Saturday, 9 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 17


இ றையருள் இல்லாமல், எவராலும் இன்பமுடன் வாழ இயலாது என்பதை விளக்கு வதே ஜலந்தரவதர் மூர்த்தம்.
தேவர்கள் ஆயினும் அகந்தை தலை தூக்கினால், அல்லலுக்கு ஆளாக நேரிடும்; இறையருளால் மட்டுமே இடர் நீங்கப் பெறலாம். இதற்குச் சான்றாக புராணங்களில் பல சம்பவங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று ஜலந்தர வதம்.
ஒரு முறை, தேவேந்திரன் கயிலைக்குச் சென்றான். அவனை சோதிக்க நினைத்த சிவபெருமான், வேறு உருவில் வந்து அவன் எதிரே நின்றார்.
அவரிடம், ‘‘நீ யார்?’’ என்று வினவினான் இந்திரன். அவர் பதிலேதும் கூறவில்லை. இதனால் கோபம் கொண்ட இந்திரன், தனது வஜ்ராயுதத்தால் அவரைத் தாக்கினான். ஆனால், அந்த ஆயுதம் பொடிப்பொடியாக நொறுங்கி உதிர்ந்தது. மறுகணம் உருத்திரராக வடிவெடுத்து நின்றார் சிவபெருமான். நடுநடுங்கிய இந்திரன், அவரை வணங்கி தனது பிழை பொறுத்தருள வேண்டினான். அப்போது உருத்திரரின் மேனியில் வழிந்த வியர்வையில் இருந்து பாலகன் ஒருவன் தோன்றினான். அவன் பெயர் ஜலந்தரன்.
அவனை எடுத்து வந்து, சீரும் சிறப்புடன் வளர்த்தான் கடலரசன். வளர்ந்து இளைஞனான ஜலந்தரன், ஆற்றல் மிக்கவனாக திகழ்ந்தான். காலநேமி என்பவனின் மகள் பிருந்தையை மணம் செய்தான். காலப்போக்கில் அசுரர்களுடன் இணைந்த ஜலந்தரன், மேரு மலையிலிருந்த இந்திரன் உட்பட தேவர்களுடன் போரிட முனைந்தான். அப்போது, அவனை எதிர்த்துப் போரிட்டார் திருமால். போர் பல ஆண்டுகள் நீடித்தும் ஜலந்தரனை வெல்ல முடியவில்லை.

எனவே, இந்திரன் மீண்டும் கயிலை சென்று கயிலை நாதனை சரணடைந்தான். ஈசன், அவனுக்கு அபயம் அளித்தார். இதையறிந்த ஜலந்தரன் கயிலைக்குப் புறப்பட்டான்; பிருந்தை தடுத்தும், கேட்கவில்லை. கயிலையை அடைந்தபோது, வயது முதிர்ந்த முனிவர் ஒருவர் தென்பட்டார். அவர், ‘‘நீ யார்?’’ என்று ஜலந்தரனிடம் வினவினார்.
‘‘நான் ஜலந்தரன்; சமுத்திர ராஜனின் மகன். சிவபெருமானுடன் போரிட வந்தேன்!’’ என்றான் இறுமாப்புடன்.
முனிவர் நகைத்தார்: ‘‘கண் ணுதற் கடவுளோடு போரிடக் கருதினால், உயிர் இழப்பாய். ஓடி விடு!’’ என்றார்.
‘‘என் ஆற்றலை விரைவில் காண்பீர்’’ என்றான் ஜலந் தரன். உடனே, முனிவர் தன் காலால் தரையில் கீறி, சக்கரம் ஒன்றை வரைந்தார். பிறகு, அதைப் பெயர்த்தெடுத்து, ‘‘இதை உன் தலைமேல் ஏற்றித் தாங்குவாயா?’’ என்று கேட்டார். ‘‘இதென்ன பெரிய வேலை?’’ என்று நகைத்த ஜலந்தரன், அந்தச் சக்கரத்தை எடுத்து மார்பிலும் புஜத்திலும் தாங்கி, தன் தலை மேல் வைத்தான். மறுகணம் அந்தச் சக்கரம் அவனை இரண்டாக பிளந்து போட்டு விட்டு, முனிவர் வடிவில் வந்த சிவனின் கைகளில் தஞ்சமடைந்தது. அதன் பிறகு சிவபெருமானின் விழித் தீயினால், ஜலந்தரனின் சேனையும் சாம்பலாயிற்று. இந்திரனும் தேவர்களும் சிவபெருமானை போற்றித் துதித்தனர்.
_ இதுவே ‘ஜலந்தர வதம்’ பற்றிய புராணக் கதை.
ஈசன், திரிபுரங்களை எரித்தபோது அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய b, சிந்து நதி கடலுடன் கலக் கும் இடத்தில் விடப்பட்டது. அப்போது பிறந்தவனே ஜலந்தரன். எவராலும் வெல்ல முடியாத அவனை, சிவ பெருமான் சுதர்சனச் சக்கரத்தால் வென்றார் என்றும் ஒரு புராணக் கதை உண்டு. புராணங்களில் சில, ‘ஜலந்தர சம்ஹாரம் நிகழ்ந்த இடம்- காசி’ என்றும் மற்றும் சில, ‘இமய மலை’ என்றும் குறிப்பிடுகின்றன. ஜலந்தர வதம், திருவிற்குடியில் நிகழ்ந்ததாக திருவிற்குடி தல புராணம் கூறுகிறது.
அஷ்ட வீரட்ட தலங்களில் 5-வதான திருவிற்குடி, திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகில் உள்ளது (திருவாரூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தூரம்). இங்குள்ள இறைவன்- ஸ்ரீவீரட்டேஸ்வரர், இறைவி- ஸ்ரீஏலவார் குழலம்மை. இங்குள்ள ஜலந்தர வத மூர்த்தி, பின் இரு கரங்களில் மழு- மான், முன் வலக் கரத்தில் சக்கரம், இடக் கரத்தில் கத்தரி முத்திரையுடன் திகழ்கிறார். ஜலந்தரனை வதைத்த பின், பூமிதேவிக்கு அருளிய கோலம் இது என்பர். இந்தக் கோயிலுக்கு கிழக்கில் சக்கர தீர்த்தம் உள்ளது. இவற்றின் இடையே உள்ளது திருமயானேஸ்வரர் ஆலயம். இது, பிருந்தை தீக்குளித்த இடம். பின்னாளில் இங்கு சிவாலயம் அமைக்கப்பட்டு, பிருந்தை மயானம் எனப்பட்டது (அருணகிரிநாதரும் திருவிற்குடியை ‘பிருந்தை மயானம்’ என்றே குறிப்பிடுகிறார்). இந்தக் கோயிலின் விமானத்தில் ஜலந்தரனது வரலாற்றை விளக்கும் சுதைச் சிற்பங்கள் உள்ளன. மரத்தாலான ஜலந்தரன் உருவமும் இங்கு உண்டு.
கோயிலைச் சுற்றி ஏராள மான துளசிச் செடிகள் உள்ளன. கணவன் இறந்ததும், அவன் உடலுடன் தீக்குளித்த பிருந்தையின் சாம்பலில் இருந்து உண்டானதே துளசிச் செடி. துளசி, சிவபெருமானுக்கும் உரியது. திங்கட்கிழமைகளில் சிவபெருமானை துளசியால் அர்ச்சிப்பவர்கள், இனிய இல்லற வாழ்வு பெறுவர். திங்கட் கிழமை பறித்து, சிவார்ச்சனை செய்யப்பட்ட துளசி இலைகளில் சந்திரனின் அமு தம் கலந்திருக்கும் என்றும், அதை உண்பதால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றும் பெரியோர் கூறுவர்.
ஜலந்தரனை அழித்த சிவ வடிவத்தை, ஜலந்தரவத மூர்த்தி, சலந்தராரி, ஜலந்தரஹர மூர்த்தி என்றெல்லாம் போற்றுகிறார்கள். சிவபெருமானின் இந்த வீரச் செயலை பல இடங்களில் தேவார மூவரும், மணி வாசகரும் போற்றுவர். ஸ்ரீதத்வ நிதி எனும் சிற்ப நூல், ஜலந்தரவத மூர்த்தியின் திருக்கோலத்தை வேறு விதமாக விளக்குகிறது: இவர், செம்மேனி- உக்கிரமான முக்கண் மற்றும் இரு கரங்களுடன் விளங்குவார். வலக் கரத்தில் குடை, இடக் கரத்தில் கமண்டலம். இவருக்கு முன் புறம் மஞ்சள் நிற மேனியனாக கைகூப்பி நிற்பான் ஜலந்தரன். அவன் கைகளுக்கு நடுவே சுதர்சனம். இடுப்பில் வாள் தொங்குவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈசனால் அழிக்கப்பட்ட ஜலந்தரனின் ஆன்மா தன்னையும், தன் பிறப்பையும் உணர்ந்து சிவபூஜையில் திளைத்தது. அதைத் தூய்மைப்படுத்தி மோட்சம் அளித்தார் ஈசன். இதில், பிருந்தையின் சிவ பக்தி மற்றும் பதி பக்தியையும், ஜலந்தரனின் வீரத்தையும் காணலாம். தவிர, ஜலந்தர வதத்தின்போது ஈசன் வீர வடிவுடன் செல்லாமல், முனிவராக சென்று, தனது யோக சக்தியால் வென்றது குறிப்பிடத்தக்கது.
சிவாயுதமான சக்கரத்தைத் தாங்கியதால், ஒளி வடிவம் பெற்று நெடுநாள் விண்ணில் இருந்த ஜலந்தர னின் ஆன்மா, பூர்வஜென்ம புண்ணியம் மற்றும் பிருந்தையின் சிவபக்தியால் சிவஞானம் பெற்றது. காஞ்சியில் ஒரு சிவலிங்கம் அமைத்து வழிபட்டது. பிறகு, சிவபெருமான் அதைத் தன்னுள் ஒடுக்கினார். ஜலந்தரனின் ஆன்மா பூஜித்த லிங்கம் உள்ள ஆலயம், ‘ஜலந்தரேசம்’ எனப்படுகிறது. இது, ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு மேற்கில், ஒணகாந்தன் தளி ஆலயத்தின் உள்ளே இருக்கிறது.
ஜலந்தரன் வாழ்ந்த இடம், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ‘ஜலந்தர்’ என்பர். இங்கு ஜலந்தரன் வழிபட்ட சிவாலயம் உள்ளதாகக் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment