Saturday, 2 September 2017

சனி தோஷம் நீக்கும் சிவசந்நிதி!


வினைதீர்க்கும் விருத்த கங்கா...


காசியின் புண்ணியத்தை நல்கும் திருத்தலம், தனது திருப்பெயரை மும்முறை சொன்னாலே பாவங்களையெல்லாம் பொசுக்கி வாழ்வை விருத்தியடையச் செய்யும் விருத்தகங்கா எனும் நதி பாயும் புண்ணிய பூமி, காசியைப் போன்றே காலபைரவரின் சாந்நித்தியம் பெற்ற க்ஷேத்திரம், நம் சங்கடங்களையும் ஜாதகத்தில் தன்னால் ஏற்படும் குறைபாடு களையும் நீக்கி சந்தோஷத்தை வாரி வழங்கும் சனி பகவானின் திருவருள் பொங்கிப்பெருகும் பெரும் பதி... இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிவனார் ஸ்ரீ சங்கர நாராயணர் எனும் திருநாமத் துடனும், அம்பிகை ஸ்ரீநாராயணி அம்பாள் எனும் திருப்பெயருடனும் கோயில் கொண் டிருக்கும் திருவூர் சனீஸ்வர வாசல். 
தற்போது 'காரையூர்’ என்றே இதை அழைக் கிறார்கள். திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது காரையூர்.
ஒருமுறை, நளமகாராஜனைப் பிடிப்பதற்காக திருநள்ளாறு நோக்கிப் புறப்பட்டார் சனி பகவான். இலக்கை அடைய வெகு தூரம் இருக்கும் நிலையில், இருள்கவியத் தொடங்கி விட்டது. எனவே, சனி பகவானின் காக வாகனத்துக்குப் பார்வை மங்க ஆரம்பித்தது. வழியில் எங்கேனும் தங்க வேண்டிய நிலை. அப்போது, பூமியில் சிவாலயம் ஒன்று தென்படவே, அந்த இடத்திலேயே தரையிறங் கினார் சனிபகவான்.
இரவில் அங்கு தங்கியிருந்தவர் காலையில் எழுந்தபோது, கோயிலின் எதிரில் விருத்தகங்கா பாய்வதைக் கண்டார். தனது வாகனத்துடன் அதில் நீராடி, அந்தத் தலத்தில் கோயில் கொண்டிருந்த சங்கரநாராயணரையும் நாராயணி அம்பாளையும் வழிபட்டு மகிழ்ந்தார். இங்ஙனம், சனி பகவான் தங்கி வழி பட்டதால், 'சனீஸ்வர வாசல்’ என்ற திருப் பெயர் கிடைத்தது அந்தத் தலத்துக்கு. சனி பகவானுக்கு மந்தன், அனிதன், சாயாபுத்திரன் எனப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று காரி. இதையொட்டியே காரையூர் எனும் பெயரும் வந்ததாகச் சொல்கிறார்கள். இவ்வூரின் மகிமையைப் பற்றிப் பலவாறு சிறப்பிக்கின்றன புராணக் கதைகள்.
ஒருகாலத்தில், காசியின் ராணியாகத் திகழ்ந்த சம்யுக்தை என்பவளிடம் மந்திரை என்பவள் பணிபுரிந்து வந்தாள். அவள் மகத இளவரசனான சுதாங்கனைக் காதலித்து வந்தாள். ஒருநாள், ராணியும் அரசனும் அந்தப் புரத்தில் தனித்திருந்த வேளையில், அவர்களின் அனுமதி இல்லாமல் நுழைந்து விட்டாள் மந்திரை. இதனால் கோபம் கொண்ட ராணி, 'ஆயுள் முழுக்க நீ கன்னியாகவே திகழ்வாய்’ என்று மந்திரையைச் சபித்துவிட்டாள்.
இதனால் பெரிதும் வருந்திய மந்திரை, சுதாங்கனை அழைத்துக் கொண்டு சாப விமோசனம் தேடியலைந்தாள். அப்போது, சலந்திரன் எனும் அசுரன் அவளின் சாப விமோசனத்துக்குத் தான் வழிகாட்டுவதாகக் கூறி, அவர்களை ஏமாற்றி அழைத்துச் சென்று, தருணம் வாய்த்தபோது இருவரையும் விழுங்கி விட்டான். அசுரனின் வயிற்றுக்குள் சென்ற இருவரும், சிவாம்சமான பைரவ மூர்த்தியால் அசுரனின் பெருவயிறு கிழிக்கப்பட்டு வெளியேறினர் என்கிறது புராணம். அப்போது, பூமி அதிர விழுந்த அசுரன், மீண்டும் எழுந்து நின்றான். அவனை மீண்டும் பூமியில் மூன்று இடங்களில் விழும்படி சாய்த்தார் பைரவர்.
உயிர்விடும் தருணத்தில், 'பூமியில் விழும் எனது பாகங்கள் வணக்கத்துக்கு உரியதாக வேண்டும்’ என பைரவரிடம் பிரார்த்தித்தான் அசுரன். பைரவரும் அவனை மன்னித்து, வீரனார் எனும் பெயருடன் இப்பகுதி மக்க ளின் குலதெய்வமாகத் திகழ அருள் புரிந்தார். அப்படி, சலந்திரனின் தலைப்பகுதி விழுந்த இடம் சனீஸ்வர வாசல். கழுத்து முதலான உடல் பகுதி தென்பாதி கிராமத்திலும், பாதப் பகுதி நாகூர் அருகிலுள்ள தெத்தி வடகுடியிலும் விழுந்தனவாம். இந்தப் பகுதிகளில் குல தெய்வ மாக வணங்கப்படுகிறான் சலந்திரன்.
அதையடுத்து, சனீஸ்வர வாசலாகிய காரை யூர் தலத்தில், விருத்தகங்காவில் நீராடி, சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவதுடன், இத்தலத்தில் அருளும் சங்க ரநாராயணரையும் நாராயணி அம்பாளையும் தரிசித்து வணங் கினால் விமோசனம் கிடைக்கும் என்று மந்திரைக்கும் சுதாங்கனுக்கும் அருள்பாலித்தார் பைரவர். அதன்படி, அவர்கள் இருவரும் இந்தத் தலத்துக்கு வந்து இறைவழிபாடு செய்து நலம் பெற்றனர்.
அவர்களுக்குத் திருவருள் புரிந்ததோடு, தானும் இந்தத் தலத்தில் எழுந்தருளிய பைரவ மூர்த்தி, சனீஸ்வரரின் சந்நிதிக்கு அருகில் மேற்கு முகமாகத் தனிச்சந்நிதி கொண்டிருக் கிறார். இவர், உலக வாழ்க்கையில் மனிதர்களின் நிலை பற்றி உபதேசிப்பதாக ஐதீகம்.
வாரணாசியில் கங்கை பாய்வது போன்று இங்கே விருத்தகங்காவும் வடக்கு தெற்காகப் பாய்கிறது. 'விருத்தகங்கா என்று இதன் பெயரை மும்முறை சொன்னாலே போதும்; நம் பாவங்கள் பொசுங்கி, வாழ்க்கை விருத்தி அடையும்’ என்கின்றன ஞான நூல்கள்.
தேய்பிறை அஷ்டமியில்...
வாரணாசியில் கங்கைக்கரையில் பைரவரும் சிவனாரும் அம்பிகையும் அருள்வதுபோல், இங்கேயும் ஸ்வாமி அம்பாள் ஆகியோருடன் யோக பைரவரும் அருள்பாலிப்பதால், காசிப் புண்ணியம் இங்கும் கிடைக்கும் என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
இவருக்குத் தேய்பிறை அஷ்டமி மற்றும் பௌர்ணமி தினங்களில் பைரவ ஹோமம் நடைபெறும். அப்போது, செவ்வரளி மலரால் இவருக்கு அர்ச்சனை செய்து, புனுகு சாற்றி வழிபட்டால், வறுமை நீங்கும்; பொருளாதார நிலை உயரும் என்பது நம்பிக்கை.
மேலும், இந்த ஆலயத்தில் வலம்புரி கணபதி, குரு, லக்ஷ்மி நாராயணர், முருகப் பெருமான், சண்டிகேசர், நந்திதேவர் ஆகி யோரையும் தரிசிக்கலாம்.
மாங்கல்ய தோஷம் விலகும்!
சனிக்கிழமை அல்லது ஜென்ம நட்சத்திர திருநாளில் காலையில் இந்த திருத்தலத்துக்கு வந்து, நல்லெண்ணெய் தேய்த்து 'விருத்தகங்கா’ நதியில் நீராடி, நீல வண்ண கரை இடப்பட்ட வஸ்திரத்தை வேதம் அறிந்தவருக்கு தானம் செய்வதுடன், நீல மலரால் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து, எள் அன்னம் படைத்து, சனி கவசம் மற்றும் ஷோடச நாம துதி படித்து வழிபடுவதால், மாங்கல்ய தோஷங்கள் விலகும்.
ஆயுள் பலம் பெற...
பொதுவாக, மனிதர்களின் ஆயுள்காலத்தில் மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என மூன்று முறை சனிபகவான் வந்து செல்வார். அவர் அமர்கின்ற இடத்தின்படி ஆயுள் நீட்டிப்பைத் தருவார் என ஞானநூல்கள் தெரிவிக் கின்றன. ஒருவேளை, சனியின் பாதிப்பால் ஆயுள் பலத்தில் பங்கம் இருந்தால், இந்தத் தலத் துக்கு வந்து, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து, எள் முடிப்பு தீபம் ஏற்றி, சனிக் கவசமும், ஷோடச  நாமாவளியும் படித்து வணங்குதல் வேண்டும். இதனால் ஆயுள் பலம் நீடிக்கும் என்பது நம்பிக்கை.
அதே போன்று, இங்கே எள் தீபம் ஏற்றிவைத்து சனீஸ்வரரை வழிபடுவதுடன் சங்கர நாராய ணரையும், நாராயணி அம்பா ளையும், பைரவரையும் மனம் உருகப் பிரார்த்தித்துச் சென்றால் தொழில் யோகம் ஸித்திக்கும்; வியாபாரத்தில் இருந்துவந்த தடை களும், பெரு நஷ்டங்களும் விலகி, லாபம் பெருகும் என்பது நம்பிக்கை.
நமது வாழ்வு சிறக்கவும், குடும்பமும் சந்ததியும் செழிக்கவும் முன்னோரின் ஆசியும் அருளும் அத்தியாவசியம். அவர்களின் அருளைப் பெறுவதற்கு ஆடி, தை மற்றும் மஹாளய அமாவாசை புண்ணிய தினங்கள் மிக உகந்தவை. இநந்த் தினங்களில் தீர்த்தக் கரை களில் தர்ப்பணம் அளித்து, முன் னோரை வழிபடுவதால், அவர்களின் அனுக்கிரகத்தை பரிபூரணமாகப் பெறலாம்.
 மஹாளய அமாவாசை நாளில் இந்தத் திருத்தலத்துக்கு வந்து விருத்த கங்காவில் நீராடி முன்னோரை வழிபடுவதுடன், ஆலய தெய்வங் களையும் தரிசித்து வரம்பெற்றுச் செல்லலாம்.

உங்கள் கவனத்துக்கு...
திருவாரூர், திருவிற்குடி, திருப்பள்ளி முக்கூடல், திருக்கொள்ளிக்காடு, திருச்செங்காட்டாங்குடி ஆகிய புகழ்பெற்ற தலங்களுக்கு நடுவே அமைந்துள்ளது காரையூர் எனப்படும் சனீஸ்வர வாசல் திருத்தலம்.
திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ.தொலைவு பயணித்தால், காரையூர் பஸ் நிறுத்தம் வரும். அருகிலேயே இந்த ஆலயத்தைத் தரிசிக்கலாம்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், விசேஷ பூஜை களும் வழிபாடுகளும் நடந்து வந்த சனீஸ்வர வாசல் திருக்கோயில் கோபுரங்கள், தற்போது சற்று சிதிலம் அடைந்துள்ளன. கோடை காலத்தில் இத்தலத்தைத் தரிசிக்க வருவோர், விருத்தகங்கா நடுவே யுள்ள ஊற்றில்தான் நீராட வேண்டும். இந்தக் கோயிலுக்குச் செல்லும் அன்பர்கள் பூஜைப் பொருட்களை திருவாரூர், கங்களாஞ்சேரி ஆகிய ஊர்களில் வாங்கிச்செல்வது சிறப்பு.

No comments:

Post a Comment