Saturday, 9 September 2017

சதுரகிரி யாத்திரை ! - 14



சிருங்கேரி ஸ்வாமிகள் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார். சதுரகிரியைப் பற்றி எதுவுமே கேள்விப்பட்டிராத அவருக்கு, நள்ளிரவு வேளையில் ஜோதி சொரூபமாக மகாலிங்கம் தரிசனம் தந்து அவரை ஆட்கொண்டான். அருளாசி புரிந்து விட்டான். தவிர, தன் சந்நிதி அருகே ஸ்வாமிகளையும் அவரது சிஷ்யகோடிகளையும் வரவழைத்தும் விட்டான். இதோ, மலைக்கு மேலே சிருங்கேரி ஸ்வாமிகளின் யாத்திரை துவங்கிவிட்டது.
ஸ்வாமிகளின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாத சீடர்களும் மலைவாசிகளும் அவர் பின்னே மிகுந்த சிரமப்பட்டு நடையைத் தொடர்ந்தனர். காணக் கிடைக்காத இறை காட்சியை, முந்தின தினம் நள்ளிரவில் கண்ட ஸ்வாமிகளுக்கு இறைவனே ஒரு தெம்பைக் கொடுத்து, நடக்க வைத்து விட்டான் போலும். வத்திராயிருப்பைச் சேர்ந்த ஊர்ப் பிரமுகர்கள் சிலரும் சிருங்கேரி ஸ்வாமிகளின் சதுரகிரி யாத்திரை குறித்த தகவல் கேள்விப்பட்டு, அவசரம் அவசரமாகக் கிளம்பி வந்து, ஸ்வாமிகளின் பின்னே மிகுந்த பவ்யத்துடன் நடக்க ஆரம்பித்தனர்.
கரடுமுரடான பாறைகள் நிறைந்த பாதையில் பயணித்த பக்தர்களின் நாவில் இருந்து 'ஓம் நம சிவாய' எனும் நாம கோஷம் கிளம்பி, மலைகளில் பட்டு எதிரொலித்தது. இரைச்சலோடு கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள், அபார வேகத்துடன் பாயும் ஆறுகள், துள்ளிக் குதித்தோடும் மான்கள், பறவைகளின் ராகங்கள், மிருகங்கள் எழுப்பும் விதம்விதமான சத்தங்கள்... இவற்றை எல்லாம் கடந்து பகல் பதினோரு மணி வாக்கில், சதுரகிரியின் உச்சியை அடைந்தார் சிருங்கேரி ஸ்வாமிகள். அவர் முகத்தில் கொஞ்சம் கூட அலுப்போ, சலிப்போ தெரியவில்லை. புறப்படும்போது அவரது முகம் எப்படிப் பிரகாசமாக இருந்ததோ, அதே பிரகாசம் இப்போதும் அவர் முகத்தில் இருந்தது.
வெம்மையைக் கக்காத வெயில். காற்றில் குளுமையைக் கலந்து வீசும் மரங்கள். ஆள் அரவமே இல்லாத அற்புதமான மலைப் பகுதி. மனிதர்களின் வாழ்க்கையில் மாறுபாடுகளை ஏற்படுத்தும் மூலிகைகளின் சுகந்தமான வாசம்... இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையைப் பார்த்ததும் அதில் லயிக்க ஆரம்பித்தார் சிருங்கேரி ஸ்வாமிகள். இறைவன், தான் குடிகொள்ள தேர்ந்தெடுத்திருக்கும் இந்த அதிசய மலையையும் அதன் அழகையும் கண்டு வியந்தார். சதுரகிரியின் புராணமும், மகாலிங்கம் அங்கு வந்து குடி கொண்ட கதையும் தகுந்த ஆசாமிகளால் ஸ்வாமிகளுக்கு விரி வாக எடுத்துரைக்கப்பட்டது.
பிலாவடி கருப்பரின் தரிசனத்துக் குப் பிறகு உச்சி வேளையில் சுந்தரமகாலிங்கம் சந்நிதியை அடைந்தார் சிருங் கேரி ஸ்வாமிகள். அப்போது நண்பகல் சுமார் பன்னிரண்டு மணி இருக்கும். எண்ணற்ற சித்தர் பெருமக்களால் வணங்கிப் போற்றப்பட்ட சுந்தர மகாலிங்கத்தையும், அவருக்கும் முன்னே குடி கொண்ட சுந்தரமூர்த்தியையும், சிவநாமம் ஜபித்து வணங்கினார் சிருங்கேரி மடத்து ஸ்வாமிகள். சுந்தர மகாலிங்கம் சந்நிதிக்குப் பின்னால் இருக்கும் அம் மன் மண்டபத்தில் அமர்ந்து நெடுநேரம் ஜபத்தில் இருந்தார். தனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஓர் இடம் போல் ஸ்வாமிகள் அங்கே நடமாடியது கண்டு, அனைவரும் அதிசயித்தனர்.
மடாதிபதியின் மதிய வேளை பூஜை நேரம் வந்தது. ஸ்வாமிகளுடன் வந்த சீடர்கள், தாங்கள் கொண்டு வந்த பூஜா விக்கிரகங்களையும், பூஜைக்குத் தேவையான பொருட்களையும், சுந்தர மகாலிங்கம் சந்நிதி முன்னால் எடுத்து வைத்தனர். சிருங்கேரியில் உறையும் அன்னையாம் சாரதாம்பாளின் சிறிய விக்கிரகத்துக்கு அன்று சுந்தர மகாலிங்கத்தின் முன்னிலையில் அபிஷேக- ஆராதனைகள் நடந்தன. சிருங்கேரி மடத்தின் ஆத்மார்த்த பக்தர்களாக விளங்கிய ஊர்ப் பிரமுகர்கள் சிலர், தங்கள் கண்ணெதிரில் சாரதாம்பாளுக்கு ஸ்வாமிகள் செய்யும் அபிஷேகத்தைக் கண்டு அவர்கள் அடைந்த சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை.
மாலை மணி சுமார் ஐந்து இருக்கும். சந்தன மகாலிங்கத்தை தரிசிக்க எண்ணம் கொண்டார். சுந்தர மகாலிங்கம் சந்நிதியில் இருந்து புறப்பட்டார். கீழே இறங்க ஆரம்பித்தார். சந்தன மகாலிங்கம் குடி கொண்டிருக்கும் சந்நிதி நோக்கித் தனிமையில் கிளம்பினார் சிருங்கேரி ஸ்வாமிகள். அவரது நோக்கத்தைப் புரிந்து கொண்ட அன்பர்கள் எவரும் அவரைப் பின்தொடர்ந்து செல்லவில்லை. சுந்தரம் என்கிற மலைவாசி ஒருவர் மட்டும் தன்னுடன் வருவதற்கு அனுமதித்தார் ஸ்வாமிகள். சதுரகிரியின் அனைத்து மூலை முடுக்குகளும் சுந்தரத்துக்கு அத்துப்படி. பல காலமாக அங்கே வசித்து வருகிற துறவிகள் உட்பட அனைவரையும் சுந்தரம் நன்கறிவான். எனவேதான் ஸ்வாமிகளுடன் செல்லும் பாக்கியம் சுந்தரத்துக்குக் கிடைத்தது. சிருங்கேரி பீடாதிபதி முன்னே நடக்க... சுந்தரம் பின்னே நடந்தான்.
சிறிய மலை ஏறி, சந்தன மகாலிங்கம் சந்நிதியை அடைந்தனர். சுயம்பு வடிவான அந்த லிங்கத் திரு மேனியைத் தன் கண்களுக்குள் வாங்கி, ஆனந்த மாக தரிசனம் செய்தார் ஸ்வாமிகள். சுந்தரத்தை யும் ஸ்வாமிகளையும் தவிர, வேறு எவருமே அந்தப் பிரதேசத்தில் இல்லை. உள்ளத்தையும் உணர்வு களையும் கொள்ளை கொள்ளும் அமைதி...
மரங்கள் அசைந்தன; உராய்வுகள் இல்லை. பட்சிகள் பறந்தன; கூக்குரல்கள் இல்லை. 'சற்று நேரம் நீ இங்கேயே இருப்பா!' என்று சைகை மூலம் சுந்தரத்துக்கு உத்தரவிட்ட பின், சந்தன மகாலிங்கத்தின் அருகே உள்ள செங்குத்தான மலையின் மீது, மிகுந்த பழக்கப்பட்ட ஆசாமி மாதிரி விறுவிறுவென்று ஏறினார் ஸ்வாமிகள். அண்ணாந்து பார்த்த சுந்தரம், வெலவெலத்து விட் டான். ஏனென்றால், தன் வாழ்நாளில் இந்த மாதிரி ஒரு வேகத்தில் எவரும் ஏறி, அவன் பார்த்தது இல்லை. அதனால்தான் அதிசயித்தான். இதைப் பார்த்த பின் அவனுக்குள் ஓர் ஆவல் எழுந்தது- 'மேலே ஏறிப் போன ஸ்வாமிகள் அங்கே என்ன பண்ணுவாரு?' இருந்தாலும் தனது ஆவலை அடக்கிக் கொண்டான்.
'இங்கேயே இருப்பா' என்று ஸ்வாமிகள் உத்தரவு போட்டு விட்டுப் போயிருக்கிறாரே! மகான்களின் வார்த்தைகளை மீறலாமா?
ஏறிப் போய், அரை மணி நேரம் கடந்திருக்கும். இன்னும் அவர் திரும்பவில்லை. அதற்கு மேல் சுந்தரத்தால் ஆவலைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. 'மலைக்கு மேலே ஏறிப் போன ஸ்வாமி அங்கே என்னதான் செஞ்சுக்கிட்டு இருப்பாரு?' - ஸ்வாமிகளுக்குப் பாதுகாப்பாக வந்தவன் என்ப தால் பொறுப்பு வேறு அவனுக்கு இருந்தது.
ஒரு கட்டத்தில் அவனே முடிவெடுத்தான். அருகில் உள்ள ஒரு பிரமாண்ட மரத்தின் மேல் கிடுகிடுவென்று ஏறினான். சிருங்கேரி ஸ்வாமிகள் ஏறிய மலைப் பகுதி, தன் கண்களுக்குப் புலப்படும் உயரத்துக்கு ஏறி விட்டான். ஸ்வாமிகள் எங்கே இருக்கிறார் என்று தன் பார்வையால் துழாவினான். அந்த மலையின் சிறிய ஓர் இறக்கத்தில் - சமதளப் பகுதி ஒன்றில் சிருங்கேரி ஸ்வாமிகள் சம்மணம் இட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தான் சுந்தரம். அவருக்கு எதிரே - காவி உடை தரித்த முனிவர் போன்ற தோற்றத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். ஜடாமுடியுடனும் கண்களில் ஒளியுடனும் கூடிய அந்த முனிவரிடம் ஸ்வாமிகள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்.
பிரமித்துப் போய் விட்டான் சுந்தரம். 'ஸ்வாமிகள் தனியாகத்தான் போனார்... பிறகு, இந்த இன்னொரு ஆசாமி எப்படி இங்கே வந்தார்?' சிருங்கேரி ஸ்வாமிகளுடன் பேசிக் கொண்டிருந்த அந்த முனி வரை இதற்கு முன் சதுரகிரிப் பகுதியில் எங்குமே இவன் பார்த்ததில்லை. இந்தக் காட்சியை வெகு நேரத்துக்குப் பார்த்துக் கொண்டிருக்க முடிய வில்லை அவனால். ஒரு கட்டத்தில் அவனது கண்கள் செருக ஆரம்பித்தன. மரத்தில் இருந்து பிடிமானம் நழுவ ஆரம்பித்தது. தன்னிலையை இழப்பதற்கு முன் விறுவிறுவென மரத்தில் இருந்து கீழே இறங்கினான். ரொம்ப ஓய்ச்சலாக இருக்கவே, மரத்தின் அடியில் அமர்ந்தான்.
சற்று நேரம் கழித்து, தான் ஏறிய மலை உச்சியில் இருந்து இறங்கி வந்தார் ஸ்வாமிகள். சந்தன மகாலிங்கத்தை மீண்டும் ஒரு முறை தரிசித்தவர், சுந்தரத்துக்குக் கண்ஜாடை காட்டி விட்டு, புறப்பட்ட இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சுந்தரமும் பின்தொடர்ந்தான்.
அதன் பின், சதுரகிரியில் இருந்து கீழே இறங்கினார் சிருங்கேரி ஸ்வாமிகள். வத்திராயிருப்பை அடைந்து, தனது பயணத்தைத் தொடங்கினார்.
சதுரகிரியின் உச்சியில் தான் கண்ட காட்சி பற்றி எவரிடமும் மூச்சு விடவில்லை சுந்தரம். ஆனாலும், ஒரு நாள் ஆர்வ மிகுதியின் காரணமாக சதுரகிரியில் வசித்து வரும்- தனக்குப் பழக்கப்பட்ட ஒரு துறவியிடம், சிருங்கேரி ஸ்வாமிகள் முனிவருடன் மலை உச்சியில் பேசிக் கொண்டிருந்த விதத்தை விலாவாரியாக - விவரித்துச் சொல்லி விட்டான்.
அதைக் கேட்ட அந்தத் துறவியின் முகத்தில் பரவசம். ''யப்பா... சிருங்கேரி ஸ்வாமிகள் அன்று பேசிக் கொண்டிருந்தது ஒரு மகா சித்த புருஷருடன். எவர் கண்களுக்கும் தரிசனம் தராத சித்த புருஷர் அன்றைய தினம் சிருங்கேரி ஸ்வாமிகளுக்கு தரிசனம் தந்திருக்கிறார். ஆன்ம பலத்தை அருளி இருக்கிறார். சிருங்கேரி ஸ்வாமிகள் போன்ற மகான்கள், அடிக்கடி இது போன்ற இடங்களுக்கு வந்து சித்த புருஷர்களின் ஆசியைப் பெற்று, அவர்களுடன் உரையாடி விட்டுச் செல்வது வழக்கம். இதைப் போன்ற பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடாது.
மலைக்கு மேல் நடந்த காட்சிகளை சாமான்யனான நீயெல்லாம் பார்க்கக் கூடாது என்பதால்தான் உன்னைக் கீழேயே இருக்கச் சொல்லி விட்டு, அவர் மட்டும் மேலே ஏறிப் போய் இருக்கிறார். என்னிடம் சொன்ன மாதிரி வேறு எவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருக்காதே. இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்பது உன் பாக்கியம். பார்த்திருக்கிறாய். அதை அனுபவித்திருக்கிறாய். சிருங்கேரி ஸ்வாமிகளின் அருளாசி உனக்கு என்றென்றும் உண்டு'' என்று சொல்லி விட்டு போனாராம்.
ஆக, எவருடைய கண்களுக்கும் புலப்படாத ஒரு சித்தருடன் பேசி விட்டு, அந்த மலையில் இருந்து அன்றைக்கு இறங்கி இருக்கிறார் சிருங்கேரி ஸ்வாமிகள் என்ற விஷயம் பின்னாளில் பலருக்கும் தெரிய வந்தது. அதன் பின், இந்த மலையின் மகத்துவம் மேலும் பரவியது.
சில ஆண்டுகளுக்கு முன் - அதாவது சதுரகிரி அதிகம் அறியப்படாத காலகட்டத்தில் அங்கே வசித்து வந்தவர் முனியாண்டி சாமி என்பவர். பல ஸித்து வேலைகளைச் செய்தவர். சுந்தர மகாலிங்கத்துடன் நேருக்கு நேர் பேசியவர். மலைக்கு மேல் எப்போதாவது, எவராவது வந்து மகாலிங்கத்துக்கு படையல் செய்த பின், அந்தப் பிரசாதத்தை வாங்கி உண்பதில் ஆர்வமாக இருப்பார். கையெல்லாம் மண்ணும் குப்பையுமாக இருக்கும். அந்தக் கைகளைக் கழுவாமலே, பிறர் தரும் பிரசாதத்தை தேவார்மிர்தமாக வாங்கிக் கொள்வார். அதை அப்படியே வாயில் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து உண்பார். தற்போது இவர் இல்லை.
இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பேரையூருக்குப் பக்கத்தில் உள்ள குன்னத்தூரில். ஆரம்ப காலத்தில் அங்கே மாடு மேய்த்து வந்தார். அப்போதே ஸித்து வேலைகள் இவரை ஆட்கொண்டன. மாடு மேய்த்துக் கொண்டு இருக்கும்போதே திடீரென சிரிப்பார். குலவை போடுவார். கள்ளிச் செடி மேல் கம்பீரமாக உட்காருவார். இவரது சக்தி தெரிந்து செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் குறி கேட்க ஆட்கள் தேடி வருவார்கள்.
தன்னிடம் குறி கேட்க வந்திருக்கும் ஒவ்வொருவரையும் பெயர் மற்றும் ஊர் சொல்லி அழைப்பார். ஒரு முறை வெற்றிலை- பாக்கு, சூடத்துடன் தன்னிடம் குறி கேட்க வந்த ஆசாமியிடம், ''ரொம்ப பசியா இருக்கே போலிருக்கே?'' என்றவர், தன் வலக் கையை மேலே உயர்த்தி, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்றவற்றை வரவழைத்துக் கொடுத்து, ''முதல்ல சாப்பிடு!'' என்றாராம். வந்திருந்த பக்தர்கள் அனைவரும் இதைப் பார்த்து மெய் சிலிர்ப்பார்கள். சதுரகிரிக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

- (அதிசயங்கள் தொடரும்)

No comments:

Post a Comment