கு அருள்செய்த சூரியனே யம ஆதித்யர் எனும் பெயரில் சங்கடா காட் எனும் இடத்தில் எழுந்தருளியுள்ளார்.
இந்தப் பன்னிரண்டு ஆதித்யர் கோயில்களையும் அதனையொட்டிய சிவாலயங்களையும் காசிக் கண்டம் விரிவாகக் கூறுகின்றது. காசியில் இவர்களைத் தரிசிப்பது அர்க்க யாத்திரை அல்லது சௌர யாத்திரை என்று சிறப்பிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment