மானுட பூஜையை விரும்பிய சுந்தர மகாலிங்கம் சுமார் 250 வருடங்களுக்கு முன், சதுரகிரியில் இருந்து, தானே இறங்கிப் போய் தன்னை பூஜிக்க ஒரு பக்தரை அழைத்து வந்தார். சுந்தர மகாலிங்கத்தை பூஜிக்கும் பேறு பெற்ற முதல் மனிதர் அவர்தான். சதுரகிரியின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்டிருக்கும் வயதான அன்பர் ஒருவர், சுவாரஸ்யமான அந்த நிகழ்வை நமக்குச் சொன்னார். அவர் சொன்னது வருமாறு
சதுரகிரியில் இருந்து துறவி ரூபத்தில் கீழே இறங்கிய சுந்தர மகாலிங்கம், தன்னை பூஜிக்க இருக்கும் அன்பர் எங்கே இருக்கிறார் என்று ஒவ்வொரு ஊராகத் தேடிச் சென்றார்.
'பூஜை செய்ய இவர் தகுதியானவர்' என்று தான் கருதும் நபர்களுக்கு ஓரிரு தேர்வு வைத்தார். அவர்கள் அதில் தேர்வாக வில்லை என்றால், அடுத்த பக்தரைத் தேடி நடையைக் கட்ட ஆரம்பித்தார் துறவி (சுந்தர மகாலிங்கம்). இவருடைய பார்வையில் எவரும் தோதுப்பட்டவராக அமையவில்லை.
ஊர் ஊராகத் தேடி நடந்தவர், கடைசியில் காமாட்சிதேவி கோயில் கொண்டுள்ள காஞ்சி புரம் வந்தார்.
அங்கு ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டி ருக்கும்போது, திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அமர்ந்து சிறுவன் ஒருவன் பாடம் படிப்பதைப் பார்த்தார். அப்பழுக்கற்ற பால் போன்ற முகம். அவனது நெற்றியிலும் உடலிலும் திருநீறு துலங்கியது. தும்பைப்பூவென வெளுத்த வேஷ்டியும் அங்கவஸ்திரமும் அணிந்திருந்தான்.
இந்தச் சிறுவனைக் கண்டவுடன் 'இவன்தான் தன்னை பூஜிக்க இருக்கும் முதல் மனிதன்' என்பதைத் தீர்மானித்த சுந்தர மகாலிங்கம் (துறவி), அவன் அருகே சென்று அமர்ந்தார்.
 அந்த சிறுவனின் அணுகுமுறையும் அமைதியான குணமும் கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். அவனது பெற்றோரிடம் முறையான அனுமதி பெற்றுக் கொண்டு, அவனைக் கூட்டிக் கொண்டு சதுரகிரிக்குப் புறப்பட்டார் துறவி.
திரும்பும் வழியில், பேரையூருக்கு அருகில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கூவளப்புரம் என்கிற கிராமத்தை அடைந்தார் துறவி. அப்போது சிறுவன், 'பசிக்குது. சாப்பிட ஏதாவது வேண்டும்' என்று சொல்ல... அங்கே வயல் வேலைகளில் முனைப்பாக இருந்த ரெட்டியார் ஒருவரை அணுகினார் துறவி. 'என்ன வேணும் சாமீ?' என்று பயபக்தியுடன் திரும்பிய ரெட்டியாரிடம், 'பையனுக்குப் பசிக்குது. சாப்பிட ஏதாவது கொடப்பா' என்றார் துறவி. 'எங்கிட்ட கம்பங்கஞ்சிதான் சாமி இருக்கு. புள்ளை சாப்பிடுமானு கேளுங்க. சொம்புல தர்றேன்' என்று ரெட்டியார் சொல்ல... மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக் கொண்டனர் இருவரும்.
அதன் பின் துறவியானவர், ரெட்டியாரிடம் 'வர்ற ஆடி அமாவாசை அன்னிக்கு இங்கே அன்னதானம் பண்ணு. இனிமேல் தினமும் உன் கைங்கர்யத்துல இந்த ஊர்ல அன்னதானம் தொடர்ந்து நடக்கணும். தவிச்ச வாய்க்கு ஏதோ உன்னால முடிஞ்ச தாகசாந்தி பண்ணு' என்று சொன்னார்.
துறவி சொன்ன வார்த்தைகளைக் கேட்ட ரெட்டியாரின் முகத்தில் சந்தோஷம் தலைதூக்கினாலும் கவலையும் தொற்றிக் கொண்டது. 'ஐயா துறவியாரே... உங்க வார்த்தைகளைக் கேட்க எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. அன்னதானம் செய்ய எனக்கு விருப்பம்தான். ஆனா, அதுக்கேத்த பெரிய வசதி எனக்கு இல்லீங்களே' என்றார் ரெட்டியார். அதற்கு, 'நாளைக்கே உனக்கு வசதி வரும். அன்னதானம் செய்வதற்கான முயற்சிகளைத் துவக்குவாய்' என்று சொல்லி விட்டு, சிறுவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றார் துறவி. மறுநாள் தனக்கு எப்படி வசதி திடீரென்று வந்து சேரும் என்ற சிந்தனையுடனே அன்றிரவு ரெட்டியார் உறங்கிப் போனார்.
துறவி சொன்னபடி அடுத்த நாள் அதிகாலை வேளையில், ரெட்டியாருக்கு ஓர் அதிர்ஷ்டப் புதையல் கிடைத்தது. தனது வயலில் கலப்பை கொண்டு உழும்போது ஏர்முனை தட்டி 'ணங் ணங்' என்ற சத்தம் கேட்டது. உழுவதை நிறுத்தி விட்டு, அந்த இடத்தைத் தோண்டிய ரெட்டியாருக்கு ஆச்சரியம் பல மடங்கு ஆனது. ஒரு மண்பானையில் ஆயிரக்கணக்கான பொற்காசுகள் ஜொலித்துக் கொண்டிருந்தன.
துறவியாக வந்த சுந்தர மகாலிங்கத்தின் வாக்கு பலித்தது. ரெட்டியார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. விலை மதிப்பில்லா அந்தப் பொற்காசுகளை விற்று, கூவளப்புரத்தில் அன்னதானத்துக்கென்று ஒரு மடம் கட்டினார். துறவி சொன்னபடியே அடுத்து வந்த ஆடி அமாவாசை தினத்தன்று அன்னதானத்தைத் தொடங்கினார் ரெட்டியார்.
 'கூவளப்புரம் மடம்' என்றே அழைக்கப்பட்ட அந்த மடத்தில், தினமும் அன்னதானம் விமரிசையாக நடந்தது. அங்குள்ள அடுப்புகள் 'அணையா அடுப்புகள்' என்ற பெருமையைப் பெற்றுத் திகழ்ந்தன. அந்த அளவுக்கு எந்நேரமும் அங்கே அன்னதானம் நடந்து கொண்டே இருந்தது. ஆனால், இப்போது அந்த அளவுக்கு இல்லையாம். சரி, கூவளப்புரத்தில் இருந்து சதுரகிரிக்குச் செல்வோம்.
சிறுவனுடன் சதுரகிரியை அடைந்த துறவி, ஆலயத்துக்குள் அவனைக் கூட்டிச் சென்றார்.
'இனிமேல் தினந்தோறும் நீதான் இந்த லிங்கத் திருமேனிக்கு பூஜைகள் நடத்த வேண்டும். இதற்காகத் தான் உன்னைக் கூட்டி வந்துள்ளேன்' என்று சொன்ன துறவி, கருவறையை நோக்கி மெள்ள நடந்தார். பச்சைமாலிடம் அடி வாங்கியதால் சற்றே சாய்ந்த நிலையில் காட்சி தரும் அந்த சுந்தர மகாலிங்கத்தின் திருமேனி அருகே சென்றவுடன், துறவி சட்டென்று மறைந்து போனார்.
அந்த இளம் வயதிலேயே, இறைவனின் கைப்பிடித்துக் கொண்டு அவருடன் வரும் பேறு பெற்ற அந்தச் சிறுவன், பின்னாளில் கணபதி ஸ்வாமிகள் என்று அழைக்கப் பட்டான்.
சதுரகிரியிலேயே தங்கி தினமும் சுந்தர மகாலிங்கத்துக்கு பூஜைகள் செய்து வரலானார் கணபதி ஸ்வாமிகள். பகவானின் அன்புக்குப் பாத்திரமான இந்த ஸ்வாமிகள், சதிகாரர்கள் சிலரின் வஞ்சகத்தால் ஒரு முறை நீதிமன்றத்தின் படிகளை மிதிக்கும்படி நேரிட்டது.
அப்போது, தான் யார் என்பதை, சதிகாரர்களுக்கு மட்டுமல்ல... நீதிபதிக் கும் உணர்த்தினார் கணபதி ஸ்வாமி கள். நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நிகழ்ந்த ஒரு ஸித்து வேலையால், ஸ்வாமிகளின் நேர்மையையும் பக்தியையும் புரிந்து கொண்ட நீதிபதி, அவரை வழக்கில் இருந்து விடுவித்தாராம்.
தனது அந்திமக் காலம் நெருங்குவதை உணர்ந்த கணபதி ஸ்வாமிகள், புனிதமான மலையில், தான் சமாதி ஆகக் கூடாது என்று தீர்மானித்துக் கீழே இறங்கினார். தம்பிபட்டி என்கிற கிராமத்தில் சமாதி அடைந்தார்.
அதன் மேல் ஒரு லிங்கத் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஸ்வாமிகள் சமாதி ஆன தினத்தன்று அபிஷேகமும் வழிபாடுகளும் இங்கு அமர்க்களப்படும். சதுரகிரியில் சுந்தர மகாலிங்கத்துக்குச் சார்த்தப்பட்ட பூமாலை, அன்று இவரின் சமாதிக்கு வந்து சேரும்.
''ஆனால், இன்று இந்த சமாதியில் வழிபாடுகள் குறைந்து போய் விட்டன. இறைவனே வந்து கூட்டிப் போன ஒரு மகானின் சமாதி, அன்றாடம் வழிபடும் நிலைக்கு வர வேண்டும்'' என்று நம்மிடம் வருத்தப்பட்டார் அன்பர் ஒருவர்.
காஞ்சி மட்டுமல்ல... சிருங்கேரிக்கும் சதுரகிரி சுந்தர மகாலிங்கத்துக்கும் தொடர்பு உண்டு. இனி, சொல்லப் போகும் அந்தக் கதை நடந்து சுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் இருக்கும்.
வத்திராயிருப்பில் ஹரிஹர ஐயர் என்கிற வக்கீல் வசித்து வந்தார். மதுரை நீதிமன்றத்தில் 'ப்ராக்டீஸ்' செய்து வந்தார், சிருங்கேரி மடத்தின் பக்தர். அப்போது பீடாதிபதியாக இருந்த சிருங்கேரி மடத்து ஸ்வாமிகளை பாத பூஜை செய்து வழிபடுவதற்காக தன் இல்லத்துக்கு அழைத்திருந்தார் ஹரிஹரன்.
உன்னத பக்தரான ஹரிஹரனின் அழைப்பை ஏற்றுத் தன் சீடர்களுடன் வத்திராயிருப்பு வந்தார் சிருங்கேரி ஸ்வாமிகள். ஹரிஹரனின் இல்லத்திலேயே தங்கினார் ஸ்வாமிகள்.
பாத பூஜை வழிபாடு, ஆசி வழங்குதல் என்று அந்த முதல் தினம் மிகுந்த கோலாகலமாக இருந்தது. ஸ்வாமிகள் வரவை அறிந்து, அக்கம்பக்கத்து ஊர்க்காரர்கள் அனைவரும் பெருமளவில் திரண்டனர்.
பக்தர்களின் அன்பான கோரிக்கையை ஏற்று ஸ்வாமிகள் அங்கேயே ஓரிரு நாட்கள் தங்கிச் செல்வது என்றும் முடிவாயிற்று. அதற்குரிய ஏற்பாடுகள் துரித கதியில் நடந்தன.
அன்று நள்ளிரவு... அசதியின் காரணமாக சீடர்கள் உட்பட ஏனையோர் அனைவரும் நன்றாக உறங்கி விட்டனர். தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஓர் அறையில் ஸ்வாமிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தன்னை உலுக்கிப் போட்ட மாதிரி ஓர் உணர்வு ஏற்பட, திடுக்கிட்டு மெள்ள எழுந்தார் ஸ்வாமிகள். நடந்து வெளியே வந்தார்.
ஊரே உறங்கிக் கிடந்தது. சிற்சில இடங்களில் ஓரிரு தெருவிளக்குகளைத் தவிர, எங்கும் கும்மிருட்டு. சற்றுத் தொலைவில் சதுரகிரி அமைந்துள்ள பகுதியை இருட்டில் இன்னதென்று புரியாமல் ஆழ்ந்து நோக்கினார்.
இதை அடுத்து நிகழ்ந்த செயல்களை இறைவனின் திருவிளையாடல் என்றேதான் சொல்ல வேண்டும். அவருடைய மனதுக்குள் சிற்சில காட்சிகள் ஓடின. அந்த வேளையில் மலையின் உச்சியில் இருந்து, ஜோதி சொரூபமாக பீடாதிபதிக்கு தரிசனம் தந்தார் மகாலிங்க ஸ்வாமி. கண்களை மூடி பரவசத்துடன் தரிசித்து, இன்பமுற்றார். திரும்பி உள்ளே நடந்தார்.
இதற்குள், ஸ்வாமிகள் நள்ளிரவில் எழுந்து எங்கோ வெளியே போன தகவல் அறிந்து அவரது சிஷ்யர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் உட்பட அனைவரும் பதற்றத்துடன் எழுந்து திரண்டு விட்டனர்.
அருகில் இருந்த ஊர்க்காரர்களிடம் ஸ்வாமிகள் அன்போடு கேட்டார் 'மலைக்கு மேலே ஏதோ ஒரு சேத்ரம் இருக்கிற மாதிரி தெரியறதே... என்ன சேத்ரம்?'
மலைக்கு மேலே மகாலிங்கம் குடி கொண்டிருக்கிறார் என்பதை அப்போது ஸ்வாமிகளிடம் சொன்னால், 'புறப்படுங்கள்' என்று தங்களையும் கூட்டிக் கொண்டு அந்த நள்ளிரவில் கிளம்பி விடுவார் என்று அலைச்சலுக்கு பயந்த ஊர்க்காரர்களும், சிருங்கேரி மடத்து முக்கியஸ்தர்களும் 'வேற ஒண்ணுமில்ல ஸ்வாமி... மகாலிங்கம்னு ஒரு சிவன் இருக்கார். அங்கெல்லாம் ஆடு, கோழி வெட்டுவாங்க... பலி பூஜை நடக்கும். தங்களைப் போன்ற ஆச்சாரமான ஸ்வாமிகளெல்லாம் அங்கே போகக் கூடாது. உள்ளே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் ஸ்வாமி' என்று தடுத்து, அவரை வணங்கினர்.
சதுரகிரியின் மேலே கண்களால் காட்சி கண்டவர் ஆயிற்றே அந்த சிருங்கேரி மகான்! இறைவனே தரிசனம் தந்து, குறிப்பு கொடுத்த பின்னும் அமைதி யாக இருப்பாரா? கூடி இருந்த பக்தர்களை ஆழ்ந்து நோக்கினார். 'நான் அங்கே போக வேண்டும். உடனே ஏற்பாடு செய்யுங்கள்!' என்றார் திடமாக. இதை அடுத்து ஏற்பாடுகள் மளமளவென்று துவங்கின.
விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுதில், சிருங்கேரி பீடாதிபதிகளின் சதுரகிரி யாத்திரை துவங்கியது. வத்திராயிருப்பில் இருந்து தனது காரில் பயணித்து, தாணிப்பாறையை அடைந்தார்.
பிறகு, மலைக்கு மேல் நடைபயணம் ஆரம்பமானது. ஸ்வாமிகளுக்குத் தேவையான பூஜைப் பொருட்கள் உட்பட அனைத்தையும் சுமந்தபடி சீடர்கள் பின்தொடர்ந்தனர். மலையின் மேலே ஸ்வாமிகள் படுவிரைவாக நடந்து செல்வதைப் பார்த்து உடன் வந்த மலைவாசிகள் வியந்தனர். அவரின் வேகத்துக்கு சீடர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. இறைவனின் சூட்சுமமான அழைப்பை ஏற்று, சதுரகிரியை நோக்கி தன் யாத்திரையைத் தொடங்கி இருந்தார் சிருங்கேரி ஸ்வாமிகள்.
|
No comments:
Post a Comment