திருமங்கலம்- டி. கல்லுப்பட்டி சாலையில் உள்ள டி. குன்னத்தூர் கிராமத்தைச் சார்ந்த ஒரு குக்கிராமம் கே. ரங்கபாளையம். இங்குதான் சித்த புருஷரான முனியாண்டி ஸ்வாமிகள் அவதரித்தார். தனது வாழ்நாளில் நினைத்தபோதெல்லாம் சதுரகிரிக்கு வந்து இறை இன்பத்தில் மூழ்கித் திளைப்பார் இவர். சித்து விளையாட்டுகளில் தேர்ந்தவர். நினைத்த இடத் துக்கு- நினைத்த மாத்திரத்தில்- அடுத்த கணமே போய்ச் சேரும் கலை இவருக்குக் கை வந்த ஒன்று.
'தொலைதூரப் பிரதேசங்களுக்கு ஆகாய மார்க்கமாக அடிக்கடி இவர் சென்று வருவார். எவரும் இதைப் பார்க்க முடியாது' என்கிறார்கள் இவரின் பக்தர்கள்.
ஒரு பரதேசியாக சதுரகிரியின் மூலை முடுக்கு களுக்கெல்லாம் சென்று, அங்குள்ள சித்தர்களை உளமார தரிசித்திருக்கிறார் முனியாண்டி ஸ்வாமிகள். சதுரகிரியின் குகைப் பகுதியில் அமானுஷ்யமாக இருக்கும் சித்த புருஷர்கள் நடத்தும் சத் சங்கக் கூட்டத்துக்கு இவர் அடிக்கடி சென்று வந்த தாக இவரின் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
முனியாண்டி ஸ்வாமிகளது பூர்வாசிரமப் பெயர் குமராண்டி. சுமார் 32 வருடங்கள் மட்டுமே இந்த நிலவுலகில் வசித்து, பக்தர்களுக்கு அருளியவர். தனது அந்திமக் காலம் நெருங்கி விட்டதை, தவ வலிமையால் உணர்ந்த முனியாண்டி ஸ்வாமிகள், ரங்கபாளையம் கிராமத்தில் வடக்கத்தி அம்மன் கோயிலுக்கு அருகே ஆறடிக்கு மூன்றடி அளவில் குழி வெட்டும்படி, தன் நண்பர் களும் சீடர்களுமான அன்பர்களிடம் சொன்னார். அவர்களும் எதற்கு குழி வெட்டச் சொல்கிறார் என்று தெரியாமலே செயலில் இறங்கினர்.
தவம் செய்யத்தான் குழிக்குள் இறங்குகிறார் என்று நினைத்த சீடர் களுக்கு, நேரம் ஆக ஆக பயம் வந்தது. காரணம்- முனியாண்டி ஸ்வாமிகளின் உடலில் அசைவு இல்லை; அதிர்வு இல்லை. இயக்கம் இருக்கிறதா என்றும் உணர முடிய வில்லை. இரவு 1130 மணிக்குத் தன் பூத உடலை விட்டு, ஜோதி சொரூபமாக வெளியேறி விட்டார் ஸ்வாமிகள்.
பேச்சு- மூச்சு எதுவும் இல்லாமல், குழிக்குள் முனியாண்டி ஸ்வாமிகள் இருப்பதைக் கண்ட சீடர்களும் ஊர்க்காரர்களும் அரண்டு போனார் கள். ஒரு மருத்துவரை எங்கிருந்தோ வரவழைத்தனர். நள்ளிரவு கடந்து, சுமார் 2 மணி வாக்கில் அந்த மருத்துவரும் வந்து சேர்ந்தார். ஸ்வாமிகளைப் பரிசோதித்தார். உடலில் இருந்து உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டதை மருத்துவர் உறுதி செய்தபோது, அவரின் ஆத்மார்த்தமான சீடர்கள் சோகமய மானார்கள்.
இவரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிலத்திலேயே உடலை இறக்கி வைத்து, அந்திமக் காரியங்கள் அரங்கேறின. ஆயிரக்கணக் கான பக்தர்கள் கண் கலங்கி நிற்க... குழிக்குள் இறங்கிய அடுத்த நாள் மாலை வேளையில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் முறைப்படி நடந்தன.
தனக்கு ஏற்பட்ட இறை உணர்வு காரணமாகவும், சித்த புருஷர்களின் அழைப்பு காரணமாகவும் சிறு வயதில் இருந்தே இவர் சதுரகிரிக்கு அடிக்கடி சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இவரது சித்து வேலைகளைக் கண்டு அனுபவித்த பல பக்தர்கள், இன்றைக்கும் பல இடங்களில் வசித்து வருகிறார்கள்.
முனியாண்டி ஸ்வாமிகளின் ஆத்மார்த்த பக்தர்களில் ஒருவர்- விஸ்வநாதன். இவருக்குத் தற்போது வயது 81. ஓய்வு பெற்ற டெபுடி கலெக்டரான இவர், சென்னையில் வசிக்கிறார். ஸ்வாமிகளின் சதுரகிரி சம்பந்தமான ஓர் அனுபவத்தை இவர் நம்மிடம் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.
''என் குருநாதரான முனியாண்டி ஸ்வாமிகளும் நானும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வோம். அது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். அன்றைய தினம் மாலை நேரத்தில் அவரது இருப்பிடமான ரங்கபாளையத்தில் அமர்ந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஸ்வாமிகள், 'சதுரகிரிக்குப் போய் வரலாமா?' என்று என்னிடம் கேட்டார். அப்போது நேரம் இரவு ஏழரை மணி இருக்கும். முனியாண்டி ஸ்வாமிகளின் குருநாதரான சடைச்சாமி என்பவர், அப்போது சதுரகிரியில் இருந்தார். அவரையும் சந்தித்து ஆசி பெற ஸ்வாமிகள் விருப்பம் கொண்டிருந்தார் போல் இருக்கிறது.
'நேரமாகி விட்டதே ஸ்வாமி... இனி நாம் இங்கிருந்து (ரங்கபாளையம்) பேருந்து மூலம் பயணித்து, கிருஷ்ணன் கோவில் போய், அங்கிருந்து மலை அடிவாரமான தாணிப்பாறை செல்வதற்கு எப்படியும் மூன்று மணி நேரம் ஆகும். அதன் பிறகு வேகுவேகுவென்று மலை மேல் ஏறிச் செல்ல வேண்டுமே. இதெல்லாம் சாத்தியமா?' என்று தயக்கத்துடன் அவரிடம் கேட்டேன்.
என்னைப் பார்த்துச் சிரித்தார். 'நேரம் காலம் பற்றி உங்களுக்கு என்ன கவலை? சதுரகிரிக்கு இப் போது போகலாமா... வேண்டாமா? இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்' என்றார் கறாராக.
'எனக்கும் விருப்பம்தான்!' என்றேன்.
'நொடிப் பொழுதிலேயே நாம் சதுரகிரிக்கு இங்கிருந்து சென்று விடலாம். நான் சொல்கிறபடி மட்டும் நீங்கள் செய்தால் போதும். சரியா?' என்றார்.
உற்சாகமாக தலை ஆட்டினேன். அவருக்கு அருகில் அமர்ந்த நிலையிலேயே, கண்களை மூடிக் கொண்டு தன் உடலைத் தொடச் சொன்னார். அப்படியே செய்தேன். கண்களை இன்னும் திறக்கவில்லை. ஸ்வாமிகளின் மறுமொழிக்காகக் காத்திருந்தேன்.
அடுத்த விநாடி கண்களைத் திறந்து பார்க்கும்படி ஸ்வாமிகளின் குரல் மட்டும் எனக்குக் கேட்டது. ஒரு சில விநாடிகள் மட்டும் ஏதோ மயக்க நிலையில் இருந்ததாக நான் உணர்ந்தேன். ஸ்வாமிகளின் உத்தரவுக்குப் பிறகு, கைகளால் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தேன்.
என்ன ஒரு அதிசயம். இருவரும் சதுரகிரியின் உச்சியில் இருந்தோம். குளிரும் இருளும் கலந்த சூழல். ரங்கபாளையத்தில், ஸ்வாமிகளுக்கு அருகில் எப்படி நான் அமர்ந்திருந்தேனோ, அதேபோல் சதுரகிரியில் அமர்ந்திருந்தேன். ஒரு சில விநாடிகளுக்கு முன் நானும் ஸ்வாமிகளும் இங்கிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள ரங்கபாளையத்தில் இருந்தோம் என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை; நம்பவும் முடியவில்லை.
வட இந்தியாவில் உள்ள மதுரா மற்றும் பிருந்தாவனம், லங்காவில் உள்ள கதிர்காம சேத்திரம் போன்றவற்றுக்கும் ஆகாய மார்க்கமாக ஸ்வாமிகள் சென்று தரிசித்து வந்துள்ளார் என்பதை நான் அறிந்துள்ளேன். சதுரகிரியில் ஸ்வாமிகளின் குருநாதர் சடைச்சாமியைச் சந்தித்து ஆசி பெற்றோம். மகாலிங்கத்தை தரிசித்தோம். முனியாண்டி ஸ்வாமிகளுடன் இருந்த அந்த நாட்களையும் அனுபவங்களையும் இப்போது நினைத்தாலும் என் உடல் சிலிர்க்கிறது!'' என்று பரவசப்பட்டார் விஸ்வநாதன்.
காவி வேஷ்டியும் துண்டுமாகக் காணப்படுவார் முனியாண்டி ஸ்வாமிகள். இவரின் கண்களில் எந் நேரமும் ஒரு தேடுதல் இருக்கும். சதுரகிரியில் இவர் இருக்கும் நாட்களில், சுந்தர மகாலிங்கம் சந்நிதிக்கு வருவார். எப்போதோ வந்து செல்லும் பக்தர்கள் சிலர் தரும் பிரசாதத்தை மிகுந்த சிரத்தையாக, பயபக்தியுடன் வாங்கி உண்பாராம்.
ஒரு முறை சாப்டூர் பக்தர் ஒருவர், சுந்தர மகாலிங்கத்துக்கு தான் நைவேதித்த சர்க்கரைப் பொங்கலை, முனியாண்டி ஸ்வாமிகளிடம் கொடுக்க முற்பட்டார்.
ஸ்வாமிகளும் தன் உள்ளங்கைகளை நீட்டினார். அப்போது, அதன் ஒரு பகுதி, ஸ்வாமிகளுடைய உள்ளங்கையில் இருந்து நழுவி, பொத்தென கீழே மண் தரையில் (சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அப்போது கட்டடம் எல்லாம் கிடையாது) விழுந்து விட்டது.
மண்ணோடு கலந்து விட்ட அந்த சர்க்கரைப் பொங்கலை பயபக்தியுடன் குனிந்து, வாரி மீண்டும் தன் உள்ளங்கையில் சேர்த்துக் கொண்டார் முனியாண்டி ஸ்வாமிகள்.
தனக்குச் சர்க்கரைப் பொங்கல் தந்த சாப்டூர் பக்தரை ஒரு வித சிரிப்புடன் பார்த்த முனியாண்டி ஸ்வாமிகள், சிறு சிறு கற்களும் மண்ணும் கலந்த அந்த சர்க்கரைப் பொங்கலை பரவசத்தோடு சாப்பிட ஆரம்பித்தார். அவரின் முகத்தில் ஒரு சின்ன அருவருப்பு கூட இல்லையாம். சிறு கற்கள் வாயில் கடிபடும் சத்தமோ, மண்ணை மெல்லும் முகச் சுளிப்போ ஸ்வாமிகளின் முகத்தில் இல்லை.
இத்தனைக்கும் அந்த சர்க்கரைப் பொங்கலில், ஏராளமான மண்ணும் கல்லும் கலந்திருப்பதை சாப்டூர் பக்தர் தன் கண்களாலேயே அப்போது பார்த்திருக்கிறார். 'ஸ்வாமிகளின் வாயில் மட்டும் எப்படி கல்லும் மண்ணும் அகப்படவில்லை?' என்று சாப்டூர் பக்தர் விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
''உங்களை வெச்சுக்கிட்டு நான் மட்டும் மகாலிங்கத்தோட பிரசாதத்தைச் சாப்பிடறது நல்லா இருக்காது. இந்தாங்க, நீங்களும் இதைச் சாப்பிடுங்க'' என்று மண்ணும் கல்லும் கலந்த அந்த சர்க்கரைப் பொங்கலின் ஒரு பகுதியை பக்தரிடம் நீட்டி இருக்கிறார் முனியாண்டி ஸ்வாமிகள்.
