Saturday, 2 September 2017

ஆடல்வல்லான்... அற்புத தரிசனம் !


 சிதம்பரம் திருக்கோயிலில் கருவறைக்கு வலப்புறத்தில் சிதம்பர ரகசியமாகவும், பொற்கூரையின் கீழ் நடராஜப் பெருமானாகவும், ஸ்படிக லிங்கமாகவும் 3 நிலைகளில் அருள்பாலிக்கிறார் எம்பெருமான்.
இங்கே சிற்றம்பலத்துக்கு எதிரில் உள்ள எதிரம்பலம் எனும் இடத்தில்தான் நடராஜருக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதை கனகசபை என்பார்கள்.  உற்ஸவ மூர்த்தங்கள்  எழுந்தருளி யுள்ள இடம் பேரம்பலம் எனும் தேவசபை ஆகும். கொடி மரத்துக்கு தென்புறத்தில் உள் ளது தேரம்பலம். இதில், ஊர்த்துவ தாண்டவ மூர்த்தங்கள் காட்சித் தருகின்றன. இதை நிருந்த சபை என்பார்கள். மார்கழி ஆருத்ரா தரிசன மும், ஆனித் திருமஞ்சனமும் ஆயிரம் கால் மண்டபத்தில் நடைபெறும்.
 புஜங்க லளிதம், காலசம்ஹார மூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுர சம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார், ஊர்த்துவ தாண்டவர், ஆனந்த தாண்டவர் ஆகிய (நவ தாண்டவ) சிற்பங்களை தஞ்சை - திருச்செங்காட்டங்குடியில் தரிசிக்கலாம்.
 ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அருகில் உள்ளது மடவார் விளாகம். இங்குள்ள ஸ்ரீவைத்திய நாத சுவாமி ஆலயத்தில், ஒரேகல்லில் வடிக்கப் பட்ட நடராஜரின் அற்புதத் திருஉருவைத் தரிசிக்கலாம். அதேபோல், நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி சிவாலயத்தில் உள்ள நடராஜரின் சிலையும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது. இந்தச் சிலையைத் தட்டினால் வெண்கல ஓசை எழும்பும் என்பது சிறப்பு!
 சுந்தரமூர்த்தி நாயனாருக்காக ஸ்ரீநடராஜர் தமது தில்லை திருநடனத்தை காட்டியருளிய தலம் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில். எனவே, இவ்வூர் நடராஜர் `குடக தில்லை அம்பலவாணன்’ என்று சிறப்பிக்கப்படுகிறார்.
  மதுரையில் பாண்டிய மன்னனுக்காக நடராஜர் கால் மாற்றி ஆடிய அருளாடலை, பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற் புராணத்தில் 25-ம் படலத்தில் விவரிக்கிறார். மதுரை திருக்கோயில்- நடராஜரின் கருவறை வாயிலில், ஐந்தெழுத்தைக் குறிக்கும் வகையில் ஐந்து படிகள் அமைந்திருப்பது விசேஷம்!
 தேவர்களுக்காக ஆடியது 42, முருகனுக் காக ஆடியது 3, திருமாலுடன் ஆடியது 9, அம்பிகையுடன் ஆடியது 36, தானே ஆடியது 18 என மொத்தம் 108 சிவ தாண்டவங்கள் புகழ் பெற்றவையாகும்.
  ஸ்ரீநடராஜரின் பிரம்ம தாண்டவத்தை திருமுருகன்பூண்டியிலும், ஊர்த்துவ தாண்ட வத்தை அவிநாசியிலும், சுந்தர தாண்டவத்தை மதுரையிலும், அஜபா தாண்டவத்தை திருவாரூ ரிலும், ஆனந்த தாண்டவத்தை தில்லையிலும் தரிசிக்கலாம்.
  கும்பகோணம் - காரைக்கால் வழியில் எஸ்.புதூரில் இருந்து, சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருநல்லம் எனப்படும் கோனேரி ராஜபுரம். பக்தர் ஒருவருக்காக இறைவன் அடியவராக வந்து,  பஞ்சலோகக் குழம்பைக் குடித்து நடராஜ மூர்த்தமாக சமைந்ததாக தல புராணம் விவரிக்கிறது.
 சுமார் 7 அடி உயரத்தில் காட்சி தரும் இங்குள்ள ஸ்ரீநடராஜப் பெருமானின் திருமேனியில், மனிதர்களுக்கு உள்ளதைப் போன்றே ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அம்சங்கள் தென்படுகிறது!

No comments:

Post a Comment