மேஷம் முதலான 12 ராசிகளில், சூரியன் முதலான 9 கிரகங்களில் சில கிரகங்கள் ஆட்சி அல்லது உச்ச நிலை பெற்றிருப்பார்கள். சில கிரகங்கள் நட்பு நிலையில் இருப்பார்கள். இன்னும் சில கிரகங்கள் பகை அல்லது நீச நிலையில் இருப்பார்கள். ஒருவரது ஜாதகத்தில் எந்த ராசியில் எந்த கிரகம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. அதன்படி, அந்த கிரகத்தின் உச்ச, நீச நிலைகளை அறிந்து, அந்த ஜாதகருக்குரிய பலன்களைச் சொல்ல வேண்டும். உதாரணமாக, ஒருவரது ஜாதகத்தில் துலாம் ராசியில் சனி இருந்தால், அது சனி பகவானின் உச்சநிலை. அந்த ஜாதகருக்கு சனி தசை நடக்கும் காலத்தில் மிகச் சிறப்பான பலன்கள் ஏற்படும் என அறியலாம்.
இனி, கிரகங்கள் எந்தெந்த ராசியில் உச்ச, நீச, பகை நிலை பெறுகிறார்கள் என்பதை அறிவோம் (கீழ்க்காணும் தகவல்கள் வாக்கிய பஞ்சாங்கத்தை அனுசரித்து தரப்பட்டுள்ளன).
சூரியன்: சிம்ம ராசியில் ஆட்சி; மேஷ ராசியில் உச்சம்; துலாம் ராசியில் நீசம்; மகர, கும்ப ராசிகளில் பகை; மற்ற ராசிகளில் நட்பு அல்லது சமநிலை.
சந்திரன்: கடக ராசியில் ஆட்சி; ரிஷபத்தில் உச்சம்; விருச்சிகத்தில் நீசம்; மகரம், கும்ப ராசிகளில் பகை; மற்ற ராசிகளில் நட்பு அல்லது சமநிலை.
செவ்வாய்: மேஷம், விருச்சிக ராசிகளில் ஆட்சி; மகர ராசியில் உச்சம்; கும்பம், மிதுன, கன்னி ராசிகளில் பகை; மற்ற ராசிகளில் நட்பு அல்லது சமநிலை.
புதன்: மிதுனம், கன்னி ராசிகளில் ஆட்சி; கன்னி ராசியில் உச்சம்; மீன ராசியில் நீசம்; சிம்ம ராசியில் பகை; மற்ற ராசிகளில் நட்பு.
குரு: தனுசு, மீன ராசிகளில் ஆட்சி; கடக ராசியில் உச்சம்; மகர ராசியில் நீசம்; ரிஷப, துலா ராசிகளில் பகை; மற்ற ராசிகளில் நட்பு அல்லது சமநிலை.
சுக்கிரன்: ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி; மீன ராசியில் உச்சம்; கன்னி ராசியில் நீசம்; மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ராசிகளில் பகை; மற்ற ராசிகளில் நட்பு அல்லது சமநிலை.
ராகு, கேது: விருச்சிக ராசியில் உச்சம்; ரிஷப ராசியில் நீசம்; கடகம், சிம்மம், கும்பம், மேஷம் ஆகிய ராசிகளில் பகை; மற்ற ராசிகளில் நட்பு அல்லது சமநிலை.
ஒருவரின் ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சி அல்லது உச்சமாக இருக்கிறது என்பதன் அடிப்படையில் அந்த கிரகம் தரும் சௌபாக்கியங்கள் ஜாதகனுக்குச் சாதகமாக அமையும். அதுபோல, கிரகங்களின் நீச நிலையால் அந்த கிரகம் தரும் பலன்கள் குறைவாக இருக்கும்.
இனி, நவக்கிரகங்களின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிப் பார்க்கலாம். நவக்கிரகங்களுக்கு உரிய நட்சத்திரம், அந்த கிரகத்தின் கோத்திரம், அந்த கிரகத்தின் தேவியர், அவர்களின் வாகனம், அவர்களின் அதிதேவதை ஆகிய விவரங்களை அட்டவணையில் காணலாம். ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களை வைத்துப் பலன் அறிய இந்த விவரங்கள் அவசியமாகின்றன.
அந்தந்த கிரகத்துக்குரிய அதிதேவதையை வணங்கினால், ஜாதகத்தில் அந்த கிரகத்தின் அமைப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
ஒருவரின் நட்சத்திரம் திருவோணம் என்று வைத்துக்கொள்வோம். அது, புதனின் நட்சத்திரம். அவரின் ஜாதகத்தில் புதன் ஆட்சியாக இருந்தால், மிகவும் சிறப்பான பலன்கள் ஏற்படும்.
மேலும், கிரகங்களின் கோத்திரத்தில் உள்ளவர்களுக்கு அந்தக் கிரகத்தின் அனுக்ரஹம் மிகச் சிறப்பாக அமையும். கிரகங்களின் தேவியரையும் அந்த கிரகத்தோடு சேர்த்து வழிபடுவதும் விசேஷம்.
No comments:
Post a Comment