Friday, 1 September 2017

படிக்காசு அருளிய பரமன்!


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - மடவார் வளாகத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு வைத்தியநாதஸ்வாமி திருக்கோயில். அங்கு எம்பெருமான் சிவன், வைத்தியநாத ஸ்வாமியாகவும் அம்பாள் சிவகாமியாகவும் காட்சியளிக்கிறார்கள்.

தாயுமானவர்:

முன்னொரு காலத்தில், சிவபக்தையான கர்ப்பிணி ஏழைப் பெண் ஒருத்தி, தன்னை பிரசவத்திற்கு வந்து அழைத்துச் செல்ல தாயை வரச்சொல்லுமாறு, வழிப்போக்கர்களிடம்  தகவல் சொல்லியனுப்பினாள். ஆனால், நிறை மாதம் எட்டியும் அப்பெண்ணின் பிரசவம் பார்க்க தாய் வந்து சேரவில்லை. உடனே தன் கணவரிடம் தகவல் தெரிவித்து விட்டு, அந்த கர்ப்பிணிப் பெண் தன் சொந்த ஊருக்கு தனியாகவே புறப்பட்டாள். 

சிறிது தொலைவில் இருந்த சுயம்பு வன்னி வனநாதர் கோயில் அருகே சென்றபோது, அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே சிவபெருமான் அப்பெண்ணின் தாயின் வடிவில் வந்து, பிரசவம் பார்த்து விட்டு, அப்பெண்ணின் தாகம் தீர்க்க நிலத்தைக் கீறி, மருத்துவ குணம் வாய்ந்த நீரினைத் தந்தாராம். அதனால் சுயம்பு மூர்த்தரான வன்னி வனநாதரின் திருநாமம் - வைத்தியநாதஸ்வாமி என உருமாறியதாம்.
படிக்காசு வைத்த ஈஸ்வரன்:

இத்திருக்கோயிலில் பூஜைகள் செய்து வந்த, ஏழை அர்ச்சகரான நம்பியாருக்கு உதவ எண்ணிய வைத்தியநாதர், அவரின் கனவில் தோன்றி, “தினமும் என் கோயில் வாயிற்படியில் உனக்காக பொற்காசுகள் இருக்கும். அதைப் பயன்படுத்தி அனுதினமும் எனக்கு பூஜை செய்” எனக் கூறி அருளினார்.  மறுநாள் கண்விழித்துப் பார்க்கையில் இறைவன் சொன்னதுபோல வாயிற்படியில் பொற்காசு இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தார் நம்பியார். இதுபோன்று மொத்தம் 24 திருவிளையாடல்களை இத்தலத்தில் அரங்கேற்றியிருக்கிறார் எம்பெருமான் வைத்தியநாதஸ்வாமி.
பக்தர்களின் நாயகன்:

இத்திருத்தலத்தில் துர்வாச முனிவர் சாபம் தீர வேண்டியபோது சாபவிமோசனம் தந்தது, அகஸ்தியரின் அகங்காரம் களைய தட்சிணா மூர்த்தியாக அவதாரம் எடுத்து அருள் தந்தது, வழிப்போக்கு முனிவர்கள் இருவருக்கு சிதம்பரம் நடராஜர் போன்று நடனக்கோலத்தில் காட்சி கொடுத்தது, தன்னை நெக்குருகி வேண்டி வீணை வாசிக்கும் சகோதரிகள் இருவருக்கு மன்னரின் கனவில் தோன்றி  பரிசு கொடுக்கச் சொல்லியது என வைத்தியநாதஸ்வாமி எப்போதுமே பக்தர்களின் நாயகனாகத் திகழ்கிறார்.

பிணி நீக்குதல்:

பண்டைய மதுரையின் மன்னர் திருமலை நாயக்கருக்கு ‘குன்ம நோயினால்’ பெரும் வயிற்று வலி ஏற்பட்டிருந்தபோது, இத்திருக்கோயிலில் தங்கியிருந்து வைத்தியநாதஸ்வாமியை வேண்டி குணமடைந்திருக்கிறார். அதற்குக் காணிக்கையாக மதுரையிலிருந்து இறைவனை தரிசனம் செய்ய வந்த பல்லக்கினை எம்பெருமானுக்கு தானம் செய்துள்ளார் திருமலை நாயக்கர். இன்றும் வைத்தியநாதர் சந்நிதியில் வைகாசி விசாகத்தின்போது நடைபெறும் ‘பல்லக்கு ஊர்வலத்தில்'  திருமலை நாயக்கர் வழங்கிய பல்லக்கே பயன்படுத்தப்படுகிறது.
பரிகாரங்கள்:

இத்தலத்தில் இருக்கும் மூன்று கை, மூன்று காலுடன் காட்சி தரும் ‘சுர தேவருக்கு’ மிளகு சார்த்தி வழிபட்டால் நாள்பட்ட காய்ச்சல், தலைவலி, தோல் நோய்கள் குணமாகும்.  அதைப்போல் தலத்தின் தீர்த்தத்திலிருக்கும் மீன்களுக்கு, உணவளித்தால் பூர்வீக பாவ சாபதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருத்தல சிறப்புகள்:

இத்திருத்தலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்திருக்கோயிலுக்கு மூவேந்தர்களும், திருமலை நாயக்கரும் திருப்பணி செய்துள்ளனர். திருமலை நாயக்கர் காலத்தில் உருவான மூலிகை ஓவியங்கள் இன்றும் அழியாமல் பல கதைகளைச் சொல்லுகின்றன. இத்திருக்கோயிலில் கொடி மரத்தின் முன்னர் இருக்கும் ஆமைக் கல் 7 அடி உயரத்தில் இருப்பது சிறப்பு. மேலும் இத்திருக்கோயிலில் மூலவர் சந்நிதியின் மேற்கூரையில் ‘வாஸ்துபுருஷரும் 27 நட்சத்திரங்களும்’ இருப்பது தனிச்சிறப்பு. அதுபோல இறைவி சிவகாமி அம்மன் சந்நிதிக்கு முன்னே உள்ள மேற்கூரையில் ‘ஸ்ரீ சக்கரமும் 12 ராசிகளும்’ காட்சி தருகின்றன. இத்திருக்கோயிலில் பங்குனி மாதத்தின் முதல் 3 நாட்களிலும், புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்திலும் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் கருவறையில் விழுவதால், சூரியனே வைத்தியநாதரைப் பூஜிப்பதாக ஐதீகம் நிலவுகிறது.
“இங்குள்ள அம்பாளை 7 அமாவாசைகள் விரதமிருந்து வழிபட்டால், குழந்தை யில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வைத்திய நாதரை தரிசித்தால், தீராத நோய்களும் தீரும்''.


“இங்கு  நடக்கும் ராகு - கேது பூஜைகளில் கலந்துகொண்டால் கால சர்ப்ப தோஷம் நிவர்த்தியடையும். வைத்தியநாதருக்கு  அர்ச்சனை செய்த விபூதியை எடுத்து வயிற்றில் பூசிக்கொண்டால் சுகப்பிரசவம் நடக்கும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கை''.

 “இங்கு ஒவ்வொரு பெளர்ணமி பிரதோஷங்களும் விசேஷம்தான்.  வரவு செலவு கணக்குகளில் பிரச்னை இருப்பவர்கள், இக் கோயிலுக்கு வந்து ‘மிருத்யுஞ்சய ஹோமம்’ செய்தால் நற்பலனைத் தரும்”.


நடை திறந்திருக்கும் நேரம்:

அனைத்து நாட்களிலும் தினமும் காலை 6.15 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 9 மணி வரையிலும் இத்திருக்கோயிலின் நடைதிறந்திருக்கிறது. 

எப்படிச் செல்வது?

மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திரையரங்கிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது இத்திருக்கோயில்.

No comments:

Post a Comment