Saturday, 9 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 13


பிட்சாடனர் 
சி வபெருமானுக்கு, தியாகராஜன் என்றும் பெயர் உண்டு. அவரது அருளாடல்கள், உயிர்களிடம் அவர் கொண்ட கருணை யைப் புலப்படுத்துகின்றன. அவற்றுள் ஒன்று பிட்சாடன மூர்த்தம். இறைவன் அன்பைப் பிச்சை ஏற்கிறார். நம் இதயக் குகையைத் தூய்மை யாக்கி, நமது துன்பப் பொதிகளையும், வினைச் சுமைகளையும் தான் ஏற்று, தனது அருளைச் சொரிய நம்மிடம் வருகிறார்.
சனாதன தர்மத்தின் அடிப்படை, ஆன்மாக்கள் ஞானம் பெற்று, பரப் பிரம்மத்துடன் ஒன்றிக் கலப்பதே. ஞான யாத்திரை செய்யும் சாதகன் ஒருவன் ஆங்காங்குள்ள அறிஞர்க ளைச் சந்தித்துத் தனது பேரறிவை வளர்த்தபடி, பயணத்தின்போது பிச்சை எடுத்து உண்பது சிறப்பாகவும் கருதப்பட்டது. ஆதி சங்கரர் ஓர் எளிய அந்தணர் வீட்டில் பிச்சைக்குச் சென்றார். வீட்டில் வேறு எதுவும் இல்லாததால், அந்த வீட்டு அம்மையார் ஒரு நெல்லிக்கனியை இட, அதைக் கண்டு மகிழ்ந்த ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். உடனே மகா லட்சுமி அந்த வீட்டில் பொன்மழை பொழிவித்தாள்.
பிச்சை இடுவதால் இம்மையில் புகழும், மறுமையில் வீடுபேறும் அடைகி றோம். அழிந்து போகும் பொருள் சிறிதள வைப் பெற்றுக் கொண்டு அழியாப் புகழையும், வீடுபேற்றையும் நமக்குக் கொடுக்கிற இரவலர் களே வள்ளல்களாக விளங்குகின்றனர். திருவள்ளுவரும் ‘இரத்தலும் ஈதலே போலும்’ என்கிறார். கொடுத்தலும், பெறுதலும் செல்வத்துக்கும் மேற்பட்ட அறிவு, அருள் முதலியவற்றையும் உள்ளடக்கியன என்பதை உணர வேண்டும்.
‘எல்லா உலகங்களுக்கும் தலைவனான ஈசன், பிச்சை ஏற்பவர் வடிவத்தில் வருவது எதற்காக? இரவலர் தொழிலை மேற்கொண்டதால் அவருக்கு நாம் ஈயப்பெறும் வாய்ப்பை வழங்கி, அதன் மூலம் எட்டாத அவர் திருவடிகளைப் பிடித்துக் கொள்ளும்படி இன்னருள் புரிகிறார் இறை வன்!’ என்கிறார் திருமூலர்.
இறைவனைப் பொன்னாலும், மணி யாலும், பொருளாலும், மலராலும் திருப்தி செய்ய நாம் யார்? எல்லாமே அவர் கொடுத்தவைதானே! கொடுத்ததை அவர் என்றுமே திருப்பிக் கேட்பதில்லை. அப்படியானால், பிட்சாடன மூர்த்தியான இறைவன் நம்மிடம் கேட்பது என்ன? நமது உள்ளக் கமல மலரை அவனுக்கு அர்ப்பணிப்போம். நமது குற்றம் குறைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு நமக்கு அருள் செய்யும் பரமனின் தியாகம் எத்தகையது! பிட்சாடனக் கோலம் பற்றி திருமுறைகளில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிட்சாடனர் வடிவத்துக்குச் சுவையான புராணக் கதை ஒன்று உண்டு. தாருகாவனத்தில் முனிவர்கள் குடும்பத்தோடு கடும் தவம் புரிந்தனர். உண்மையான வழியை மறந்த அவர்களுக்கும் கருணை புரிய, பிட்சாடனராக வடிவெடுத்தார் ஈசன். ஆடையற்ற ஆண்டியாக, இறைவன் செல்கிறார். பிட்சாடனரின் அழகில் மனதைப் பறிகொடுத்த முனி பத்தினிகள், தம்மை மறந்து ஆடைகள் நெகிழ, அவர் பின்னே செல்கின்றனர். முனிவர்களிடையே மோகினி வடிவில் திருமால் தோன்றுகிறார். அந்த மோகினியின் அழகில் மூழ்கி, காம வயப்பட்டு, முனிவர்கள் தவச் சாலைகளை விட்டு, அவள் பின்னே செல்கின்றனர். தங்கள் மனைவியர் பிட்சாடனர் பின் செல்வதையும், தாங்கள் மோகினி பின் செல்வதையும் ஒரு கட்டத்தில் உணர்கின்றனர். தங்களது பிழைக்கு வருந்திய அவர்கள், பிட்சாடனரை தண்டிக்க எண்ணி அவரை அழிக்க ஆபிசார வேள்வி செய்தனர். அதனின்றும் எழுந்த சிங்கம், புலி, யானை, பாம்பு, முயலகன் முதலானவற்றை அவர் மீது ஏவினர். பிட்சாடனர் புன்னகைத்தார். ‘தங்கிய மாதவத்தின் தழல் வேள்வியினின்று எழுந்த சிங்கமும், நீள் புலியும் செழுமால் கரியோடு அலறப் பொங்கிய போர் புரிந்து பிளந்து ஈர்உரி போர்த்து’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியது போன்று அருளாடல் புரிகிறார். பாம்புகள் பரமனுக்கு அணிகலன்கள் ஆயின. விலங்கு களின் தோல்கள் ஆடையாயின. முயலகனோ அவர் திருவடியின் கீழ் மிதி பட்டு ஆணவம் அழிந்த தன்மையைக் காட்டி நிற்கிறான். இப்படிப்பட்ட பிட்சாடனர் கோலம் பற்றி கந்த புராணம், திருவிளையாடற் புராணம், காஞ்சிப் புராணம் ஆகியவை விளக்குகின்றன.
பிட்சாடனர், தென்னாட்டுக்கு உரிய சிறப்பு வடிவம். பொதுவாக அனைத்துச் சிவாலயங்களிலும் இந்த மூர்த்தி விளங் குவார்.அம்சுமத்பேதாகமம், காமிகாகமம், காரணாகமம், சில்பரத்னம் ஆகிய நூல்கள் இந்த வடிவை விளக்குகின்றன. இந்த வடிவத்தில் உமையம்மை இல்லை. பிச்சைப் பெருமான் இடக்காலை ஊன்றி, வலக்காலை வளைத்து நடந்து செல்கிறார். நான்கு கரங்கள் உடையவர். முன் வலக்கரத்தில் உள்ள அறுகம்புல்லால் மானை ஈர்த்தும் பின் இடக்கரங்கள் ஒன்றில் உடுக்கை ஏந்தியும், மற்றொன்றில் பாம்புடன் திரிசூலம் ஏந்தியும், முன் இடக்கரத்தில் கபாலம் கொண்டும் திகழ்கிறார். ஆடையாக பாம்பையே அரையில் அணிந்துள்ளார். நெற்றிப் பட்டமும், முக்கண்ணும் கொண்டு திகழ்கிறார். அவர் தலை ஜடாமண்டலத்துடனும் வலக் காலில் வீரக்கழலும் உள்ளன. பாதுகைகளாக விளங்கும் வேதங்கள். பிச்சைப் பாத்திரமான கபாலம் ஏந்திய கை, தொப்பூழ் (உந்தி) வரை நீண்டிருக்கும். இது கட்க முத்திரையில் உள்ளது. உடுக்கை கொண்ட வலக் கை, காது வரை நீண்டு ஓங்கி விளங்கும்.
பிட்சாடனர் திருவுருவம், ஐந்தொழிலை விளக்கு வது. உடுக்கை ஒலி- உலக உற்பத்தி; திரிசூலம்- அழித்தல்; மானுக்குப் புல் அளித்தல்- அருள் புரிதல்; குண்டோதரனை அடக்கி ஆளுதல்- மறைத்தல் தொழி லையும், கபாலம் ஏந்தி நிற்பது- காத்தல் தொழிலையும் உணர்த்துகிறது. இவர் அணிந்துள்ள பாம்புகள் யோக சாதனையாகவும், பாதச் சிலம்பு ஆகமங்களாகவும், பாதுகைகள் வேதங்களாகவும் உள்ளன.
சிவாலயங்களில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 8-ஆம் நாள் மாலையில் பிட்சாடனர் வலம் வருவார். மயிலை, சிதம்பரம், திருவண்ணாமலை மற்றும் சில தலங்களிலும் இதனைக் காணலாம். சில தலங்களில் பிட்சாடனருடன், மோகினியும் திருவீதி உலா வருவார். தில்லை, காஞ்சிபுரம், திருச் செங்காட்டங்குடி, திருவையாறு, திருவிடை மருதூர், திருவெண்காடு, கும்பகோணம், வழுவூர், பந்தநல்லூர், பிரம்மதேசம் ஆகிய தலங்களிலுள்ள பிட்சாடன மூர்த்தங்கள் கண்டு இன்புறத் தக்கன.
திருவெண்காடு அருகிலுள்ள மேலப் பெரும் பள்ளம் எனும் திருவலம்புரத்தில் வீணை ஏந்திய பிட்சாடனர் திருமேனி உள்ளது. இந்த வடிவை அப்பர் அடிகள் ‘வட்டணைநாதர்’ என்று திருத் தாண்டகத்தில் பாடுகிறார். ‘முறித்ததொரு தோல் உடுத்து முண்டஞ்சாத்தி முனி கணங்கள் புடைசூழ முற்றந்தோறும் தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார்’ என்று இந்த வடிவைப் போற்றுகிறார். வழுவூர், திருநின்றவூர் ஆகிய தலங்களில் உள்ள திருமாலின் மோகினி செப்புத் திருமேனிகள் குறிப்பிடத் தக்கவை. திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள பிட்சாண்டார் கோயிலில் உள்ள கருவறை கோட்டம் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய தலங்களில் கற்சிலை வடிவில் பிட்சாடனர் காட்சி அளிக்கிறார். திருச்செங்காட்டங்குடி, சிதம்பரம் முதலிய தலங்களில் பிட்சாடனருக்குத் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment