Monday, 4 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 8


 
நடராஜர்
(தொடர்ச்சி)
ச ங்க இலக்கியங்களில் இறைவனது பாண்டரங்கம், கொடுகொட்டி, காபாலம் எனும் ஆடல்கள் குறிக்கப்பட்டுள்ளன. திரிபுரம் எரித்தபோது இறைவன் ஆடியவை கொடுகொட்டியும், பாண்டரங்கமும் ஆகும். உமாதேவி ஒரு பக்கமும், இறைவன் ஒரு பக்கமுமாக நின்று அச்சம், வியப்பு, விருப்பு, அழகு முதலியன பொருந்த போர்க் களத்தில் ஆடியது கொடுகொட்டி. இது காத்தல். இறைவன் திரிபுரம் எரித்தபோது ஊழிக்காலக் காற்று போல் சுழன்று ஆடியது பாண்டரங்கம். பிரம கபாலத்தை ஏந்தி இறைவன் ஆடியது காபாலம்.
இறைவனது கூத்துகளை சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து என்று ஐவகையாகக் காட்டுகிறார் திருமூலர். இவையன்றி, திருக்கூத்து தரிசனம் எனும் தலைப்பில் அதன் தத்துவத்தையும், உருவ அமைப்பையும் அவர் விளக்குகிறார். காரைக்கால் அம்மையார், தேவார மூவர், மணிவாசகர் ஆகியோரது தெய்வீக நூல்களிலும், மற்ற திருமுறைகளிலும் தில்லைக் கூத்தனின் திருவருட் பெருமையும் அருமையும் விரிவாகக் காணப்படுகின்றன.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்  இனித்த முடைய எடுத்த பொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே
என்று ஆடல்வல்லானின் அற்புத வடிவை வியந்து போற்றுவார் அப்பர் அடிகள்.
திருமுகம்: எல்லையற்ற அழகும், தலைமைத் தன்மையும், இனிய குளிர்ச்சியான திறனையும் காட்டுகிறது.
குனித்த புருவம்: தன்னி டம் குறைகளை முறை யிடும் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி, ஊன்றிக் கேட்டருளும் கருணைத் திறத்தையும் பரதக் கலையின் பாவத்தையும் (மெய்ப்பாடு) உணர்த்துகிறது.
குமிண் சிரிப்பு: அடைக்கலம் புகுந்தோரை ‘என்று வந் தாய்’ என்று அருளோடு வர வேற்று, பிழை பொறுத்து வாழ்வளித்து மகிழும் மாட்சியை உணர்த்துகிறது.
பனித்த சடை: சிவநெறிக்கு உரிய தவ நெறிச் சிறப்பைக் காட்டுதல்.
கங்கை: இறைவனது பேராற்றலையும், அருளுடன் வேகம் கொடுத்து ஆளும் தன்மையை யும் விளக்குவது.
பிறை சூடுதல்: சரண் அடைந்தவரை (சந்திரனை)த் தாங்கி, தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல் தன்மை யைக் காட்டுகிறது.
பவழ மேனி: இறைவன் செம்மை நிறம் உடையவன். பொருள்களை எல்லாம் தூய்மையாக்கிப் புனிதம் அடையச் செய்வது நெருப்பு. இறைவனும் தன் அடியார்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிதலைப் புலப்படுத்துகிறது.
பால் வெண்ணீறு: பொருள்கள் அழிந்து, இறுதியில் சாம்பல் ஆகிறது. அது மற்றொன்றாக மாறி அழியாது. திருநீறு தூய இயல்பையும், அழியாத் தன்மையையும் குறிக்கிறது. செந்நிற மேனியில் வெண்ணீறு அணிந்த கோலம் காண்பவர்களைக் கவர்ந்து இழுக்கும்.
நெற்றிக்கண்: சிவபெருமானின் சிறப்பு அடையாளம். மேல் நோக்கிய நிலையில் அவரது முதன்மையை உணர்த்துவது.
நீலகண்டம்: நஞ்சு உண்டும், இருந்து அருள் செய்யும் இறைவனின் கருணை மற்றும் தியாகத்தைப் புலப்படுத்துதல்.
உடுக்கை: சிருஷ்டியைக் குறிக்கிறது. இது பர நாதத்தைப் பரமன் தோற்றுவிக்கும் பான்மை.
அபயகரம்: காத்தல் தொழிலைக் குறிப்பது. இறைவன் அடியார்களுக்கு ஆறுதல் கூறி, தேற்றும் நிலை.
நெருப்பு (தீ): இறைவன் இடக் கரத்தில் உள்ள நெருப்பு அழித்தல் தொழிலின் அடையாளம்.
வீசிய கரம்: யானையின் துதிக்கை போல் திகழும் இந்த இடக் கரத்தின் விரல் தூக்கிய திருவடியைக் காட்டு கிறது. திருவடியை நம்பித் தொழுதால், அது நம்மை ஈடேற்றும் என்ற குறிப்பை உணர்த்துகிறது.
எடுத்த திருவடி: அம்பிகைக்கு உரிய இடது திருவடி. பிறவிக் கடலில் விழுந்து தத்தளிக்கும் உயிர்களைக் காப்பாற்றும் அருள் தொழிலுக்கு உரியது.
ஊன்றிய திருவடி: இறைவனின் வலது திருப்பாதம். முயலகனை மிதித்து, ஊன்றிய நிலை. நசுக்கி விடாமலும், விட்டு விடாமலும் முயலகன் மீது நிற்கிறார். மலத்தை முற்றிலும் அழிக்காமலும், மலத் தால் உயிர்கள் வருந்தாமலும், வினைப் பயன்களை உயிர்கள் நுகர இறைவன் இயற்றும் மறைத்தல் தொழிலைக் குறிப்பதாகும்.
முயலகன்: இவன் ஆணவ மலத்தின் அடையாளம். குறள், பூதம், அசுரன், அபஸ்மாரன் முதலான பெயர்களால் இவனை அழைப்பர். ஆணவ மலம் என்றும் அழிவதில்லை. அது போலவே முயலகனும். முக்தி நிலையில் உயிர்களிடம் ஆணவ மலம் அடங்கிக் கிடப்பது போல, முயலகனும் அடங்கிக் கிடக்கிறான்.
தெற்கு நோக்குதல்: கோயில்களில் நடராஜர் தெற்கு நோக்கி அருள்கிறார். ‘நம்பினவருக்கு நடராஜன்; நம்பாதவருக்கு எமராஜன்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, இறைவனை வழிபடும் அடியவர்க்கு தெற்கே இருந்து வரும் எமராஜனால் யாதொரு துன்பமும் நேராமல், காத்தல் பொருட்டு தெற்கு நோக்கி அருள்கிறார்.
‘இறைவனுக்குத் தென்றல் மற்றும் தென் தமிழின் மீது விருப்பம் அதிகம். ஆதலால் தெற்கு நோக்கி ஆடுகிறார்!’ என்கிறார் திருவிளையாடல் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர்.
கலைகள் வித்தையினின்று தோன்றுகின்றன. வித்தையின் வளர்ச்சி கலை. அது பரந்து விரிந்தது. கலைகளுக்குத் தலைவன் ஆனந்தக் கூத்தன். அறுபத்துநான்கு கலைகளும், ஆனந்த நடராஜ னின் அசைவு, நெளிவு, ஆட்டம், அபிநயம் ஆகிய வற்றினின்று உண்டானவை.
நடராஜப் பெருமானின் திருவுருவம் கலைக் கருவூலம். இந்த உருவிலிருந்துதான் விண்ணுலகத்துக்கும், மண்ணுலகத்துக்கும் வேண்டிய பாவ- ராக- தாளக் கலப்பான பரதக் கலை தோன்றியது. கூத்தும், இசை யும் வளர்ந்தன.

No comments:

Post a Comment