இறைவனும் இறைவியும் பிரிந்திருந்த நிலையில், உலக உயிர்கள் செயலிழந்து கிடந்தன. இது, ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது!’ என்பதைப் புலப்படுத்தும்.
மலை மகளாக அவதரித்து, தட்சிணாமூர்த்தியாக யோக நிலையில் இருந்த இறை வனை மணக்க, தவம் இயற்றினாள் இறைவி. தவத்தாலேயே கணவனுக்குத் தகுந்த மனைவியும், மனைவிக்குத் தகுந்த கணவ னும் வாய்ப்பர். காம தகனத்துக்குப் பிறகே குமரன் அவதரித்தான். இது, காமம் நீங்கி, தவ யோகத் தால் பிள்ளை பெறுவதே சிறப்பு என்பதைப் புலப்படுத்துகிறது. மனிதன் தன் உயிராற்றலை உயர்ந்த குறிக்கோள்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை, சிவபெருமானது ஆற்றல் நெற்றிக் கண் வழியே (ஊர்த்துவரேதஸ்) தவக் கனலாக - முருகனாகத் தோன்றி உலகைக் காத்தருளியதை விளக்குகிறது. விளங்கும் தன்மையான சக்தியும், நல்ல தன்மையான சிவமும் இணையும்போது முருகு தோன்றி, தீமைகளை அழித்து உலகை இன்புறச் செய்கிறது என்ற தத்துவத்தை இந்த மூர்த்தி விளக்குகிறார்.
சிவபெருமான் காமனை எரித்த திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள ‘திருக்குறுக்கை’ என்று தல மான்மியம் விவரிக்கிறது. இறைவனது அட்ட வீரட்டத் தலங்களுள் குறுக்கையும் ஒன்று. இங்கு காமதகன மூர்த்தி எழுந்தருளியுள்ள சபையை, ‘காமன் அங்க நாசினி சபை’ என்றும் ‘சம்பு விநாத சபை’ என்றும் அழைப்பர்.
இங்கு சிவபெருமான், யோக மூர்த்தியாக இடக் காலை மடித்து, வலக் காலைத் தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். பின் இரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன் வலக் கரம் அபய முத்திரையுடனும், முன் இடக் கரத்தை முழங்கால் மீது நீட்டி வைத்தவாறும் உள்ளன. பெருமானுக்குச் சுற்றிலும் சனகாதி முனிவர்கள். இவருக்கு இடப் புறம் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள் அம்பிகை. இவளை பூரணி என்பர். இங்குள்ள காமதகன மூர்த்தி, ரதிக்கு இரங்கி, மன்மதனை உயிர்ப்பித்து, அவர்களுக்கு அருள் புரிந்த கோலம். இந்தச் சந்நிதிக்கு எதிரில் மன்மதனும், ரதியும் உலாத் திருமேனிகளாக, மன்மதன் கரும்பு வில்- மலர்ப் பாணத்துடனும், ரதிதேவி கிளியை ஏந்தியும் காட்சி அளிக்கின்றனர்.
இந்தத் திருக்கோயிலில் மாசி மகம் தினத்தன்று காம தகனமும், ரதிக்கு அருள் புரிவதும் ஐதீக விழாக்களாக நடத்தப்படுகின்றன. கோயி லுக்குத் தென்மேற்கில் விபூதிக்குட்டை என்ற இடத்தில் மன்மதன் எரிந்து சாம்பலானான் என் கிறார்கள். இங்குள்ள மண், விபூதி போல் காட்சி அளிக்கிறது.
கிராமிய விழாக்களில் காம தகனம் எனும் காமன் பண்டிகையும் ஒன்று. சில ஊர்களில் காமுட்டிக் கோயில் என்று சிவலிங்கம் அமைத்தும் வழிபடுவார்கள். காமனை அட்டித்த இறைவன் ஆதலால் சிவபெருமான் காமட்டி என்று அழைக்கப் பட்டு, ‘காமுட்டி’ ஆக்கப்பட்டார். மாசி மகத்துக்கு முன்பு ரதி- மன்மதன் திருமணம் சிறப்பாக நடக்கும். மாசி மகத்தன்று காமதகன நாடகம், வில்லுப்பாட்டு, லாவணி எனும் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு நிகழ்ச்சி போன்றவற்றை நடத்துவார்கள். இதில், ‘காமன் எரிந்த கட்சி’, ‘எரியாத கட்சி’ என்று இரண்டு பிரிவாக நின்று போட்டி போட்டுப் பாடுவார்கள். இந்த விழாவைக் கொண்டாடினால் நல்ல விளைச்சலும், மக்கள் விருத்தியும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
சிவபெருமான் அருளால் உயிர் பெற்று எழுந்த பின் தன்னை உயிர்ப்பித்ததற்காகவும், தனது தவறுக்கு வருந்தியும் அநேக இடங்களில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டான் மன்மதன். அவை காமேச்வரங்கள், அங்க நாதேச்வரங்கள், மன்மதேச்வரங்கள் ஆகிய பெயர்களால் வழங்கப்படுகின்றன. புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் காமேச்சரம், திருச்சி லால்குடி அடுத்த பூவாளுர் மன்மதேச்சரம், மயிலாடுதுறை அருகில் உள்ள திருத்துருத்தி (குத்தாலம்) மன்மதேச் சரம், காஞ்சிபுரம் காமேச்சரம் ஆகிய ஆலயங்கள் இவற்றில் குறிப்பிடத் தக்கவை. காசி மாநகரிலும் மன்மதன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.
யாருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டிருப்பது காலம். அசையும், அசையாப் பொருள்களுக்கு உள்ளும் ஓயாது, மாற் றத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது காலம். அந்தக் காலத்தை சிவபெருமான் நடத்திச் செல்வதால் அவரை ‘கால காலன்’ என்றும், ‘மகா காலன்’ என்றும் அழைப்பர். நொடிக்கு நொடி இறந்து கொண்டே இருக்கும் காலத்தை சம்ஹாரம் செய்வதால், அவர் கால சம்ஹாரர் எனப்படுகிறார்.
காலத்தைக் கணக்கிட்டு, உயிர்களை மரணம் அடையச் செய்ய ஈசனால் நியமிக்கப்பட்டவன் காலன். காலம், எதையும் பார்க்காமல் உயிர்களைப் பறித்து விடுகிறது. அதனால் உயிர்கள், மரணத்தைக் கண்டு அஞ்சுகின்றன. மணி, மந்திர ஒளஷதங்களால் சித்தர்கள் தம் உடலையும், உயிரையும் நிலைநிறுத்த விரும்புகின்றனர். யோகிகள் மூச்சுக் காற்றை முறைப்படுத்தி, தவயோகத்தால் மரணத்தை வெல்ல முயற்சிக்கிறார்கள்.
|
Saturday, 9 September 2017
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 15
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment