Tuesday, 5 September 2017

ஆடல் காணீரோ...


டராஜர் திருவுருவில், 16 இதழ்களைக் கொண்டதாகத் திகழும் தாமரைப் பீடம், மனிதனுடைய இதய கமலத்தைக் காட்டுகிறது. இறைவன், நம் இதய கமலத்தில், கண்ணுக்குத் தெரியாத நிலையில் நாட்டியமாடுகிறான். அவனே நடராஜராக வெளிப்பட்டு, கண்ணால் தரிசிக்கத்தக்க வகையில் அருள் நடனம் புரிகிறான் என்பது தத்துவம்.

மதுரை தரிசனம்!
எல்லா தலங்களிலும் வலக்காலை ஊன்றி ஆடும் ஸ்ரீநடராஜப் பெருமான், மதுரை வெள்ளி அம்பலத்தில், பாண்டிய மன்னனின் வேண்டு கோளுக்கு இணங்கி, கால் மாற்றி ஆடும் கோலத்தில் அருள்கிறார்.
சர்ப்ப நடராஜர்
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவாசி எனும் தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமாற்றுரைத்த வரதீஸ்வரர் ஆலயம். இங்கே, தலையில் சேர்த்துக் கட்டிய சடா முடியுடன், நாகத்தின்மீது ஒரு காலை ஊன்றி நடனமாடும் விசேஷ கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீநடராஜர். இவரை, ஸ்ரீசர்ப்ப நடராஜர் என்கிறார்கள்.
உயரமான நடராஜர்
உலகிலேயே உயரமான நடராஜர் விக்கிரகம் நெய்வேலியில் உள்ளது. இவரது உயரம் சுமார் 10 அடி, 1 அங்குலம். அகலம் 8 அடி 4 அங்குலம். எடை 2,420 கிலோ. ஐம்பொன்னால் ஆன இந்தத் திருவுரு, கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. அருகில், அருளும் அம்பிகை விக்கிரகம், சுமார் 7 அடி உயரமும், 750 கிலோ எடையும் கொண்டது.
மரகத நடராஜர்
திரு உத்திரகோச மங்கை தலத்தில், மரகத நடராஜரைத் தரிசிக்கலாம். எப்போதும் சந்தனக் காப்புடன் அருளும் இவருக்கு, திருவாதிரை அன்று புது சந்தனக் காப்பு சாத்தப் பெறும்.
நடராஜர்
ஒரே காலில் நிற்கும் சிவபெருமான் திருவடிவம் நடராஜர் வடிவமாகும். ஒரே காலை உடைய சிவன் 'ஏகபாதர்’ எனப்படுகிறார். வடமொழியில் 'ஏகம்’ என்றால், ஒன்று என்று அர்த்தம். ஒரு காலும், பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று உடல்களுமே உடையதாக அமையும் திருக்கோலம் 'ஏகபாத திருமூர்த்தி’ எனப்படும்.
ஆதி சிதம்பரம்
காவிரி, கடலோடு கலக்கும் இடத்தில் உள்ள திருவெண்காடு திருத்தலத்தை ஆதி சிதம்பரம் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். இந்தத் திருத்தலத்தை புதன் கிரக தோஷ பரிகார தலமாகச் சொல்வார்கள்.
சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம், காளி நிருத்தம், கவுரி தாண்டவம், முனி நிருத்தம், சந்தியா தாண்டவம், திரிபுரத் தாண்டவம், புஜங்கலலிதம், சம்ஹார தாண்டவம், பைஷாடகாம் ஆகிய ஒன்பது தாண்டவங்களை இங்குதான் ஆடி அருள்புரிந்தாராம். ஸ்ரீநடராஜர் சிதம்பரத்தில் நிர்க்குணமாகவும், திருவெண்காட்டில் சகுணமாகவும் நடனமா டியதாகப் புராணங்கள்  விளக்கிக் கூறுகின்றன.

No comments:

Post a Comment