குற்றாலத்தில் அகத்தியர் தங்கி இருந்த கால கட்டத்தில் தான் சதுரகிரியைப் பற்றி பிரமிப்பூட்டும் தகவல்களைக் கேள்விப்பட்டார்.
சதுரகிரியின் மருத்துவ மகிமை மற்றும் அங்கு கிடைக்கும் இறை இன்பம் ஆகியவற்றை யெல்லாம் குற்றாலத்தில் வசித்த முனிவர்கள் சிலர், அகத்தியரிடம் விவரித்தனர். அத்துடன் சுந்தரானந்தர், கொங்கணர் போன்ற எண்ணற்ற சித்தர்கள் சதுரகிரியில் தங்கி, காயகற்ப மூலிகைகள் தயாரித்து வருவதையும் அறிந்தார் அகத்தியர். இதை அடுத்து, சதுரகிரி செல்லும் ஆவல் அவருக்குக் கூடியது.
ஒரு தினத்தில் தனது பயணத்தைத் தொடங் கிய அகத்தியர் காடு, மலைகளைக் கடந்து சதுர கிரியை வந்தடைந்தார். சித்தர்களின் தலைமை பீடாதிபதி அந்தஸ்தில் இருக்கும் அகத்திய மாமுனிவர், தாங்கள் தங்கியிருக்கும் சதுரகிரிக்கு வருவதை அறிந்து மகிழ்ந்தனர் அங்குள்ள ரிஷி களும் முனிவர்களும். சுந்தரானந்தர், யூகி முனிவர், கொங்கணர் உட்பட முனிவர்கள் பலரும் உரிய மரியாதை செய்து அகத்தியரை வரவேற்றனர்.
இதனால் மகிழ்ந்த அகத்தியர், சதுரகிரியின் மகிமைகளைக் கேட்டு, அவற்றை நேரில் அனுபவித்து இன்புறவே, தான் சதுரகிரிக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், கயிலாயத்தில் இறைவனின் திருமணம் இனிதே நடை பெறுவதற்காக, ஈசனே தன்னை தென்திசைக்கு அனுப்பி வைத்த கதையையும் சொன்னார். மாமுனிவரும் காவிரியின் நாயகனும் ஆன அகத்தியரை தரிசித்தது, தாங்கள் பெற்ற பேறு என்று முனிவர்கள் பெருமிதம் கொண்டனர்.
சதுரகிரியில் சுந்தரானந்தரின் ஆசிரமத்தில் தங்கினார் அகத்தியர். அவர், பூஜை மற்றும் வழிபாடுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அங்கு, தனது வழிபாட்டுக்காக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார் அகத்தியர். ஆகம சாஸ்திரங்கள் சொன்னபடி அந்த சிவலிங்கத்தை வேளை தவறாமல் பூஜித்தார் அகத்தியர். அவர் ஸ்தாபித்த இந்த லிங்கத் திருமேனியை சதுரகிரியில் தவம் இருந்த ரிஷிகளும் வழிபட்டு, போற்றிப் புகழ்ந்தனர். இந்த லிங்கமே பின்னாளில் சுந்தர லிங்கம் (சுந்தரமூர்த்தி என்றும் சொல்கிறார்கள்) என அழைக்கப்பட்டது.
‘‘சதுரகிரியில் இன்றைக்கு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என சந்நிதிகள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட முதலில் தோன்றியது சுந்தர லிங்கமே. அகத்தியர் ஸ்தாபித்த இந்த லிங்கத்தை ஆதி காலத்தில் ‘சுந்தர லிங்கம்’ என்றும், சுந்தர மகாலிங்கத்தை ‘மகா லிங்கம்’ என்றும் அழைத்து வந்தனர். சுந்தர லிங்கத்தின் அருகில் இருக்கும் சந்நிதி என்பதால், சுந்தர மகாலிங்கம் என்று அழைக்கப் பட்டதாகவும் சொல்வார்கள்!’’ என்றார் சதுரகிரிக்கு அடிக்கடி வந்து செல்லும் பக்தர் ஒருவர்.
அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கத்துக்கு ‘சுந்தர லிங்கம்’ என்ற பெயர் எப்படி வந்தது? அந்த லிங்கம், அகத்தியர் பெயரால் அழைக்கப்படாதது ஏன்?
