Wednesday, 6 September 2017

வழித்துணைக்கு வருவார் ஸ்ரீகாரண விநாயகர்!


கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது காரமடை. இந்த ஊருக்கு அருகில் உள்ள மத்தம்பாளையத்தில் இருந்தபடி, அனைவருக்கும் அருள்கிறார் ஸ்ரீகாரண விநாயகர்.
சிவனாருக்கு எதிரில் இருக்கிற நந்திதேவர், இங்கே விநாயகருக்கு எதிரில் இருப்பது சிறப்பு. இங்கே உள்ள விநாயகரின் திருநாமத்தைப் போலவே ஸ்ரீகாரண முருகன், ஸ்ரீகாரணப் பெருமாள் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இந்த வழியே வரும் வாகன ஓட்டிகள் அனைவரும் பிள்ளையாரை வணங்கி, வழித்துணைக்குப் பிரார்த்தித்துக்கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
ஒருகாலத்தில், இந்த ஊருக்கு அருகில் விநாயகருக்கு கோயில் கட்ட முடிவு செய்து, மாட்டு வண்டி ஒன்றில் விநாயகர் விக்கிரகத்தை எடுத்து வந்தனர். இந்த இடத்துக்கு வந்தபோது, வண்டியின் அச்சு முறிந்தது. விக்கிரகத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு, வண்டியைச் சரி செய்தார்கள். பிறகு, விக்கிரகத்தைத் தூக்க முனைந்தபோது, அசைக்கக்கூட முடியவில்லையாம். அதையடுத்து, 'என்ன காரணத்தாலோ பிள்ளையார் இங்கேயே இருக்க விரும்புகிறார் போலும்! எனவே, இந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபடலாம்’ என கிராம மக்கள் முடிவு செய்து, அதன்படியே செய்தனர் என்கிறது ஸ்தல வரலாறு. எனவே, அவருக்கு ஸ்ரீகாரண விநாயகர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர்.
ஸ்ரீகாரண விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. இவரிடம் சரியான காரணத்தைச் சொல்லி, 'எனக்கு இதை அருள்வாய்’ என்று மனதார வேண்டிக்கொண்டால் போதும்... விரைவில் அதனை ஈடேற்றி அருள்வார் என்கின்றனர் பக்தர்கள். புதிதாக வாகனங்களோ, வீடு- மனையோ வாங்கினால், முன்னதாக ஸ்ரீகாரண விநாயகரைத் தரிசித்து வேண்டிக்கொண்ட பிறகே, செயலில் இறங்குகின்றனர்.
மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாளில், ஸ்ரீகாரண விநாயகரைத் தரிசிக்க, அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அதேபோல், விநாயகர் சதுர்த்தி நாளில் சந்தன அலங்காரம், அருகம்புல் மாலைகள், கொழுக்கட்டை நைவேத்தியம் என பூஜை- வழிபாடுகள் அமர்க்களப்படுமாம்.  கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள், மத்தம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும். பஸ் ஸ்டாப்புக்கு அருகிலேயே அமைந்துள்ளது கோயில்.
மத்தம்பாளையம் ஸ்ரீகாரண விநாயகரைத் தரிசியுங்கள். நம் வாழ்க்கைக்குத் துணையென வந்து, அத்தனை இடர்களிலிருந்தும் நம்மைக் காத்தருள்வார், அந்தத் தும்பிக்கை நாயகன்!

No comments:

Post a Comment