அந்த நேரத்தில் சற்று கலவரப்பட்டுத்தான் போனார் சாப்டூர் பக்தர். எனினும், முனியாண்டி ஸ்வாமியைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்தவர் என்பதால், மறுக்க மனம் இல்லாமல் சர்க்கரைப் பொங்கலை பவ்யமாக வாங்கி, கொஞ்சம் கொஞ்ச மாக எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.
அந்தப் பொங்கலில், ஒரு கூடுதல் சுவை சேர்ந்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தார் சாப்டூர் பக்தர். எந்த ஒரு கல்லும் அவரது பற்களில் சிக்கி, அவஸ்தை தரவில்லை. மண் துகள்களை அவரது வாய் மெல்லவில்லை.
ஆச்சரியம் பொங்க, பயபக்தி மேலிட முனியாண்டி ஸ்வாமிகளைப் பார்த்துக் கை கூப்பி நமஸ்கரித்தார் பக்தர். விழிகளை உருட்டி உருட்டிப் பார்த்து விட்டு அங்கிருந்து கண நேரத்தில் அகன்று, மறைந்து விட்டார் முனியாண்டி ஸ்வாமிகள்.
சுந்தர மகாலிங்கத்துடன் முனியாண்டி ஸ்வா மிகள் நேருக்கு நேர் பேசும் அபூர்வ நிகழ்வைத் தன் கண்களால் கண்ட பாக்கியமும் இந்த சாப்டூர் பக்தருக்கு உண்டு.
ஒரு முறை சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க வந்த இந்த பக்தர், சந்நிதிக்குள் நுழையும்போதே இறைவனுக்கு அருகே முனியாண்டி ஸ்வாமிகள் இருப்பதைப் பார்த்திருக்கிறார்.
சுந்தர மகாலிங்கத்தின் எதிரே சுமார் ஓரடி இடைவெளியில் இருந்த முனியாண்டி ஸ்வாமி, அந்த லிங்கத் திருமேனியிடம் பல வித முக பாவங்களைக் காட்டிப் பேசி இருக்கிறார். தான் கேட்கும் கேள்விகளுக்கு சுந்தர மகாலிங்கத்திடம் இருந்து பதிலும் பெற்றாராம்.
''ஸ்வாமிகள் சுந்தர மகாலிங்கத்தைப் பார்த்து ஏதோ கேள்வி கேட்ட பின் சற்று நேரம் அமைதியாக இருந்தார். சில விநாடிகள் கடந்த பிறகு, அவரது அடுத்த கேள்வி வேறு வித முக பாவனையுடன் இருந்தது.
ஒரு முறை கேட்டதற்கும், மறுமுறை கேட்டதற்கும் இடைப்பட்ட நேரத்தில், சுந்தர மகாலிங்கத்திடம் இருந்து, சற்று முன், தான் கேட்ட கேள்விக்கு ஏதோ ஒரு பதிலைப் பெற்றிருக்கிறார் முனியாண்டி ஸ்வாமிகள் என்றுதான் அப்போது எனக்குத் தோன்றியது. அவரது செயல்களை வைத்துதான் இதை நான் யூகித்தேன். ஒரு கட்டத்தில் சுந்தர மகாலிங்கத்தைப் பார்த்து ஆவேசமாக ஏதோ பேசியதையும் பார்த்தேன். என்ன பேசுகிறார் என்பது அப்போது புரியவில்லை.
'சித்த புருஷர், சிவனாருடன் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் நாம் நின்று கொண் டிருப்பது முறையல்ல' என்று என் உள் மனம் ஒரு கட்டத்தில் உணர்த்தவே, அந்த இடத்தில் இருந்து மெள்ள நடந்து பின்னுக்கு வந்து விட்டேன்'' என்றார் அந்த சாப்டூர் பக்தர், கண்களில் மிரட்சியுடன்.
| |||||
Saturday, 9 September 2017
சதுரகிரி யாத்திரை! - 15
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment