Saturday, 9 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 12

கல்யாண சுந்தரர் (தொடர்ச்சி) 

கல்யாணசுந்தர மூர்த்தியின் திருவுருவை அமைத்து ஆலயங்களில் திருமண விழா நடத்துபவர்களுக்குத் தங்கள் உற்றார்- உறவினருடன் நீண்ட காலம் வாழும் பேறும், பொருளும், புகழும் கிட்டும். இவர்களுக்கு வாய்க்கும் சுகம் மன்னர்களுக்கும் கிடைக்காது. ஆயுள் முடிந்ததும் சிவலோகத்தில் சுகம் அனுபவித்து மகிழ்வுடன் இருப்பர்!’ என்று உத்தர காமிக ஆகமம் குறிப்பிடுகிறது.
வடக்காலத்தூர் கல்யாணசுந்தரர் பஞ்சலோகத் திருமேனி (காலம்: 9-ஆம் நூற்றாண்டு) உலகப் பிரசித்தி பெற்றது. ‘இந்த வடிவை சில நிமிடங்கள் பார்த்தாலே அதிலிருந்து தோன்றும் தெய்வீக சக்தியை வார்த்தைகளால் வருணிக்க இயலாது!’ என்று அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஸ்டெல்லா கிரமேஷ்’ என்ற ‘இந்தியச் சிற்ப ஆய்வு அறிஞர்’ குறிப்பிட்டுள்ளது சிந்திக்கத் தக்கது.
சந்திரசேகரர்
‘தன்னடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை’ என்று ஈசனைப் போற்றுவார் திருஞானசம்பந்தர். தம்மைத் தொழும் அடியாரை ஈசன் காத்தருள்வதற்கு எடுத்துக்காட்டு, அவ ரின் திருமுடியில் தவழும் பிறை! சந்திரன், சிவபெருமானை பூஜித்து அவர் அருளால், பெரிய பொன் தேரையும், இரவில் உலகுக்கு ஒளி வழங்கும் வரமும் பெற்றான். அவனுக்கு, தன் மகள்கள் (அச்வினி முதல் ரேவதி வரை) 27 பேரையும் மணம் செய்து கொடுத்தார் தட்சன். ஆனால், கார்த்திகை, ரோகிணி ஆகியோரிடம் மட்டும் அன்பு செலுத்தினான் சந்திரன். இதனால் மற்ற பெண்கள் அனைவரும் தந்தையிடம் சென்று முறையிட்டனர். கடும் கோபம் கொண்ட தட்சன், ‘‘அமுத மயமான கலைகள் உள்ளதால்தானே, இப்படி ஆணவத்துடன் நடக்கிறாய்? அவை உடனே அழியட்டும்!’’ என்று சந்திரனை சபித்தார். அதனால் அவதியுற்ற சந்திரன், பரிகாரம் தேடி சிவபெருமானைப் போற்றித் துதித்தான். அதனால் மூன்றாம் பிறையளவு தேய்ந்திருந்த சந்திரனை தன் திருமுடியில் சூடி, அவனைக் காத்தருளினார் ஈசன். இதை கந்த புராணம், சிவபுராணம் ஆகியவை குறிப்பிடுகின்றன. ‘சேகரன்’ என்பதற்கு சேகரிப்பவன், துணை நிற்பவன், காப்பவன், காவலன் என்று பொருள்கள் உள்ளன. தட்சனின் சாபத்தால் ஒளி இழந்த சந்திரனை, மீண்டும் பொலிவுறச் செய்ததால், சிவபெருமான், ‘சந்திரசேகரர்’ எனப் படுகிறார். சிவாலயங்களில் வட கிழக்குப் பகுதியான ஈசான மூலை, சந்திரசேகரமூர்த்திக்கு உரிய இடம்.
சுப்பிரபேத ஆகமம், சந்திரசேகர மூர்த்தியின் வடிவம் பற்றி கூறுகிறது. கேவல சந்திரசேகரர், உமா சந்திர சேகரர், ஆலிங்கன சந்திரசேகரர் என இது மூவகைப்படும்.
கேவல சந்திரசேகரர்: ‘கேவல’ என் றால், ‘தனித்து நிற்றல்’ எனப் பொருள். அதாவது, சிவபெருமான் உமையுடன் இல்லாமல், தனித்து நிற்கும் கோலம்- கேவல சந்திரசேகர மூர்த்தம். இவர், மான்- மழு ஏந்தி முன் இரு கரங்களில் அபயம், ஊரு ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருவார். மாமல்லபுரத்தில் உள்ள திரிமூர்த்தி குகையிலும் பட்டீச்வரம் தேனுபுரீச்வரர் கோயிலில் தூண் சிற்பமாகவும் ஸ்ரீகேவல சந்திரசேகர திருவுருவை தரிக்கலாம்.
உமா சந்திரசேகரர்: சிவாலயங்களில் பஞ்ச லோகத் தினாலான திருவுலா மூர்த்தியாகக் காணப்படும் வடிவம் இது. நின்ற கோலத்தில் பின் இரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன் இரு கரங்களில் அபய- வரத முத்திரைகள் திகழ காட்சி தருவார் இவர். இவரின் இடப் பக்கம், உமா தேவி நின்ற கோலத்தில், வலக் கரத்தில் நீலோத்பல மலர் ஏந்தி அல்லது ஏந்தும் பாவனையில் இடக் கரத்தைத் தொங்கவிட்டவாறு காட்சி தருவார். இந்த வடிவில் உமாதேவி, ‘சர்வ ஸித்திப்ரதாயினி’ எனப்படுவார்.
பிரதோஷத்தன்று உலா வருவது சந்திரசேகர மூர்த்தமே. திருக்கழிப்பாலை, திருவீழிமிழலை ஆகிய தலங்களில் கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின்னால் அமைந்துள்ள வடிவமும் இதுவே. ஆனால், திருவீழிமிழலையில் பெருமான் இரு கரங்களுடன் காட்சியளிக்கிறார். திருப்பத்தூர்- திரு வாப்புடையார் கோயிலில் வெள்ளியாலான உமா சந்திரசேகர மூர்த்தம் உள்ளது. மதுரையில் வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆன மூர்த்தங்கள் உள்ளன.
ஆலிங்கன சந்திரசேகரர்: ஈசன், உமையைத் தழுவும் கோலம் இது. முன் இடக் கரத்தால் அம்பிகையை அணைக்கும் ஈசனது இந்தத் திருவடிவை, தஞ்சைக் கலைக் கூடத்திலும் டெல்லி தேசிய அருங்காட்சியகத் திலும் தரிசிக்கலாம். திருவாவடுதுறை கோயிலில் உள்ள அணைத்தெழுந்த பிரானும் ஆலிங்கன வடிவமே. சென்னைக்கு அருகில், மண்ணிவாக்கத்தில் உள்ள ஸ்ரீமிருத்யுஞ்சேச்வரர் ஆலயத்தில் பரஸ்பர ஆலிங்கன மூர்த்தம் உள்ளது. அம்பிகை வலக் கரத்தால் ஈசனையும், ஈசன் இடக் கரத்தால் அம்பிகையையும் அணைத்தவாறு காட்சி தருகின்றனர். மேற்கண்ட எல்லா வடிவங்களிலும் இறைவன் பிறை சூடிக் காட்சியளிப்பார்.
ஆலயங்களில் பிரம்மோற்சவத்தின் போது சோமாஸ்கந்த மூர்த்தியே உலா வருவார். ஆனால், கொடியேற்றம் இல்லாத விழாக்களான மாதப் பிறப்பு, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் சந்திரசேகரரை வலம் வரச் செய்வர். 
திருவண்ணாமலை உள்ளிட்ட ஆலயங்கள் சிலவற்றில், பெருந்திருவிழாவின்போது காலையில் சந்திரசேகரரும், இரவில் சோமாஸ்கந்தரும் திருவுலா வருவர். சில கோயில்களில் சிறிய வடிவில் ஸ்ரீசந்திரசேகர மூர்த்தம் அமைத்து, தினமும் காலை- மாலை இரு வேளையும் ஸ்ரீபலி சாதிக்க எழுந்தருளச் செய்வது மரபு. திருவாரூர், திருநள்ளாறு, கீழ்வேளூர், நாகூர் ஆகிய திருத்தலங்களில் சந்திரசேகரருக்குப் பிரத்தியேகமான விழாக்கள் சில நடைபெறுகின்றன. 
சிவலிங்கம் அமைத்து சோமன் (சந்திரன்) வழிபட்ட தலங்கள் ‘சோமேச்வரங்கள்’ என்றும், அங்குள்ள லிங்கத் திருமேனிகள் சோமேச்வரர், சோமநாதர் என்றும் அழைக்கப்படுகின்றன. குஜராத் கடற்கரையில் உள்ள சோம்நாத், சந்திரன் பூஜித்த திருத்தலம்; பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றும் கூட.
நிலவு, அம்புலி, திங்கள், மதி, இந்து, சோமன், பிறை என்று சந்திரனுக்குப் பல பெயர்கள் உண்டு. தமிழகத்தில் சந்திரன் வழிபட்ட தலங்களில் சில, சந்திரனின் பெயர் களுடன் திகழ்கின்றன. அவை: திருவையாறு அருகில் உள்ள திங்களூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்க ளூர், அச்சிறுப்பாக்கம் அருகில் உள்ள இந்தளூர் மற்றும் பிறையூர், புதுச்சேரியில் உள்ள பிறையூர், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள மதியனூர்.
கூத்தனூர் அருகிலுள்ள திலதைப்பதி (செதலப் பதி) கோயிலுக்கு ‘மதிமுத்தம்’ என்று பெயர். சென்னையை அடுத்த சோமங்கலம், திண்டிவனம் அருகில் உள்ள திருவக்கரை, ஆரணி அருகில்உள்ள காமக்கூர் ஆகிய தலங்களில் உள்ள மூர்த் தங்கள் சந்திரன் வழிபட்ட தலங்களே. இங்கெல்லாம் நடராஜர் திருவுருவம் சதுர தாண்டவ (கரண) அமைப்பில் உள்ளன. இதை, சந்திரனுக்கு அருள் புரிய ஈசன் ஆடிய ‘அமுதத் தாண்டவம்’ என்கின்றனர். சிதம்பரம் அருகே சிவபுரியில் உள்ள வயிரவன் கோயிலில், ‘மணவாள நம்பி’யான சந்திரசேகரப் பெருமான் அருள் புரிகிறார். சந்திர தசையால் வருந்துவோர் மற்றும் திருமணத் தடை உள்ளர்கள் இவரை வழிபட்டு, இங்குள்ள அமுத லிங்கத்துக்கு அபிஷேகித்த பாலைப் பருகினால், இடர்கள் நீங்கி இன்பம் பெறலாம்!

No comments:

Post a Comment