சதுரகிரியில் தினமும் சிவ பூஜையில் திளைத்திருந்த அகத்தியர் ஒரு நாள், ‘சதுர கிரியில் நெடுநாட்கள் தங்கி விட்டோமோ...’ என்று சிந்தித்தார். ஈசன் அருள் பாலிக்கும் அநேக தலங்களுக் கும் சென்று அவன் ஆசி பெற விரும்பினார். எனவே, ஒரு தினத்தில் சதுரகிரியில் இருந்து புறப்படத் தீர்மானித்தார். அங்கிருந்து புறப்படுமுன், கயிலைவாசன் ஏற்கெனவே தனக்கு அளித்த அரிய வரத்தின் படி, அவனின் திருமணக் கோலத்தைக் காண விரும்பினார். கயிலைவாசனை நெஞ்சார நினைத்துப் பிரார்த்தித்தார். ‘எந்தத் தலத்தில், எந்த நேரத்தில் எம்மை நினைத்துக் கொள்கிறாயோ... அங்கு, அப்போதே உனக்குத் திருமணக் காட்சி தந்தருள்கிறேன்!’ என்பதுதானே அகத்தியருக்கு ஈசன் அளித்த வரம்?!
கயிலயங்கிரிவாசராகிய அந்தக் கருணாமூர்த்தி, அகத்தியரின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து சுந்தரானந்தர் ஆசிரமத்தில், மலைமகளான உமையவ ளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி தந்தார். எந்தக் காட்சியைக் கயிலையில் பார்க்க விரும்பி அங்கே பயணம் செய்தாரோ, அதே காட்சியை சதுரகிரியில் அகத்தியருக்குக் காண்பித்து அருளினார் இறைவன். ‘ஈசனின் திருமணக் கோலத்தைக் காண்பதே பெரும் பேறு’ என்று இருந்த அகத்தியர், கண்களில் நீர் தளும்ப... ரிஷபாரூட மூர்த்தியை வணங்கித் தொழுதார். அப்போது பிரம்மன், விஷ்ணு, விநாயகர், சுப்ரமண்யர் ஆகிய தெய்வங்களும் சதுரகிரியில் எழுந்தருள, இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் ஆகியோருடன் ரிஷிகளும் முனிவர்களும் அங்கே வந்து கயிலைவாசனின் திருக்கல்யாணக் கோலம் கண்டு ஆனந்தம் அடைந்தனர்.
அகத்தியரின் சக்தி கண்டு அதிசயித்த சுந்தரானந்தர், ‘‘ஸ்வாமி... உங்களது தவ பலத்தால், கயிலைக்குச் செல்லாமலேயே இறைவனின் திருமணக் காட்சியை தரிசிக்கும் பேறு பெற்றோம். இதற்காக எங்களது நன்றியை உங்களுக்கு உரித்தாக்குகிறோம்’’ என்று குரல் தழுதழுக்கச் சொன்னார்.
ஒரு சில நாட்கள் சென்றன. ஒரு நாள் அகத்தியரிடம் வந்த சுந்தரானந்தர், ‘‘ஸ்வாமி... ஒரு விண்ணப்பம்...’’ என்று ஆரம்பித்தார்.
‘‘சொல்லுங்கள் சுந்தரானந்தரே...’’ என்றார் அகத் தியர்.
‘‘ஆகம சாஸ்திரங்கள் சொன்னபடி, அனுதினமும் தாங்கள் இந்த லிங்கத்தை பூஜித்து வழிபடுவதை, பெரும் பேறாகக் கருதி தரிசித்து வந்தேன். இனி, இந்த லிங்கத் திருமேனியை தொடர்ந்து பூஜிக்கும் பாக்கியத்தைத் தாங்கள் எனக்கு அருள வேண்டும்!’’ என்று நெக்குருகச் சொன்னார்.
இதைக் கேட்டு புன்முறுவல் பூத்த அகத்தியர், ‘‘சுந்தரானந்தரே... நல்ல நேரத்தில் ஒரு விண்ணப்பத்தை என்னிடம் வைத்துள்ளீர்கள். நான், எனது புண்ணிய யாத்திரையைத் தொடரலாம் என்றிருக்கிறேன். இந்த தருணத்தில் தாங்கள் என்னிடம் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளீர்கள்... எனது ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. இந்த லிங்கத் திருமேனிக்கு இனி நீங்களே தொடர்ந்து வழிபாடுகளை நடத்துங்கள்’’ என்றார். இதனால் பெரிதும் மகிழ்ந்த சுந்தரானந்தர், சதுரகிரியில் அகத்தியர் ஸ்தாபித்த லிங்கத்துக்கு, தான் தொடர்ந்து பூஜைகள் செய்ய இருப்பதை நினைத்து, இறைவனுக்கு நன்றி சொன்னார்.
