Saturday, 9 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 16

 
(தொடர்ச்சி)
சூ ரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த எமன், யாருக்கும், எதற்கும் அஞ்சாமல் தருமத்தின் வழியே நின்று கடமை ஆற்றுபவன். அதனால், அவன் ‘எம தருமன்’, ‘நியாயாதிபதி’ என்றும் அழைக்கப்படுகிறான். அவனுக்குப் பல சந்தர்ப்பங்களில் அகந்தை உண்டாகிறது. அப்போது சிவனருளால் காலத்தை வென்றவர்களையும் அவன் தனது பாசத்தால் கட்டி, தனது அதிகாரத்துக்கு உட்படுத்த விரும்புகிறான். தன்னைச் சரண் புகுந்த அன்பர்களுக்காக கால காலனான சிவபெருமான் மரணத்தை விலக்கி, அருள் புரிகிறார்; ஜனன- மரணச் சுழற்சியிலிருந்து உயிர்களை விடுவிக்கிறார்.
எமதருமன் சிவனடியார்களை கவர வரும்போது அவனை அழித்து அருள் புரிவதால், சிவபெருமானை ‘எம சம்ஹாரர்’ என்பர். ‘மிருத்யு’ எனும் மரணத்தை ஜெயிப்பவர் அவர். எனவே, அவரை ‘மிருத்யுஞ்ஜயர்’ என்றும் போற்றுவர். உயிர்களை அழிக்கும் எமனுக்கும் காலனாகத் திகழ்பவர் சிவபெருமான். அதனால், அவரை காலாந்தகர், காலாரி, காலகாலர், காலசம்ஹாரர், காலகண்டன் என்ற பல பெயர்களால் அழைப்பர். இது அடியவர்களுக்காக எதையும் செய்யும் சிவபெருமானது பராக்கிரமத்தைக் காட்டுகிறது. தீய சக்திகளையும், அசுரர்களையும் அழிக்கும் பெருமான், அடியவர் ஒருவருக்காக- அதுவும் ஒரு சிறுவனுக்காக காலனையே உதைத்தவர்.
கௌசிக முனிவரின் புதல்வர் மிருகண்டு. அவர் மனைவி மருத்துவதி. அவர்கள், ஆண் மகவு வேண்டி தவம் செய்தனர். அப்படி அவ தரித்த மைந்தன் மார்க்கண்டேயன். அவனுக்கு வயது 16 மட்டுமே என்பது பிரம்மன் கணக்கு! மார்க்கண்டேயன், சிவபெருமானின் தீவிர பக்தன். அவன் வயது பதினாறு ஆனதும் அவன் உயிரைக் கவர்ந்து செல்ல எமன் வந்து சேர்ந்தான். சிவபூஜையில் ஆழ்ந்திருந்தான் மார்க்கண்டேயன். எமன் அழைத்தபோது அவன், அப்படியே சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டான். எமன், மார்க்கண்டேயனுடன் சிவலிங்கத்தையும் சேர்த்து பாசக்கயிற்றால் இழுத்தான். சிவபெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு காலனை உதைத்தார். காலன் வீழ்ந்தான். மார்க்கண்டேயன் ‘என்றும் பதினாறு’ எனும் வரம் பெற்றான்.
இறைவன் மார்க்கண்டேயருக்கு வரங்கள் தந்த பின் அந்த லிங்கத்திலேயே மறைந்தார். இறைவன் இவ்வாறு வரம் அருளிய நாள் பங்குனி மாதம், ரேவதி நட்சத்திரம், சுக்கிரனும், குருவும் உச்சம் பெற்ற நாளில் மிதுன லக்ன வேளை. மார்க்கண்டேயருக்காக இறைவன் எமனை அழித்த தலங்களில் முதன்மையானது மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடவூர். ஊழிக் காலத்தைக் கடந்து நிற்பதாலும், கால பயத்தை கடக்க உதவும் தலம் ஆதலாலும் கடவூர் என்று பெயர். சிவபெருமானது அட்ட வீரட்ட தலங்களில் ஒன்று திருக்கடவூர். திருக்கடவூர் பெருமானை விட சிறந்த ஆயுள் இன்ஷூரன்ஸை வேறு யாரால் நமக்கு அளிக்க முடியும்? பாலிஸி தொகை- பக்தி. அதனால்தான் 60, 70, 80 ஆண்டு நிரம்பியவர்கள் தமது ஆயுள் நலத்துக்காக இன்றும் கடவூர் பெருமானை வழிபடுகின்றனர்.
மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் வெளிப் பட்டு எமனை அழித்தது காசியில் என்றும், மார்க்கண்டேயர் தவம் செய்த இடம் கோமதி ஆறும், சரயு நதியும் சேரும் இடம் என்றும், இதனை மார்க்கண்டேய ஆச்ரமம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. காசியில் சிவலிங்கம் அமைத்து வழிபட்ட பின் மார்க்கண்டேயர் கங்கை நீரையும், பிஞ்சிலம் (என்ற மல்லிகைக்) கொடியையும் எடுத்துக் கொண்டு வந்து பல தலங்களை தரிசித்து இறுதியில் திருக்கடவூரை அடைந்தார். அங்கே பிஞ்சிலக் கொடியை நட்டதுடன் கமண்டல நீரை ஒரு கிணற்றில் ஊற்றினார். அங்கு கங்காதேவியை எப்போதும் வாசம் செய்யும்படி வேண்டிக் கொண் டார். அது தற்போது, ‘அசுபதி தீர்த்தம்’ என்றும் மார்க் கண்டேய தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தம் திருக்கடவூருக்குக் கிழக்கே திருக்கடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்) தலத்தில் உள்ளது. இந்தக் கிணற்று நீரைக் கொண்டு வந்து தினமும் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். திருக்கடவூர் அருகிலுள்ள மணல்மேடு தலத்தில் மார்க்கண்டேயர் பூஜித்த சிவாலயத்தின் இறைவர் மார்க்கண்டேஸ்வரர் என்றும் அம்பிகை மருத்துவதி (மார்க்கண்டேயரின் தாயார் பெயர்) என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு மார்க்கண்டேயருக்கு தனிச் சிற்றாலயம் உள்ளது. இதில் சிவலிங்கத்தைப் பூஜை செய்பவராக மார்க்கண்டேயர் காட்சியளிக்கிறார்.
காலசம்ஹார வரலாறு சைவத் திருமுறைகளில் பல இடங்களில் பேசப்படுகிறது. அம்சுமத்பேதா கமத்தில் இந்த வடிவம் நான்கு அல்லது எட்டு திருக்கரங்களுடனும், காமிகாகமத்தில் சிவபெருமானின் இடப் பாதம் எமனை உதைப்பதாகவும், வலப் பாதம் பூமியில் ஊன்றியும், வலக் கரச் சூலம் எமனது கழுத்தில் குத்திச் செல்வதாகவும் அமைந்திருக்கும்.
திருக்கடவூர், திருச்செங்காட்டங்குடி, திருவீழிமிழலை முதலிய தலங்களில் உள்ள காலசம்ஹாரரின் திருவுருவங்கள் கல்லிலும், பஞ்ச லோகத்திலும் அமைந்துள்ளன. அட்ட வீரட்டத் தலங்களில் காலசம்ஹார மூர்த்தியை மட்டும் நடனக் கோலத்தில் அமைத்துள்ளனர். சிதம்பரம், மதுரை கோயில்களில் இந்த வடிவம் அற்புதமாக உள்ளது. திருவீழிமிழலை, திருவெண்காடு, திருவையாறு, திருவைகாவூர் ஆகிய தலங்களும், கால சம்ஹாரத் தலங்களே. திருவீழி மிழலையில் சுவேத கேதுவுக்கு அருள் புரிந்த வடிவம், திருவையாறில் ‘ஆட்கொண்டார்’ வடிவம் ஆகியனவும் காலசம்ஹார மூர்த்தியாகப் போற்றப்படுகின்றன.
எமனை சம்ஹரித்ததால், பூமியில் எவரும் மரணம் அடையவில்லை. பாரம் தாங்காது வருந்திய பூமாதேவி, திருமாலை வேண்ட... திருமாலும், பிரம்மனும் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அவர்கள் வேண்டுகோளின்படி எமனை உயிர்ப்பித்து அவனிடம் மீண்டும் அழித்தல் தொழிலைத் தொடர ஆணையிட்டார். இதனால் அவருக்கு ‘அதிகாரவல்லபர்’ என்று பெயர். திருச்சியை அடுத்த திருப்பைஞ்ஞிலி தலத்தில் இவரது சந்நிதி அமைந்துள்ளது. அருகில் எமதருமன் அமைத்த ‘எம தீர்த்தம்’ உள்ளது. சிவ பக்தர்களுக்கு அன்பையும், தருமத்தின் வழி நடப்பவர்களுக்கு நன்மையையும் வழங்கும் நல்லவன் எமன்.
எமன் அதிகாரம் செல்லாத தலம்
யிலாடுதுறை- கும்பகோணம் வழியில் திருவாவடுதுறை அருகில் உள்ள பாடல் பெற்ற தலம் திருக்கோடிக்கா. ‘ருத்ரகோடி சம்ஹிதை’யில் இந்தத் தலம் வேத்ரவனம் என்று புகழப்படுகிறது. இங்கு வாழ்பவருக்கு எமவாதனை இல்லையென்றும், எமன் இவர்களை தண்டிப்பதில்லை என்றும், அது குறிப்பிடுகிறது. அதனால், இந்த ஊரில் மயானம் கிடையாது. இங்கு இறப்பவர்களை காவிரியின் தென் கரைக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகள் செய்கின்றனர். காசி போன்ற சில சிவ தலங்களிலும் எமனின் அதிகாரம் செயல்படுவதில்லை.
எம பைரவர்
திருமீயச்சூர் (லலிதாம்பிகை பிரசித்தமான தலம்) அருகில் கொடியனூர் எனும் தலத்தில் ஆனந்தவல்லியுடன் அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு பைரவர் ஸ்தானத்தில் வீற்றிருப்பவர் எமன். இங்கு எமதருமன் அருகில் பைரவரும், எமனின் சகோதரன் சனைச்சரனும் எழுந்தருளியுள்ளனர்.

No comments:

Post a Comment