Friday, 1 September 2017

வெற்றிகள் தருவார் வன்னி விநாயகர்!


பாண்டவர்கள் வனவாசம் முடித்து, ஒரு வருடம் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டபோது,  தங்களுடைய ஆயுதங்கள் மற்றும் போர்க் கருவிகளை,  ஒரு வன்னி மரப் பொந்தில் மறைத்து வைத்திருந்தனர். பாரத யுத்தத்தின்போது, வன்னிமரப் பொந்தில் மறைத்து வைத்திருந்த தங்கள் ஆயுதங்களை எடுத்துப் போரிட்டு பாரத யுத்தத்தில் வெற்றி பெற்றார்கள் பாண்டவர்கள் என்பது புராண வரலாறு. அத்தனைச் சிறப்பு வாய்ந்த  வன்னிமரத்தின் அடியில் அமர்ந்திருக்கும், ‘வன்னி விநாயக’ரை வழிபட்டால், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

இந்த நம்பிக்கையை  நிறைவேற்றி, தம்மை வழிபடும் பக்தர்களுக்கு வெற்றிகளை ஈட்டித் தருவதற்காகவே,  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் வன்னி விநாயகர்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, ஓடைப்பட்டி  மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டு, கடும் பஞ்சத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது ஓடைப்பட்டிக்கு வந்த அண்ணாமலைச் செட்டியார் என்ற சித்தர் இந்தக் கோயிலுக்கும் வருகை புரிந்தார். 

வன்னிமரத்து அடியில் கிழக்கு முகம் பார்த்து அழகுற வீற்றிருந்த விநாயகரை வழிபட்டு, அருகில் இருந்த குளத்தைச் செம்மைப்படுத்தினார். தொடர்ந்து பெய்த மழையால் நீர்நிலைகள் வளம் பெற்று, விவசாயம் செழித்தது. அந்தப் பகுதியே வளமான பூமியாக உருமாறியது.வன்னிமர விநாயகரும், அவரை வழிபட்ட அண்ணாமலைச் சித்தரும்தான் இதற்குக் காரணம் என மக்கள் உணர்ந்தனர்.  

அன்று முதல், ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோயில், பக்தர்களால் பக்தி சிரத்தையோடு வணங்கப்பட்டு வருகிறது. சித்தர் நினைவாக, விநாயகருக்கு எதிரே ‘அண்ணாமலைச் செட்டி யார் நினைவு ஸ்தூபி’ அமைக்கப்பட்டுள்ளது. அதற்கும் தினசரி பூஜைகள் நடத்தி, வணங்கி வருகிறார்கள் பக்தர்கள்.

பல நூறு ஆண்டுகளாக வன்னி மரத்தடியில் அமர்ந்து அருளாட்சி செய்துகொண்டிருக்கும் வன்னி விநாயகருக்குக் கோயில் கட்டுவதற்கு, கிராமத்துப் பெரியவர்கள் மற்றும் பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி விநாயகர் மீது அதீத பக்தி கொண்ட அன்பர்களாலும், ஊர்ப் பிரமுகர்களின் முயற்சியாலும்  வன்னி விநாயகருக்கு 1982-ம் ஆண்டு கோயில் கட்டப்பட்டது. கருவறை விமானமாக வன்னி மரமே இருப்பதால், கருவறைக் கோபுரம் இங்கு அமைக்கப்படவில்லை. வன்னி மரத்தை வலம் வந்து, வன்னி இலைகளால் அர்ச்சனை செய்தால் சனி தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

மேலும், இந்த வன்னி விநாயகரை வணங்கி னால், குடும்பத்தில் நிம்மதி நிலவும்; திருமணத் தடைகள் அகலும்; மழலைச் செல்வம் கிட்டும்; தொழிலில் வியாபாரம் பெருகும்; நவகிரக தோஷங்கள் நீங்கும்; வளம் பெருகி, நலம் உண்டாகும். இந்தக் கோயிலில் வேண்டுதல் செய்யும் பக்தர்கள் ஒன்பது வாரம் மற்றும் பதினொரு வாரங்கள் நெய் தீபம் ஏற்றி  வழிபட்டு வந்தால், வேண்டிய வரம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
மதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். புதிதாக வாகனங்கள் வாங்குபவர்கள் வன்னி விநாயகருக்கு பூஜை செய்து வாகனங்களை எடுத்துச்செல்வது வழக்கத்தில் உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்களும் பெரும்பாலும் இங்கு பூஜை செய்தபின்புதான் கிளம்புகின்றன.    

மேலும், இந்தப் பகுதியில் இருந்து, இருக்கன் குடி மற்றும் திருச்செந்தூர் கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தங்கிச் செல்வதற்காக அனைத்து வசதிகளுடன் தங்கும் மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன. 

இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இந்தக் கோயிலில் பெத்துரெட்டிப்பட்டி, சின்னத்தம்பியாபுரம், பெரிய ஓடைப் பட்டி, சின்னஓடைப்பட்டி மற்றும் ஓ.சங்கர லிங்கபுரத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளால் நிர்வாக அறங்காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, அறங்காவலர் குழு உறுப்பினர்களால் நிர்வாகம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி இங்கு அரசு அன்னதான திட்டமும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 

விழாக் காலங்கள் தவிர,  மற்ற தினங்களில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

No comments:

Post a Comment