அதன் பின், அகத்தியர் சதுரகிரியில் இருந்து புறப்பட்டு, பக்கத்தில் உள்ள ஒரு மலையில் நீண்ட காலம் தவம் இருந்தார். அகத்தியர் தவம் இருந்ததால், அந்த மலை அவரது பெயராலேயே ‘கும்ப மலை’ (கும்பமுனி என்றும் அகத்தியரை அழைப்பதுண்டு) எனப்பட்டது. அகத்தியரது உபதேசத்தின்படி தினமும் பூஜைகளைத் தொடர்ந்தார் சுந்தரானந்தர். இந்தக் காலத்தில்தான் அந்த லிங்கத் திருமேனிக்கு ‘சுந்தர லிங்கம்’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது.
சுந்தர லிங்கம், மிகுந்த சக்தி வாய்ந்த கடவுள். சித்தரான அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தாலும், சித்த புருஷர்களாலேயே பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப் பட்டதாலும் இவருக்கு சக்தி அதிகம். இவரிடம் வைக்கும் எந்த ஒரு பிரார்த்தனை யும் வீண் போவதில்லை. அருளை வழங்குவது மகாலிங்கம். அதாவது, சதுரகிரியின் பிரதான மூர்த்திகளான சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம்; பொருளை வழங்குவது சுந்தர லிங்கம். அதாவது, தற்போது நாம் தரிசித்துக் கொண்டிருக்கும் சந்நிதி. சுந்தர லிங்கம் வழங்கும் பொருட்கள் முறையான ஆசாமிகளுக்குத் தான் கிடைக்கிறதா என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ‘செக்’ செய்பவர் பிலாவடி கருப்பர்.
மலைக்கு அடிக்கடி வந்து செல்லும் கோவில்பட்டிவாசி ஒருவர் நம்மிடம் சொன் னார்: ‘‘பிலாவடி கருப்பர் சாதாரணப்பட்டவர் அல்ல. மகாலிங்கத்திடம் வேண்டும் எந்த ஒரு பிரார்த்தனைக்கும், பிலாவடி கருப்பரிடமும் ஒரு அப்ளிகேஷன் போட வேண்டும். எப்படி மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தால், சம்பந்தப்பட்ட பிரிவில் உள்ள ஊழியர்களிடமும் சிபாரிசுக்குச் செல் வோமோ, அது போல்தான் கருப்பர். ஆனால், கருப்பர் கறார் பேர்வழி! இல்லையென்றால், ஒட்டுமொத்த சதுர கிரியையும் காக்கும் பணி இவரிடம் வருமா? பக்தர்கள் வைக்கும் பிரச்னைகளுக்கான தீர்வை, கருப்பர் ‘ஓகே’ செய்தால், மகாலிங்கம் ‘சாங்ஷன்’ பண்ணுவார். முறை இல்லாத ஆசாமிகளுக்கு மகாலிங்கம் தப்பித் தவறி ஏதாவது கொடுத்து விட்டால், கருப்பர் விட மாட்டார். ஏதோ ஒரு மாயம் செய்து அதைப் பிடுங்கி விடுவார்..!’’
நாம் இன்னும் சுந்தர லிங்கம் சந்நிதியில்தான் இருக்கிறோம் (சுந்தர மகாலிங்கம் சந்நிதியை அடுத்து தரிசிக்கப் போகிறோம்). விசேஷ தினங்களில் இந்த சுந்தர லிங்கம் சந்நிதியில் சாதுக்களும் சாமியார்களும் பெருமளவில் குவிகிறார்கள். சந்நிதிக்கு எதிரில் ஒரு மண்டபம் உண்டு. எங்கெங்கிருந்தோ வரும் சாதுக்கள், அந்த மண்டபத்தில்தான் அமர்ந்திருப்பார்கள்; தங்குவார்கள்; ஓய்வெடுப்பார்கள். ஆடி அமாவாசை போன்ற சில குறிப்பிட்ட விசேஷ நாட்களில், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பலரும் இங்கு பொங்கல் சமைத்தும் வேறு வகையான உணவு தயாரித்தும் சுந்தர லிங்கத்துக்குப் படைத்து வணங்கு வார்கள். இன்னும் சிலர் அசைவம் சமைத்துப் படைப்பார்கள். படையல் எதுவாக இருந்தாலும், அதன் முதல் விநியோகம் இந்த சாதுக்களுக்குத்தான் போக வேண்டும். இது பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறதாம்.
விசேஷ தினங்களில், சுந்தர லிங்கம் சந்நிதிக்கு அருகே பெரிய ஓலைப் பாய் ஒன்று விரிக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் தாங்கள் படைத்த அன்னத்தின் ஒரு பகுதியை சாதுக்களுக்கு சமர்ப்பிப்பதற்காக இந்த ஓலைப் பாயில் வைப்பார்கள். இப்படி பலரும் வைக்கும் அன்னமானது, மலை போல் சேர்ந்து கொண்டே இருக்கும். தவிர, பக்தர்கள் படைக்கும் சாம்பார், மோர், பொரியல் போன்றவற்றை சாதுக்களுக்குச் சமர்ப்பிப்பதற்கு, விதம் விதமான அண்டாக்களும் ஓலைப் பாயின் அருகே வைக்கப்பட்டிருக்கும். அததற்கு உண்டான பாத்திரங்களில் சம்பந்தப்பட்டதைச் சேர்ப்பார்கள் பக்தர்கள். இதுபோல், அசைவ உணவுகளை இடுவதற்கென்றும் தனியே ஒரு பாத்திரம் வைக்கப் பட்டிருக்கும். எல்லாவற்றிலும் உணவு வகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும். கடைசியில், சாதுக்கள் அனைவரும் ஒன்று கூடி அவற்றைத் தங்களுக்குள் பங்கு போட்டுப் பிரித்துக் கொள்வார்கள்.
இத்தகைய அன்னத்தை சாதுக்களிடம் இருந்து பிச்சையாக வாங்கி பக்தர்கள் உண்பது பெரும் பேறு. சாதுக்களும் மனம் நிறைய மகிழ்ச்சியோடு பக்தர்களிடம் இருந்து பெற்றதில், ஒரு கவளத்தைப் பக்தர்களுக்கே தருவார்கள். இதற்கென்றே பக்தர்கள் பலரும் காத்திருப்பார்கள். வயசு வித்தியாசம் பார்க்காமல், ஏழை- பணக்காரர் என்கிற வித்தியாசம் இல்லாமல் எல்லாத் தரப்பினருமே ஒரு குறிப்பிட்ட பிரச்னையை முன்வைத்து, அது அகல வேண்டும் என்பதற்காக இந்த உணவை, மிகுந்த பக்தியோடு வாங்கி உண்பார்கள். இதற்கு ‘மடிப் பிச்சை’ என்று பெயர். ‘இந்த சாதுக்களில் எவரேனும் ஒரு சித்தர் இருக்கலாம்... அவரது அருளாசியால், நமது பிரச்னைகள் அகலும்’ என்பது பக்தர்களது நம்பிக்கை.
சுந்தர லிங்கம் சந்நிதி முன், வாத்தியக் கருவிகளது முழக்கத்துடன் பஜனைப் பாடல்கள் பாடி, அவனை மகிழ்விப்பது வாடிக்கையான ஒன்று. வெளியூர்களில் உள்ள பஜனைக் கோஷ்டியினர், விசேஷ காலங்களில் இந்த சந்நிதி முன் வாத்தியக் கருவிகளுடன் கூடி, பகல் நேரத்தில் பாடல்கள் பாடி மகிழ்வார்கள். அப்போது பெரும் திரளான கூட்டம் அருகில் அமர்ந்து அந்த இன்பத்தில் லயிக்கும். இந்தப் பாடல்களின் கம்பீரமான முழக்கம், சதுரகிரி முழுமையிலும் எதிரொலிக்கும்.
நள்ளிரவு பன்னிரண்டு மணி வாக்கில், சுந்தர லிங்கம் சந்நிதிக்கு அருகே செல்லக் கூடாது என்பர். காரணம், அந்த நேரத்தில் பஜனைப் பாடல்களின் முழக்கங்கள் வெகு சன்னமாகக் கேட்குமாம். இந்த பஜனையை நிகழ்த்துபவர்கள் பக்தர்கள் அல்ல; சித்தர்கள். இந்த வேளையில் பூசாரிகள் உட்பட எவருமே சுந்தர லிங்கம் சந்நிதியின் அருகே செல்ல மாட்டார்கள்.
இந்தப் பாடல்களின் முழக்கத்தைக் கேட்கும் பேறு, அதிர்ஷ்டம் உள்ள ஒரு சில பக்தர்களுக்கு மட்டும்தான் வாய்க்கப் பெறும். அதில் ஒரு அபூர்வ பக்தர் சுந்தரம் என்பவர். சாப்டூரைச் சேர்ந்தவர். இவர் ஒரு நாவிதர் (முடி திருத்துபவர்). அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் சதுரகிரிக்கு வந்து, நேர்ந்து கொண்ட பக்தர்களுக்கு மொட்டை அடித்து விடுவார். ஊரில் இருந்து வரும்போது சில தேங்காய் களையும் கொண்டு வந்து விற்பார்.
அது நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிகிற நேரம்... சதுரகிரியே களைகட்டி ஓய்ந்திருந்தது. சுந்தரத்துக்கும் ஓரளவு வருமானம் சேர்ந்தது. மலை மேல் இருந்தவர்கள் எல்லாம் தங்கள் ஜாகையைக் காலி செய்து புறப்பட்டு விட்டனர். சுந்தரத்துக்கு கொஞ்சம் அசதியாக இருக்கவே, ‘சற்று ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு செல்லலாம்!’ என்று தீர்மானித்து சுந்தர லிங்கம் சந்நிதியின் அருகே அமர்ந்தார். அப் போது ஆலய அதிகாரி ஒருவர், ‘‘என்னப்பா சுந்தரம்... பசியோட இருக்கே போலிருக்கு. இந்தாப்பா. சுந்தர லிங்கம் பிரசாதம். சாப்பிடு’’ என்று ஒரு சில தேங்காய் மூடிகளையும் வெல்லக் கட்டியையும் கொடுத்தார்.
தேங்காய் மூடிகளைத் துருவலாகத் துருவிக் கொண்டு, அதில் வெல்லத்தைக் கலந்த சுந்தரம், ஒரு பிடி எடுத்துச் சாப்பிடலாம் என்று வாய் அருகே கொண்டு போனார். அப்போது, சற்றுத் தொலைவில்... சுந்தர லிங்கம் சந்நிதிக்கு எதிரே துறவி ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த் தார். அதிசயித்தார். ஏனெனில், அங்கு இவரைத் தவிர வேறு எவருமே இல்லை. இவருக்கு பிரசாதம் தந்த ஆலய அதி காரியும் புறப்பட்டுச் சென்று விட்டார். வியப்படைந்த சுந்தரம், ‘யார் இவர்?’ என எண்ணியபடி அவரின் அருகே சென்றார்.
காவி நிற உடை... நெற்றி, மார்பு மற்றும் கைகளில் பளீரென்ற திருநீறு... கழுத்தில் ருத்திராட்சம்... நீளமாகத் தொங்கும் தாடி... கண்களில் ஓர் அதீத ஒளி... கண்டவர் எவரும் விழுந்து வணங்கும் தெய்வீகத் தோற்றம்... சுந்தரமும், அதையே செய்தார்.
பிறகு, ‘‘சாமீ... பிரசாதம் சாப்பிடுங்க. சுந்தர லிங்கத்துக்கு காணிக்கையா வந்த தேங்காய். வெல்லம் கலந்தது. டேஸ்ட்டா இருக்கும்!’’ என்று வெல்லம் கலந்த தேங்காய்த் துருவலை அவரிடம் பவ்யமாக நீட்டினார். ஒரு பிடி எடுத்துச் சாப்பிட்டு விட்டு, சுந்தரத்தைப் பார்த்துப் புன்னகைத்தார் அந்தத் துறவி. அதற்கு மேல் அவர் அருகில் நிற்க முடியவில்லை சுந்தரத்தால். கால்கள் பின்னுக்கு இழுத்தன. அவர் கண்களைத் தூக்கம் தழுவியது. தடுமாறி மெள்ள நடந்து வந்து, சுந்தர லிங்கம் சந்நிதியை விட்டுச் சற்றுத் தள்ளி இருக்கும் பலகை ஒன்றில் சாய்ந்து படுத்தார்.
‘எவ்வளவு நேரம் தூங்கினோம்’ என்பது சுந்தரத்துக்குத் தெரியாது. எங்கோ பஜனைப் பாடல்கள் பாடும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தார். எங்கும் கும்மிருட்டு! ‘எல்லோரும் போய் விட்ட பிறகு, யார் புதிதாக வந்து பஜனை செய்கிறார்கள்?’ என்று எழுந்து உட்கார்ந்தவர், கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார்.
சற்றுத் தள்ளி... சுந்தர லிங்கம் சந்நிதியின் முன் கண்களைக் கூச வைக்கும் பிரமாண்ட ஒளி வெள்ளத் தைக் கண்டு (மலைக்கு மேலே மின்சார வசதி கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது) பிரமித்தார். அங்குதான் பஜனை நடக்கிறது என்று யூகித்தபடி எழுந்து நடந்தார். ‘அந்த நேரத்தில், அங்கு செல்லக் கூடாது’ என்பது, அப்பாவி பக்தன் சுந்தரத்துக்கு அப்போது தெரியாது!
|
Monday, 4 September 2017
சதுரகிரி யாத்திரை ! - 8
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment