Saturday, 9 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 14


உ லகின் கேடுகளை ஊன்றி கவனித்தால், அவற்றுக்கு அடிப்படைக் காரணம் காமமே என்பது புலப்படும். ‘காமம் இல்லையெனில் கடுங்கேடு என்னும் நாமம் இல்லை, நரகமும் இல்லையே’ என்பது கவிச் சக்ரவர்த்தி கம்பரது வாக்கு.
‘கொலை- களவுகளுக்கெல்லாம் காமமே காரணம். எமனும் அஞ்சக் கூடிய காமமே, கள் உண்ணக் காரணம். ஆதலால், காமமே நரக பூமி’ என்கிறது திருவிளையாடற் புராணம். காமத்தால் வரும் கேடுகளை அறிந்திருந்தும் இந்த உலகில் காமவசப் படாதவர்களைப் பார்ப்பதே அரிது! காமனை வெல்வது எளிதல்ல. மனிதன் வெல்ல விரும்பும் காமமும், காலமும் அவனையே வென்று விடுகின்றன. அவற்றை வெல்லும் ஆற்றலைப் பெற நாம், சிவபெருமானின் கருணைக்கு ஆளாக வேண்டும்.
சிவபெருமானது தனிச் சிறப்பு, அவர் காமனை எரித்ததும், காலனை உதைத்ததும்தானே! படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் ( பஞ்ச கிருத்யம் ) இயற்றும் சிவபெருமான் காமனை ஏன் எரிக்க வேண்டும்?
காமதகனம் பற்றி வடமொழியில் உள்ள ‘லிங்க புராணம்’ விவரிக்கிறது:
தட்சனது யாகத்தை வீரபத்திரர் தகர்த்த பிறகு, சிவபெருமான் இறைவியுடன் திருக்கயிலையில் எழுந்தருளியிருந்தார். அப்போது இறைவனை தொழுத அம்பிகை, ‘‘யான் முன்பு தட்சனுக்கு மகளாகப் பிறந்து தாட்சாயனி எனும் பெயர் பெற் றிருந்தேன். தங்களை இகழ்ந்த தட்சனின் மகள் என்ற பெயரையும், உடலையும் நான் விரும்பவில்லை. அவை நீங்குமாறு அருள் புரியுங்கள்!’’ என்று வேண்டினாள். உடனே ஈசன், ‘‘இமவான் எனும் மலையரசன், உன்னை மகளாகப் பெற விரும்பி தவம் புரிகிறார். அவரது வேண்டுகோளை நிறைவேற்றி அருள்க!’’ என்று பணித்தார்.
அதன்படி இமவான் காணுமாறு, பொய்கை ஒன்றில் தாமரை மலரில் குழந்தையாகத் தோன்றினாள் அம்பிகை. அந்தக் குழந்தையைக் கண்டெடுத்த இமவான் மகிழ்ந்து, தன் மனைவி மேனையிடம் கொடுத்தான். குழந்தையை அன்புடன் சீராட்டி, பாராட்டி வளர்த்தனர். இமவான் மகள் என்பதால் குழந்தைக்கு, ‘பார்வதி’ என்றும் ‘மலைமகள்’ என்றும் பெயரிட்டனர். பருவமெய்திய பார்வதி, சிவபெருமானிடம் அன்பு கொண்டு அவரையே மணக்க விரும்பினாள். பெற்றோர் தடுத்தும் கேளாமல், இமய மலையில் கடுந்தவம் மேற்கொண்டாள். மகளது தவத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தான் இமவான்.
அம்பிகையை பிரிந்து சிவபெருமான் தனித்திருந்த இந்த நிலையில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய முனிவர்கள் திருக்கயிலை சென்று, ‘‘வேதத்தில் சில இடங்களில் உண்மைப் பொருள் யாதென்று தெளிய முடியவில்லை. சந்தேகங்கள் தீர்ந்து, நாங்கள் மெய்யுணர்வு பெற ஞான உபதேசம் புரிதல் வேண்டும்!’’ என்று சிவபெருமானை பணிந்து வேண்டினர்.
உடனே சிவபெருமான், ‘‘ஞானம் என்பது நூலிலும், சொல்லிலும் அடங்குவதன்று!’’ என்று கூறித் தம் வலக் கையை மார்பில் வைத்து, சுட்டு விரலைக் கட்டை விரலோடு சேர்த்து ஏனைய மூன்று விரல்களையும் ஒருங்கே நிறுத்தி, மோன(சின்) முத்திரைக் காட்டி ஒரு கணப் பொழுது நேரம் செயல் ஏதுமின்றி யோக மூர்த்தியாக- தட்சிணாமூர்த்தியாக வீற்றிருந்தார். பெருமானது ஒரு கண நேரம், ஏனைய உயிர்களுக்கு பல ஊழிக் காலமாக நீண்டது. இறை வன், இறைவியைப் பிரிந்து யோக நிலையில், தட்சிணா மூர்த்தியாக அமர்ந்ததால், உயிர்களெல்லாம் போக நுகர்ச்சியற்றுச் செயலிழந்தன.
இந்த நிலையில் சூரபத்மனால் பெருந்துன்பமும், தொல்லைகளும் அடைந்த தேவர்களும், முனிவர்களும் செய்வதறியாது திகைத்தனர். சிவ-பார்வதி திருமணம் நிகழ்ந்து ஒரு குமாரன் தோன்றினால்தான் சூரபத்மனை அழிக்க முடியும்.
யோகியான இறைவன் போகியாக வேண்டும்! அவரின் மனம் உமையம்மையின்பாற் செல்ல வேண் டும்! ஆம், அவருக்குக் காமம் வர வேண்டும்! என்ன செய்வது? தேவர்கள் ஒன்று கூடி பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். உடனே காமதேவனை அழைத்த பிரம்மன், ‘‘நீ கயிலைக்குச் சென்று, சிவபெருமான் மீது மலரம்புகளை ஏவி மயக்கி, அவரை எப்படியாவது யோக நிலையில் இருந்து நீங்குமாறு செய்!’’ என்று பணித்தார். அதைக் கேட்டு காமதேவன் அதிர்ந்தான். பயந்து மறுத்தான். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், ‘‘எனது கட்டளையை மறுத்தால், உன்னைச் சபிப்பேன்!’’ என்று அச்சுறுத்தினார். ‘பிரம்ம தேவனால் சாபமுற்று அழிவதை விட, சிவபெருமான் மீது மலர்க் கணை ஏவி மாள்வதே உயர்வு!’ என்று காமன் துணிந்தான்.
கிளியை வாகனமாகக் கொண்டு, தென்றல் தேர் ஏறி, கரும்பு வில் ஏந்தி, மீன் கொடிப் பிடித்து, குயிலும், கடலும் முரசுகளாக ஒலிக்க, ரதிதேவியுடன் திருக்கயிலையை அடைந்தான் காமதேவன். மிகுந்த அச்சத்துடன் சிவபிரான் மீது மலர்க் கணைகளை ஏவினான். பெருமான் தமது நெற்றிக் கண் ணைத் திறந்து காமனை உற்று நோக்க... காமதேவன் எரிந்து சாம்பலானான். கணவன் இறந்ததைக் கண்ட ரதிதேவி கதறினாள். அவள் மேல் இரக்கம் கொண்ட ஈசன், அருவமான (அனங்கன்) நிலையில் தனது தொழிலைச் செய்யுமாறு மன்மதனைப் பணித்தார் (ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி, ‘கிருஷ்ணாவதாரத்தில், அவரின் மகன் பிரத்யும்னனாக காமன் பிறப்பான்’ என்று சிவபெருமான் அருளியதாக வடமொழிப் புராணம் கூறுகிறது.) மன்மத பாணம் மகாதேவனை மயக்கி விடவில்லை பார்வதியின் தவமே இறைவனது மோனம் கலையக் காரணமாயிற்று. பார்வதி, தம் தவத்தாலேயே பரமசிவனை அடையப் பெற்றார் என்கிறது குமார சம்பவம்.
சிவபெருமான் உமையை மணந்து அனைவருக்கும் அருள் புரிந்தார். எந்த நெற்றிக் கண்ணிலிருந்து காமனை எரித்த நெருப்பு தோன்றியதோ, அதே நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றி, அறுமுகச் செவ்வேளாகி அசுரர்களை அழித்து அருள் புரிந்ததை கந்த புராணம் விவரிக்கிறது.

No comments:

Post a Comment