Saturday, 9 September 2017

சதுரகிரி யாத்திரை ! - 12


சொந்தம், பந்தம் அனைத்தையும் துறந்து, அடிவாரத்தை விட்டு சதுரகிரி மலைக்குப் பசுக்களுடன் புறப்பட்டுப் போனான் பச்சைமால். கோமாதாவின் வடிவமாக அவற்றைக் கருதி அனுசரணையுடன் மலைப் பகுதியில் மேய்த்து வந்தான். பசுக்கள் தரும் பால் மற்றும் இதர பொருட்களை, பசியுடன் வரும் பக்தர்களுக்கு அன்புடன் வழங்கினான்.
ஒரு நாள் பசுக்களைத் தொழுவத்துக்கு ஓட்டிக் கொண்டு வந்தபோது, அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை சுந்தரானந்தர் பூஜிப்பதைப் பார்த்தான் பச்சைமால். அபிஷேகமும் அலங்காரமும் முடிந்து பூஜை நடந்து கொண்டிருந்தது. வஸ்திரம் தரித்து, மலர்மாலைகளை அணிவித்து, நமசிவாய நாமம் துதித்து, சுந்தரலிங்கம் எனும் அந்தத் திருமேனிக்கு தூபங்களின் மணம் கமழ சுந்தரானந்தர் பூஜை செய்வதைப் பார்த்து ஒரு கணம் வியந்து, ஆனந்தத்தில் அப்படியே சொக்கிப் போனான் பச்சைமால். ஆரத்தி காட்டி, வழிபாடுகளை முடித்த சுந்தரானந்தர், பச்சைமால் பக்கம் பார்வையைத் திருப்பினார்.
கருணை பொங்கும் தன் விழிகளால் கண் கொட்டாமல் பச்சைமாலைப் பார்த்தார் சுந்தரானந்தர். சித்த புருஷரின் பார்வை தன் மீது படிவதைக் கண்ட பச்சைமால், அவரது திருவடிகளில் வீழ்ந்து ஆசியைப் பெற்றுக் கொண்டான். பிறகு, ''ஐயா... இங்கே பசுக்களை மேய்த்து வருபவன் நான். நல்ல வளமாகப் பால் தரும் ஒரு பசுவினது பாலைத் தங்களுக்கும், தங்களால் வழிபடப்பட்டு வரும் இந்த சிவனாரின் அபிஷேகத்துக்கும் தினமும் கொண்டு வந்து தருகிறேன். இதற்குத் தாங்கள் என்னை அனுமதித்தால் அதை என் பாக்கியமாகக் கருதுகிறேன்'' என்று அவரது திருமுகத்தை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தீட்சண்யமான ஒரு புன்னகை புரிந்து அவனது வேண்டுகோளுக்கு அனுமதி தந்தார் சுந்தரானந்தர். சொன்ன வாக்கைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தான் பச்சைமால். குறிப்பிட்ட ஒரு பசுவிடம் இருந்து நித்தமும் கறந்து, பச்சைமால் கொண்டு வரும் நுரை ததும்பும் பாலைத் தனக்கும், லிங்கத் திருமேனியின் அபிஷேகத்துக்கும் பயன்படுத்திக் கொண்டார் சுந்தரானந்தர்.
பச்சைமாலை (இவரது பெயர் போன பிறவியில் யாழ்வல்ல தேவர் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தேவலோகத்தில் ஒரு முறை தேவமாது ஒருவரைக் கண்டு சுற்றுப்புறத்தையும் மறந்து காதல் வயப்பட்டதால், இறைவனார் கொடுத்த சாபம் காரணமாக இப்போது பூலோகத்தில் பச்சைமால் என்கிற திருநாமத்துடன் அவதரித்திருக்கிறார் என்பதை நாம் மறக்கக் கூடாது!) தாம் ஆட்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டதாக உணர்ந்த இறையனார் மகா சித்தராக - வெண்ணீறணிந்து, ருத்திராட்ச மாலைகள் தரித்து, சடாமுடியுடனும் காவி உடையுடனும் சதுரகிரியில் தோன்றினார்.
சதுரகிரியில் இருக்கிற கற்பக விருட்சத்தின் அடியில் மகா சித்தர் வடிவில் சிவபெருமானார் தனித்திருக்கும்போது, சுந்தரானந்தரும் சட்டைநாதரும் அவரைத் தரிசித்து அளவளாவினார்கள். மகா சித்தரின் கண்களின் வழியே தெரியும் தீட்சண்யத்தைக் கண்டு அவரிடம் ஆசி பெற்றார்கள் இருவரும். சுந்தரானந்தர் பூஜித்து வரும் லிங்கத் திருமேனி குறித்து ஆர்வமுடன் விசாரித்தார் மகா சித்தர். சித்து விளையாட்டுகளுக்கெல்லாம் அதிபதியான அந்த சிவபெருமானார், பச்சைமாலிடம் தன் விளையாட்டைக் காட்ட விரும்பினார்.
அந்த நேரம் பார்த்து தன் பசு மாடுகளை ஓட்டியவாறு, தொழுவத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் பச்சைமால். எதிரே சுந்தரானந்தரைப் பார்த்தவன், ''இதோ சாமீ... தொழுவத்துக்குப் போனதும் பால் கறந்து உடனே கொண்டு வந்துடறேன்'' என்றபடி ''ஹேய்ய்... ஹேய்ய்...'' என மாடுகளை விரட்டி வேகமாகச் சென்று கொண்டிருந்தான். மகா சித்தரின் விளையாட்டு இங்குதான் அரங்கேறியது. சுந்தரானந்தருக்கும் சுந்தரலிங்கத்துக்கும் பாலைத் தரும் அந்தக் குறிப்பிட்ட பசு மாட்டை மட்டும், எவரும் அறியாத வண்ணம் கற்பக விருட்சத்தின் கீழே தங்கும்படி செய்தார். பிற மாடுகள் அனைத்தும் பச்சைமாலின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவனுக்கு முன்னால் வேகவேகமாகச் சென்றன.
தொழுவத்தை அடைந்த பச்சைமால் அனைத்து மாடுகளையும் அதனதன் இடத்தில் கட்டினான். சுந்தரானந்தருக்கும் சுந்தரலிங்கத்துக்கும் பால் தரும் அந்தக் குறிப்பிட்ட பசுவைத் தேடினான். காணவில்லை. தொழுவம் முழுக்கத் தேடினான். அந்தப் பசுவை எங்கும் காணவில்லை. தவித்தான். நேரம் வேறு ஓடிக் கொண்டிருந்தது. சுந்தரலிங்கத்துக்கு பூஜை செய்யும் வேளை நெருங்கிக் கொண்டிருந்தது.
'ஒரு வேளை, வருகிற வழியில் எங்காவது தவறிச் சென்றிருக்கும்' என்று எண்ணியவனாய், மாடுகளை ஓட்ட, தான் பயன்படுத்தும் கழியைக் கையில் ஏந்தி, வந்த பாதையில் திரும்ப நடக்க ஆரம்பித்தான் பச்சைமால். அவனது விழிகள் இரண்டும், காணாமல் போன பசுவையே கண் கொட்டாமல் தேடின. சலித்துப் போய் நடந்தவன், ஓரிடத்தில் தன் பசு நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அதை ஓட்டிச் செல்வதற்கு ஆவலுடனும் அவசரத்துடனும் அதன் அருகே நெருங்கியவன், அதிர்ந்து போனான்.
இறைவனுக்குப் பால் தரும் அந்தப் பசுவின் மடியில் வாய் வைத்து, பாலைப் பருகிக் கொண்டிருந்தார் மகா சித்தராக வந்த சிவனார். செந்நிறமான அவரது அதரம் எங்கும் பாலின் நுரை, பஞ்சுப் பொதி போல் படிந்திருந்தது. 'சுந்தரலிங்கமாக இங்கே காட்சி தரும் தனக்கு அபிஷேகம் செய்யும் நேரம் நெருங்கி விட்டதே... இன்னும் பால் வந்து சேரவில்லையே' என்று நினைத்து அந்தப் பசுவின் மடியில் இருந்தே பரமனார் பாலைப் பருகி விட்டார் போலிருக்கிறது! ஆனால், பச்சைமால் பதறிப் போய் விட்டான். இறைவனுக்கு என்று நேர்ந்து விட்ட ஒரு பசுமாட்டின் பாலை யாரோ ஓர் ஆசாமி அருந்தி, அபசாரம் செய்து விட்டானே என்று கதறினான். ஒரு கட்டத்தில் கோபம் எழுந்து, தன் கையில் இருந்த கழியால் மகா சித்தரின் தலையில் ஓங்கி அடித்தான்.
உடலில் உள்ள அனைத்துப் பாகங்களும் வருந்துமாறு மகா சித்தரை நையப் புடைத்த பச்சைமால், ஆவேசம் தணியாதவனாக நின்று கொண்டிருந்தான். இந்த நேரம் பார்த்து அங்கே ஓடி வந்த சுந்தரானந்தரும் சட்டைநாதரும் துடிதுடித்துப் போய் விட்டார்கள். சித்தர்கள் இருவரும் சினம் கொண்டு பச்சைமாலின் மேல் பாய முற்படும்போது, மகா சித்தரானவர் மந்தகாசப் புன்னகையுடன் அவர்களைத் தடுத்து விட்டார்.
''இதெல்லாம் எமது விளையாட்டே...'' என்றவர் அவர்களுக்குத் திருக்காட்சி தந்தார். எப்படித் தெரியுமா? மான், மழு, கபாலம், சூலம் தரித்து... சர்ப்பங்களை ஆபரணங்களாக அணிந்து கொண்டு... கொன்றை மாலை சூடி... உயர்ந்த ஜடா மகுடத்துடன் கோலாகலமாய் காட்சி தந்தார். மகா சித்தராய் வந்தவர், மகேசனாகக் கண்முன்னே காட்சி தருவது கண்டு பச்சைமால் பதறிப் போனான்.
இந்த இன்ப அதிர்ச்சியை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. கைகளும் கால்களும் படபடத்தன. இத்தனை நாள் பசுவின் பாலைக் கறந்து, நான் கொண்டு வந்து தந்தது இந்த ஈஸ்வரனுக்குத்தானா என்று சந்தோஷம் உள்ளத்தில் மேலிட, உற்சாகமாகக் கூக்குரலிட்டான். நமசிவாய நாமத்தை நெக்குருக ஜபித்தான். கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி, ஆனந்தக் கூத்தாடி, அந்த அப்பனை வணங்கினான். ''ஈஸ்வரா... அறியாமல் நான் செய்த பிழைகளைப் பொறுத்தருள்... வந்திருப்பது நீ என்று தெரியாமல் கழி கொண்டு உன்னைக் காயப்படுத்தி விட்டேன்'' என்று மகேஸ்வரரின் கால்களில் வீழ்ந்து வணங்கினான்.
சுந்தரானந்தரும் சட்டைமுனியும் இறைவனை வணங்கி, அவரது அருளாசி பெற்றனர். இறை தரிசனம் பெற்ற பச்சைமாலைப் பெருமையாகப் பார்த்தனர். பிறகு, ஈஸ்வரரின் பார்வை, பச்சைமால் மேல் படர்ந்தது. ''பச்சைமால்... உன் பணியில் யாம் மிக மகிழ்ந்தோம். நித்தமும் எமது அபிஷேகத்துக்குப் பசும்பாலைக் கொடுத்ததோடு, அடியார் சுந்தரானந்தரின் பசியைப் போக்குவதற்கும் பால் தந்து உதவி உள்ளாய். மிக்க நன்றி. உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்...'' என்று கேட்டார் இறைவனார்.
இது நாள் வரை எதை எதிர்பார்த்து, சதுரகிரிக்கு வந்து தன் பணிகளைத் தொடர்ந்தானோ, அதை இன்று அடைந்து விட்டான் பச்சைமால். மகேஸ்வரனின் காட்சி இன்று அவனுக்குக் கிடைத்து விட்டது. இத்தனை நாட்களாக அவன் செய்து வரும் தர்மப் பணிகளுக்குத் தகுந்த பலன் கிடைத்து விட்டது. இறைவனை இன்முகத்துடன் நோக்கினான் ''இடையனான அடியேனுக்குக் காட்சி தந்து கருணை புரிந்த வள்ளலே... உம்மை இந்த சதுரகிரியில் நான் தரிசித்ததை விட வேறு என்ன பேறு வேண்டும்? இதுவே ஆனந்தம்... பரமானந்தம். இனியும் எனக்குப் பிறப்பு வேண்டாம். உன்னுடைய பாதார விந்தங்களில் என்றென்றும் நான் சேவை புரியும் பாக்கியத்தைத் தா. அதுவே நான் வேண்டும் வரம்'' என்று இறைஞ்சினான்.
இறைவனார் புன்னகைத்து, பச்சைமாலை ஏற்று, தனது திருவடிகளில் ஐக்கியப்படுத்தினார். இறையுருவில் இரண்டறக் கலந்து விட்டான் பச்சைமால் (பின்னாட்களில் பச்சைமாலின் பெற்றோருக்கும் தனக்குப் பால் ஈந்த அந்தப் பசுவுக்கும் மோட்சப் பதவியை அருளினார் ஈசன்). நடந்த காட்சிகளைக் கண்டு தங்களை மறந்து சிவநாம ஜபத்தில் திளைத்திருந்த சுந்தரானந்தரையும் சட்டைமுனியையும் பரிவு நிரம்பிய பார்வை கொண்டு பார்த்தார் இறைவன். ''கேளுங்கள் சித்தர்களே... நீங்கள் நம்மிடம் வேண்டுவது என்ன?'' என்று கேட்டார்.
இருவரும் அவன் பாதம் பணிந்து விட்டுச் சொன்னார்கள் ''சித்தர்களுக்கெல்லாம் தலைவராகத் திகழும் மகா சித்தரே... உம் தரிசனத்தில் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி... நாங்கள் இன்று இங்கு கண்ட இந்த அற்புத தரிசனத்தை, எந்நாளும் கண்டு இன்புற வேண்டும். சதுரகிரிக்கு வந்து செல்லும் பக்தர்கள் தங்களை வணங்கிச் சென்று, எல்லா வகையான வளங்களையும் பெற்று சிறப்புற வாழ வேண்டும். இந்த வரத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டும்'' என்று கேட்க... ''அப்படியே ஆகட்டும்'' என்று திருவாய் மலர்ந்த திருக்கயிலைவாசன் அப்படியே மறைந்தார். அவர் இதுவரை இருந்த இடத்தில் சுயம்புவாக ஒரு லிங்கம் திடீரென தோன்றி இருந்ததைப் பார்த்து சுந்தரானந்தரும் சட்டைமுனியும் பெரிதும் மகிழ்ந்தனர்.
சுயம்புவாகத் தோன்றிய அந்த லிங்கத் திருமேனிக்கு தேவர்கள் மலர்களைப் பொழிந்தனர். வேத கோஷங்கள் முழங்கின. கீதங்கள் இசைக்கப்பட்டன. அங்கு கூடி இருந்த அனைவரும், சுயம்புவாக உருவான அந்த லிங்கத் திருமேனியை வழிபட்டு இன்புற்றனர். பச்சைமாலாக வந்த யாழ்வல்ல தேவர், மகா சித்தரை யாரோ என்று எண்ணி கழி கொண்டு தாக்கியமையால், இந்த லிங்கத் திருமேனி நமக்கு வலப்பக்கமாகச் சற்றுச் சாய்ந்துள்ளார். தடியடிபட்ட சம்பவத்தை இன்றும் தன் பக்தர்களுக்கு உணர்த்தும் வண்ணம், சுயம்பு வடிவான சுந்தரமகாலிங்கம் வலப்பக்கம் சாய்ந்து இன்றும் நமக்கு அருளி வருகிறார்.
தன்னை சரண் அடைந்தோருக்கு எந்தக் குறையும் கொடுப்பதில்லை சுந்தர மகாலிங்கம். சுயம்புவாய் உருவான காலத்தில் இருந்து, சித்தர்கள் மட்டுமே பூஜித்து வரும் வடிவமாய் இருந்தார் சுந்தர மகாலிங்கம். சித்தர்களின் இந்த வழிபாடு, பல நூற்றாண்டுகள் சிறப்பான முறையில் தொடர்ந்து வந்தது. சித்தர்கள் வழிபடும் காலத்தில் சாதாரண பக்தர்கள் அவ்வளவாக இந்த சதுரகிரி மலைக்கு வர மாட்டார்கள்.
அதன் பின் ஒரு காலகட்டத்தில் இறைவனின் விருப்பப்படி, மனிதர்களே சுந்தர மகாலிங்கத்துக்கு பூஜை செய்யும் வழக்கம் ஆரம்பமானது. சுமார் 250 வருடங்களுக்கு முன் தொடங்கியது இந்த முறை!
சுந்தர மகாலிங்கத்துக்கு முதன் முதலில் பூஜை செய்யும் மகத்தான பேறு பெற்ற மாமனிதர் யார் தெரியுமா? காஞ்சி சங்கர மடத்தின் உத்தம பக்தராக இருந்த கணபதி ஸ்வாமிகள் என்பவர்தான் அந்த பேற்றைப் பெற்ற பாக்கியவான். சுமார் 250 வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் வசித்து வந்த இவரை, சுந்தர மகாலிங்கமே நேரில் போய் தனக்கு பூஜைகள் செய்வதற்காக சதுரகிரிக்குக் கூட்டி வந்தார் என்றால், அந்த அதிசயத்தை யோசித்துப் பாருங்கள்!
பாக்கியசாலியான அந்த காஞ்சிபுரம் மடத்து பக்தர், சதுரகிரிக்கு வந்த கதையைப் பார்ப்போமா?

- (அதிசயங்கள் தொடரும்)

No comments:

Post a Comment