சிவனே போற்றி!
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவு பயணித்தால், நல்லூர் எனும் கிராமத்தை அடையலாம். இங்கே, தன்னை நாடி வருவோருக்கு ஞானத்தையும் யோகத்தையும் அருளிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீவிஸ்வேஸ்வர ஸ்வாமி.
திருப்பூர் மாவட்டத்தில், பழைமை வாய்ந்த கோயில்களில் ஸ்ரீவிஸ்வேஸ்வர ஸ்வாமி ஆலயமும் ஒன்று. சுந்தரபாண்டியன் எனும் மன்னன் கட்டிய கோயில் இது என்றும், இதனால் இந்தப் பகுதி ஒருகாலத்தில் சுந்தரபாண்டிய நல்லூர் என அழைக்கப்பட்டதாகவும் சொல்வார்கள்.
ஸ்ரீகங்காதேவி சந்நிதி:
கோயிலின் ஸ்தல விருட்சம் வில்வ மரம். மூலவர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர். அம்பாள்- ஸ்ரீவிசாலாட்சி. இங்கே ஸ்ரீபட்டி விநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீநந்திதேவர், ஸ்ரீகங்காதேவி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீசரபேஸ்வரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.
வேண்டுதலும் பரி¢காரங்களும்:
இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீசரபேஸ்வரரை, தொடர்ந்து 24 ஞாயிற்றுக்கிழமைகள் வணங்கி வழிபட்டால், பில்லி சூனிய ஏவல்கள் அனைத்தும் விலகி ஓடும் என்பது ஐதீகம்!
வியாழக்கிழமைகளில், ஸ்ரீதட்சிணா மூர்த்திக்குக் கொண்டைக் கடலை மாலை சார்த்தி, முல்லைப் பூவை ஸ்வாமிக்கு அணிவித்து, அத்துடன் மஞ்சள் வஸ்திரம் சார்த்தி மனதாரப் பிரார்த்திக்க, கல்வியில் சிறக்கலாம்.
திங்கள் கிழமைகளில் இங்கு வந்து, சிவனாருக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட, நல்ல வாழ்க்கைத் துணை வாய்க்கப் பெறலாம்; பிள்ளை வரம் கைகூடும் என்பது ஐதீகம்!
மார்கழியில் வரும் திருவாதிரைத் திருவிழா வும், மாசியில் வரும் மகா சிவராத்திரிப் பெரு விழாவும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
காசிக்கு நிகரானது!
மாசி மகா சிவராத்திரி நன்னாளில், இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் சிவனாரைத் தரிசித்தால், காசியம்பதிக்குச் சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். நம் பாவங்கள் தொலைந்தோடும் என்பது நம்பிக்கை!
காசிக்கு நிகரான தலம் என்று போற்றப்படும் நல்லூர் விஸ்வேஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு, மகா சிவராத்திரி நாளில் வந்து தரிசியுங்கள்; மங்கலகரமான வாழ்வை வரமாகப் பெறுங்கள்!
No comments:
Post a Comment