Saturday, 9 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 18


வீரம், உலகத்தில் பெரிய செல்வமாகக் கருதப்படுகிறது. வீரத்தால் மட்டுமே ஒருவனது புகழ் அழியாமல் நிலை பெறு கிறது. வீரத்தால் அடைய முடியாதது எதுவும் இல்லை. எனவேதான் நம் முன்னோர், தெய்வங்கள் பலவற்றை வீரத் தெய்வங்களாகச் சித்திரித்தனர்.
திருமாலின் அவதாரங்கள், சிவபெருமான் மற்றும் அம்பிகையின் பராக்கிரமங்கள் ஆகியவற்றில் அவர்களது வீரம் சிறப்பாகப் பேசப்படுகிறது. ஈசன் நிகழ்த்திய வீரச் செயல்களை ‘வீர ஸ்தானம்’ அல்லது ‘வீரட்டானம்’ என்பர். அவரது எட்டு வீரட்ட மூர்த்தங்களில் ஒன்று திரிபுர தகன மூர்த்தம் எனும் திரிபுராந்தக மூர்த்தம்.
வேதம், சரபோப நிஷத், மகாபாரதம், சிவமகா புராணங்கள், ஐதரேய பிரமாணம், சங்க இலக்கியங்களான பரிபாடல், புறநானூறு, கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, சிலப் பதிகாரம் மற்றும் தேவாரத் திருமுறைகள் ஆகியவற்றில் திரிபுராந்தகரது பெருமை விரிவாகப் பேசப்படுகிறது.
தாரகனின் மகன் தாரகாசுரன். இவன் கடும் தவம் செய்து பல வரங்களைப் பெற்றான். தேவர்களை மிகவும் துன்புறுத்திய அவனை, முருகப் பெருமான் அழித்தார். தாரகாசுரனின் புதல்வர்களான வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகியோர் கடும் தவம் மேற்கொண்டு, பிரம்மனிடம் பல வரங்களை வேண்டினர்.
அதன்படி மூன்று பறக்கும் நகரங்களைப் பெற்றனர். (திரிபுராசுரர்கள் மூவரும், தேவ தச்சனான மயன் மூலம் பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன ‘திரி புரம்’ எனும் மூன்று கோட்டைகளைக் கட்டினர். பொன்னாலான கோட்டையை தாரகாட்சனும், வெள்ளிக்கோட்டையை கமலாட்சனும், இரும்புக் கோட்டையை வித்யுன்மாலியும் பெற்றனர் என்றும் சில புராணங்கள் கூறும்) அவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓரிடத்தில் ஒன்று சேரும். அப்போது, தேவர்கள் ஒவ்வொருவரது சக்தியில் பாதியை தன்னிடம் தாங்கும் ஒருவர், ஒரே அம்பால் அந்த கோட்டைகளை வீழ்த்தினால் மட்டுமே திரிபுராசுரர்களுக்கு முடிவு ஏற்படும்.
அந்தரத்தில் பறக்கும் வல்லமை பெற்ற திரிபுரங்களுக்குள் மாட- மாளிகைகள், சோலை கள், சிவாலயங்கள், குளங்கள் ஆகிய அனைத்து வசதிகளும் இருந்தன. அங்கிருந்த கற்பக விருட்சங் களும், காமதேனுவும் அங்குள்ள மக்களுக்கு வேண்டியதை அளித்தன. இந்த கோட்டைகளில், மனைவி- மக்கள் மற்றும் சுற்றத்தாருடன் தவ றாமல் சிவபூஜை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர் திரிபுராசுரர்கள்.
அவர்களது அந்த மூன்று கோட்டைகளும் ஒளியுடன் பிரகாசித்தன. ஆயினும், அவை அந்தரத்தில் விரைந்து பறக்கும்போது ஜீவராசிகள் பல அழிந்தன. நட்சத்திரங்கள் உதிர்ந்தன. பூமி, சொர்க்கம் முதலியவற்றில் அந்தக் கோட்டைகள் நிலை பெறும்போது தேவர்களும், மானிடரும், முனிவர் களும் அழிந்தனர். காலப்போக்கில் திரிபுராசுரர்கள் தங்களது அசுர குணத்தாலும் அகங்காரம் மற்றும் அஞ்ஞானத்தாலும் தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கு தொல்லை கள் தரவும் தொடங்கினர்.
இதனால் துன்புற்ற தேவர்கள், பிரம்மன் மற்றும் திருமால் ஆகியோரது ஆலோசனைப்படி ஈசனிடம் சென்று முறையிட்டனர். அவர், தேர் ஒன்றை செய்து வருமாறு தேவர்களைப் பணித்தார். அதன்படி விசித்திரமான தேர் ஒன்று தயாரானது. இந்தத் தேருக்கு சூரிய- சந்திரர்கள் சக்கரங்கள் ஆயி னர். உதய- அஸ்தமன மலைகள், தேர் அச்சாக அமைந்தன. பருவங் கள்- தேர்க் கால்களாகவும், வேதங் கள்- குதிரைகளாகவும், சந்தஸ்- கடிவாளமாகவும், ‘ஓம்’ எனும் பிரணவம் சாட்டையாகவும் அமைந்தன. பிரம்மன்- சாரதி ஆனார். கங்கை முதலிய நதிப் பெண்கள் சாமரம் வீச, விந்திய மலை குடையானது. பாதாளத்தைக் குறிக்கும் ஏழு தட்டுகள் கீழேயும், வானுலகைக் குறிக்கும் ஏழு அடுக்குகள் மேலேயும் இருந்தன. அஷ்டமா நாகங்கள் தேரைச் சுற்றியிருந்தன. இந்தத் தேர் கயிலை மலையில் சிவபிரான் சந்நிதியில் நிறுத்தப்பட்டது.
சிவபெருமான், மேரு மலையை வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டினார். அக்னியை (அம்பின்) கூராகவும், திருமாலை தண்டாகவும், வாயுவை வால் சிறகாகவும் கொண்ட அம்பை ஏந்தினார். தேவர்கள் அனை வரும் தங்களது சரிபாதி பலத்தை சிவபெருமானுக்கு அளித்தனர். பிறகு, சிவபெருமான் உமாதேவியுடன் அந்த அற்புதமான ரதத்தில் ஏறினார். தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், பதினெண் கணத்தர் ஆகியோர் தேரைச் சூழ்ந்து ஜெய கோஷம் இட்டனர். அந்தத் தேர் முப்புரம் உள்ள இடம் நோக்கிச் சென்றது. முப்புரங்கள் ஒன்று கூடும் காலத்தை எதிர்பார்த்தனர். அதன்படி ‘சரத்’ காலத்தில், சந்திரபுஷ்ப யோகமும், அபிஜித் முகூர்த்தமும் கூடிய வேளையில் சரம் தொடுக்கத் தயாராயினர். ஆனால், வில்லை வளைத்து அம்பை நாண் ஏற்றிய சிவனார் அம்பை நாணில் இருந்து விடுவிக்காமல் முப்புரங்களையும் நோக்கி புன்னகைத்தார். மறு கணம் அவை தீப்பற்றி எரிந்து சாம்பலாயின.
இது கண்டு தேவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். ‘சிவபெருமானுக்கு எவரது உதவியும் தேவையில்லை. இருப்பினும் அனைவரையும் பெருமைப்படுத்தவே இந்த ஏற்பாடு!’ என்பதை அவர்கள் உணர்ந்தனர். பிறகு, அசுரர்கள் மூவரும் பெற்ற வரத்தின்படி அவர்கள் மீது அம்பெய்துமாறு சிவபெருமானை வேண்டினர். சிவபிரான் அம்பை எய்ய, அது மேலும் திரிபுரத்தை எரித்ததுடன், அசுரர் மூவரையும் அழித்தது. அனைவரும் பெருமானைப் போற்றித் துதித்தனர். இந்த வரலாறு, சிவமகா புராணம், சனத் குமார சம்ஹிதை, பதினெண் புராணங்கள் மற்றும் அநேக தல புராணங்கள் முதலானவற்றில் சிற்சில மாறுதல்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
தேவர்கள் தன்னிடம் சரணடைந்ததும், சிவபெருமான் அவர்கள் அனைவரது சக்தியையும் தாங்கினார் அல்லவா? அப்போது தேவர்கள், ஸ்ரீபரமேஸ்வரனை பணிந்து ‘பசுபதி’ என்று அவரைப் போற்றி பாடியதே ஸ்ரீருத்ரம். இதில், ஈசனது வில்லுக்கும்- அம்புக்கும் முதலில் நமஸ்காரம் என்று சொல்லப்படுவது குறிப்பிடத் தக்கது.
திரிபுர சம்ஹார மூர்த்தியுடன் உறையும் அம்பிகையின் திருநாமம் ‘ஜன்ம ம்ருத்யு விநாசினி’.
காசி, திரியம்பகம் ஆகிய வடநாட்டுத் தலங்களில் திரிபுர சம்ஹாரம் நிகழ்ந்ததாக சிவ புராணங்கள் குறிப்பிடுகின்றன. தமிழகத்தில், பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் நிகழ்ந்ததாக திருவதிகை ஸ்தல புராணம் கூறுகிறது.
‘திரு வதிகை வீரட்டானம்’ என்ற இந்தத் தலத்தில் உள்ள பெரிய மண்டபத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது ‘வீரட்டேசர் சபை.’
இங்கு உமாதேவியுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளி உள்ளார் சிவனார். பின் இரு கரங்களில் மான்- மழு; முன் கரங்களில் வில்- அம்பு ஏந்திக் காட்சி தரும் பெருமானின் இந்த அற்புத வடிவை- திரிபுராந்தகர் என்றும், அம்பிகையை- திரிபுரவல்லி என்றும் அழைப்பர்.
அரக்கோணத்தை அடுத்த திருவிற்கோலம் (தற்போது கூவம் எனப்படுகிறது) என்ற தலத்தில், இறைவன்- திரிபுராந்தகர் என்றும், அம்பிகை- திரிபுர சுந்தரி என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்குள்ள விநாயகரை, ‘அச்சிறுத்த விநாயகர்’ என்கிறார்கள். ராஜாதி ராஜன் என்ற சோழ மன்னனின் 11-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு, இந்த ஆலயத்தை ‘திரிபுராந்த கேஸ்வரம்’ என்று குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment