Friday, 4 August 2017

திருப்பழனம்

 
சிலாத முனிவரின் மகன் நந்தி. குறைந்த அளவு ஆயுள் கொண்ட இவர், சிவபெருமானைப் பற்றிக் கொண்டார். சிவனருளால், சிவபெருமானுக்கு அருகிலேயே இருக்கும் பேறு பெற்றார். சிவ கணங்களுக்குத் தலைவரும் ஆனார். நந்தி தேவரை, தம் மகனாக ஏற்றுக் கொண்ட ஐயாறப்பர், அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார்.
பெண் பார்த்து நாள் குறித்து எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால், ஒரு பிரச்னை. போதுமான செல்வம் இல்லை. பொன்னுக்கும் பொருளுக்கும் வழி தெரியவில்லை. மகனின் கல்யாணம் குறித்து மனம் கலங்கினார் ஐயாறப்பர். இதைத் தெரிந்து கொண்ட பக்கத்து ஊர்களின் சிவபெருமான்கள் உதவிக்கு வந்தனர். எப்படி? ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று இருந்தது. அவரவர்கள், தங்களால் முடிந்ததைக் கொடுத்தனர். நந்தியின் திருமணமும் நலமாக நடைபெற்றது.
திருமணம் என்றால், விருந்துதான் பிரதானம். விருந்துக்கு முதலில் சோறு தேவை. சோற்றுத்துறையே இருக்கும்போது சோற்றுக்கு என்ன கவலை? அருகில் உள்ள திருச்சோற்றுத்துறையில் இருந்து சோறு கிடைக்க, திருநெய்த்தானத்தில் இருந்து நெய் வந்தது. உண்ட வாய்க்குப் பண்டம் வேண்டாமா? திருப்பழனம், பழங்களை அனுப்பித் தந்தது.
சாப்பாடு கிடக்கட்டும்! மங்கலமாக அலங்கரிக்க மலர்கள் வேண்டுமே? விட்டு விடுவாரா பூந்துருத்திப் பெருமான்! திருப்பூந்துருத்தியில் இருந்து பூக்கள் வந்தன.
கல்யாணம் என்றால் பொன்னும் நகையும் வேண்டாமா? விசனத்தை விட்டு விடுங்கள்... கண்டியூரிலிருந்து மகர குண்டலங்களும் மற்ற நகைகளும் வந்தன.
கல்யாண ஏற்பாடுகள் கனகச்சிதம். எல்லாம் சரி; திருமணம் நடக்கும்போது, மறை ஓதி மங்கல அக்னி வளர்க்க வேண்டியவர்கள் எங்கே? இதோ, வந்து விட்டார்கள் திருவேதிக்குடியில் இருந்து! அப்புறம் என்ன? கல்யாணம்- கச்சேரி எல்லாம் ஜாம்ஜாம்தான்!
திருமணம் முடிந்து வந்து ‘அப்பாடா!’ என்று காலை நீட்டிக் கொண்டார் ஐயாறப்பர். அம்மையும் வந்து பக்கத்தில் அமர்ந்தார். கல்யாணக் களைப்பு, பரமனாரின் முகத்தில் படர்ந்து தெரிந்தது.
“நல்லவேளை தேவி. ஒரு கல்யாணத்துக்கே உன்னைப் பிடி, என்னைப் பிடி என்றாகி விட்டது. விநாயகன் திருமணம் வேண்டாம் என்றானோ பிழைத்தேனோ! முருகன் நமக்குச் சிரமமே தரவில்லை. அவனது ஒரு கல்யாணத்தை தேவேந்திரன் செய்து விட்டான்; மற்றொன்றை மகனாகவே செய்து கொண்டான். வசதியான பிள்ளைகள்.”
“அவர்களை வம்புக்கு இழுக்கவில்லை என்றால் பொழுது போகாதோ?!’’
“சும்மாவா சொன்னார்கள் பூலோகக் குடும்பிகள் _ வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்று!”
திரிலோக குடும்பியான சிவனார் ஆதங்கப்பட, பார்வதிதேவியோ அவரைத் தொடர விடாமல் அவசரப் படுத்தினார். “உட்கார்ந்தால் எப்படி? அடுத்த வேலையைத் தொடங்க வேண்டாமா?”
சிவனார் பதறிப் போனார். ‘‘அடுத்த வேலையா? அதென்ன?’’
“திருமணத்துக்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்லி, மரியாதை செய்ய வேண்டாமா?”
“அது வேறு இருக்கிறதா! சரி தேவி; ஏற்பாடுகளைச் செய். எல்லோரையும் பார்த்துச் சொல்லிவிட்டு வருவோம்.”
“நந்திகேஸ்வரனையும் அழைத்துக் கொண்டு போக வேண்டும். அப்போதுதான் அவனுக்கும் சரியாகப் பரிச்சயம் ஏற்படும்.” சொல்லிக் கொண்டே எழுந்து சென்ற அம்மை, விடுவிடுவென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
மகனின் திருமணத்துக்கு உதவிய பெருமான்களுக்கு ஐயாறப்பர் நன்றி சொல்லி, மரியாதை செய்வதும், ஒவ்வோர் ஊராக அவர் செல்லச் செல்ல, அந்தந்த ஊர்ப் பெருமான்கள் ஆங்காங்கே அவரோடு சேர்ந்து கொள்வதும், ஒரு கட்டத்தில் ஏழு ஊர்களின் பெருமான்களும் ஒருசேர பக்தகோடிகளுக்குக் காட்சிக் கொடுப்பதுமாக ஏகக் கொண்டாட்டமானது ஏழூர் பெருவிழா!
திருவையாறு மற்றும் அதைச் சுற்றியிருக்கும் மற்ற ஆறு சிவத் தலங்களில் நடைபெறும் ‘சப்த ஸ்தானப் பெருவிழா’ விமரிசையானது. இதனாலேயே இந்த ஏழு சிவத் தலங்களும், ‘சப்த ஸ்தானத் தலங்கள்’ எனப்படுகின்றன. நாமும் சப்த ஸ்தானத் தலங்களை நோக்கி பயணத்தைத் தொடர்வோமா?
ஏழூர்ப் பெருவிழா நடைபெறும் தலங்களுள் முதலாவது- திருப்பழனம் (திருவையாற்றையும் சேர்த்துக் கணக்கெடுத்தால், இரண்டாவது). இப்போது சின்னஞ் சிறு கிராமம். திருவையாறு- கும்பகோணம் சாலையில் திருவையாறில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது.
திருவையாறிலிருந்து மிகச் சுலபமாக திருப்பழனத்தை அடையலாம். திருநாவுக்கரசு பெருமான், திருப்பழனம் சென்று வரும்போதுதான் திங்களூரில் அப்பூதி அடிகளைச் சந்தித்தார். அப்பூதி அடிகளின் மகன் மூத்த திருநாவுக்கரசு பாம்பு தீண்டி இறந்தபோது, பதிகம் பாடி பாம்பு விஷத்தை இறங்கச் செய்தார். பின்னர், அப்பூதி அடிகளோடும் பிறரோடும் மீண்டும் திருப்பழனம் சென்றார். திங்கள் வழிபட்ட தலமான திங்களூர், நவக்கிரகத் தலங்களுள் (சந்திரனுக்கான தலம்) ஒன்றாகப் பெருமை பெற்று விட்டது. திங்கட்கிழமை- சந்திர பரிகாரம் என்றெல்லாம் மக்கள் கவனம் சென்று விடுவதால், திங்களூரில் கூட்டம் இருந்தாலும் திருப்பழனத்துக்கு வருபவர்கள் குறைவு. பழனம், கதலி வனம், கௌசிக ஆசிரமம், பிரயாணபுரி என்ற பெயர்களும் திருப்பழனத்துக்கு உண்டு.
கிழக்கு ராஜ கோபுரம். வெகுசில உருவங்களே காணப்பட்டாலும் கன கம்பீரமாக இருக்கின்றன. ஆங்காங்கே தெரியும் பழைமை, கோபுரத்தின் கம்பீரத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.
உள்ளே நுழைந்தால், இடப் பக்கத்தில் ஒரு சிறிய மதில்; நந்தவனப் பகுதியைப் பிரிக்கிறது. வலப் பக்கம், குளம் போல ஒரு பள்ளம். பாழடைந்து கிடக்கும் இதுவே மங்கள தீர்த்தம்.
உள் கோபுரம் சிறியது. தாண்டிச் சென்றால், வெளிப் பிராகாரம். இந்த கோபுரத்துக்கு எதிரில் பலி பீடம், நந்தி. கொடிமரம் இல்லை.
பிராகார வலத்தைத் தொடங்கலாமா?
வாழை மரங்கள் செறிந்து விளங்கியதால், இந்த ஊருக்கு கதலி (வாழை) வனம் என்ற பெயர் ஏற்பட்டது. இப்போது பார்த்தால், நிறையத் தென்னை மரங்கள்! வெளி கோபுரம் தாண்டி உள்ளே வரும்போது, மதில் ஒன்று மறைத்ததே, அந்த இடத்திலும், அதை ஒட்டினாற் போல பிராகாரத்தில் உள்ள இடத்திலும் தென்னை மரங்கள்.
பிராகாரத்தின் கிழக்குச் சுற்றிலிருந்து தெற்குச் சுற்றுக்குள் திரும்பினால், கோயிலுக்கான தெற்கு வாசல். அதை ஒட்டி, சிறிய பதினாறு கால் மண்டபம். பிராகாரத்தில் தொடர்ந்து நடந்தால், மேலும் தென்னைகள். என்ன இது, கதலி வனத்தில் வாழைகளைக் காணோமே என்று எண்ணிக் கொண்டே நடக்க... நம்மைத் தாண்டி, பெண்மணி ஒருவர் வேக வேகமாகச் செல்கிறார். கையில் ஒரு கத்தி வேறு! என்னவென்று எட்டிப் பார்க்கும் கண நேரத்தில், வாழை இலையுடன் திரும்புகிறார்; நட்பாகச் சிரிக்கிறார். பிராகாரத்தின் தென்மேற்குப் பகுதியில், வாழை மரங்கள் இருக்கின்றன. இந்த மரங்களைப் பார்க்கும்போது, மூத்த திருநாவுக்கரசின் நினைவு வருகிறது.
அப்பர் சுவாமிகளுக்கு அமுது (உணவு) படைப்பதற்காகத்தான், அவன் தாயார் அவனை வாழை இலை பறித்து வர அனுப்பினார். வாழை இலை பறிக்கும்போதுதான் நாகம் தீண்டியது.
மூத்த திருநாவுக்கரசின் நினைவுகளைச் சற்றே ஒதுக்கி விட்டுப் பிராகார வலத்தைத் தொடர்கிறோம். மேற்குச் சுற்றெல்லாம் ஆங்காங்கே மரங்கள், புதர்கள். வடக்குச் சுற்றில் திரும்புவதற்கு யத்தனிக்க... வடமேற்கு மூலையில், கிழக்குப் பார்த்ததாக ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி. வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான். ஆறு முகங்கள் மற்றும் பன்னிரு கரங்களுடன் ஷண்முகக் கோலம் காட்டுகிறார். வடக்குச் சுற்றில் தொடர்ந்து நடந்தால், அம்பாள் சந்நிதி.
அம்பாளுக்குப் பெரியநாயகி என்று திருநாமம். நின்ற திருக்கோலத்தில் பாசாங்குச நாயகியாக தரிசனம் தருகிறார். உலகமெல்லாம் உள்ளவர்கள், ஊரெல்லாம் தேடித் திரிந்து எங்கெங்கோ அலைந்தாலும் கிட்டாத இறைவனார், சோதி யானார், மங்கையைப் பாதியாகக் கொண்டு அருள்கிறார் என்று திருநாவுக்கரசர் பாடினார்.
ஆதித்தன் அங்கிசோமன் அயனொடு மால்புதனும் போதித்து நின்றுலகில் போற்றிசைத்தாரிவர்கள் சோதித்தார் ஏழுலகும் சோதியுள் சோதியாகிப் பாதிப்பெண் உருவமானார் பழனத்துஎம் பரமனாரே.
ஆதித்தனான சூரியன், அங்கியான அக்னிதேவன், சோமனான சந்திரன், அயனான பிரமன், திருமால், பண்டிதனான புதன் ஆகியோர் சிவபெருமானை வணங்குபவர்கள், பிறருக்கும் சிவன் பெருமையை போதிப்பவர்கள். இவர்கள் உலகமெல்லாம் தேடினார்கள். இவர்களுக்கும் எட்டாத பரமனார், சோதி வடிவமாக நின்றார். மங்கையைப் பாதியாகக் கொண்டும் அருள்கிறார்! பரமனை மாதொரு பாதியன் ஆக்கும் பெரியநாயகி அம்மையை வணங்கிப் பணிகிறோம்.
முக மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது அம்பாள் சந்நிதி. தனிக் கோயில் என்றே சொல்லலாம். முக மண்டபத்தில் அழகான தூண்கள். இருந்தாலும் ஒரு வருத்தம்; சுற்றிலும் புதர்க் காடுகள். ‘எங்கள் மனங்களில் உள்ள காட்டுப் புதர்களை எல்லாம் களைபவளே! இந்தப் புதர்களைக் களையச் செய்யக் கூடாதா?’ என்று அம்மையையே கேட்கத் தோன்றுகிறது. வெளிப் பிராகார வலத்தை நிறைவு செய்து, பலி பீடத்தின் அருகே வருகிறோம்.
இங்கே ஒரு மண்டபம். சொல்லப் போனால், நந்தியே இந்த மண்டபத்தில்தான் இருக்கிறார். இந்த முன் மண்டபத்தில், வலப் புறத்தில் வாகனங்களும் சுவாமியின் பல்லக்கும் உள்ளன. இடப் புறத்தில் ராஜகணபதி. வணங்கி உள்ளே நுழைந்தால், உள் பிராகாரம்.
அழகான, பழைமை கிஞ்சித்தும் குறையாத உள் பிராகாரம். ஆனால், இருள் மண்டிக் கிடப்பதால், அழகை முழுமையாக ரசிக்க முடியவில்லை.
உள்பிராகாரக் கிழக்குச் சுற்றில் சூரியன். தெற்குச் சுற்றில் சப்தமாதர்கள். மேற்குச் சுற்றில் விஷ்ணு, வேணுகோபாலர், ஏழூர் சிவலிங்கங்கள், மகாலட்சுமி. வடக்குச் சுற்றில் நடந்து வடகிழக்கு மூலையை அடைந்தால், நடராஜ சபை. வட கிழக்கு மூலையைத் தாண்டியவுடன், பைரவர் சந்நிதி; அடுத்து நவக்கிரகங்கள்.
உள் பிராகார வலமும் நிறைவடைந்து, மூலவர் சந்நிதிக்குள் நுழைகிறோம். இரண்டு பக்கமும் சாளரங்கள் அமைந்த முகப்பு மண்டபம். சிறிய பலிபீடமும் நந்தியும் உள்ள மண்டபம். சந்நிதி வாயிலில் துவார பாலகர்கள். உள்ளே... அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர். பழனத்தார், பழனத்தீசர், பழனத்து எம்பரமனார், பழனநகரார் என்றெல்லாம் தேவாரப் பெருமக்களால் பாடிப் பரவப் பெற்ற ஈசர். உயரமான லிங்க பாணம். அழகு கொஞ்சுகிற மூர்த்தம்.
வணங்குபவர்களது பாவத்தைப் போக்குகிற பெருமான் என்று இந்த ஆபத்சகாயரை, திருஞானசம்பந்தர் போற்று கிறார்.
வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளைஎருதேறிப் 
பூதம்சூழப் பொலியவருவார் புலியினுரிதோலார் 
நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎன நின்று 
பாதம்தொழுவார் பாவம்தீர்ப்பார் பழனநகராரே’
என்று தக்கேசிப் பண்ணில் ஞானசம்பந்தப் பெருமான் பாட, தலைவனுக்கு குயிலைத் தூது விட்டுப் பாடினார் திருநாவுக்கரசர்.
சொல்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே 
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான் 
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப் 
பொன்மாலை மார்பனென் புதுநலமுண்டிகழ்வானோ
திருநாவுக்கரசர் பாடுகிற குயில் தூதில் இருந்து, திருப்பழனம் எப்படி இருந்திருக்கக் கூடும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. பண்டரங்க வேடத்தான் பாட்டோவாப் பழனத்தான் என்கிறார். பாண்டரங்கக் கூத்தாடுகிற இறைவனாரின் புகழை, அடியார்கள் பாடுகிறார்கள்; பறவைகளும் கூடப் பாடுகின்றன. இவற்றோடும், ஆங்கே சாம கானமும் ஒலிக்கிறது.
திருப்பழனத்துக்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், நாவுக்கரசர் பதிகங்கள் ஐந்தும் உள்ளன. நான்காம் திருமுறையில் இருக்கும் நாவுக்கரசர் பதிகங்கள் மூன்றும், மூத்த திருநாவுக்கரசை உயிர்ப்பித்த பின்னர், அப்பூதி அடிகளையும் பிறரையும் அழைத் துக் கொண்டு திருப்பழனம் சேர்ந்தபோதும், அங்கேயே சில காலம் தங்கியபோதும் பாடியவையாகும்.
ஒரு பதிகத்தில், ‘என்னைக் குறிக் கொண்டருள்க’ (அடிமை கொண்டு அருள்க - திருவிருத்தச் சொல் மாலை) என்று வேண் டும் நாவுக்கரசர், மற்றொன்றில் பழனத்துப் பரமனாரின் பெருமைகளைப் பேசுகிறார் (திருநேரிசை சொல்மாலை). பழந்தக்க ராகத்தில் அமைந்துள்ள குயில் தூதுப் பாட்டு, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, இந்தப் பதிகத்தின் ஐந்தாவது பாடலைச் சைவர்கள், தங்களது ஒவ்வொரு பூசையின் நிறைவிலும் பாடுவர்.
மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப் பண்பொருந்த இசைபாடும் பழனம்சேர் அப்பனைஎன் கண்பொருந்தும் போதத்தும் கைவிடநான் கடவேனோ
- நாவுக்கரசு பெருமானின் உள்ளம்சார் பக்தியையும் அன்பையும் வெளிப்படுத்துகிற பாடல். மரணத் தறுவாயில், நினைவும் எண்ணமும் தப்பும்போது, இறைவனை வணங்குவது கைநழுவி விடலாம். ஆனால், ‘அந்த வேளையிலும், இந்தப் பழனத்துப் பரம்பொருளை வணங்குதலை விடமாட்டேன்!’ என்று பாடுகிறார் அப்பர். ‘கண் பொருந்துதல்’ என்பது உயிர் நீக்கத்தைக் குறிக்கும். சொல்லும் சொல்லில் கூட வன்மைத் தன்மை இல்லாமல், மங்கல மொழிகளாகவே தமிழர்கள் பேசினர் என்பதையும் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
கண்பொருந்தும் வேளையிலும் இறை வழிபாட்டில் இருந்து வழுவாது இருக்க வேண்டும் என்ற விருப்பத் தாலேயே இந்தப் பாடலை, சிவ பூசையின் நிறைவில் பாடுவது வழக்கமாக உள்ளது. அது சரி. இந்த சுவாமிக்கு ஏன் ஆபத்சகாயர் என்று திருநாமம்?
திருப்பழனத்தின் தல புராணம் திருவையாற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. ஏற்கெனவே அதற்கொரு சான்றுதான், நந்திகேஸ்வரர் திருமணப் பெருவிழா. சுவாமி திருநாமம் பற்றிய தகவலும் நம்மைத் திருவையாற்றுக்கு அழைத்துச் செல்லும்.
சுசரிதன் என்றொரு சிறுவன். தாய்- தந்தையை இழந்த இவன், தன்னந்தனியாக சிவத் தலங்களை தரிசித்துக் கொண்டே வந்தான். திருப்பழனம் அடைந்தான். சுவாமியை வழிபட்டான். இரவு தங்கினான்.
திடீரென்று யாரோ தட்டுவது போலிருந்தது. எழுந்து பார்த்தால், கன்னங் கறுத்த உருவம்; மடித்த உதடுகள்; நெருப்பைக் கக்கும் விழிகள்; பரிகாசம் கொட்டும் புன் சிரிப்பு! - யார் இவர்?
‘சுசரிதா!- அவர் கூப்பிட்ட விதமே குலை நடுங்கச் செய்தது.
“நான்தான் காலதேவன்- எமன். உனது அந்திமக் காலம் நெருங்கி விட்டது சுசரிதா. தயாராகி விடு. இன்றிலிருந்து சரியாக ஐந்தாவது இரவு வருவேன். எனது பாசக் கயிற்றில் நீ அப்போது கட்டுப்படுவாய்!” _ வேகமாகச் சொன்ன எமன், புயலாக அகன்றான்.
இறப்பது குறித்து சுசரிதனுக்கு பயம் இல்லை. ஆனால், அவன் மடியில் தலை வைத்து மரணித்த தாயார், ‘இனி, சிவபெருமானே உனக்குத் தாயும் தந்தையும் ஆவார். அவரது திருத்தலங்களை தரிசித்து வா, மகனே!’ என்று சொல்லி உயிரை விட்டார்.
சிவத்தல தரிசனத்தைத் தொடங்கி ஒரு சுற்றுகூட வரவில்லை; அதற்குள்ளாக அவனுக்கும் முடிவா? எந்தப் பிறவியில் குனித்த புருவத்தையும் கொவ்வைச் செவ்வாயையும் தரிசிப்பது? எந்த ஜென்மத்தில் குஞ்சிதபாதத்தைக் கண்டு புளகாங்கிதம் அடைவது?
வருத்தத்தில் ஆழ்ந்த சுசரிதன், மறு நாள் அதிகாலை யிலேயே பழனத்தாரிடம் வந்தான். ‘பழனத்துப் பழையவரே! உம் பாதமே கதி!’ என்று பரமனார் அடி பணிந்தான்.
உயிர்களுக்கெல்லாம் தாயுமாகித் தந்தையுமாகித் தாங்குபவராயிற்றே! அந்தத் தனிச் சிறுவனை விட்டு விடுவாரா? அதுவும் கள்ளமற்ற பாலகனாயிற்றே, கைவிடுவாரா? சுசரிதனை தன் மகனாகவே (எல்லா உயிர்களும் அவரின் மக்கள்தாமே) ஏற்றுக் கொண்டார். தமது அருளையே அவனுக்குக் கவசமாக்கி திருவையாறுக்கு அனுப்பி வைத்தார். வேண்டிய பொழுதில் அங்கு வருவதாக வாக்கும் கொடுத்தார்.
திருவையாற்றுக்குச் சென்ற சுசரிதன், தெற்குக் கோபுர வாயிலிலேயே சிவநாமத்தை ஓதிக் கொண்டு உட்கார்ந்தான். ஐந்தாவது மாலையில் எமன் வந்தான்.
மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலில் இட்டு உதைத்தது போலவே, சுசரிதனுக்காகவும், எமனை காலின் அடியில் இட்டு நசுக்கிய சிவனார், சுசரிதனுக்கு இல்லற வாழ்க்கையும் மகவு சுகமும் அருளினார். பல்லாண்டு காலம் பற்பல தலங்களுக்குச் செல்லும் பேற்றையும் வழங்கினார்.
சுசரிதனுக்காக, திருவையாற்றுத் தெற்குக் கோபுர வாயிலில் எமனோடு போரிட்ட மூர்த்திக்கு, ‘ஆட்கொண்டார்’ என்று திருநாமம். திருப்பழனத்தில் அவனுக்கு அருள் வழங்கி, அவனது ஆபத்து நீங்க வழிசெய்த பழனத்தாருக்கு ‘ஆபத்சகாயர்’ என்று திருநாமம். பழனத்து ஆபத்சகாயர்தாம், ஐயாற்றில் ஆட்கொண்டாராக எழுந்தருளியிருக்கிறார் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.
சுசரிதனுக்கு அமுதம் (சாவா மருந்து) போன்று அருள் வழங்கியதால், அமுத லிங்கேஸ்வரர், சுதாலிங்கமூர்த்தி ஆகிய திருநாமங்களும், சந்திரன் வழிபட்டமையால் பிறையானேஸ்வரர் என்ற திருநாமமும் இறைவர்க்கு உண்டு. எப்படியிருந்தாலும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றக் கூடியவர் ஆபத்சகாயர்.
பாங்கார் பழனத்து அழகா என்று மாணிக்கவாசகர் அழைத்த ஆபத்சகாயரைச் சென்னி பணிந்து வணங்கு கிறோம். திருவையாற்றில் அருளியபோதும், இங்கே திருப்பழனத்தில் அருளிய போதும், சுசரிதனுக்கு சோதி வடிவில் ஒளிப் பிழம்பாகத் தோற்றம் தந்தாராம் சுவாமி. ஆனால், அந்த சோதி வடிவானவன், இங்கு இருளில் உறைந்திருப்பதைக் காணும்போது வேதனையாக இருக்கிறது.
ஆபத்சகாயரை வணங்கி வந்து, மீண்டும் உள் பிராகாரத்தை வலம் செய்கிறோம். தெற்குக் கோஷ்டத்தில் முதலில் தட்சிணாமூர்த்தி. அருகில் அப்பூதியடிகள், பசுபதி ஈஸ்வரர். தட்சிணாமூர்த்திக்கு வடக்காக, சப்த ரிஷிகள். அடுத்த கோஷ்டத்தில் விநாயகர். வடக்குக் கோஷ்ட பிரம்மா சிதிலம் அடைந்திருக்கிறார். துர்கையும் உண்டு. சண்டிகேஸ்வரரும் இருக்கிறார்.
இந்த பிராகாரத்தில், மூலவருக்குப் பின்புறம் வில்வ மரமும் உண்டு (தல மரமான வாழை, பலா, தென்னை ஆகியவற்றை ஏற்கெனவே வெளி பிராகாரத்தில் பார்த்தோமே). சுவாமி சந்நிதிக்கு வட கிழக்காக திருமறைநாயகி (சிவசுந்தரநாயகி) என்ற நாமத்துடன் அம்பாள் பீட ஸ்தானம் ஒன்றும் உள்ளது.
ஆபத்சகாயரையும் பெரியநாயகியையும் வணங்கிக் கொண்டே மீண்டும் கோயில் பிராகாரங்களைச் சுற்றி வருகிறோம்.
இப்போது போதுமான பராமரிப்பு இல்லாமல் இருந்தாலும், கோயிலின் பழைய சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. பராந்தகச் சோழன், திருப் பழனம் கோயிலைப் பெரிதாகக் கட்டியதாகத் தெரிகிறது. ராஜராஜ சோழன் காலத்திலும் பழனப்பதி, பற்பல கட்டளைகளைப் பெற்றது. சுவாமிக்கு நாள்தோறும் 100 செங்கமல மலர்களை மாலை கட்டிச் சாற்றுவதற்காக நில மானியம் விடப் பட்டிருந்ததாம். ராஜராஜனின் பட்டத்து அரசியான லோகமாதேவியார், இந்தத் திருக்கோயிலைப் போற்றிப் பராமரித்திருக்கிறார். ஏழூர்ப் பெருவிழா கொண்டாட்ட முறையைத் தொடங்கி வைத்தவரும் அவர்தான்.
முன் மண்டபத் தூண்களிலும் விமானத்திலும் மேல் பட்டைகளிலும் காணப்படும் சிற்பங்கள், இப்போது சிதிலப்பட்டிருந்தாலும், அவற்றில் இன்னமும் பழைய நுட்பமும், நுணுக்கமும் கண் சிமிட்டுகின்றன.
கோயிலுக்குள் பல்லாண்டு காலமாக பெருமாள் சந்நிதியும் உண்டு. ஏன், அவருக்காக கருட வாகனம்கூட இருந்திருக்கிறது. இவ்வளவு சிறப்புகள் மிக்க திருப் பழனத்தில், இன்று கோயிலைச் சுற்றிக்காட்டக் கூட வழியில்லை. சமீபத்தில் திருப்பணி ஓரளவுக்கு நடைபெற்று, கோபுரங்கள் வண்ணப் பொலிவுடன் விளங்கினாலும், பெரும்பாலான நேரம் கோயில் பூட்டிக் கிடக்கிறது.
வெளிக் கோபுரத்தின் வாயிலில் திண்ணை போன்ற அமைப்பு. வந்து உட்கார்ந்து, கோயிலைப் பற்றி எண்ணிப் பார்க்கிறோம். பல முனிவர்கள் இங்கு வழிபட்டிருக்கிறார்கள். கௌசிகர் ஆசிரமம் இங்கு இருந்தது; குற்சர் என்ற முனிவர் சூரிய புஷ்கரணியில் மூழ்கி வழிபட்டிருக்கிறார். எனவே சூரியன், புஷ்கரணி அமைத்த தகவல் கிடைக்கிறது. சந்திரனும் இங்கு வழிபட்டுள்ளான். திருமகளும் திருமாலும் இங்கு வழிபட்டுள்ளனர். சுசரிதன் க்ஷேத்ராடனப் பேறு பெற்றதாலும், பிரயாணம் புரிந்து இங்கு வந்து தங்கியதாலும், இந்தத் தலத்துக்குப் பிரயாணபுரி என்றும் ஒரு பெயர் வழங்கப்படுகிறது.
நேரடியாக தேவாரப் பதிகம் பெறாமல், வேறு ஒரு தலத்தின் பாடலில் குறிப்பிடப்படுகிற தலம் ‘தேவார வைப்புத் தலம்’ எனப்படும். அப்படியரு வைப்புத் தலமாக விளங்குகிறது, அருகிலுள்ள திங்களூர். திங்களூரில்தான், அப்பூதி அடிகள் வாழ்ந்தார் என்பதையும், திருநாவுக்கரசர் பெயரால் பற்பல தர்மங்களைச் செய்தார் என்பதையும் அறிவோம்.
திங்களூரின் முதல் பெயர் கீளூர் என்பதாகும். திருப்பழனத்தில் வழிபாடும் உழவாரப் பணியும் செய்துவிட்டு, மேற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார் நாவுக்கரசர். கோடை காலம். வெப்பம் தணித்துக் கொள்ள வழி தேடியபோது, கண்ணில் பட்டது - ‘திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தல்’. இந்தப் பெயரால் யார் தர்மம் செய்கிறார்கள் என்று விசாரித்தார்; அப்பூதி அடிகளைப் பற்றி அறிந்தார். அவரைத் தேடி சென்று சந்தித்தார்; நட்பு பூண்டார். அப்பூதியாரின் இல்லத்தில் உணவருந்தும் வேளையில்தான், நாவுக்கரசருக்காக வாழையிலை அரியச் சென்ற அப்பூதியாரின் மூத்த மகன் மூத்த திருநாவுக்கரசை (அப்பூதி அடிகளார் வீட்டில் அவர் மகன்களுக்கும், பொருள்களுக்கும், எல்லாவற்றுக்கும் திருநாவுக்கரசர் பெயர்தான்) பாம்பு தீண்டியது. பாம்பு தீண்டியதை உணர்ந்த அவன், விஷம் தலைக்கேறும் முன்னர், தலை வாழையிலையைத் தந்து விட வேண்டும் என்று ஓடி வந்தான். அப்பர் சுவாமிகள் உணவருந்துவதற்குத் தடை வந்து விடக் கூடாது என்று நினைத்தான்.
இறந்த மகனைப் பாயில் சுற்றி வைத்து விட்டு, அப்பருக்கு அமுது படைத்தனர் அப்பூதியாரும் அவர் மனைவியும். இளைய மகன் இளைய திருநாவுக்கரசுடன் அடியாரை வலம் வந்து அப்பரை வணங்கினர்.
அமுதுண்ண வந்த அடியவர், விபூதி பூச மூத்த மகனைக் கூப்பிட... எங்கே போவது? ‘அவன் இங்கு உதவான்’ என்றார் அப்பூதியார். ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்து கொண்ட நாவுக்கரசர் மேலும் வினவ, உண்மை தெரிந்தது. பாலகன் சடலத்தைத் தூக்கிக் கொண்ட நாவுக்கரசர் கயிலாச நாதர் கோயிலை அடைந்தார்.
ஒன்று கொலாம் அவர்சிந்தை உயர்வரை ஒன்று கொலாம் உயரும்மதி சூடுவர் ஒன்று கொலாம் இடுவெண்டலை கையது ஒன்று கொலாம் அவர் ஊர்வதுதானே
சடலத்தைச் சந்நிதி முன் கிடத்திவிட்டு, நாவுக்கரசர் பதிகம் பாட, அதனைப் பாடி முடிக்கும்போது, உறக்கத்திலிருந்து எழுவது போல், மூத்த திருநாவுக்கரசு எழுந்தான்.
திருவையாற்றுக்குக் கிழக்காகவும், திருப்பழனத்துக்கு மேற்காகவும் இருக்கிற திங்களூர், வயல்களுக்கு நடுவில் திகழ்கிறது. சிறிய கோயில். பல்வேறு சாபங்களால் தனது ஒளி குன்றிப் போயிருந்த சந்திரன், இங்கு வழிபட்டுத் தனது வலிமையை மீண்டும் பெற்றான். எனவே, இது திங்களூர் ஆனது. இப்போதும், ஒவ்வோர் ஆண்டும், பங்குனி உத்திரப் பௌர்ணமிக்கு முந்தைய நாளும், பௌர்ணமி அன்றும், அடுத்த நாளும் காலை சூரியோதயத்தில் சூரியக் கிரணங்களும், மாலை சந்திர உதயத்தில் சந்திரக் கதிர்களும் கயிலாசநாதர் மீது பரவுகின்றன.
வெள்ளை அரளி கொண்டு அர்ச்சனை செய்தல், சிவனாருக்கும் சந்திரனுக்கும் வெள்ளை வஸ்திரம் சார்த்துதல், பச்சரிசிப் பொங்கல் இடுதல், வெள்ளி அல்லது ஈயம் போன்ற வெண்ணிற உலோகங்களைச் சமர்ப்பித்தல், முத்து தானம் செய்தல் போன்றவை பரிகாரத்துக்கு உதவும். சந்திர புஷ்கரணியில் நீராடியும் சிவனாரை வழிபடலாம்.
திருப்பழனம் ஒரு காலத்தில் பெரிய தலமாகவும், அதன் துணைப் பகுதியாகத் திங்களூரும் இருந்துள்ளன. என்ன கிரக நிலையோ, பழனம் இப்போது பொலி விழந்து விட்டது. திங்களூர் செல்பவர்கள்கூட, பழனம் செல்வதில்லை. பழனத்தார் கண் திறக்கக் கூடாதா?

No comments:

Post a Comment