Wednesday, 6 September 2017

யோக வாழ்வு தரும் ஸ்ரீயோக விநாயகர்!


கோவை நகரில், குனியமுத்தூர் பகுதியில் கோயில் கொண்டு, தன்னை நாடி வருவோர் அனைவருக்கும் அருளும் பொருளும் வழங்கிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீயோக விநாயகர்.
வழக்கமாக அமர்ந்திருக்கும் கோலத்தில் அல்லாமல், இங்கே விநாயகப் பெருமான் யோக நிஷ்டையில் இருந்தபடி அருள்பாலிப்பது சிறப்பு எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். திருக்கரங்களில் கரும்பு, ருத்திராட்சம், கமண்டலம், யோக தண்டம் தாங்கியபடி காட்சி தரும் கணபதியைக் காணக் கண் கோடி வேண்டும்!
சங்கடஹர சதுர்த்தி நாட்களில் இவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. இவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட்டால், அஷ்ட யோகங்களும் தந்தருள்வார் என்கின்றனர் பக்தர்கள்.
கல்வியில் மேன்மை, நினைத்த வண்ணமே திருமண வாழ்க்கை, வியாபாரத்தில் லாபம், நோயற்ற ஆரோக்கிய நிலை ஆகியவை கைகூட, ஸ்ரீயோக விநாயகரை வணங்கினால் வளமுடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
விநாயக சதுர்த்தி அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து ஸ்ரீகணபதியை தரிசித்துச் செல்கின்றனர். ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீபிரம்மா ஆகியோரும் இங்கு காட்சி தருகின்றனர். அமாவாசை, பௌர்ணமி, சங்கடஹர சதுர்த்தி ஆகிய நாட்களில் நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டு ஸ்ரீயோக விநாயகரை வழிபட்டால், எதிரிகள் தொல்லை ஒழியும்; சகல ஐஸ்வரியங்களும் பெறலாம். அந்த நாளில், பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

No comments:

Post a Comment