பூராடம் நட்சத்திரத்தைப் 'பூர்வாஷாடம்’ என்கிறது வேதம். 'பூராடத்தின் கழுத்தில் நூலாடாது’ என்றொரு சொல்வழக்கு உண்டு. இதற்கு, 'கழுத்தில் இருக்கும் தாலி நூல் ஆடாது அறுந்துவிடும்’ எனும் விளக்கத்தை ஏற்பார்கள். ஆனால்... 'ஆடாமல்- அசையாமல் நிலைத்து இருக்கும்’ என்ற பொருளில் வந்தது அந்த வழக்கு. நடைமுறையிலும் சுமங்கலியாக நீண்டநாள் வாழ்க்கையை சுவைக்கும் வாய்ப்பு, பூராடத்துக்கு கிடைத்த அளவு மற்ற நட்சத்திரங்களுக்கு இல்லை.
நட்சத்திரம் ஒருவரை விதவை ஆக்காது. பெண் ஒருத்தி விதவை ஆவதற்குக் காரணம், கணவனது ஆயுளின் குறைவே ஆகும். அதை பூராடம் நிர்ணயிக்காது. கணவனின் ஜாதகமே அவனது ஆயுளை இறுதி செய்யும். அல்ப ஆயுள் உள்ள ஒருவனுக்கு வாக்கப்பட்டவளுக்கு பூராடம் இருந்து விதவை ஆகியிருக்கலாம். அங்கும் பூராடம் காரணம் இல்லை!
'ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்’ என்றொரு சொல்வழக்கு உண்டு! ஆயிரக்கணக்கான மூலிகை வேர்களை சதைத்து சாறெடுத்து கஷாயமாகவோ, லேகியமாகவோ, சூர்ணமாகவோ மாற்றிப் பழக்கப்பட்டு, அந்த மருந்தை பயன்படுத்தி பல பிணிகளை அகற்றியவன் அரை வைத்தியன். அவன் முழு வைத்தியனாவதற்கு இன்னும் பல வேர்களை அழித்து மருந்தாக்கிப் பயன்படுத்தி தேர்ச்சி பெற வேண்டும் என்று பொருள்.
சம்ஸ்கிருதத்தில் வேர்களில் இருக்கும் விஷாம்சத்தை அகற்றி மருந்தாக மாற்றுவதை சோதனமாரணம் என்று சொல்வதுண்டு. 'மாரணம்’ என்றால் அதன் தமிழாக்கம் கொல்லுதல் என்று இருக்கும். அதுதான்... ஆயிரம் பே(வே)ரைக் கொன்றவன் அரை வைத்யன்! இதுபோன்று வழக்குச் சொல்லில் ஏற்பட்ட தவறான விளக்கம் பூராடத்தை தவறாகப் பார்க்கிறது.
பூராட நட்சத்திரத்தின் தேவதை ஜலம். அதாவது 'அப்பு’ என்கிறது வேதம். ஜீவன ஆதாரமான நீர் நிரம்ப கிடைக்க வகை செய்கிறது அந்த தேவதை. பூமி, இடைவெளி, மேலுலகம் ஆகியவற்றில் தென்படும் நீர் படைப்புக்கும், காப்புக்கும், மறைவுக்கும் காரணமாக இருக்கிறது. ஆறு, குளம், கடல், குட்டைகளில் நிரம்பியிருக்கும் நீரானது உயிரினங்களுக்குப் பயன்பட்டு வாழ்வளிக்கிறது. அத்துடன் இணைந்த 'அப்பு’ தேவதை எங்களை வளமாக்கி மகிழவைக்கட்டும் எனும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு (யாதிவ்யா ஆப: பயஸா...).
நட்சத்திரத்தின் ஒரு பக்கம் எதிரிகளை வீழ்த்தும் பலம் இருக்கும்; மறுபக்கம் போர் செய்யும் திறமை இருக்கும் என்கிறது வேதம். இது, தனுசு ராசியில் பரவியிருக்கும் நட்சத்திரம். தனுசுக்கு அதிபதி குருவானாலும், அதன் நான்கு பாதங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோரின் தொடர்பு உண்டு. எனவே திறமை, செயல்பாடு, ஊக்கம், பொருளாதாரம் ஆகியவற்றில் தன்னிறைவு பெற்று மகிழ்வதற்கு வகை செய்யும் பூராட நட்சத்திரம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதலில் சுக்கிர தசையை சந்திப்பர். 20 வருடங்கள் நீண்டு இருக்கும் தசை. பரணிக்கும் பூரத்துக்கும் இது பொருந்தும். முதல் தசாநாதன் சுக்கிரனாக வருவதால் 3-ஆம் பாதத்தில் பிறந்தவன் செல்வச் சீமானாகவும், உலகவியல் இன்பத்தை சுவைத்து மகிழ்பவனாகவும் வாழ வாய்ப்பு கிடைத்துவிடும். களத்ரகாரகனாக சுக்கிரன் இருப்பதால் தாம்பத்திய சுகத்திலும் நிறைவை அளிப்பான்.
கால புருஷனின் ஐந்துக்கு உடைய சூரியன், ஏழுக்கு உடைய சுக்கிரன்- இவர்கள் இருவரும் நட்சத்திர பாதங்களோடு இணைந்து இருப்பது செல்வாக்கையும் வேலைவாய்ப்பையும் அளித்து மேம்படுத்தும். ராசியின் மையப் பகுதியைப் பிடித்திருக்கும் நட்சத்திர பாதங்கள் இளமையிலேயே இன்பத் தைச் சுவைக்கும் பாக்கியத்தை அளிக்கும். இந்த நால்வரும்... அதாவது சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் நிறைவான வாழ்வை அளித்து மகிழ்விப்பர் என்ற பெருமையும் பூராடத்துக்கு உண்டு என்கிறது ஜோதிடம். பூராடத்தின் தேவதை நீர். சுக்கிரனும் நீர் வளத்தைப் பெருக்குபவன். நீரில் கலந்த பொருள் முற்றிலும் பரவி அந்தப் பொருளின் செழிப்பை வளர்த்துவிடும். நீரில் கலந்த எண்ணெய், ஒரு நொடியில மொத்த நீரிலும் பரவிவிடும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.
'விருப்பமான மனைவியைப் பெற்று மகிழ்வான், சுயமரியாதை யைக் காப்பாற்றுவான், நல்ல நண்பர்களோடு திகழ்வான்’ என்று பூராடத்தில் பிறந்தவனின் குணாதிசயங்களைக் கூறுவார் வராஹமிஹிரர். முதல் பாதத்தில் - உயர்ந்த சிந்தனையால் தன்னை உயர்த்திக் கொள்வான். 2-ல் அரசனுக்கு ஈடான செல்வாக்குப் பெறுவான். 3-ல் எல்லோருக்கும் பிரியமாக நடந்து கொள்வான். 4-ல் கலைகளில் ஆர்வத்துடன் திகழ்வான் என்று பிரஹத் ஸம்ஹிதை வரையறுக்கும்.
தன்மானம் காப்பவன், மனச்சாட்சியுடன் நடப்பவன், திறமை இருந்தும் உரிய தருணத்தில் பயன்படுத்தத் தெரியாதவன் என்று அவனது இயல்பை வரையறுக்கிறது ஜாதகபாரிஜாதம்.
பெண்ணாசையில் பிடிப்பு, குறைந்த குழந்தைச்செல்வம், எண்ணத்திலும் செயலிலும் பாகுபாடு, பணப் பற்றாக்குறை, பிறர் சார்ந்து வாழும் நிலை... இத்தனையையும் முதல் பாதத்தில் பிறந்தவனிடம் காணலாம். 2-வதில் திடசித்தம், நண்பர்களை ஈர்க்காதவன், பரநிந்தை பரிஹாசம், கர்வம், கோபம் ஆகியன தென்படலாம். 3-வதில் ஈவு - இரக்கம், தவறான எண்ணங்களில் பிடிப்பு, கட்டழகு, அதிர்ஷ்டம் உடையவன் ஆகியவற்றைப் பெறுபவன். 4-ல் தகப்பன் இழப்பு, கொடைவள்ளல், தோல் வியாதி, சுடுசொல், பிறரை துன்புறுத்துவதில் மகிழ்ச்சி ஆகியவை தென்படும் என்கிறது பலசாரஸமுச்சயம்.
9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு நட்சத்திரத் துக்குத் தொடர்பு இருக்கும். மாறுபட்ட இயல்பை உடைய கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகிய வற்றின் தாக்கத்தின் தரத்தை வைத்து மாறுபட்ட குணாதிசயங்கள் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவனில் இருக்கும். பலபேருடைய கண்ணோட்டத்தில் மாறுபட்ட கருத்துக்கு அது காரணமாகிறது. இது நிறையே தவிர குறையல்ல. சந்தர்ப்பத்தை ஒட்டி மனித சிந்தனை மாறுவது உண்டு. அதன் தாக்கம் நட்சத்திரத்திலும் தென்படும்.
'அம் அத்ப்யோநம:’ என்று சொல்லி 16 உபசா ரங்களை செய்யவும். 'ஆபோபத்ரா’ என்கிற மந்திரம் ஓதியும் வழிபடலாம். 'பூர்வாஷாட நக்ஷத்திர தேவதாயைநம:’ என்று சொல்லி அடிபணிந்து வணங்கலாம். 'ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி சிந்திதம் ஸகலம் தேஹி பூர்வாஷாட நமோஸ்துதே’ - இந்த செய்யுளைச் சொல்லி கைநிறைய புஷ்பத்தை அள்ளி அளித்து வழிபடலாம். அப் தேவதையை நினைவில் இருத்தி, 'அம் அத்ப்யோ நம:’ என்று மனதில் பலமுறை அசைபோட்டு வழிபட்டால் விருப்பம் ஈடேறும்.
தேவதையில் மனம் லயிக்க வேண்டும். 'லயனம்’ மற்ற அலுவல்களில் மனம் ஈடுபடாமல் தடுத்துவிடும். தினம் தினம் சிறுகச் சிறுக பயிற்சியில் வளர வேண்டிய ஒன்று அது. வேதம் உபாசனைக்கு முதல் இடம் தரும். உபாசனையை பிற்பாடு வந்த சிந்தனையாளர்கள் பக்தியாக மாற்றி எளிமையாக்கினார்கள். 'பக்தி’ எல்லோருக்கும் பிடிக்கும். பொறுப்பில்லாத சுதந்திரம் அதில் உண்டு. வேள்வியிலும், ஆன்ம சிந்தனையிலும் அதாவது கர்ம மார்க்கத்திலும், ஞான மார்க்கத்திலும் பொறுப்பு உண்டு; சுதந்திரம் இருக்காது. ஆகையால் அதில் நமக்கு பிடிப்பு இல்லை. பொறுப்பை அவனிடம் ஒப்படைத்துவிடு. எல்லாம் அவன் செயல். அவனில் ஒன்றிவிடு என்று சொல்லும்போது, செயல்பாட்டில் இருந்து விடுதலை கிடைப்பதால் அதை ஏற்கிறோம். நாம் முயற்சி செய்யாமலே... பகவானை நினைத்தால் முயற்சியின் பலனைத் தந்துவிடுவான் என்று சொல்லும்போது, நம் மனதுக்கு இதமாக இருக்கிறது.
இன்றையச் சூழலில் கடவுளை ஒருமுகமாக நினைப்பது கடினம். ஆசாபாசங்களும் எதிர்பார்ப்புகளும் நிரம்பி வழியும் நிலையில் இருக்கும் மனம், அதை துறந்து கடவுளில் லயிப்பது மிகவும் கடினம். விஞ்ஞான உலகம் காட்டும் செப்படி வித்யையில் மதிமயங்கிய மனம் அதை விட்டு வெளிவர இயலாமல் தவிக்கும். அந்த மனதிடம் கடவுள் பெருமையைச் சொன்னால் வாங்காது. ஒப்புக்கு நாமாவை வாய் சொல்லுமே தவிர, மனதுக்கு சம்பந்தம் இருக்காது. சம்பந்தம் இல்லாவிட்டாலும்... எளிதாக இருப்பதாலும் சுமை இல்லாத தாலும் நாம் ஏற்க ஏதுவாகிவிடும். உடலுறுப்புகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டில், மனம் வேறு வழியின்றி கடவுளை நெருங்கும். செயல்பாடுதான் அதாவது வழிபாடு தான் நம்பிக்கைக்கு உகந்தது.
No comments:
Post a Comment