Monday, 4 September 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 7


                                                       தர்ப்பைப் புல் 

முனிவர்கள் தேவர் ஏனை மூர்த்திகள் முதலானோர்கள் 
மனிதர்கள் சகல வாழ்வுன் மகிமைஅல்லால் வேறுண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம்ஏறும்
சனிபக வானே போற்றி தமியனேற்கருள் செய்வாயே.
நவக்கிரக ஸ்தோத்திரம்
காரைக்காலில் இருந்து பேரளம் செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருநள்ளாறு. இங்கேயுள்ள இறைவனின் திருநாமம் - ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர். அந்தக் காலத்தில் தர்ப்பை வனமாக இருந்த பகுதியாம் இது; இங்கு எழுந்தருளியதால், தர்ப்பையிலான வடுக்கள் இறைத் திருமேனியில் இன்றைக்கும் காணப்படுவதாகச் சொல்வர்!
அம்பிகையின் திருநாமம்- ஸ்ரீபோகமார்த்த பூண்முலையாள். பக்தியுடன் வழிபடுவோருக்கு, உயிருக்கு உயிராக இருந்து தாயுள்ளத்துடன் காத்தருள்வதால், அம்பிகைக்கு ஸ்ரீபிராணாம்பிகை எனும் திருநாமமும் உண்டு.
திருநள்ளாறு திருத்தலத்தின் முக்கியமான மூர்த்தி... ஸ்ரீசனீஸ்வர பகவான்தான் என்பது நமக்குத் தெரியும். அரசன் முதல் ஆண்டி வரை அனைவரையும் ஆட்டிப் படைக்கிற பெருமான், இவர்! இவரின் பிடியில் இருந்து எவராலும் தப்பமுடியாது. இவரின் கோபத்தைக் கட்டுப் படுத்தவும் இறைவனின் கருணைப் பார்வையைப் பெறவும், எண்ணற்ற பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர்.
சனீஸ்வர பகவான், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் வசிக்கிறார். 12 ராசிகளையும் சனீஸ்வர பகவான் ஒருமுறை சுற்றி வருவதற்கு, 30 வருடங்கள் ஆகும். எனவே 30 வருடத்தில், இவரது பிடியில் சிக்காதவர்களே இருக்கமுடியாது.
சனீஸ்வர பகவான், 12, 1, 2 ஆகிய வீடுகளில் பிரவேசிக்கும் போது, அதனை ஏழரைநாட்டுச் சனி என்பர். 4-ஆம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாகவும், 7-ஆம் வீட்டில் கண்டகச் சனியாக வும், 8-ஆம் வீட்டில் அஷ்டமச் சனியாகவும் இருந்து, கர்ம வினைகளுக்குத் தகுந்த பலாபலன்களைத் தருவார் சனீஸ்வர பகவான் என்கின்றன ஜோதிட நூல்கள்.
சனியின் பிரவேசத்தால் வியாபாரத்தில் மந்தம், சொத்துகள் இழப்பு, மனைவி, குழந்தைகள் மற்றும் அரசாங்கத்தால் தொல்லைகள் ஆகியன மட்டுமின்றி, ஒருசிலருக்கு தொழுநோய் பீடிப்பதற்கும் வாய்ப்பு உண்டு என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.
மனித வாழ்வில், ஏழரைநாட்டுச் சனி என்பது மூன்று முறை ஏற்படும். முதலில் மங்கு சனி; அடுத்து பொங்கு சனி; மூன்றாவதாக மரணச் சனி என்பர். 'சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை' என்பார்கள். சனீஸ்வரனை வழிபட்டால், கஷ்டங்களைப் போக்கி, நிம்மதியைத் தந்தருள்வார் என்பது உறுதி.
சனீஸ்வர பகவான் தன்னைப் பிடிக்கப் போவதை உணர்ந்த இந்திரன், ''நான் இந்திரலோகத்தின் அதிபதி என்பதால், என்னைப் பிடிக்காமல் விடக்கூடாதா?'' என்று கேட்டான். அதற்குச் சனீஸ்வர பகவான், ''விதியை மீறுவதற்கு நான் யார்? எவராக இருந்தாலும் விதிப்படி அவரைப் பிடித்தே ஆகவேண்டும்'' என்று கூற, இந்திரன் கோபமானான். 'தேவலோகத்தின் அதிபதியான என்னையே மிரட்டுகிறாயா? உனக்குப் பாடம் புகட்டுகிறேன், பார்' என்று உள்ளுக்குள் கறுவியபடி, ''சரி... என்றைக்கு என்னைப் பிடிக்கப் போகிறாய்?'' என்று கேட்டான். அந்த நாளையும், நேரத்தையும் சொன்னார் சனிபகவான்.
அந்த நாளும் வந்தது; நேரமும் நெருங்கியது. அப்போது, பெருச்சாளியாக வடிவம் கொண்ட இந்திரன், சாக்கடைக்குள் புகுந்து, ஒளிந்துகொண்டான். சனி விடுபடும் நேரம் வரை ஒளிந்திருந்தவன், பிறகு சனீஸ்வர பகவானிடம், ''உன் பிடியிலிருந்து எப்படித் தப்பித்தேன் பார்த்தாயா?'' என்று மார்தட்டினான். சனி பகவான் அமைதியாகச் சொன்னார்... ''தேவலோக அதிபதியான உன்னைச் சாக்கடைக்குள் கொஞ்ச நேரம் வாசம் செய்ய வைத்ததே, அடியேனின் வேலைதானே?!''
சனீஸ்வர பகவான் குடிகொண்டிருக்கும் தலத்தின் விருட்சம்- தர்ப்பைப் புல். இதனை குசா என்றும் சொல்வர். ஸ்ரீராமபிரானின் இரண்டாவது மைந்தனின் திருநாமம்- குசா. இதனைக் குறிக்கும் வகையில், தர்ப்பைக்கு குசா என்று பெயர் அமைந்த தாகவும் சொல்வர்.
சங்க இலக்கியமான 'பெரும்பாணாற்றுப்படை'யில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர்,
'வேழம் நிரைத்து வெண்கோடு வரைகிதாழை முடித்து தருப்பை வேய்ந்தகுறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றில்' - என்று பாடியுள்ளார்.
அந்தக் காலத்தில், வீட்டுக் கூரை வேய்வதற்கு தர்ப்பையைப் பயன்படுத்தினார்களாம். 'வேழக் கோலாலே வரிசை நிரைத்துத் தாழையின் நாரினாலே கட்டுவார்கள்' என நச்சினார்க்கினியார் குறிப்பிட்டுள்ளார்.
மகத்துவம் கொண்ட தர்ப்பைக்கு, மருத்துவ குணங்களும் உண்டு. இது உஷ்ணத்தைத் தணிக்கவல்லது; சிறுநீரகப் பிரச்னையைப் போக்கும் தன்மை கொண்டது; பாம்புக் கடி விஷத்தை அகற்றும் வீரியம், தர்ப்பையில் உண்டு. பித்தம், கபம், வாதம் ஆகிய பிரச்னைகளை நீக்குகிறது. ரத்தத்தில் தேங்கி விடும் யூரியா, கிரியாட்டினின் எனும் கழிவுப் பொருட்களை அகற்றும் சக்தி கொண்டது. அவ்வளவு ஏன்... உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது தர்ப்பை என்கின்றன மருத்துவ நூல்கள்.
உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்ட தர்ப்பையில், தாமிரத்தில் உள்ள மின் சக்தியும் உண்டு. இதனால்தான், தங்கம், வெள்ளிக் கம்பிகள் உள்ள இடத்தில் தர்ப்பையையும் பயன்படுத்துகின்றனர்.
அதுமட்டுமா? ஆசனங்களில் தர்ப்பாச னமே சிறந்தது என்கின்றனர் முனிவர்கள். இறை வழிபாடு, ஜபம், ஹோமம், தானம், பித்ரு தர்ப்பணம் ஆகியவற்றின்போது, கையில் பவித்திரமாக (மோதிரம்) தர்ப்பையை அணிவது உரிய பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம். தர்ப்பை மோதிரம் அணிந்துதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பதும் வழக்கமாக உள்ளது.
கிரகண மற்றும் அமாவாசை காலங்களில், தர்ப்பைக்கு வீரியம் அதிகம் என்பதால், அந்த வேளையில் உணவுப் பண்டங்கள் கெட்டுப்போகாமல் இருக்க, தூய்மையான தர்ப்பையைப் பரப்பி வைப்பது, இன்றைக்கும் நடைமுறையில் உள்ள ஒன்று!
கறுப்பு வஸ்திரம் பிடிக்கும்!
''தர்ப்பை வனமாக இருந்த தலம் என்பதால், இறைவனுக்கு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் என்று பெயர் வந்தது. தர்ப்பை வனத் தில், தர்ப்பைப் புற்களுக்கு நடுவே காட்சி தந்ததால், இங்குள்ள இறைவனின் நெற்றியில் இயற்கையாகவே மூன்று தர்ப்பைக் கோடுகள் இருக்கின்றன.
உயிர் எனும் ஜீவ சக்தியை, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுசெல்லும் சக்தி தர்ப்பைக்கு உண்டு. நம் திருமணம், ஆயுஷ்ஹோமம் ஆகிய சடங்குகளின்போது, தர்ப்பைக்கு முக்கியத்துவம் தருகிறோம்'' 
''கோயிலுக்கு அருகிலேயே உள்ளது, நள தீர்த்தம். இதில் நீராடினால், அனைத்து கிரக தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்! நள மகாராஜா, தன்னுடைய தோஷம் நீங்குவதற்காக, இந்தத் தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இறைத் தரிசனம் பெற்றார் என்பது நம்பிக்கை.
சனி பகவானின் வாகனம் - காகம்; நிறம் - கறுப்பு. எனவே, கறுப்பு நிற வஸ்திரத்தை சனீஸ்வர பகவானுக்குச் சார்த்தி, எள் எண்ணெய் தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட, சனிக்கிரக தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்'' .
- விருட்சம் வளரும்

No comments:

Post a Comment